இணையவழி வழிகாட்டலும் மதியுரையும்

விரைவாக நகர்ந்து செல்லும் உலக இயக்கத்தில் மனிதரும் விரைவாகத் தனது வாழ்க்கைப் பயணத்தை நகர்த்துகின்றனர். இந்த விரைவுப் பயணத்தில் ஒவ்வொருவரும் பொறுமையாகத் தமது எதிர்காலத் தேவைகளை ஏற்றுக்கொண்டு முடிவெடுக்க வேண்டியுள்ளது.

அன்று முடிவெடுக்கின்ற வேளை நாலு படித்த அறிவுள்ள அல்லது நாலு பட்டறிவுள்ள மனிதரின் வழிகாட்டலையும் மதியுரையையும் பெற்று முடிவெடுப்பது ஒவ்வொரு ஊரிலும் இடம்பெற்றது.

ஆனால் இன்று இணையத் தளங்கள் ஊடாகத் தமக்குத் தேவையான முடிவுகளை எடுப்பதற்குப் பலர் முயற்சி எடுக்கின்றனர். இவ்வாறு முடிவு எடுப்பது பயன் உள்ளதா? பயனற்றதா? என்றவாறு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இணைய வழி முடிவெடுத்தலில் தொழில் நுட்ப வழிகாட்டலை அல்லது உயர்கல்வி நோக்கிலான வழிகாட்டலை அல்லது தொழில் வாய்ப்பு சார்ந்த வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இருப்பினும் உள்ளம் சார்ந்த அல்லது உடல் சார்ந்த அல்லது குடும்ப வாழ்க்கை சார்ந்த முடிவுகளை எடுக்க இணைய வழி முயற்சி பயனற்றதாகவே இருக்கும்.

உள்ளம் சார்ந்த சிக்கல்கள் உடல் நலத்திலும் உடல் சார்ந்த சிக்கல்கள் உளநலத்திலும் இருப்பதால் மருத்துவரை அணுகி உடல் நலத்தில் சிக்கல் இல்லை உள்ளத்தில் மட்டுமே சிக்கல் உண்டு எனின் உங்கள் கண் முன்னே உள்ள நம்பிக்கையான ஒருவரிடம் உள்ளம் சார்ந்த சிக்கலுக்கு வழிகாட்டலும் மதியுரையும் பெறுவதே சிறந்தது.

இணைய வழி முயற்சி பயனற்றதற்கு காரணம் உங்கள் தகவல் இணைய வழியில் பகிர வாய்ப்புண்டு. அதேவேளை உங்களைப் பற்றிய சகலதும் அறியாது எதிர்பார்ப்பின் அடிப்படையில் இணைய வழியில் முடிவுகள் வழங்கப்படலாம். அதனால் அம்முடிவு பயனற்றதாக இருக்கும்.

இணைய வழியில் உடல் நலம் சார்ந்த சிக்கலுக்குத் தீர்வு காண முற்பட்டாலும் கூடத் தவறான வழியில் செல்ல வாய்ப்பு உண்டு. மருத்துவரை அணுகாது, மருத்துவர் உங்களைப் பரீட்சிக்காது உடல்நலம் சார்ந்த முடிவுகள் எடுப்பது தவறாகும். சரியான வழி இணைய வழி அல்ல மருத்துவரை நாடுவதே சிறப்பு.

குடும்ப வாழ்க்கை என்பது கணவன்-மனைவி அல்லது பெற்றார்-பிள்ளைகள் அல்லது கூட்டுக் குடும்பம் அல்லது தனிக் குடும்பம் என்றவாறு ஒருவர் இன்னொருவருடன் சார்ந்து இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கும். தனி மனிதரோ அல்லது குடும்பமோ அவர்கள் சார்ந்த சூழல் அல்லது குமுகாயம் அதாவது சமூகம் சார்ந்தும் இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில் இணைய வழியில் முடிவெடுப்பது என்பது பயனற்றதாகவே இருக்கும்.

அதாவது தனிமனிதச் சிக்கலுக்கு அல்லது இணையர்களின் சிக்கலுக்கு அல்லது குடும்பச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது அவர்கள் சார்ந்திருக்கும் பின்னணியைப் பொறுத்து அமைகின்றது. இதன்படிக்கு இணைய வழி வழிகாட்டலும் மதியுரையும் நிறைவு தரக் கூடியதாக அமையாது. எனவே ஊரில் உள்ள பெரியோர் அல்லது வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவோர் ஊடாகக் குடும்ப நல மேம்பாடு பற்றிய முடிவுகளை எடுப்பதே சிறந்த வழியாகும்.

இணைய வழி அறிவைத் தேடலாம். இணைய வழி நல்ல தகவலைப் பெறலாம். அதனை வைத்துக்கொண்டு தாங்களே அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவுகளை எடுக்கலாம்.

குடும்ப வாழ்க்கை மற்றும் உளநலம், உடல்நலம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு இணைய வழியில் தேடிய அறிவினை அல்லது திரட்டிய தகவலை வைத்து முடிவெடுத்தாலும் நிறைவு தரக்கூடியதாக அமையாது.

உளநலம் உடல்நலம் சார்ந்த முடிவுகளுக்கு மருத்துவரை நாட வேண்டிய தேவை உண்டு. குடும்ப நல முடிவுகளுக்குக் குறித்த குடும்பம் சார்ந்திருக்கும் பின்னணியை நன்கு அறிய வேண்டியிருக்கு. இவற்றுக்கு இணைய வழித் தேடல் தகுந்த தீர்வைத் தராது. தங்களுக்கு அண்மையில் உள்ள மருத்துவரை நாடுவதோ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவோரை நாடுவதோ ஊர் பெரியவரை நாடுவதோ தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டிய செம்மையான முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.