Monthly Archives: செப்ரெம்பர் 2014

காதல் முறிவு (Love Break) ஆகாமல் இருக்க…

இன்றைய இளசுகள் காதல் என்பது என்னவென்று தெரியாமல் காதலித்தால் அவர்களுக்கு அகவை காணாது என்பேன்.
இன்றைய இளசுகள் காதல் என்பது என்னவென்று தெரிந்து காதலித்தாலும் அவர்களுக்குக் காதல் முறிவு (Love Break) வந்தால் அவர்களிடம் அறிவில்லை என்பேன். காதல் முறிவு (Love Break) ஆகாமல் இருக்க எப்படியான அறிவு வேண்டும்? கீழுள்ள வரிகளைப் படித்தால் புரியும் என்பேன்.

ஆண்களே – தங்கள்
காசுப்பை வெற்றுப்பை ஆனால்
காதலா – நான்
உங்களை – அந்த
எண்ணத்தில் பார்த்ததே இல்லை
நீங்கள்
எனக்கு அண்ணை/தம்பி மாதிரின்னு
பெண்களே – உங்களை
கழட்டி விட்டிடுவாங்களென்று
சொல்ல வந்தேன்!

பெண்களே – தங்களை விட
பணக்காரியோ அழகியோ அகப்பட்டால்
காதலா – நான்
உங்களை – அந்த
எண்ணத்தில் பார்த்ததே இல்லை
நீங்கள்
எனக்கு அக்கா/தங்கை மாதிரின்னு
ஆண்களே – உங்களை
கழட்டி விட்டிடுவாங்களென்று
சொல்ல வந்தேன்!

மேலுள்ள வரிகளில் ஒளிந்திருக்கும் உளவியல் என்னவென்று கண்டுபிடித்தாச்சா? ஒவ்வொருவரும் உள்நோக்கம் ஏதாவது ஒன்றை வைத்துத் தானே பழகிறாங்க… அதனைக் கண்டுபிடிக்கும் அறிவு இல்லாமையே காதல் முறிவு (Love Break) ஏற்படக் காரணம் ஆகிறது என்பேன். குறுகிய காலப் பழக்கத்தில் காதல் (Love) ஏற்பட்டால் இந்நிலை தான் முடிவு.

நீண்ட காலப் பழக்கத்தில் காதல் (Love) ஏற்பட்டுக் காதல் முறிவு (Love Break) ஏற்படக் காரணம் ஒருவர் எதிர்பார்ப்பை அடுத்தவர் அறிந்து கொள்ளாமையே! ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் எதிர்பார்ப்பைச் சரி செய்திருந்தால் ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் அதிகரிக்கும் நம்பிக்கை வலுவடையும் காதல் முறிவு (Love Break) ஏற்பட வாய்ப்பு இருக்காது. அப்படியென்றால் காதலிக்க முன்னர் ஆளை ஆள் படிக்க வேண்டும்.

உங்கள் விருப்பம்

“என்னங்க… அடிக்கடி அவங்களைத் திட்டிக்கொள்கிறியளே!” என்றொருவர் அடுத்தவரிடம் கேட்க “அதுவா… அது என் விருப்பம்!” என்றார் அடுத்தவர்.

திட்டிக்கொள்வது அவரவர் விருப்பம் தான்! சரி, அது அடுத்தவர் உள்ளத்தைப் புண்ணாக்குமே! ஆனால், உள்ளப் புண்ணுக்கு மருந்தே கிடையாதே! அது உறவுகளை முறிக்கவே செய்யும்!

நல்ல உறவுகளைப் பேண அன்பு தான் மருந்து!

வழிப்படுத்தல் (Mentoring) பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

குடும்ப மருத்துவர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் தனது தளத்தில் பதிவு செய்த வழிப்படுத்தல்-mentoring என்ற பதிவைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். உளநலப் பேணுகைப் பணியில் நாட்டம் உள்ளவர்கள் மட்டுமல்ல துறைசார் நுட்ப வளங்களைப் பகிருவோருக்கும் உதவும் சிறந்த பதிவாக நானுணர்ந்து தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

கீழுள்ள இரண்டு படங்களையும் உள்ளத்தில் இருத்துங்கள். வழிப்படுத்தல் கொண்டிருக்கும் உள்ளடக்கம் என்னவென்று அறிந்துகொள்ளுங்கள்.

வழிப்படுத்தல் - Mentoring

வழிப்படுத்தல் - Mentoring

“தங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை விருத்தி செய்து, திறன்களை மெருகூட்டி, வினைத்திறனை அதிகரித்து சிறந்த முறையில் தொழில் ஆற்றலைப் பெறுவதற்கு வழிப்படுத்தல் நன்கு பயன்படும்.” என மருத்துவர் தெரிவிப்பதில் உண்மையிருக்கு.

எவருக்கும் படித்தறிவு இருப்பினும் பட்டறிவு தானே வழிகாட்டுகிறது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பட்டறிவு கிட்டுவதில்லை. அப்படியாயின், படித்தறிவை மேம்படுத்த உதவுவது வழிப்படுத்தல் (Mentoring) என்றே நம்புகிறேன்.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படியுங்க.

வழிப்படுத்தல் Mentoring
via வழிப்படுத்தல் – Mentoring.

தற்கொலையா? ஜயோ… வேண்டாம்!

“வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ” என்றெழுதிய பாவரசரின் எண்ணத்தில் மனிதன் இறந்த பின சாவு ஊரவலத்தை கண்;டது போல அல்ல அந்நிலையில் (சாவடைந்த ஒருவரின் நிலையில்) உறவுகளின் நிலையை எண்ணிப் பார்த்திருக்கிறார். சாவடைந்த ஒருவரால் இக்காட்சியைக் காண முடியுமா? இது இயற்கையின் பணி என்று தானே எண்ணி நாமும் வாழ்கிறோம். ஆனால், நம்மில் சிலர் இப்பாடல் வரியில் குறிப்பிட்ட சூழலில் வாழ்வதாக எண்ணித் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அதாவது, தமது எண்ணங்களுக்கோ விருப்பங்களுக்கோ ஏற்றால் போல உறவுகள் இல்லாத வேளை தற்கொலையை நாடுகிறார்கள். சூழல் எதிர்பார்க்கும் அளவுக்கு வாழ்ந்தோமோ இல்லையோ தமக்கு வேண்டியதைச் சூழலிலிருந்து பெற முடியாத வேளை தற்கொலை எண்ணம் சிலரது உள்ளத்தில் தோன்றிவிடுகிறது. அதாவது தன்னம்பிக்கை முற்றலுமின்றி பிறரில் தங்கியிருந்தால் தான் இந்நிலை ஏற்படுகின்றது. அதேவேளை தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற (சூழலுக்குப் பதிலளிக்க முடியாத போது) இயலாத போதும் சூழலில் தலையை நிமிர்த்தி நடைபோட முடியவில்லையெனத் தற்கொலையை நாடுகிறார்கள்.

எனவே இவ்வாறான நிலையில் சாவைத்தவிர வேறு பயனில்லை என்று பேச்சுத் தொடுப்பவர்கள் இருந்தால் அல்லது சூழலை விட்டுத் தூர விலகித் தற்கொலை செய்யக்கூடிய சூழலை நாடுகிறாரெனத் தெரிந்தால் அவர்களை உளநல மருத்துவரிடம் காட்டுங்கள். உளநல மருத்துவர் அதற்கான சிகிச்சை அளித்து இயல்பு வாழ்க்கைக்கு அவர்களைத் திருப்புவார்.

ஏன் இப்பேற்பட்டவர்கள் தற்கொலையை நாடுகிறார்கள்? அவர்கள் இருந்த இருப்பைத் தொடர்ந்து பேண முடியாத துயரம் தான். தமது தவறுகளால் தான் அல்லது சிறந்த வழியில் செல்லாததால் தான் தாம் இடையூறுகளையும் இழப்புக்களையும் சந்திப்பதாக உணர மறுக்கிறார்கள். அதற்குக் காரணம்; இதை செய்தால் இன்னது கிடைக்குமென அதிகம் நம்புவதே.

தேர்வில் சிறந்த புள்ளி எடுக்காட்டிப் பிறர் மதிக்கமாட்டினம் என நம்பி

காதலித்துத் தோல்வியுற்றால் பிறர் தம்மை விரும்பாயினம் என நம்பி

கையாடல் செய்வதையோ கையூட்டல் பெறுவதையோ கண்ணுற்ற மக்கள் மத்தியில் எடுப்பாக உலாவ முடியாதென நம்பி

சோர்வு (நட்டம்)/ கடன் செலுத்த முடியாமை காரணமாக முகம் சுளித்துத் துன்பப்படுவதை எண்ணி

இளம் பெண்கள் மாற்றான் கற்பை அழித்தால் தன்னை மணம் முடிக்க எவரும் முன்வராயினும் என நம்பி

இவர்களுக்கு
“வெற்றி வேணுமா
போட்டுப்பாரடா எதிர்நீச்சல்” என்ற
பாடல் வரியைத்தான் கூற முடியும்.

நேராகவே எங்கட பலத்தை வைத்து முயற்சி எடுத்தால் எங்கட எண்ணம் நிறைவேறும் என்பது பொய். எதிராகவும் சிந்திக்க வேண்டும். எங்கட எண்ணத்தை நிறைவேற்றப் பாவிக்கின்ற எங்கட பலத்துக்குக் குறுக்கே நிற்கின்ற அத்தனைக்கும் முகம் கொடுக்க வேண்டி வருமென எண்ணிச் செயற்பட்டால், நம்பி எதிர்நீச்சல் போட்டு வெற்றியும் காணலாம். நாம் காணும் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே, நம்ம சூழல் எம்மைச் சூழ்ந்து மொய்க்குமே! அப்போது தற்கொலையா? ஜயோ… வேண்டாமெனவும் எதிர்நீச்சல் போட்டு உலகளவு மகிழ்வை வாழ்ந்து பெறலாம் எனவும் எண்ணத் தோன்றும்.

விலைப்பெண் (வேசி) ஆக வேண்டாம்!

ஒவ்வொரு விலைப்பெண்(வேசி) இற்குப் பின்னாலும் உலகளவு துயரக்கதைகள் இருக்கும் என்பதைக் கருத்திற் கொண்டே பொறுமையாக இதனைத் தொடர்ந்து படிக்க வேண்டும்.

சிலரைச் சிலர் போரில் கடத்திச் சென்று படையினரின் (இராணுவத்தின்) பசிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் (குறிப்பாக இலங்கையில்). சிலரைக் கடத்திச் சென்று இத்தொழிலுக்கு சிலரால் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் குறிப்பாக மும்பையில் பிற மாநிலத்தினரைக் கடத்திச் சென்று பாவிக்கின்றனர். சீனாவிலிருந்து தொழில் தருவதாகக் கூறி பெண்களை வேறு நாடுகளுக்கு இழுத்து இத்தொழிலைத் திணிப்பதாகப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இவ்வாறு வெளிநாடுகளிலும் இடம்பெறுகிறது.

இவ்வாறான பாதிப்புக்குள்ளனவர்கள் தப்பித்து உலகம் போற்றும் சிறந்த பெண்களாக வாழ்பவர்களும் கண் முன்னே இருக்கிறார்கள்.
உயிர் வாழ ஏதுமற்றவர்கள் கூட தமது வறுமையைப் போக்க இத்தொழிலை நாடுகிறார்கள். இவர்களால் வேறு தொழிலைத் தேடிப் பெற்றிருக்கலாம். சிலர் நண்பர்களோடு பொழுதுபோக்காகத் தொடங்கி வாழ்நாள் தொழிலாக மாற்றியுள்ளாரகள். இன்னும் எத்தனையோ பெண்கள் இத்தொழில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களது அழகும் இளமையும் கெட்டுப் போகத் தொழில் கட்டாய ஓய்வுக்குத் தள்ளி விட மக்களாயத்தால் (சமூகத்தால்) கழித்து ஓரம்போக்க தற்கொலையோடு வாழ்வை முடிக்கிறார்கள். ஏனையோர் உயிர்கொல்லி நோயால் (Aids) சாவைத் தழுவுகிறார்கள். கத்தி தூக்கியவனுக்கு கத்தியால்த் தான் சாவு என்பது போல இத்தொழிலுக்குள் நுழைந்தவர்களுக்கு இத்தொழிலாலேயே சாவு என்பதற்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.

கடத்திச் செல்லப்பட்டோ படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டோ இத்தொழிலுக்குள் சிக்கி வெளியே வந்து மற்றவர்களைப் போல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்களை நாம் வாழ்த்த வேண்டும். இவ்வாறு ஏனையோரும் இயல்புக்குத் திரும்ப நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நட்பு, பொழுதுபோக்கு நிகழ்வு எனச் சென்று தவறு செய்தவர்கள் கூடத் திருந்தி வாழ்கிறார்கள். மக்கள் மத்தியில் இரண்டாம் நிலை மதிப்போடுதான் வாழ்ந்தாலும் தன்னம்பிக்கையோடு வாழ்வதைப் பாராட்ட வேண்டும். ஏனையோருக்கு இவர்களது வாழ்க்கை படிப்பினையாகட்டும்.

வறுமை, தொழிலின்மை எனப் பல சாட்டுகள் கூறி இத்தொழிலை நாடுபவர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும். அதாவது மன்னிக்கவே கூடாது. இவர்கள் முயற்சி எடுத்திருந்தால் எத்தனையோ தொழிலைச் செய்திருக்கலாம்.

ஆண்கள் செய்யவேண்டிய கட்டடத் தொழிலில் பெண்கள்
ஆண்கள்; செய்யவேண்டிய மீன்பிடித் தொழிலில் பெண்கள்
ஆண்கள் செய்யவேணடிய தென்னை, பனை ஏறிக் கள் பறிப்பதில் பெண்கள்
ஆண்கள் செய்யவேண்டிய ஊர்தி ஓட்டுநர் தொழிலில் பெண்கள்

ஆண்கள் செய்கின்ற எல்லாத் தொழிற்றுறையிலும் பெண்களிருக்க விலைப் பெண்களாக (வேசியாக) தொழிலில் ஈடுபடுவதை ஏற்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. அவர்கள் தங்களுக்குள் தன்னம்பிக்கை வளர்த்து தம்மால் மாற்றார் பாதிக்கக் கூடாதென உணர்ந்து மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே எனபதற்கு இணங்க இளசுகளைச் சீரழிக்காமல் நாட்டை மேம்படுத்த விலைப்பெண் (வேசி) ஆக வேண்டாம்.

எதற்கெல்லாம் இதெல்லாம் வேண்டாம்!

wishes

மேலுள்ள படம் எவரோ ஒருவரால் முகநூலில் பகிரப்பட்டிருந்தது. நண்பர்கள் எதற்கெல்லாம் “வா மச்சி சரக்கு (மது/அற்ககோல்) அடிக்கலாம்” என்று அழைப்பதை படம் சுட்டிக் காட்டுகிறது. எதற்கெல்லாம் இதெல்லாம் வேண்டாம் நண்பர்களே! நண்பர்களே எப்போதும் சரக்குப் (மது/அற்ககோல்) பக்கம் போனால் சிறுநீரகம் அழுகிச் சாவு வந்துவிடலாம் என்றே சொல்லாவிட்டாலும் சாவடைந்தவர்களின் பெறுபேறுகள் அப்படித்தான் சொல்ல வைக்கிறதே!

இந்த அட்டவணையைப் பாருங்க… வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் அம்மா பிள்ளைக்குச் சொல்வதும் அப்பா பிள்ளைக்குச் சொல்வதும் வேறுபடுவது அவரவர் உள்ளம் வெளிப்படுத்தும் உண்மையே! அதாவது, அம்மா அன்பின் வெளிப்பாடாகவும் அப்பா ஆளுமையின் வெளிப்பாடாகவும் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். பிள்ளைகளாகிய நாம் தான் நம் நிலை, நமது சூழலின் பார்வை என்பவற்றோடு அவர்களின் கருத்தை ஒப்பிட்டுப் பொருட்படுத்த வேண்டும். பெற்றோர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்படுவது பெறுமதிமிக்க எண்ணங்களே!

இளையவர்களிடையே (இருபாலாரிடமும்) எதற்கெடுத்தாலும் மகிழ்வூட்டும் நிகழ்வை (பார்ட்டி) ஒழுங்குபடுத்துவது வழக்கமாயிற்று. சற்று நேர மகிழ்வூட்டல் பெரும் சறுக்கலுக்கு இடமளிக்கலாம். சற்று நேர மகிழ்வூட்டல் சிறந்த வழிகாட்டலைத் தரப்போவதுமில்லை. எதற்கெல்லாம் இதெல்லாம் (“வா மச்சி சரக்கு (மது/அற்ககோல்) அடிக்கலாம்”) வேண்டாம்! வெற்றி பெற்றால் இனிப்பைக் கொடுத்து மகிழ்வைப் பகிருங்கள்; அதேவேளை எவ்வாறு அவ்வெற்றியை பேணுவது பற்றி எண்ணமிடுங்கள். தோல்வி பெற்றால் அழுதழுது துயரைப் பகிராமல் வெற்றி பெறுவதெப்படி என எண்ணமிடுங்கள். வெற்றியையும் தோல்வியையும் முகங்கொடுக்கப் பழகுங்கள்; அவை பிறப்பிலிருந்து இறப்புவரை தொடருமே!

நம்பிக்கையே நல்மருந்து என்பேன்!

நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நம்புவீர்களா? அதே போல நம்பிக்கை உள்ளவர்கள் சாவைக் கூட நெருங்க விடாமல் ஆயுளையும் பெருக்குவார்களே! நம்பிக்கை பற்றிச் சிறு கருத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.

திடீரென நோயுற்ற ஒருவரை அமைதிப்படுத்தி, கீழ் குறிப்பிட்டவாறு ஒரு உளநல மதியுரைஞர் குறித்த நோயாளியை மருத்துவரிடம் சேர்ப்பிக்கிறார்.

“பனங்கட்டியைக் கொடுத்து; இந்த மருந்தை உண்ணுங்கள் உங்களுக்கு நோய் குணமாகிவிடும்” என்று சிலருக்கு வழங்கி நோயின் தாக்கத்தைக் குறைத்துள்ளனர். இங்கு பனங்கட்டி போலி மருந்தாகக் கையாளப்பட்டுள்ளது. ஆயினும், உண்மை மருந்தாக நம்பிக்கை பயன்பட்டுள்ளது.

நமது ஆழ் உள்ளத்தில்(மனத்தில்) எதை நினைக்கிறோமோ, அது உடலின் செயலாகிறது. “நோய் குணமாகிவிடும்” என்று ஆழ் உள்ளத்தில்(மனத்தில்) நினைவுபடுத்தத் தூண்டியதால், உடலின் செயலால் இங்கு நோயின் தாக்கம் குறைந்துள்ளது,

இம்முறை நோயாளியை மருத்துவரிடம் கொண்டு செல்லும் முன் பாவிக்கப்படுகிறது. நோயின் தாக்கம் அதிகரிக்கும் முன் மருத்துவர் நோயாளியைக் குணப்படுத்த இம்முறை உதவுகிறது. விஜயகாந் படமொன்றிலும் இவ்வாறான காட்சி வருகிறது.

நம்பிக்கை
மருந்தாக மட்டுமன்றி
ஒவ்வொருவர் வெற்றிக்கும்
வழிகாட்டும்…
ஒவ்வொருவர் முயற்சிக்கும்
துணைநிற்கும்…
நாம்
உள்ளத்தில் பேணும் நம்பிக்கை தான்
எம்மை இயக்குகிறது!
நல்லதே நடக்கும்
நோயொன்றும் நெருங்காது
எதிலும் வெற்றியே கிட்டும்
விருப்பங்கள் நிறைவேறும் என்றே
ஆழ் உள்ளத்தில்(மனத்தில்)
படம் போலப் பதியும் வண்ணம்
ஒவ்வொரு நாளும் நினையுங்களேன்…
அவை
உடலின் செயலாக மாற
உங்கள் வாழ்வில்
இடம் பெறுவதை உணர்வீர்களே!
நோய் நெருங்காமல் நெடுநாள் வாழவும்
எங்கும் எதிலும் எப்போதும்
வெற்றியை நோக்கி நெருங்கி விடவும்
நம்பிக்கையே நல்மருந்து என்பேன்!

“நம்பிக்கை என்னும்
நெம்புகோலால்
உலகை
உருட்டலாம் வாருங்கள்” என்று பாவலர் வைரமுத்து கூறுவது போல; நானும் உங்களை அழைக்கின்றேன். உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை இருப்பின்; உங்களால் முடியாதது எதுவுமே இருக்காது. உள்ளத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துவோம், நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முயற்சிப்போம்.