Monthly Archives: நவம்பர் 2013

யோகாவும் முற்காப்பும்

அறிவியல்(விஞ்ஞான) மருத்துவம் உடனடித் தீர்வுக்கு முக்கியமான ஒன்று. ஆனால், வேதியியல்(இரசாயன) மருந்துகள் உடலில் படிந்து பிற நோய்களை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுவதால் “நோய் வருமுன் காக்கும் பணி” என யோகாசனங்களை உலகெங்கும் பலராலும் செய்யப்படுகிறது.
உலகிலுள்ள அறிவனைத்தையும் கொண்டது திருக்குறல் போல, உலகிலுள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்த உதவும் ஆசனங்கள் யோகாசனத்தில் உள்ளது. எனவே, சிறந்த புலமையுள்ள ஆசிரியரிடம் முறையாகப் பயின்ற பின்னரே இவற்றைச் செய்ய வேண்டும். இல்லையேல் பல பிற நோய்கள் இதனாலேயே வந்துவிடும்

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
“சில எளிமையான யோகாசனங்களை யாரும் செய்யலாம். வழிகாட்டி தேவையில்லை. ஆனால் சில ஆசனங்களை வழிகாட்டியுடன் பயில்வது நல்லது. குறைந்தது அதைச்செய்யலாமா செய்யக்கூடாதா என அறிந்து செய்ய வேண்டும். உதாரணமாக கர்ப்பிணி பெண்கள், அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் போன்றோர்கள் இவற்றை எப்படிச்செய்ய வேண்டும் என்பதை முதலில் அறிந்து செய்ய வேண்டும்.” என்று நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்கள் சுட்டிக்காட்டினார்.

“உங்கள் வழிகாட்டல் சரியானது. பொத்தகங்களைப் பார்த்துச் செய்வதை விட, நல்ல வழிகாட்டியின் துணையுடன் பயில்வது நன்மை தருமென நம்புகின்றேன்.” என்று நானும் பதிலளித்தேன்.

 

உளநல மதியுரையின் வெற்றி

தொடக்க காலத்தில் எல்லோரும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியாதிருந்தது. அக்காலத்தில் மருத்துவர்கள் மட்டுமே உளநல மதியுரை (Counselling) வழங்கி வந்தனர். பின்னைய காலகட்டத்தில் உளவியல் (Psychology), உளச்சிகிச்சை முறைகள் (Psychotherapy), உளப்பகுப்பாய்வு (Psycho Analysis) போன்ற பாடப் பகுதிகளைப் படித்தவர்களும் உளநல மதியுரை (Counselling) வழங்கலாம் என்ற நிலை காணப்பட்டதாக நூலொன்றில் படித்தேன். மருத்துவர்களின் நேரமின்மை காரணமாக இவர்களின் பங்களிப்பும் உளநோயாளிகளுக்கு உதவக்கூடும்.

மேலேகூறியவாறு உளநல மதியுரை (Counselling) பற்றிப் படித்தவர்கள் எல்லோரும் பணியாற்றக் களமிறங்கினால்; உள நோயாளிகள் நிலை என்னவாகும். சிலர் பொத்தகக் கடைகளில் தொங்கும் பொத்தகங்களை வேண்டிப் படித்தபின்; தம்மாலும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியுமென்பர். வேறு சிலர் தமது பட்டறிவை (அனுபவத்தை) வைத்துத் தம்மாலும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியுமென்பர்.

“இவர்கள் எப்படியாவது அதை, இதை, உதைச் சொல்லி நோயாளிகளைத் தம் வழிக்கு வரவைக்க முயற்சிக்கலாம். ஆயினும், உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கருத்திற்கொள்ளாது உளநல மதியுரை (Counselling) வழங்கினால்; அவர்களது உளநோயைத் தணிப்பதற்குப் பதிலாக அதிகரிக்கச் செய்வதாகவே முடியும்.” என்றவாறு தமிழக முன்னணி உளநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் தனது நூலொன்றில் தெரிவித்திருந்தார். எனவே உளநல மதியுரை (Counselling) வழங்க முன்வருவோர் இதனைக் கருத்திற் கொள்ளவேண்டும்.

மேலும், உளநல மருத்துவர் ருத்ரன் அவர்களின் கருத்துப்படி உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கருத்திற்கொண்டு சாத்தியமான கருத்தேற்றங்களைச் (Suggestion) செய்வதன் ஊடாகவே அவர்களில் உளமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

உளநல மதியுரைஞர் (Counsellor) ஒரு நம்பிக்கைக்குரிய ஆளாகத் தோன்றவும் வேண்டும். அதேவேளை ஆற்றல் மிக்கவராகவும் இருக்க வேண்டும். இங்கு ஆற்றல் என்பது உளநல மதியுரைக்கு வேண்டிய அறிவாற்றலோ (Skill) கோட்பாடோ (Theory) அல்ல; உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கண்டுபிடிக்கும் ஆற்றலாகும்.

உளநோயாளி ஒருவர் உங்களை ஆற்றல் மிக்க ஒருவரென அறியமாட்டார். உளநோயாளி எப்போதும் நம்பிக்கை இழந்தவராகவே காணப்படுவர். எவர் எதைச் சொன்னாலும் எளிதில் நம்மமாட்டார். அதனால் தான், ஏதாவது ஓர் உளச்சிகிச்சை முறையைப் (Psychotherapy) பாவிக்கின்றோம். அதற்கு முன் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான எண்ணங்களைக் கருத்தேற்றம் (suggestion) செய்யலாம்.

அவ்வவ் மதத்தைச் சேர்ந்தவர்கள் (எடுத்துக்காட்டாக இந்து-பகவத்கீதை, கத்தோலிக்கம்-வேதாகமம்/பைபிள், இஸ்லாம்-அல்குர்ஆன், பௌத்தம்-புத்தரின் வழிகாட்டல்) ஏற்றுக்கொண்ட இறைமொழியில் எடுத்துக்காட்டுகளைப் பொறுக்கிக்காட்டி விளங்க வைக்கலாம்.

சூழலிலுள்ள பெரியவர் (எடுத்துக்காட்டாக: மக்களாயத் தலைவர்), துறைசார் அறிஞர், மதத் தலைவர், நம்பிக்கைக்கு உரியவர் என உளநோயாளி எளிதில் நம்பக்கூடிய ஒருவரின் கருத்தேற்றத்தைக் (suggestion) கூறிவைக்கலாம். எடுத்துக்காட்டாக மருத்துவர் கூறினால் நோய்க்குச் சரியான மருந்தென நம்பலாம்.

குடும்பம், சூழல் ஒன்றிணைந்து செயற்படும் செயல்களில் உளநோயாளியைப் பங்கெடுக்கச் செய்து சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம். இவ்வாறு உளநோயாளியின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கருத்தேற்றம் (suggestion) செய்வதனால் மட்டுமே உளமாற்றத்தை ஏற்படுத்த முடியும். எந்தவொரு உளநல மதியுரைஞரின் (Counsellor) ஆற்றலைவிட உளநோயாளியின் நம்பிக்கையை வலுப்படுத்தும் ஆற்றலே பெரிது எனலாம்.

உளநலம் பேண வேண்டுமெனின் உளநோயாளியின் சரியான, நேரான முடிவை நாமே ஊட்டிவிடுதல் அல்ல; சூழலை, தேவையை, பெறுதியை என எல்லாவற்றையும் சுட்டிக்காட்டிப் பொருத்தமான கருத்தேற்றங்களை (suggestion) வழங்க; உளநோயாளி தானாகவே முடிவெடுக்கும் நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். உளநோயாளி தானே முடிவெடுத்துத் தனது முயற்சிகளில் இறங்கி வெற்றிகாண வழிவிடும் போதுதான்; அவருக்குத் தன்னம்பிக்கை பிறக்கும். அத்தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதில் தான் உளநல மதியுரைஞருக்கு (Counsellor) வெற்றி கிட்டும்.

எனவே தான், உளநல மதியுரை (Counselling) என்பது திறமையைப் பாவித்துக் (Apply) காட்டுதலல்ல; நிறைவாகப் (Fluency) படித்து உளநலக் கோளாறால் வலுவிழந்தவரை நாட்டுக்குப் பயன்தரக்கூடிய வகையில் சுகப்படுத்தும் உயரிய பொறுப்பான பணியென உணர்ந்து செயற்படுவதாலே தான் வெற்றி காணமுடியும்.

உளநோயாளிக்கும் உளநல மதியுரைஞருக்கும் (Counsellor) இடையேயான நம்பிக்கையும் நல்லுறவுமே உளநல மதியுரைக்கு (Counselling) வெற்றியைத் தரும். அப்போது தான் உளநல மதியுரைஞரால் (Counsellor) உளநோயாளியைக் குணப்படுத்தலாம்.

காதலிக்காமல் இருக்கலாமோ?

என் வாழ்வில் இயற்கையில் காதல் அமையவில்லை. என் நண்பர்கள் ஒவ்வொரு வடிவுக்கு அரசியையும் காட்டிக் காதலிக்கச் சொல்வாங்கள். திரைப்படக் கதை கூறிக் காதலிக்கப் படிப்பித்துப் பார்த்தும் சரிவரேல்லை. காதல் இயற்கையாக வரவேணும் என்று சொல்லிப்போட்டு நானும் பேச்சுத் திருமணம் தான் செய்தேன். நீங்களும் என்னைப் போல பேச்சுத் திருமணம் செய்ய இருந்தால் காதலிக்காமல் இருக்கலாம்.

நான் திருமணமாகிய பின், தோழி ஒருத்தி விபத்துக்குள்ளானாள். அவ்விடத்தில் அவளுக்கு உறவென்று சொல்ல எவருமில்லை. நானே அவளுக்குரிய எல்லாப் பணிகளையும் செய்தேன். மூன்றாம் நாள் சுகமாகியதும் மருத்துவ மனையால வெளியேற்றியதும் வீட்டிலும் சேர்ப்பித்தேன்.

பின், நடைபேசியில் இடை இடையே கதைத்து வந்தாள். ஒரு நாள் நேரிலே சந்தித்து “உங்களைப் போல நல்ல ஆளைத் தேடியும் பிடிக்கேலாது. நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருக்கலாமோ?” என்று கேட்டாள். திருமணம் செய்தவரைக் காதலிக்கக் கூடாதென ஆற்றுப்படுத்தினேன்.

இந்நிலையில் “நான், எப்படி ஆற்றுப்படுத்தி இருப்பேன்?” என்றும் “நான், ஏன் காதலிக்காமல் இருந்தேன்?” என்றும் நீங்கள் கேட்கலாம். “என்னையும் நம்பி, ஒருத்தி தலையை நீட்டினாள்; நானும் அவளுக்குத் தாலியைக் கட்டினேன். அவளையும் மீறி, உன்னைக் காதலித்தால்; அவளின் நிலை என்னாகும். அவளிற்கு நாற்பது காசு வருவாய்; எனக்கோ நாலு காசு வருவாய்; நான் உன்னைக் காதலித்தால் என் நிலைமை என்னாவாகும்.

நீ விரும்பினால், உனக்கோ எத்தனையோ ஆண்கள் வலிய வருவாங்கள்; விரும்பிய ஒருத்தரைக் கட்டலாமே! அதனால், அடுத்தவருக்குத் தீங்கில்லையே! எவரும் எதையும் செய்யலாம்; ஆனால், அவை அடுத்தவருக்குத் தீங்கு விளைவிக்காதிருக்க வேண்டும். அப்போது தான் உள்ளத்தில் உறுத்தல் ஏதுமிருக்காது; மகிழ்சியை மட்டும் அடையலாமே!” என்று கூறி அவளை ஆற்றுப்படுத்தியதோடு, நான் எவளையும் காதலிக்காமையையும் சொல்லி முடிக்கிறேன்.

ஆழமறியாமல் காலை விட்டது போல, அந்தப் பெண் “உங்களைப் போல நல்ல ஆளைத் தேடியும் பிடிக்கேலாது. நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருக்கலாமோ?” என்று கேட்டது சரியா?

அவள் இளகிய உள்ளம் கொண்டிருந்தால், நோயாளி என்று அன்பு காட்டும் எவரையும் தன்னை விரும்புவார் என நம்பியிருக்கலாம். நோயுற்ற வேளையாயினும் பிற செயலின் போதும் குறித்த ஒருவரின் உதவி முக்கிய பங்காற்றி இருப்பின் அந்தாளை விரும்பலாம். ஆனால், மணமுடித்த ஒருவர் மீது விருப்பங்கொள்வதை ஏற்க முடியாது. நாம் தமிழர். தமிழர் பண்பாட்டில் இதற்கு இடமில்லை.

நீண்ட நாள் பழகி இருந்தும் I Love You சொல்லாமல் இருந்தும் ஒருவர் உதவியில் இன்னொருவர் நன்மை அடைந்திருந்தால் அதனை அவர் அடிக்கடி நினைவூட்டுகையில் குறித்த ஆளின் மீது இருந்த விருப்புக் காதலாக மாறலாம். மறுமுனையில் உள்ளவருக்கு வெளிப்படுத்தினால்; அவரும் ஏற்றுக்கொண்டால் காதலிக்க முடியும். இல்லையேல், ஒரு தலைக் காதல் தான்.

ஆனால், திருமணம் செய்யாத நீங்கள் இப்படியான சூழலில் காதலிக்காமல் இருக்கலாமோ? இயற்கையாக அமையாத போது கண்டிப்பாகக் காதலிக்காமல் இருக்கலாம்! ஆனால், இயற்கையாக அமையின் காதலிக்காமல் இருக்கலாமோ?

ஊரே ஒன்றுகூடி ஏற்குமென்றால் காதலிக்கலாம் தான்! அதாவது மணமானால் குடும்பத்தைக் காக்கும் வருவாய்; ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம்; இருவரின் பெற்றோர்களது இணக்கம் இருந்தால் காதலிக்கலாம் தான்! அப்படியாயின் மகிழ்வான வாழ்வும் அமையுமே!

இவற்றையெல்லாம் கடந்தும் பாலுணர்வுத் தூண்டலால் ஈர்க்கப்பட்டுக் காதலித்தோர் பின் பிரிகின்றனர். பிரிந்த பின்னே தங்கள் தவறுகளை உணருகின்றனர். இவற்றையெல்லாம் கடந்தும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்தோர் இருவரின் பெற்றோர்களது உறவுகளைப் பிரிந்து; அவர்கள் காணாத தொலைவில் வாழ்கின்றனர். பெற்றோர்களது உறவுகளைப் பிரிந்து வாழ முனைந்தவர்களும் முழு மகிழ்வின்றி வாழ்வதைக் காணலாம்.

ஒருவர் நிலையை ஒருவர் அறிந்தும் ஒருவர் உள்ளத்தை ஒருவர் புரிந்தும் வாழ்வதற்கான வளங்களைப் பேணியும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தும் காதலித்தால் காதலும் வரும்; மகிழ்வான வாழ்வும் அமையும். எதற்கெடுத்தாலும் இருவரது உள்ளத்திலும் ஒற்றுமை இருப்பின் (அதாவது, இருவரது முடிவும் ஒன்றாயின்), உண்மைக் காதலை உடைக்க முடியாதே!