Monthly Archives: ஒக்ரோபர் 2014

குழந்தைகளுடன் பழகுவது எப்படி?

“தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு” என்று
பாடித் திரிவதில் பயனில்லைக் காணும்
“தென்னையை வளர்த்தால் உடற்பயிற்சி
பிள்ளையை வளர்த்தால் உளப்பயிற்சி” என்று
கொஞ்சம் எண்ணிப் பார்த்தால் என்ன?

என்ன காணும்… எப்படி எல்லாம் எண்ணிப் பார்க்கிறியள்? தென்னம் பிள்ளை வைத்து ஆடு, மாடு கடிக்காமல் வேலி போட்டுப் பசளை இட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க எப்பாடுபட்டிருப்பியள்? எல்லாம் உடற்பயிற்சியாக இருக்குமென நம்பிச் செய்தியளா? அப்படி, இப்படி, உப்படி வளர்ப்பு முறை தெரிந்து தென்னையை வளர்த்ததன் பயனாகத் தானே இளநீரும் தேங்காயும் கிடைக்கிறது.

அதே போலப் பிள்ளையைப் பெத்ததும் அப்படி, இப்படி, உப்படி வளர்ப்பு முறை தெரிந்து வளர்த்தெடுத்தால் பின் நாளில் நன்மை உண்டாம்.

அடித்து நொருக்கிக் குழந்தையை வளர்த்தால் பிள்ளைக்கு உங்கள் மீது வெறுப்பு வர பிரியும் வாய்ப்பு பின் நாளில் வர நீங்கள் முதியோர் இல்லம் செல்ல நேரிடும்.

அங்கும் மிங்கும் நடத்திக் காட்டி, அன்பு என்னும் தேன் கலந்து, அறிவு என்னும் பால் கலந்து, சத்துள்ள உணவூட்டி வளர்த்துப் படித்த ஆளாக்கினால்:
பிள்ளை எந்நாளும் அன்பு காட்டும்.
பிள்ளை படித்த ஆளாகியதும் பெற்றோருக்குத் தானே பெருமை சேரும்.
பின் நாளில் நீங்கள் முதியோர் இல்லம் செல்ல நேரிடாது.
வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை வந்தே சேரும்.
இன்னும் நீட்டலாம்…

அதற்கு முன், ஒரு மணித்துளி எண்ணிப் பாருங்கள். உங்கள் குழந்தைகளின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டீர்களா? “வாய் பேசாக் குழந்தை என்னத்தைக் கேட்கும், நாம் என்னத்தைச் செய்யிறது” என்று நீங்கள் வாயைப் பிளக்கிறியளே! இதற்குத் தான் தாய்மாருக்கு உளப்பயிற்சி தேவை என்கிறது.

உளவியல் என்றால் உள்ளம் பற்றிய அறிவு தான். குழந்தையின் உள்ளம் எதை விரும்புதோ அதை அடைய அழுது காட்டும். அதனாலே தான் குழந்தை அழுதவுடன் தாய் பாலூட்டுவதைக் காண்கிறோம். சற்று வளர்ந்த குழந்தை முன்னே இனிப்பைக் காட்டினால் அதை அடையும் வரை அழுதே தீரும். அவ்வேளை கொஞ்சமாய் இனிப்பைக் கொடுத்த பின் மிகுதியை ஒளித்து வைக்கும் தாயைப் பார்த்திருப்பியள். இதெல்லாம் அத்தாயின் உளப்பயிற்சி என்பேன்.

பிறந்த குழந்தை, வளர்ந்த பின், வாய்ப் பேச்சு வந்த பின், குழந்தை விரும்புவதைப் புரிந்துகொண்டு செயற்படுகிறீரா? இல்லை என்றே நான் கூறுவேன். ஓர் எடுத்துக்காட்டு:

உணவூட்ட நீங்கள் நீட்டலாம், ஆனால், குழந்தை வேண்டாம் என்கிறது. உடனே என்ன செய்கிறியள்?

சிலர் பேய் பிடிக்கும், காகம் கொத்தும் கெதியாச் சாப்பிடு என்று அச்சமூட்டி உணவூட்டுவர்.

சிலர் படம் காட்டி, நிலவைக் காட்டி, பக்கத்தில் உள்ள பிள்ளைக்கு ஊட்டிக்காட்டி உணவூட்டுவர்.

எனவே இரண்டாவதாகக் காட்டிய வழியே சிறந்தது என்பேன். எமக்கு மட்டும் உள்ளம் இருப்பதாக எண்ணிவிடாதீர்கள்; பிறந்த குழந்தைக்கும் உள்ளம் இருக்கிறது. குழந்தை வளர்க்கும் போது தான் குழந்தையின் உள்ளத்தில் ஒவ்வொன்றாக எழுதப்படுகிறது. அதனால் தான் குழந்தை வளர்ப்பு முதன்மை பெறுகிறது.

இன்னோர் எடுத்துக்காட்டு:

வாயைப் பிளக்கும் குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்பகமான, நிறைவு தரும் பதிலை பெற்றோர் வழங்காமை, குழந்தை மாற்று வழியில் எண்ணமிடும். அதாவது, கிணற்றடிக்குப் போகும் வேளை “எங்கேயம்மா போறியள்” என்றால் “இருங்கோ இப்ப வாறன்” என்பியள்.

இது குழந்தைக்கு நிறைவு தராமையால், தாயைத் தொடர்ந்து குழந்தையும் நடைபோடும். விளைவு: தாய் குழந்தையைத் திரும்பிப் பார்க்காவிட்டால், வழித்தடங்கலில் குழந்தை விழுந்துவிட நேரிடுகிறது. இந்நிலை வராமைப் பேண முதலில் இன்னொரு உறவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டுச் செல்லலாமே!

இப்படித்தான் குழந்தைகளுடன் பழக வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ப, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப தாய் பழக வேண்டும். குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்பகமான, நிறைவு தரும் பதிலை வழங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுத்து மாத்துப் பதிலை வழங்கினால் குழந்தை மாற்று வழியில் எண்ணமிட்டு தவறான வழியில் செல்ல இடமுண்டு.

எனவே, இது பற்றிய அறிவை “எப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள்?” என்ற அறிஞர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் பதிவைப் படித்துப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும், அவரது குழந்தை வளர்ப்புத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://wp.me/p2IA60-2iN

உளநலம் பேணுவதில் உங்களுக்கு விருப்பமா?

உளநலம் பேணுவதில் உங்களுக்கு விருப்பமா? அப்படியென்றால் அறிஞர் கௌசி என்ன சொல்கிறார் என்று படிப்போமா…

“உடலே உயிரை நிதமும் காக்கும் – இதைப்
புரியா துடலை மனிதன்
உருக்குலைத்து சீரழிப்பான் உண்மை” என்றும்

“நாமோ எதிலும் அக்கறையின்றி சாக்கடையினுள் அழுக்கைப் போடுவது போல் கண்டதையும் உண்டு உடலைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றோம்.” என்றும்

“பிற உறுப்புக்களுக்காகத் தொழிற்படும் மூளை தனக்காக ஓய்வெடுத்து தன்னிலுள்ள நச்சுத் தன்மையை வெளியகற்றும் நேரம் உறக்கமல்லவா? ஆனால், நாம் என்ன செய்கின்றோம். இரவிரவாகக் கண்விழித்து தூக்கத்தைக் கெடுத்து chat பண்ணுகின்றோம். Party கொண்டாட்டங்கள், தொலைக்காட்சி என்று உறங்கும் நேரத்தைத் தொலைக்கின்றோம்.” என்றும்

கணினியை ஒழுங்குமுறைக்கு உள்ளே பாவிக்காது நாம் எமது கண்களைக் கெடுக்கிறோம் என்றும் கடைசியில் “செய்வதெல்லாம் செய்து விட்டு நேர்த்திக்கடனென்றும் நேர்மையற்ற மருத்துவரென்று, போதாத காலமென்றும், பொல்லாத உலகென்றும் அடுத்தவரைக் குறைகூறி அழிவது நாமே.” என்றும் அடித்துச் சொல்கிறாரே!

உளநலம் பேணுவதில் நம்மவர் நிலையை இப்பதிவினூடாகக் காண்கிறேன். தளம் (சுவர்) இருந்தால் சித்திரம் வரையலாம். அது போல உடலை நலமாகப் பேணுவதில் தான் நீண்ட நாள் வாழலாம். அதற்கு உள்ளத்தில் நல்ல எண்ணம் வேண்டும். அதாவது அறிஞர் கௌசியின் எண்ணங்களைப் பேணுவதோடு கேடுகெட்ட எண்ணங்களை உள்ளத்தில் இருத்தாமல் நல்லெண்ணங்களை உள்வாங்கி, நல்லதையே எண்ணி உளநலம் பேணினால் உடலையும் நலமாகப் பேணுவதோடு நெடுநாள் வாழலாமே!

உங்களுக்கு நெடுநாள் வாழ விருப்பமா? அப்படியென்றால் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் கௌசியின் பதிவைப் படித்துப் பாருங்களேன்.
http://www.gowsy.com/2014/10/blog-post_26.html

நம்ப வைத்தலே மதியுரையின் இலக்கு

உளநோய் உள்ளவர்களில் நம்பிக்கையற்ற நிலையைக் காணமுடியும். கடவுள் நம்பிக்கையோ தனியாள் நம்பிக்கையோ தன்னம்பிக்கையோ இல்லாதவர்களாக அவர்களைப் பார்க்கமுடியும். அதனால் தான் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகின்றனர். இவர்களில் காணப்படும் நம்பிக்கையற்ற நிலையைப் போக்கினால் இயல்பு நிலைக்கு மீளவும் வந்துவிடுவர்.

ஆண்டவன் படைப்புகளான பகவத் கீதை, வேதாகமம் (பைபிள்), குர்ஆன், பௌத்த போதனைகள் போன்றவற்றில் உள்ள உண்மைகளை நடைமுறையுடன் ஒப்பிட்டு விளக்கி நம்ப வைக்கலாம்.

அன்பாகவும் பணிவாகவும் அணுகி உளநோய் உள்ளவர்களின் விருப்பத்துக்கு சற்று இசைந்து நம்மீது நம்பிக்கை ஏற்படவைக்கலாம். அந்நிலையில் எமது கருத்தேற்றங்களை (Suggestion) வழங்க முடியும்.

மேற்காணும் வழிகளில் நல்லெண்ணங்களை விரும்பவைத்து தன்னம்பிக்கை வைக்க முயற்சி செய்யலாம். இதனால் தன் (சுய) முடிவுகளை எடுக்கத் தூண்டலாம். உளநோய் உள்ளவர்கள் தாமாகவே தன்னம்பிக்கையுடன் இறங்கி வெற்றிகாணத் துணைநிற்பதால் அவர்களது தன் (சுய) முடிவுகளை எடுக்கும் ஆற்றலை வலுப்படுத்தலாம்.

நம்பிக்கை ஒன்றே நம்மை நெடுநாள் வாழவைக்கிறது. நம்பிக்கை தானே நாம் நன்நெறியில் செல்ல இடமளிக்கிறது. ஆயினும், நல்ல வழியில் நடைபோடத் தக்க நம்பிக்கையைப் பேணவேண்டும். அப்போது தான், நல்ல முடிவுகளை எடுக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகளே நல்ல தீர்வுகளைக் காண இடமளிக்கிறது. முடிவு (Decision) என்பது ‘கோயிலுக்குப் போதல்’ என்றால்; தீர்வு (Solution) என்பது நடந்து செல்வதா, மிதிவண்டியில் செல்வதா என்பதாகும்.

நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் ஒவ்வொருவரும் முடிவுகளை எடுக்கிறோம் என்பதை மறக்க முடியாது. நமது வசதிகளுக்கு ஏற்ற வகையிலேயே தீர்வுகளை முன்வைக்கிறோம் என்பதையும் மறக்க முடியாது.

எனவே, நம்ப வைத்தலே மதியுரையின் இலக்கு என்றாலும் நல்ல முடிவுகளையோ தீர்வுகளையோ எடுப்பதற்கு நம்பிக்கையான சூழல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதோடு நம்பிக்கையான உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அப்போது தான் உளநோய் உள்ளவர்களை இயல்பு நிலைக்கு வரவைக்கலாம்.

தன்னம்பிக்கையுடன் தன் (சுய) முடிவுகளை எடுக்கும் ஆற்றலைப் பெற்றுத் தானாகவே (சுயமாகவே) எந்தச் செயலிலும் இறங்கினால் தானே இயல்பு நிலைக்கு வந்தவர் எனலாம். இதற்கு மதியுரையின் போது உளநோய் உள்ளவர்களை நம்ப வைத்தலிலே வெற்றி காணவேண்டும்.

திட்டமிட்டால் தானே மகிழ்வான வாழ்வு

ஆண், பெண் வேறுபாட்டை
அறிய முயன்ற அகவையிலே
வரவையும் செலவையும் மறந்தேன்!
இளமை துள்ளி விளையாடும் வேளை
எதிர்காலத்தை மறந்தேன்!
மணவாழ்க்கை அமைந்த வேளை
துணைவியைப் பார்த்தேனே தவிர
இணைந்து வாழும் வேளை தான்
வாழத் தேவையானதை
தேடிவைக்க மறந்ததை நினத்தேன்!
வாழ்க்கையில்
ஏதேதோ சந்தித்த வேளை
எதை எதையோ மறந்த பின்
முகம் கொடுக்கும் வேளை தான்
முழி பிதுங்கி நிற்கிறோமே!
இவ்வளவும் இருந்திருந்தால்
இப்படி நிகழுமென அறிந்திருந்தால்
நாம் எப்படியோ
மகிழ்வாக வாழ்ந்திருப்போமென
நினைப்பதை நிறுத்திவிட்டு,
நாளைக்கு
மகிழ்வாக வாழ்வதற்கு வேண்டியவற்றை
இன்றைக்கே
அழகாக ஒழுங்குபடுத்த
மறக்காமல் இருந்தால் போதாதா?
திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும்
செயலாற்றலுக்குப் பக்கத்துணையே
நிறைவான செயலாற்றலே
மகிழ்வடையப் பக்கத்துணையே
மகிழ்வான வாழ்க்கையே
நெடுநாள் வாழ மருந்து!