Monthly Archives: ஜூன் 2013

உளப் பாதிப்புக்களிலிருந்து விடுபட நீங்கள் கூறும் மதியுரை என்ன?

குழந்தை தொடக்கம் கிழம் வரை ‘மக்கள்’ என்ற குழுவின் ஓர் உறுப்பினராகவே வாழ்கின்றோம். இங்குக் கருத்து முரண்பாடு, அடிபிடி கலகம், திட்டித் தீர்த்தல், ஒதுக்கி வைத்தல் எனப் பல நிகழலாம். இதனால் ஒருவரது உள்ளம் பாதிக்கப்படலாம். இதற்கு உங்கள் தெரிவு மருந்தாகட்டும்.

பாதிப்புற்றவரின் விருப்புக்கு அதாவது சூழலால் ஏற்கக்கூடிய ஒன்றுக்கு ஒத்துழைத்து அன்பாக அரவணைத்தல்.

புதிய சூழலுக்குள் புதிய உறவுகளுடன் விரும்பியவாறு வாழ வழிவிடுதல்.

நன்மை தரும் முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்காமல் ஊக்கமளித்தல். புதிய உறவுகளை மேம்படுத்த இது உதவும்.

வெறுக்கும் உறவுகளைச் சந்திக்க விடாமலும் விருப்பம் இல்லாதவற்றைத் திணிக்காமலும் விரும்பாத நிகழ்வுகளுக்கு அனுப்பாமலும் பேணுதல்.

உளநல மருத்துவரின் மதியுரைப்படி நெருங்கிய உறவுகளில் ஒருவராக அணைத்து நல்லுறவைப் பேணுதல்.

நீங்கள் உங்கள் உளநல மதியுரைகளைப் (ஆலோசனைகளைப்) பின்னாட்டமாக இங்கே இடலாம். தங்கள் உளநல மதியுரைகளை நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நோய் தீர்க்கும் சிரிப்பு

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது முன்னோர் கருத்து. அதற்காகச் சும்மா சிரித்துப் பயனில்லை.

கோபம் வந்தால் பதின்மூன்று நரம்புகளும் சிரிப்பு வந்தால் அறுபத்தைந்து நரம்புகளும் நம்முடலில் இயங்குவதாக கதிரவன் (SUN) தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது நினைவுக்கு வருகிறது.

ஆமாம், சிரிப்பு அதிக நரம்புகளை இயங்கத் தூண்டுவதால் உடலெங்கும் செந்நீர் (குருதி) சீராகச் செல்லும். இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தோன்றும். இதனால், நோய்கள் உடலைத் தாக்க வாய்ப்பில்லை.

நகைச்சுவைப் படம் பார்த்தால் ஓரளவு நலம். சிந்திக்க வைக்கும் நகைச்சுவை சொல்லியோ கேட்டோ சிரித்தால் மிக்க நலம்.
உள்ளத்தில் வடுக்கள் ஓரளவு மறையவும் சோர்வுற்ற நரம்புகள் சுறுசுறுப்பு அடையவும் இவ்வாறான சிரிப்பு உதவுகிறது.

உளத் தூய்மையும் நரம்புகளின் சுறுசுறுப்பும் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இதனால் நோய்கள் வருவதை ஓரளவு தடுக்கலாம். அப்படியென்றால், சிரியுங்கள்…

நீரிழிவால் வரும் பாலியல் தளர்வு

உடலில் குளுக்கோசின் அளவு மிதமிஞ்சிக் காணப்படும் நிலையே நீரிழிவு என்கிறோம். இந்நிலை சிலருக்குப் பாலியல் உறுப்புகளுடன் தொடர்புபடுகிறது. அதாவது, நீரிழிவால் உடலெங்கும் குருதி செல்லும் வேகம் குறைவாகக் காணப்படுவதால் பாலியல் தளர்வு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஓர் ஆணுக்கு இந்நிலை வந்தமையால் பின்வரும் துயரங்களைச் சந்தித்தார்.

குருதியில் கூடிய குளுக்கோசின் மட்டம் காரணமாகச் சிறுநீருடன் மேலதீகக் குளுக்கோசு கலந்து வெளியேறுகிறது. இதனால் ஆணுறுப்பின் முன் வெளிற்றோல் வெடிப்புடனான புண் தோன்றிப் பாதிப்புறுகிறது. மனையாளுடன் உடலுறவு கூட மேற்கொள்ள முடியாத நிலை வருகிறது. பாலியல் உணர்ச்சி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்குகிறது. இறுதியில் செயற்கை வழிக் கருத்தரிப்புக்குக் கூட விந்தணுக்களைப் பெற முடியாத நிலை வருகிறது. இதனைப் போக்க நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஒரே வழி!

எனவே, இவ்வாறு நீரிழிவால் பாதிப்புற்றவர்கள் எளிமையான நடைப்பயிற்சி, இலகுவான உடற்பயிற்சி, சீரான உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் மருத்துவரின் கண்காணிப்பிலும் இருப்பது நல்லது. நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பின் இல்லறம் இனிதே இடம்பெற நெடுநாள் வாழலாமே!

உள்ளம் தளரலாமா?

உளத் தளர்வு என்பது உளக் குழப்பம் காரணமாக ஏற்படுகிறது. உளக் குழப்பம் என்பது உறுதியான முடிவு எடுக்க முடியாமையே! உறுதியான முடிவு எடுப்பதற்குப் பயிற்சி செய்யவும். உங்கள் உறுதியான முடிவே நீண்ட ஆயுளுக்கான மருந்து.