உளநோய்

உளநோய் நெருங்காமல் பேணுவோம்.
(We care mental Deceases)

அடிப்படையில் உளநோய் எதனால் ஏற்படுகிறது என்றால் தனிமை தான் அடிப்படைக் காரணம் என்பேன். தனிமைக்காண காரணிகளை அகற்றினால், உளநோய் நெருங்க வாய்ப்பிருக்காது.

தனித்து வாழும் போது தூக்கமின்மை, நிறைவான பொழுது போக்கின்மை காரணமாக உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். அவ்வேளை உளத்தளர்வு, சரியான முடிவு எடுக்க முடியாமை, சூழலுக்கு முகம் கொடுத்து முன்னேறத் தயங்குதல் எனப் பாதிப்புகள் வரலாம். இவை உளநோய் தோன்ற இடமளிக்கும்.

Human mental process

தனித்தும் வாழலாம். ஆனால், 24 மணி நேரத்தில் 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். ஓய்வு நேரத்தை ஆக்க வழிகளில் செலவிட வேண்டும். அன்பு உள்ளங்களின் நட்பு, அணைக்கும் உறவுகள், மதிப்பளிக்கும் ஆள்கள், விருப்பங்களை நிறைவேற்ற உதவும் ஆள்கள், வலுவான தன்னம்பிக்கை ஆகியன உளநோய் நெருங்க இடமளிக்காது.

நாளை என்ற நன்நாளை எப்படிக் களிப்பது என என்றும் முதல் நாளே திட்டமிடுதல் உளநலம் பேண உதவும். உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால் மட்டும் போதாது, உள்ளத்தால் நல்லதையும் கெட்டதையும் வேறாக்கி நமக்குப் பயன்தரும் நல்லதை முடிவு செய்து பயன்படுத்த முடிந்தாலே நலமான உள்ளம் தான்.

செலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்க வழிகாணத் தெரிய வேண்டும். பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தித் தவறான செயல்களில் ஈடுபடாதிருக்க வேண்டும். சிக்கல் வருகின்ற போதும் சிக்குப்படாமல் நழுவத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு எல்லாவகையிலும் உள்ளத்தால் உறுதியான நலம் தரும் முடிவுகளை எடுக்க முடியும் என்றால் உளநோய் நெருங்காத உள்ளம் என்று கூறலாம்.

அப்படியாயின், உளநோய் பற்றி நான் சொல்லாமலே நீங்களே உங்களால் புரிந்தது கொள்ள முடியுமே! உள்ளத்தால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாதிருப்பதுடன் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு வழியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரின் உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்ற வாய்ப்பு ஏற்படலாம்.

அது எவ்வாறு நிகழுகின்றது. அதனைத் தெரிந்து கொண்டால் உளநோய் ஏற்படா வண்ணம் எம்மைத் தயார்ப்படுத்தலாமே! அதற்கு அடிப்படையில் உள்ளத்தை மூன்று நிலைகளில் ஆய்வு செய்யலாம்.

நமது உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழும் எண்ணங்களை (கண்டதும் கெட்டதும் கொடியதும் நடைமுறைக்கு ஒவ்வாத) உணர்வு உள்ளத்தால் (Conscious Mind / மேல் மனம்) வடிகட்டி நல்லெண்ணங்களை (சூழலிருந்து நன்மதிப்பைப் பெறக்கூடிய) மட்டும் கருத்திற்கொண்டு பேண வேண்டும். அவ்வாறு கருத்திற்கொண்டு பேணப்படுபவை (அடிக்கடி மீட்டும் பார்க்கும் அல்லது எண்ணி(நினைத்து)ப் பார்க்கும் எல்லாம்) துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Mind / ஆழ் மனம்) சேமிக்கப்படுகிறது. அவை நமது நன்நடத்தைகளாக வெளிப்படுகிறது.

Picture of Id, Ego, and SuperEgo

கீழ்த் தரமான நடத்தைகள், முறைகேடான நடத்தைகள், நடைமுறைக்குப் (சூழ்நிலைக்குப்) பொருந்தாத நடத்தைகள் என மற்றையவரிடம் இல்லாத நடத்தைகள் சிலரிடம் காணப்படலாம். இதற்குக் காரணம் உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழும் எண்ணங்களை உணர்வு உள்ளத்தால் (Conscious Mind / மேல் மனம்) வடிகட்ட முடியாமற் போனதே! அதாவது, உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழுந்த எண்ணங்களுக்கு தீர்வு கிட்டாமையால், அவை துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Mind / ஆழ் மனம்) இருந்து கொண்டு மேற்காணும் நடைத்தைகளாக வெளிக்காட்டுகின்றது. இவற்றை நடத்தைப் பிறழ்வு எனலாம்.

மேலும், உள்ளத்தை மூன்று கூறுகளாக பகுத்து ஆய்வு செய்யலாம். அதாவது, பசி, பாலியல் போன்ற மகிழ்ச்சியைத் தரும் உணர்வுகளைத் தூண்டும் காரணி இட்(Id) ஆகும். நடைமுறைக்குப் பொருந்தாத எதனையும் தூண்டும் சக்தி இதற்குண்டு. இட்(Id) உணர்வுகளைத் தூண்ட, அதனை அடைவதற்கான வழியை அல்லது தீர்வினைக் கூறுவது நான் என்ற முனைப்பு ஈகோ(Ego) தான். (இட்)Id மகிழ்ச்சியை அடையத் தூண்டும் வேளை, ஈகோ(Ego) அதனை இப்படியெல்லாம் அடைந்திடலாம் என வழியை அல்லது தீர்வினைக் கூறும்.

சூழலில் நமது நன்மதிப்பைப் பேணுவது பற்றியெல்லாம் கவலைப்படாது இட்(Id)மகிழ்ச்சி உணர்வைத் தூண்ட, எக்கேடு கெட்டென (நன்மை, தீமை பற்றி எண்ணாமல்) என்னால் முடியுமென அதனை அடைய வழியமைக்கும் ஈகோ(Ego) இரண்டையும் மீறி உயர்நிலை உள்ளக் கூறு சுப்பர் ஈகோ(Super Ego) செயற்படுகிறது. அதாவது சூழலில் நமது நன்மதிப்பைப் பேணும் வகையில் மக்களாயம் (சமூகம்) ஏற்கும் அல்லது ஒழுக்கத்தைப் பேணும் கட்டுப்பாடுகளுக்கமையை (அதாவது சட்டதிட்டங்கள், சமூக விருப்பு, வெறுப்புகள்) ஈகோ(Ego) காட்டும் வழியை அல்லது தீர்வினைக் கட்டுப்படுத்துகிறது.

இந்நிலையில் ஈகோ(Ego) இற்கும் சுப்பர் ஈகோ(Super Ego) இற்கும் இடையே ஒரு போராட்டமே நிகழ்ந்து விடுகிறது. இப்போர் சமநிலையில் முடிவுற்றால் மனித ஆளுமை பேணப்படுகிறது எனலாம். நல்ல நிலையில் உள்ளம் நலமாக இருக்கிறது எனலாம். இப்போரில் ஈகோ(Ego) அல்லது சுப்பர் ஈகோ(Super Ego) வெற்றி பெற்றால் மனித ஆளுமையில் தளர்வு ஏற்படும். அதேவேளை உளநலக் குறைவும் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக, அழகான இளம் பெண் ஒருவளை ஓர் இளம் ஆண் காண்கிறான் என வைத்துக்கொள்வோம். அவ்வேளை ஆணின் உள்ளத்தில் இட்(Id) அப்பெண்ணின் விருப்பத்தை அறியத் தூண்டும்; உடனடியாகவே நேரடியாகவே கேட்கலாமென ஈகோ(Ego) இறங்க, ஆட்களுக்கு முன்னாலே கேட்டுப் பாதணி (செருப்பு) அடி வேண்டாமல் தகுந்த சூழ்நிலை (சந்தர்ப்பம்) வரும் போது கேட்கலாமென சுப்பர் ஈகோ(Super Ego) தடுத்துக்கொள்ளும்.

இந்நிலையில் ஈகோ(Ego) வெற்றி பெற்றால் பாதணி (செருப்பு) அடியும் கெட்ட பெயரும் உளப்புண்ணும் ஏற்படலாம். அதேவேளை சுப்பர் ஈகோ(Super Ego) வெற்றி பெற்றால் பாதணி (செருப்பு) அடி கிட்டாது எனினும் வேறொருவர் விரும்பினால் எந்நிலை என்னவாகும் என உள்ளம் நோக நேரிடும். சமனிலையில் ஈகோ(Ego), சுப்பர் ஈகோ(Super Ego) போர் முடிவுக்கு வருவதாயின், இட்(Id) இன் தூண்டலை ஏற்றாலும் அமைய வேண்டுமென இருப்பின் அமையும் தானே என அமைதி பேணலாம். இதனால் உளப் பாதிப்பு ஏற்படாது.

அதாவது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடிந்தால் ஆளுமையுள்ள மனிதர் எனலாம். அதேவேளை சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலை இருப்பின் ஆளுமைக் குறைவுள்ள ஆள் என்றே கூறலாம். இதனைச் சரி செய்யக்கூடிய உளக்குறைபாடு எனலாம். உளநல மருத்துவரின் மதியுரைப்படி பயிற்சிகளைச் செய்துவர இயல்பு நிலைக்கு மீளலாம். உளநல மதியுரைஞரின் மதியுரையையும் நாடலாம்.

உளநோய் என்றால் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று கருதக்கூடாது. அவ்வாறு எண்ணி மருத்துவரை நாடாவிட்டால் இலகுவான உளக்குறைபாடு பெரிய பெரிய உளநோய்கள் ஏற்பட வழி அமைத்துவிடும். இயல்பு நிலையில் ஏனையோரைப் போன்று முடிவு எடுத்தலிலும் நடத்தை மாற்றத்திலும் சற்றுத் தளர்வு காணப்படின் உளநல மருத்துவரை(Psychiatrist) நாடிக் குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறான உளக்குறைபாடு ஏற்படாமல் இருக்கச் சில வழிகள்:
நாளுக்கு நாள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் ஓட முயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது நேரம் பந்தடியுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் மிதிவண்டியை மிதியுங்கள்.
நாளுக்கு நாள் யோகாசனம், தியானம் செய்யலாம்.

இவ்வாறான பயிற்சிகள் சுயமுயற்சிகளே! இவற்றை விடச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கத் துணிச்சலை வளர்க்க வேண்டும். இல்லையேல் குறித்த சூழலை விட்டுத் தன்னம்பிக்கையுடன் விலகிப் புதிய சூழலை நாடி புதிய உறவுகளுடன் இணைய வேண்டும்.

அன்பான உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இவ்வாறு நிகழாமல் இருக்க:
குடும்பத்தில் சமநிலையில் எல்லா உறவுகளையும் பேணுதல் வேண்டும்.
குடும்பத்திலோ பணித்தளத்திலோ விளையாட்டுத் திடலிலோ பிற எந்தச் சூழலிலும் எவரையேனும் ஒதுக்கி வைத்தல் கூடாது.
பிறரது உள்ளம் நோகும் படி எதையாவது செய்துவிடாதீர்கள்.
ஒதுங்கும் உள்ளங்களைக் கூட அன்பாலே கட்டிப்போட்டு சூழலுக்குள் உள்வாங்க வேண்டும்.
சூழலில் நிகளும் எந்த நிகழ்விலும் ஒதுங்கியுள்ள உறவுகளை உள்வாங்கி இயல்பு நிலைக்கு முகம் கொடுக்க வைக்கவேண்டும்.

இதற்கு மேலும் இயல்பு நிலையில் சூழலை விட்டு ஒருவர் ஒதுங்கி இருப்பாராயின் அல்லது எல்லோரிடம் இருந்தும் ஒருவர் வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டிருப்பாராயின்; அவருக்கு உளநோய் இருப்பதாகக் கருதி உளநல மருத்துவரி(Psychiatrist)டம் காட்டுங்கள். எப்படியாயினும் உளநல மதியுரைஞரி(Counsellor)டம் காட்டவேண்டாம். ஏனெனில், குறித்த ஆளுக்கு “உடல் நோயா? உள நோயா?” என்பதை உளநல மருத்துவரே(Psychiatrist) முடிவு செய்வார். மருத்துவர் அனுதித்தால் மட்டுமே மதியுரைஞரை(Counsellor) நாடலாம்.

ஓருயிர் உலகத்தை விடப் பெறுமதியானது. ஒருவரின் பணி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரிய முதலீடு. எவரையேனும் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று ஒதுக்கி வைக்காமல் உளநோய் முற்றவிடாமல் தொடக்கத்திலேயே சரி செய்யக்கூடிய உளக்குறைபாடுகளை மருத்துவரி(Psychiatrist)டம் அல்லது மதியுரைஞரி(Counsellor)டம் காட்டிக் குணப்படுத்த முன்வாருங்கள்.

ஒருவர் செயலிழக்க உடன்பட்டால் நீங்கள் இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கீறீர்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒருவரின் உளநோயைக் குணப்படுத்தி இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்காமல் குறித்த ஆளின் வளத்தை நாட்டுக்கும் உலகுக்கும் பயன்படுத்த நல்வழி செய்யுங்களேன். இதனால் நமது சூழலில் உளநோயாளர்களை இல்லாமல் செய்யலாம். அதேவேளை நாட்டின் வருவாயையும் பெருக்கலாமே!

இவ்வண்ணம்
காசி.ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)
Counsellor (உளநல/ குடும்பநல மதியுரைஞர்)

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.