Monthly Archives: மே 2014

பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது.

மணமுடிக்கிறோம்… பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறோம்… அவ்வளவுடன் குடும்ப வாழ்வு முற்றுப் பெறவில்லை. பெற்ற பிள்ளைகளைப் படித்தோராகாவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யக் கூடியவராகவும் வளர்த்து ஆளாக்குவதிலேயே மணவாழ்வின் வெற்றியைக் காணலாம்.

பிறந்த குழந்தையின் உள்ளம் எதுவுமே எழுதப்படாத ஏட்டைப் போன்றது. பிறந்த பின் வளர வளரக் குழந்தையின் உள்ளத்தில் பதிவுகள் எழுதப்படுகிறது. வளரும் குழந்தை நல்லெண்ணங்களைத் திரட்டிக் கொள்ளத்தக்கதாக “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என்றவாறு குழந்தையை வளர்க்க வேண்டும்.

குழந்தைகளின் நடத்தையை வைத்தே எல்லோரும் எடைபோடுவார்கள். குழந்தையின் உள்ளத்தில் இருப்பதே நடத்தையாக வெளிப்படுகிறது. குழந்தைகளின் நடத்தையை வைத்துப் பெற்றோர்களையும் அடையாளம் (நல்ல குழந்தையாயின் பெற்றோர் நன்றாக வளர்த்திருக்கிறார்கள் என்றும் கெட்ட குழந்தையாயின் பெற்றோர் வளர்ப்புச் சரியில்லை என்றும்) காணலாம்.

ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் நல்லெண்ணங்களை விதைத்தால் அவர்களது நடத்தைகளில் நல்ல அறுவடைகளைப் பெறலாம். மேலும், குழந்தைகளை நல்ல சூழலில் வைத்து வளர்க்க வேண்டும். அவ்வேளை சூழலில் இருந்து குழந்தை நல்லவற்றை உள்வாங்க இடமுண்டு.

குழந்தையின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட எண்ணங்கள் தான் எதிர்காலத்தில் அக்குழந்தை சிறந்தவராக உருவாக வழிவிடுகிறது. எனவே, பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது நல்லறிஞர்களாக உருவாக அன்பு, அறிவு, ஒழுக்கம் என நல்னவெல்லாம் ஊட்டப்படவேண்டும்.

அந்த வகையில் “உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர” என்ற பதிவை அந்திமாலை தளத்தில் கண்டேன். அதில் பதினைந்து வழிகாட்டல்கள் காணப்படுகிறது. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://anthimaalai.blogspot.com/2014/05/blog-post_3053.html

உள்ளமும் உண்மையும்

உள்ளத்தைத் திறந்து பார்த்தால்
என்ன என்ன இருக்கும்?
உள்ளமே உருப்படியாய் இல்லை,
உள்ளுக்குள்ளே என்ன இருக்கும்?
தினமும் என்னைத் துளைக்கும்
கேள்விக் கணைகள் இவை தான்!
இதற்கு மேலும் ஐயம் தான்…
தீர்வுகள் கிடைக்காத வரைக்கும்
சிந்திப்பதே வேலையாச்சு!
சிந்திக்கச் சிந்திக்க
சிந்திக்கின்ற பகுதி தான்
உள்ளம் என்றறிந்தேன்!
சிந்திக்கத் தூண்டுபவை எல்லாம்
உள்ளத்தைத் திறந்து பார்த்தால்
உள்ளேயிருப்பவை என்றறிந்தேன்!
உள்ளத்தைத் திறந்த பின்னரே
உண்மை என்னவென்று புரிகிறது…
நாள்தோறும் துன்பத்தைத் தருகின்ற
புண்கள் அவையென்று தெரிகிறது…
சொற்கள் என்னும் முட்கள் குத்தாத
மனித உறவுகள் சுகமளிக்க…
கண்ணைப் பறிக்கும் வெயிலைப் போல
சிந்தனையைக் கெடுக்கும் காடசிகள் இல்லாத
புனித சுற்றம் மருந்தாக…
உங்கள் உள்ளப் புண்கள்
மறைந்து ஓடுமாம் என்கிறார்களே!
புண்கள் இல்லாத உள்ளத்திற்கு
நீங்களே மருந்து என்கிறார்களே!
திறந்து பார்த்த உள்ளத்தின்
உண்மைகள் இவையென்று படிக்க
உங்களுக்கு எத்தனை நாளெடுக்கும்?

சாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்

அயலூரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் நான் பயணம் செய்த பேரூந்துக்குள் “எப்படிச் சுகம்” என்று கைகுலுக்கினார். பிறகென்ன நண்பர்கள் சந்தித்தால் பலதும் பத்தும் கதைப்பது வழக்கம் தானே! அப்படி கதைத்துக் கொண்டு பயணிக்கையில் ஒரு செய்தி என் உள்ளத்தைக் குத்தியது. அதனை உங்களுடன் பகிரலாம் என எண்ணி இப்பதிவை ஆக்கினேன்.

சாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும் தான் அந்த செய்தி. அதெப்படி நிகழும் என்பது உங்கள் கேள்வியாக இருக்கட்டும். எப்படி நடந்ததென நண்பர் எனக்குச் சொன்னவாறு அப்படியே சொல்லுகிறேன். பிறிதொரு அயலுரைச் சேர்ந்த இருபத்தினான்கு அகவை உடைய ஆண் சிங்கம் / ஆண் மகன் தனக்கு முதுகு வலிப்பதாக வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடியுள்ளான். அதைக் கேட்ட ஆச்சி (பாட்டி) ஒருவர் குறித்த மூலிகைச் செடியின் கிழங்கை எடுத்து உண்டால் முதுகுவலி நின்றுவிடுமெனக் கூறியுள்ளார். அகவையில் மூத்த ஆச்சி (பாட்டி) சொன்னால் பிழைக்காதென முதுகு வலிக்காரத் தம்பியும் உண்டுள்ளார். இருபத்தினான்கு மணி நேரம் கழித்து மறுநாள் மூச்சு பேச்சின்றி படுக்கையில் கிடந்துள்ளார். இதையறிந்த குடும்பத்தார் அரச மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் மருத்துவரும் ”எவ்வாறு நிகழ்ந்தது (History)” என்று கேட்க ஆச்சி (பாட்டி கூறிய வழிகாட்டலும் மதியுரையும் தான் இந்த நிலைக்குக் காரணமென உறவுகள் சொல்லி முடித்தனர். அடுத்த கட்டமாக மருத்துவரும் எல்லா வகைச் சோதனைகளையும் (Testings) செய்து முடித்தார். ஈற்றில் கிடைத்த பேறுபேற்றின் படி ”ஆச்சி (பாட்டி) காட்டிய கிழங்கைத் தின்ற முதுகுவலிக்காரத் தம்பியின் உடலில் நஞ்சு ஊறி உயிரை விட்டார்” என்று இருந்தது.

இச்செய்தி நமக்கு எதனைக் கூறி நிற்கின்றது. உண்மையில் எல்லோரும் சிந்திக்க வேண்டிய செய்தி என்பேன். அதாவது அகவையில் மூத்தோராயினும் சரி உளநல மதியுரைஞர் (Counsellor) ஆயினும் சரி கூறுகின்ற மருந்துகளை மருத்துவர் அனுமதி இன்றி உண்ண முடியாது. வழிகாட்டலும் மதியுரைகளும் கூறுவோர் மருந்துகளை வழங்கினால் குற்றம். மருந்து என்ற சொல் மருத்துவருக்குரிய உறவுச் சொல். எனவே, மருத்துவர் அனுமதியின்றி மருந்துண்டால் சாவு தான் முடிவென்பதை இச்செய்தி சுட்டி நிற்கின்றது.

அகவையில் மூத்தோரின் சொல்லுக் கேட்கலாம்; பெரியோரின் வழிகாட்டலைப் பின்பற்றலாம்; எவருக்கும் எவரும் மதியுரை கூறலாம்; உளநல மதியுரைஞரும் (Counsellor) வழிகாட்டலும் மதியுரையும் வழங்கலாம். ஆனால் மருந்து என்றால் மருத்துவர் மட்டுமே வழங்க முடியும். எனவே வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவோர் மருத்துவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய முடியாது. அப்படியாயின் அவர்களும் போலி மருத்துவர்களைப் போல போலிக் Counsellor தானே!

உண்மையான Counsellor நோயாளிகளை மருத்துவரிடம் சென்று காட்டுமாறு வழிகாட்டுவார். மருத்துவர் உடலில் நோய் இல்லை, உள்ளக் (மனக்) குறைபாடு என்று உறுதிப்படுத்திய பின்னரே உளநல வழிகாட்டலும் மதியுரையும் Counsellor வழங்க முடியும் என்பதை எல்லோரும் படியுங்கள்.

குடித்தலை ஒழிக்கப் படிப்போம்

அறிஞர் ஆறுமுகம் அய்யாச்சாமி அவர்களது தளத்தில் “மதுவும், நானும்!” என்ற பதிவை எல்லோரும் படித்தேயாக வேண்டும். முதலில் குடித்தல் ஒரு பண்பாடாக மாறிவிட்டதைச் சுட்டுகிறார். அடுத்து நாட்டு நிலைமை; “ஒரு ஃபுல் அடித்தாலும் ஸ்ட்ராங் ஆக நிற்பதே ஆண்மை இலக்கணம்” என நம்மவர் நிலை; மது குடிப்பவர்கள் மூன்று வகை; மது குடிக்காதவர்கள் இரண்டு வகை என நன்றாக அலசுகிறார்.

ஈற்றில் தனது தீர்வினை முன்வைக்கின்றார். குடித்தலை ஒழிக்கப் படிக்கவேண்டிய கருத்துகளாக அவரது பதிவை நான் பார்க்கிறேன். இதனாலேயே “குடித்தலை ஒழிக்கப் படிப்போம்” என அவரது பதிவை அறிமுகம் செய்ய முன்வந்தேன். அவர் முன்வைக்கும் தீர்வுகள் மக்களாய (சமூக) முன்னெடுப்பாக இருந்தாலும் உளவியல் நோக்கில் குழுச் சிகிச்சை (Group Therapy) வழியை ஒத்திருக்கின்றது.

கோவில்களுக்கு முன் இறைச்சிக்கடை போட்டால், மக்கள் குடியிருப்பில் கள்ளுக்கடை, மதுபானக்கடை போட்டால் மக்கள் குழுக்கள் எதிர்த்து விரட்டுவது போல் குடித்துக் கூத்தாடுவோரையும் ஒதுக்கி வைப்பதன் மூலம் குடிகாரர்களைத் திருத்தலாம் என்பது அவரது எண்ணம். உளநல வழிகாட்டலாக அவரது பதிவை ஏற்று கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.

மதுவும், நானும்! – ஆறுமுகம் அய்யாசாமி

வாழ்க்கையின் வெற்றிக்குச் சில

வாழ்க்கை என்பது வழுக்கி விழுத்தும் சேற்று நிலத்தின் மேல் நடப்பது போல் இருக்கும். நாம் தான் விழுத்துவிடாமல் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும். வாழ்க்கை என்பது எவராலும் சொல்லிக் கொடுக்க முடியாது. நாம் தான் வாழ்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நல்லுறவுகளைப் பேணுதலே முதற்பாடமாக இருக்கும். முதற் சந்திப்பில் முதல் வெளிப்பாட்டில் நல்லறவு மலரும் என்கிறார்கள். அதாவது உங்களது முதல் வெளிப்பாட்டை உங்களை முதலில் சந்தித்தவர் விரும்புவார் ஆயின் உறவு வலுக்கும்.

உளவியல் நோக்கில் பார்த்தால் விருப்பங்களும் வெறுப்புகளும் உள்ளத்தில் பதிந்து விடுகிறது. அதனால் தான் விருப்பங்களுக்கான ஆள்களின் உறவுகள் தொடர, வெறுப்புகளுக்கான ஆள்களின் உறவுகள் முறிவடைகிறது. எனவே, அடுத்தவர் எம்மை விரும்பும் வகையில் எமது சொல், செயல் அமையுமாயின் நல்லுறவுகள் தானாகவே அமையும். வாழ்க்கையின் வெற்றிக்கு நல்லுறவுகளின் எண்ணிக்கையே முதலீடு.

நல்லுறவுகளின் எண்ணிக்கையைப் பெருக்க எமது சொல், செயல் மீது பிறர் நாட்டம் இருக்க வேண்டும். தொன்னூற்றொன்பது விளுக்காடு பிறரது நாட்டம் நற்கருத்துகள், நற்பண்புகள், நற்செயல்கள் என்பவற்றிலேயே இருக்கும். எனவே, நல்லுறவுகளின் எண்ணிக்கையைப் பெருக்க நற்கருத்துகள், நற்பண்புகள், நற்செயல்கள் யாவும் உங்கள் சொல், செயல் இரண்டிலும் மின்ன வேண்டும். அதேவேளை கெட்ட எண்ணங்களோடு நாடுவோரை இனங்கண்டு விலக்கிக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்” என்ற பதிவை அந்திமாலை தளத்தில் படித்தேன். அவற்றைக் கையாளும் போது நல்லுறவுகளை பேணுவதோடு வாழ்க்கையின் வெற்றிக்கே செல்ல வாய்ப்பும் உண்டு. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைப் படித்துக் கையாளவும்.

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

உன்னை நீ அறி

கவலைப்படாதே!
வாழ்க்கையில் தோல்விகள்
உன்னைத் தொடருவதாய் எண்ணி…
துன்பப்படாதே!
வாழ்க்கையில் தொல்லைகள்
உன்னைத் தாக்குவதாய் எண்ணி…
வெந்துவிடாதே!
வாழ்க்கையில் சோர்வுகள்
உன்னைத் குடைவதாய் எண்ணி…
அழுதுவிடாதே!
வாழ்க்கையில் வலிகள்
உன்னைத் குத்துவதாய் எண்ணி…
கோபப்படாதே!
மாற்றார் மதியுரைகள்
உனக்குப் பயனில்லையென எண்ணி…
சிந்திக்க மறக்காதே!
உன்னையே நீ அறியாமல்
எல்லாமே எதிரியென எண்ணி…
உணர மறுக்காதே!
நம்பிக்கை இருந்தால்
எல்லாம் உன்னையே நாடுமென்பதை…
முன்னேறப் பின்வாங்காதே!
கூப்பிடு தூரத்திலே வெற்றிகள்
உனக்காகத் தான்
காத்திருக்கிறது என்பதை மறக்காமல்….
தன்னம்பிக்கையை வளர்த்திடு!
உலகையே
உருட்டி விடக்கூடிய பலம்
உனக்குள்ளிருந்தே ஊற்றெடுப்பதை
நீயே அறிவாய்…!

வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா?

“வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா?” என்பது நல்ல கேள்வி தான். “வெற்றி பெறப் படிக்கவும் வேண்டும்!” என்பது எனது கருத்து.

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது அறிஞர் ஒருவரின் வழிகாட்டல். அதாவது, வெற்றி பெற முயற்சி எடுத்தால் வெற்றி கிட்ட வாய்ப்பு உண்டு. எந்தக் குறிக்கோளை அடைந்தால் வெற்றி கிட்டுமோ, அந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழியைப் படித்து முயற்சி எடுத்தால் வெற்றி கிட்டும் வாய்ப்பு அதிகமாகும். எனவே, வெற்றி பெறப் படிக்க வேண்டும்!

உளவியல் நோக்கில் குறிக்கோளை அடைவதற்கான வழியை நெருங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நேர் (Positive) என்றும் உங்கள் முயற்சிகளுக்குக் குறுக்கே எதிர்ப்படுவன (எடுத்துக்காட்டாகத் தடைகள்) எல்லாம் மறை (Negative) என்றும் கருதலாம். அதாவது, நேர் (Positive) ஆகத் தன்னம்பிக்கையைக் கருதினால், தன்னம்பிக்கையைத் தளர வைக்கும் எல்லாம் மறை (Negative) ஆகும். எனவே, நேர் (Positive) ஆகவும் மறை (Negative) ஆகவும் எண்ணித் தடையின்றிக் குறிக்கோளை அடைய முயற்சி எடுத்தால் வெற்றியை உறுதிப்படுத்தலாம்.

உள்ளத்தை அடி உள்ளம் (மனம்), மேல் உள்ளம் (மனம்) என இரு பகுதிகளாகக் கருதினால்; மேல் உள்ளம் (மனம்) எண்ணமிட அடி உள்ளம் (மனம்) அதனைச் சேமிக்கும். மேல் உள்ளத்தில் படக்காட்சி போன்று குறிக்கோளை அடைவதற்கான வழியையும் முயற்சிகளையும் எண்ணிக்கொள்ளவும். இவ்வாறு பலமுறை எண்ணும் போது அவை அடி உள்ளத்தில் பதிந்துவிடுகிறது. வெற்றியை நோக்கி நடைபோடுகையில் அடி உள்ளத்தில் பதிந்தவை குறிக்கோளை அடையத் துணை நிற்பதால் வெற்றி கிட்ட வாய்ப்பு நெருங்கும்.

இவ்வாறான அடிப்படை எண்ணக்கருக்களை வைத்து வெற்றி பெறப் படிக்கவென பல நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும், தன்னம்பிக்கையைப் பெருக்கப் பல தன் (சுய) முன்னேற்ற நூல்களும் வெளிவந்துள்ளன. நாளேடுகளிலும் ஏழல் (வார), மாத ஏடுகளிலும் வெற்றி பெறப் படிக்கப் பல பதிவுகள் வெளிவருகின்றன. இவற்றை எல்லாம் படிக்காமல் வள்ளுவர் ஆக்கிய ஏழு குறள்களைப் பொருளறிந்து படித்தால் வெற்றி கிட்டுமென அறிஞர் என்.கணேசன் தெரிவிக்கின்றார். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அவற்றைப் படிக்கவும்.

வெற்றிக்கு ஏழு குறள்கள்!

பிழைக்காமல் பிழைக்க…

வாழ்க்கையில்
நாம்
காண்பது எல்லாம்
சரியாகத்தான் இருக்கிறது
ஆனால்
நமது பார்வை மட்டும்
பிழையாகத்தான் இருக்கிறதே!
நாம்
எம்மை மட்டும்
கணக்கெடுப்பதால்
பார்வைகள் – பிறரை
கணக்கெடுக்கத் தவறுவதால்
சரியான எல்லாம்
பிழையாகப் படலாமே!
ஒவ்வொரு
செயலிலும் முடிவிலும்
எல்லோரும்
ஏற்கக்கூடிய ஒன்றையே
பிழைக்காது என்கிறேன்!
“பிழைத்தல்” என்பது
தமிழில் “வாழ்தல்” என்று
பொருள்பட்டாலும்
முறையற்றதையோ
சரியாக இல்லாததையோ
“பிழை” என்றும்
வழக்கத்தில் இருக்கிறதே!
“உழைத்துப் பிழைத்து” என்பது
பிழைக்காமல்
உழைத்து வருவாயை ஈட்டி
பிழைத்தல் என்போமா!
அப்படியென்றால்
பிழைக்காமல் பிழைக்க
“நான்
சூழலுக்குள் ஓர் ஆள்
சூழலின் விருப்புக்கு இசைவாக
என் தனித்த முடிவு
வலிமையற்றதென
என்னால் முடியுமென்ற அளவும்
எல்லோரும் ஏற்க்கும்
என் முடிவில் – நான்
வாழ்ந்து காட்டுகிறேன்” என்று
வலது காலை முன்னே வைத்து
முன்னேற முயற்சி செய்!

நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா?

“நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா? – பசிய இலை வகைகள்.

‘சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே’. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது.

‘தாய் தகப்பனுக்கு இருந்தால்தான்; பிள்ளைகளுக்கும் வரும்.’ என்றார் மற்றொருவர்.

நீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் தாம் நினைத்ததை எல்லாம் சொல்கிறார்கள்.

ஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது.

அப்படியானால் தடுப்பது எப்படி?” என மருத்துவர் முருகானந்தன் ஐயா வழிகாட்டுகிறார்.

மிகுதியைத் தொடர்ந்து படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://hainallama.blogspot.com/2014/04/blog-post_2690.html

மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா? மனச்சோர்வு

மருத்துவர் முருகானந்தன் அவர்களின் ஆய்வினத் தாங்கள் படிப்பதனால் மனச் சோர்வு பற்றிய தெளிவைப் பெற்றுக்கொள்ளாம்.

சிறந்த வழிகாட்டல்.

 

மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா? மனச்சோர்வு.

via மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா? மனச்சோர்வு.