Monthly Archives: நவம்பர் 2014

உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…

உறவுகளே!
மருத்துவரும் நம்மைப் போலத் தான்…
மனித உடலைச் சீர் செய்பவரும் அவரே…
அவரிடம்
நமது உடலைக் காண்பிப்பதில்
ஏன் முகம் சுழிக்க வேண்டும்?
சொன்னால் நம்ப மாட்டியள்…
எனது ஆணுறுப்பில் புண் வந்துவிட்டது…
அருகிலுள்ள மருத்துவமனையில்
அழகான, இளமையான
பெண் மருத்துவர் தான் இருக்கின்றார்.
எனது ஆணுறுப்பை
பெண் மருத்துவரிடம் காட்டினால் – எனது
மதிப்புக் குறைந்துவிடும் என அஞ்சினால்
எனக்குச் சாவுதான் பரிசாகக் கிட்டியிருக்குமே!
ஆனால்,
எனது ஆணுறுப்பை – குறித்த
பெண் மருத்துவரிடம்
நான்கு முறைக்கு மேல் காட்டியிருப்பேன்
ஏன்?
எனது ஆணுறுப்பில் வந்த புண்
மாறவேண்டும் என்பதற்காக…
இறுதியில் – எனது
ஆணுறுப்பில் வந்த புண் மாறிவிட்டது…
புண்ணுக்குக் காரணமே
நீரிழிவு நோய் தான்!
உடலில்
குளுக்கோசின் அளவு கூடியதால் – அது
சலத்துடன்(Urine) வெளியேறியதாம் – அவ்வாறு
சலத்துடன்(Urine) வெளியேறுவதால்
ஆணுறுப்பின் முன்மேற்றோலில் பாதிப்பு ஏற்பட
புண் தோன்றுவதாகக் கூறி
நீரிழிவைக் கட்டுப்படுத்தியதும்
புண் மாறியதாக – குறித்த
பெண் மருத்துவர் விளக்கமளித்தாரே!
பெண் மருத்துவரிடம்
எனது ஆணுறுப்பைக் காட்டினால்
என்னை மதிக்க மாட்டாரென
அஞ்சியிருந்தால் – இந்த
உண்மையை உங்களுக்குச் சொல்ல
நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேனே!
உறவுகளே
பால் நிலை வேறுபாட்டைக் கருதியோ
மதிப்புக் குறைந்து போய்விடும் என அஞ்சியோ
மருத்துவரிடம் நாடி உதவி பெறாவிடின்
எந்தக் கடவுள் வந்தாலும்
உங்களைக் காப்பாற்ற இயலாதே!
எடுத்துக் காட்டாக
அழகிய பெண்ணொருத்தி – தனது
மார்பகத்தில் (Breast) தோன்றிய
சிறு காயைக்/ கட்டியைக் கூட
ஆண் மருத்துவரிடம் காட்டினால்
தன் அழகுக்கு இழுக்கு வருமென அஞ்சி
தானாக மாறுமெனக் காலம் கடத்தினாளே!
காலப் போக்கில்
மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) வந்து – குறித்த
அழகிய பெண் சாவடைந்தாளே!
இப்படித்தான்
அழகிய பெண்ணொருத்தி
தனது பெண்ணுறுப்புக்குக் கிட்ட
அடிக்கடி கையை நீட்டி சொறிந்ததை
திருமண நிகழ்வொன்றில் பார்த்தேன்…
“என்னம்மா? – இது
உங்களுக்கே சரியா?” என்று
கேட்ட போது தான் தெரிந்தது…
பெண்ணுறுப்பருகே
இருபக்கத்திலும் கடியாம்…
வேப்பிலை அரைத்துப் பூசியும்
குறையவில்லையாம் என்றாளே!
இதெல்லாம்
உடைகளால் ஏற்படும் தொற்றுத் தான்
உடனடியாகவே
மருத்துவரிடம் காட்டுங்கள் என்றேன்…
மறுநாள் – அப்பெண்
என் வீட்டிற்கே வந்துவிட்டாளே!
குப்புசாமி மருத்துவரிடம் காட்டியதால்
“இலகுவில் பெண்ணுறுப்பில்
தொற்றுகள் ஏற்பட வாய்புண்டெனக் கூறி
உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்
தொற்றுகள் – பிற
நோய்களையும் ஏற்படுத்தும்” என்று கூறி
அவர் கொடுத்த மருந்தால்
தனக்கு நோய் குணமாயிற்று என்றாளே!
மருத்துவரை நாட வைத்த
எனக்கு நன்றி சொல்லவே
என் வீட்டிற்கு – தான்
வந்ததாகச் சொன்னாளே!
உறவுகளே!
மருத்துவரும் நம்மைப் போலத் தான்…
மனித உடலைச் சீர் செய்பவரும் அவரே…
அவரிடம்
நமது உடலைக் காண்பிப்பதில்
ஏன் முகம் சுழிக்க வேண்டும்?
அவரிடம்
எமது நோய் பற்றிய
உண்மைகளை எடுத்துக் கூறுவதால்
என்ன தான் மதிப்புக் குறையப் போகிறது?
உறவுகளே!
நோய்கள் அணுகாமல் உடலைப் பேணுங்கள்…
நோய்கள் அணுகினால்
உடனுக்குடன் மருத்துவரை அணுகி
சாவிலிருந்து விடுபட்டுக் கொள்ளவும்
நீண்ட ஆயுளுடன் வாழவும்
முயற்சி செய்யுங்களேன்!

உளநோய் நெருங்காமல் பேணுவோம்.

உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால் மட்டும் போதாது, உள்ளத்தால் நல்லதையும் கெட்டதையும் வேறாக்கி நமக்குப் பயன்தரும் நல்லதை முடிவு செய்து பயன்படுத்த முடிந்தாலே நலமான உள்ளம்.

செலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்க வழிகாணத் தெரிய வேண்டும். பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தித் தவறான செயல்களில் ஈடுபடாதிருக்க வேண்டும். சிக்கல் வருகின்ற போதும் சிக்குப்படாமல் நழுவத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு எல்லாவகையிலும் உள்ளத்தால் உறுதியான நலம் தரும் முடிவுகளை எடுக்க முடியும் என்றால் உளநோய் நெருங்காத உள்ளம் என்று கூறலாம்.

அப்படியாயின், உளநோய் பற்றி நான் சொல்லாமலே நீங்களே உங்களால் புரிந்தது கொள்ள முடியுமே! உள்ளத்தால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாதிருப்பதுடன் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு வழியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரின் உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்ற வாய்ப்பு ஏற்படலாம். அதாவது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலை தோன்றலாம். இதனைச் சரி செய்யக்கூடிய உளக்குறைபாடு எனலாம். உளநல மருத்துவரின் மதியுரைப்படி பயிற்சிகளைச் செய்துவர இயல்பு நிலைக்கு மீளலாம். உளநல மதியுரைஞரின் மதியுரையையும் நாடலாம்.

உளநோய் என்றால் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று கருதக்கூடாது. அவ்வாறு எண்ணி மருத்துவரை நாடாவிட்டால் இலகுவான உளக்குறைபாடு பெரிய பெரிய உளநோய்கள் ஏற்பட வழி அமைத்துவிடும். இயல்பு நிலையில் ஏனையோரைப் போன்று முடிவு எடுத்தலிலும் நடத்தை மாற்றத்திலும் சற்றுத் தளர்வு காணப்படின் உளநல மருத்துவரை(Psychiatrist) நாடிக் குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறான உளக்குறைபாடு ஏற்படாமல் இருக்கச் சில வழிகள்:
நாளுக்கு நாள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் ஓட முயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது நேரம் பந்தடியுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் மிதிவண்டியை மிதியுங்கள்.
நாளுக்கு நாள் யோகாசனம், தியானம் செய்யலாம்.
இவ்வாறான பயிற்சிகள் சுயமுயற்சிகளே! இவற்றை விடச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கத் துணிச்சலை வளர்க்க வேண்டும். இல்லையேல் குறித்த சூழலை விட்டுத் தன்னம்பிக்கையுடன் விலகிப் புதிய சூழலை நாடி புதிய உறவுகளுடன் இணைய வேண்டும்.

அன்பான உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இவ்வாறு நிகழாமல் இருக்க:
குடும்பத்தில் சமநிலையில் எல்லா உறவுகளையும் பேணுதல் வேண்டும்.
குடும்பத்திலோ பணித்தளத்திலோ விளையாட்டுத் திடலிலோ பிற எந்தச் சூழலிலும் எவரையேனும் ஒதுக்கி வைத்தல் கூடாது.
பிறரது உள்ளம் நோகும் படி எதையாவது செய்துவிடாதீர்கள்.
ஒதுங்கும் உள்ளங்களைக் கூட அன்பாலே கட்டிப்போட்டு சூழலுக்குள் உள்வாங்க வேண்டும்.
சூழலில் நிகளும் எந்த நிகழ்விலும் ஒதுங்கியுள்ள உறவுகளை உள்வாங்கி இயல்பு நிலைக்கு முகம் கொடுக்க வைக்கவேண்டும்.

இதற்கு மேலும் இயல்பு நிலையில் சூழலை விட்டு ஒருவர் ஒதுங்கி இருப்பாராயின் அல்லது எல்லோரிடம் இருந்தும் ஒருவர் வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டிருப்பாராயின்; அவருக்கு உளநோய் இருப்பதாகக் கருதி உளநல மருத்துவரி(Psychiatrist)டம் காட்டுங்கள். எப்படியாயினும் உளநல மதியுரைஞரி(Counsellor)டம் காட்டவேண்டாம். ஏனெனில், குறித்த ஆளுக்கு “உடல் நோயா? உள நோயா?” என்பதை உளநல மருத்துவரே(Psychiatrist) முடிவு செய்வார்.   மருத்துவர் அனுதித்தால் மட்டுமே மதியுரைஞரை(Counsellor) நாடலாம்.

ஓருயிர் உலகத்தை விடப் பெறுமதியானது. ஒருவரின் பணி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரிய முதலீடு. எவரையேனும் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று ஒதுக்கி வைக்காமல் உளநோய் முற்றவிடாமல் தொடக்கத்திலேயே சரி செய்யக்கூடிய உளக்குறைபாடுகளை மருத்துவரி(Psychiatrist)டம் அல்லது மதியுரைஞரி(Counsellor)டம் காட்டிக் குணப்படுத்த முன்வாருங்கள்.

ஒருவர் செயலிழக்க உடன்பட்டால் நீங்கள் இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கீறீர்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒருவரின் உளநோயைக் குணப்படுத்தி இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்காமல் குறித்த ஆளின் வளத்தை நாட்டுக்கும் உலகுக்கும் பயன்படுத்த நல்வழி செய்யுங்களேன். இதனால் நமது சூழலில் உளநோயாளர்களை இல்லாமல் செய்யலாம்.

வெற்றியடையப் பதினான்கு வழிகள் இருக்காமே!

key of  success

Key Of Success   (படம் – அந்திமாலை)

என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கான இலக்கை நோக்கி முன்னேறுதல் என்ற ஒரு வழி தான் இருக்கு. ஆனால், வெற்றியடையப் பதினான்கு வழிகள் இருக்கென்றதும் என்னாலேயே நம்ப முடியவில்லை. பிறகு தான் என் பிடரி வேலை செய்தது, பதினான்கு வழிகளில் நம்மாளுகள் சரியாக முடிவு எடுத்திருந்தால் வெற்றிக்கான இலக்கை அடைந்திருக்கலாமென எண்ணத் தோன்றியது.

1. பொறுமையே வெற்றிக்கான வழி – நாம் பீக்கு முந்தின குசு போல, முந்திக்கொள்வதால் சிந்திக்க வாய்ப்பில்லை. பொறுமையாய் இருந்து சிந்தித்தவருக்கு வெற்றிக்கான வழி தென்படுமே!

2. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் – மழை பெய்தால் புல் முளைக்கும். அது தான் சூழலமைவு! அதுபோலத் தக்க சூழலமைவில் தனது ஆற்றலை வெளிக்கொணருவதும் வெற்றிக்கான வழியே!

3. முன்னோக்கி முன்னேறுங்கள் – நம்மாளுகள் தடைகளைக் கண்டதும் பின்வாங்கிவிடுவர். தடைகளை இனம் கண்டு, தடைகளைத் தாண்டியும் முன்னோக்கி முன்னேறினால் வெற்றியின் நிழலைக்கூட எட்டிப் பிடித்துவிடலாமே!

4. விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை (உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்) – சிலவற்றை அடைந்திட சில விட்டுக்கொடுப்புத் தேவைப்படலாம். அதற்காக எல்லா இடத்திலும் விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கு இடமில்லையே! உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்காவிட்டால் வெற்றி உங்கள் பக்கமே!

5. என்னால் முடியும் – “என்னால் முடியும்” என்ற நம்பிக்கையே தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை இருந்தால் நன்நம்பிக்கை முனையைக்கூடக் கடந்துவிடலாமே! அதாவது, வெற்றிக்கான பின்னூட்டியே தன்னம்பிக்கை தான்!

6. யானையின் பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை – யானைக்குத் தும்பிக்கை உதவும், மனிதனுக்குத் தும்பிக்கையான் உதவுவாரா? தும்பிக்கையானை நம்பித் தொழுதால் தொடரும் வினைகள் அறுமென்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் வெற்றியடையத் தேவையான முதலீடு!

7. உழைப்பில்லையேல் வருவாய் இல்லை (ஊதியமில்லை) – முயலும் ஆமையும் ஓட்டப்போட்டியில்; பாய்ந்து வெல்வேன் என்ற நம்பிக்கையில் முயலார் தூங்கிவிட, ஓடிக் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஆமையும் விடா முயற்சி எடுத்து வெற்றி கண்டதே! ஆமையின் உழைப்புத் தானே வருவாயாக வெற்றியைக் கொடுத்தது. அப்ப முயலாமை தோல்விக்கு அறிகுறி!

8. கவலை ஏதுமில்லை – இழப்புகள், சோர்வுகள் என எது வந்தாலும் கவலை ஏதுமில்லை என வெற்றி குறித்து எண்ணமிட்டால் சிறப்புத் துணிவொன்று எமக்குள்ளே வந்துவிடும். அதுவே வெற்றிக்குத் துணை நிற்கும்!

9. சக்திகள் அதிகரிக்கும் போது, பொறுப்புகளும் அதிகரிக்கும் – எமது ஆற்றல்கள், வளங்கள் தான் சக்தி. சக்தியை அதிகரிக்க ஆற்றல்களும், வளங்களும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அதுவே பொறுப்புகளை அதிகரிக்கச் செய்யும். பொறுப்புணர்வோடு முயற்சி எடுப்பின் வெற்றி கிட்டுமே!

10. இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் – வெற்றியடையச் செல்லும் வழி நலமாக அமையாது இருக்கலாம். அதற்காக, “ஆடத் தெரியாதவளுக்கு அரங்கு (மேடை) சரியில்லை” என்றிருக்காமல் இறுதியில் எல்லாம் சரியாகிவிடுமென வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தால் வெற்றியே!

11. முடியாதது ஒன்றுமில்லை – “முடியாதது ஒன்றும் மனித அகரமுதலியில் (அகராதியில்) இல்லை” என்று அறிஞர் ஓருவர் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், முடியாதது ஒன்றுமில்லை எனின் முடியுமென்ற நம்பிக்கை தான் வெற்றிக்கு வழிகாட்டுகிறது!

12. உங்களால் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் – “உங்களால் மற்றவர்களை மாற்ற முடியாது. உங்களால் உங்களை மட்டுமே மாற்ற முடியும்.” என்பது உண்மையே! எமக்கேற்றால் போல சூழல் மாறாது. எனவே, சூழலுக்கு ஏற்றால் போல எம்மை நாம் மாற்றலாம். அதுபோல வெற்றிக்கு ஏற்றால் போல எம்மை மாற்றினால் வெற்றி தானாக வருமே!

13. விழி, எழு, பற – வெற்றியின் இலக்கில் விழிப்பாயிரு… வெற்றியடையச் சரியான வழியைத் தெரிவு செய்து வெற்றியடைவேனென எழு… வெல்வேனெனத் துணிவோடு எழுந்தபின் வெற்றியின் இலக்கை நோக்கிப் பற… அடுத்தது உன் கையில் வெற்றி தானே!

14. சிறந்ததையே தெரிவு செய்யுங்கள் – குற்றிக் காசின் (நாணயத்தின்) இருபக்கங்களைப் போல நற்செயல், நல்வழி இருந்தால் தீயதும் உண்டே! எச்செயலையோ எவ்வழியையோ தெரிவு செய்தாலும் சிறந்ததையே தெரிவு செய்யுங்கள். அத்தெரிவே வெற்றியை முடிவு செய்கிறது! சிறந்ததைச் தெரிவு செய்தால் வெற்றியை அடையும் வரை தொடர்வதே சிறப்பு!

வழமை போல் என் அறிவுப் பசி போக்க வலைப் பதிவுகளைத் தேடினேன்! அவ்வேளை தான் “வெற்றிக்கா​ன 14 மந்திரங்கள் –
திங்கள், நவம்பர் 03, 2014​” என்ற பதிவை அந்திமாலையில் படித்தேன். அதனை வைத்தே இத்தனையும் கிறுக்கினேன் என்றால், கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கினால் அவர்கள் கூறிய அத்தனையும் நீங்கள் கற்றிடலாமே!

http://anthimaalai.blogspot.com/2014/11/14.html