Monthly Archives: ஜூன் 2015

தொண்ணூறு விழுக்காடு வாழ்ந்தோமா?

“பிறந்து இறக்கும் வரை கிடைத்த வாழ்வில் 90 விழுக்காடு பலர்
தம் வாழ்வைச் சுவைத்திருக்கவில்லையாம். அதாவது, தொண்ணூறு (90) விழுக்காடு மகிழ்வோடு வாழ்ந்துவிடவில்லை (அனுபவிக்கவில்லை).” என்றொரு ஆய்வு கூறுவதாக நாளேடு ஒன்றில் படித்தேன். அதன் விளைவாகக் கீழுள்ள கிறுக்கலைப் பாரும்.

வாழ்வில்
பிறப்பும் இறப்பும்
ஒரு முறை தான் – நம்மை
எட்டிப் பார்க்கும் – அந்த
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே இருக்கின்ற – விரைவாய்
கரைந்திடும் வாழ்வைத் தான்
நாம்
பிறர் போற்ற வாழ்ந்தோமா
நாம்
பிறர் தூற்ற வாழ்ந்தோமா
என்றாவது எப்போதாவது
நாம்
எண்ணிப் பார்த்ததுண்டா? – அப்படி
நாம்
எண்ணிப் பார்த்திருந்தால்
நாம்
நல்வாழ்வை அதிகம்
சுவைத்திருப்போமே!
என்றாவது எப்போதாவது
வேண்டாத எல்லாவற்றையும்
எண்ணி எண்ணிப் பார்த்தே
எங்கள்
தொண்ணூறு விழுக்காடு மகிழ்வான
வாழ்வைச் சுவைக்காமலே
சாவுக்கு உலை வைக்கிறோமே!

இனி, “நாம் ஏன் தொண்ணூறு விழுக்காடு வாழாமல் சாகிறோம்” என்று எண்ணிப் பார்ப்போமா!

வாழ்க்கை என்ற பாடம் எவரும் சொல்லித்தருவதில்லை. எனக்கும் கூட “மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டு” என்று பெரியோர்கள் வழிகாட்டினர். “வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றும் “வாழ்க்கையில் இன்பம், துன்பம், தேட்டம் (இலாபம்), சோர்வு (நட்டம்), உறவுகள், பிரிவுகள் எல்லாம் வரலாம். அதற்கேற்ப நம்மை நாமே தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றும் அறிஞர்கள் வழிகாட்டினர். இப்படித் தான் ஆளுக்காள் அறிவுரை கூறினார்களே தவிர, இப்படித் தான் வாழவேண்டுமென எவரும் வழிகாட்டியதில்லை. அப்படியாயின் மற்றவர்களின் முன்மாதிரியான வாழ்வைக் கண்காணித்து நாம் தான் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆறாம் அறிவென்றால் நல்லது, கெட்டதை வேறாக்கி நல்லதை மட்டும் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதை ஆறறிவுள்ள மனிதனுக்கு தெரியாமல் போகின்றது. மற்றவர்களின் முன்மாதிரியான வாழ்வைக் கண்காணித்து நாம் வாழக் கற்றுக்கொண்டோமா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். அதாவது, ஆறாம் அறிவின் படி பயனுள்ள எதனையும் பின்பற்றவில்லை என்பேன்.

படிப்பைக் கருதினால்:
முறைசார் கல்வியைத் தொடர முடியாதவர் முறைசாராக் கல்வியைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.

உழைப்பைக் கருதினால்:
படித்த படிப்புக்கேற்ற தொழில் கிட்டும் வரை காத்திருக்காமல் அகப்பட்ட தொழிலில் இறங்கி வருவாய் ஈட்டிக்கொண்டு, படித்த படிப்புக்கேற்ற தொழில் கிட்டியதும் பாய்ந்து வருவாய் ஈட்டி முன்னேறியவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.

காதலைக் கருதினால்:
நெடுநாள் பழகிய ஒருவர் மீது நம்பிக்கையானவர் என்பதை நன்கறிந்த பின்னர் காதல் கொண்டு வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை (கண்டதும் காதல் கொண்டதே கோலமென வீழ்வோர் அதிகம்).

திருமணத்தைக் கருதினால்:
இருவீட்டார் விருப்போடு ஆண், பெண் விருப்பறிந்து கெடுபிடி (கொடுப்பனவுகள்/சீதன, ஆதனத் தொல்லை) இன்றித் திருமணம் செய்து வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை (திருமணம் என்பது கொடுப்பனவுகளில் (சீதன, ஆதனம்) தான் என்று வீழ்வோர் அதிகம்).

பிழைப்பைக் கருதினால்:
திருமணமாகிக் குடும்பம் ஆனதும் இருவரும் விரும்புகின்ற வேளை பாலியல் (Sex) உறவை மேற்கொண்டு மகிழ்வடைவோர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை (ஆணின் விருப்புக்கு பெண் இணங்க வேண்டுமென்ற கோட்பாட்டில் மகிழ்வின்றி மணமுறிவும் ஏற்படுகிறது).

செயலைக் கருதினால்:
1. வருவாய்க்கு மீறிச் செலவு செய்யாமல் சேமித்து வாழ்ந்து வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.
2. முரண்பாடுகள் தோன்றினால் விட்டுக்கொடுத்து உறவுகள் முறியாமல் பேணி வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.
3. பலனை எதிர்பார்க்காது எல்லோருக்கும் முடிந்தளவு உதவுவதும் ஒத்துழைப்பு வழங்குவதுமாக நல்லுறவைப் பேணி வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.

இப்படி எத்தனை எத்தனை வழிகளில் மற்றவர்களின் முன்மாதிரியான வாழ்வைக் கண்காணித்து நாம் முன்னேறாது விட்டமையால் தொண்ணூறு விழுக்காடு வாழ்வில் மகிழ்ச்சியை இழந்து சாவடைகின்றோம் என்பதை நான் படித்த ஆய்வு தெரிவிக்கா விட்டாலும் எப்படியோ தொண்ணூறு விழுக்காடு வாழ்வில் மகிழ்ச்சியை இழந்து சாவடைகின்றோம் என்பது உண்மையே! இனியாவது குறைகளைக் கண்டு நிறைவாக்கி தவறுகளைச் சரியாக்கி நூறு விழுக்காடு (வீதம்) வாழ்வில் மகிழ்ச்சியை/ சுகத்தை அடைந்த பின் சாகலாம் தானே!

பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு என்பது இயற்கை அல்லது படைத்தவன் படியளப்பு. ஆயினும், நம்மில் தன்னம்பிக்கையும் உளநலம், உடல்நலம் பேணுவதும் ஆக இருந்தால் நீண்ட காலம் (இருநூறு ஆண்டுகள் வரையாவது…) வாழமுடியுமே! அதற்குக் கூட நூறு விழுக்காடு (வீதம்) வாழ்வில் மகிழ்ச்சியை/ சுகத்தை அடைந்தால் தான் வாய்ப்புண்டு.