படுக்கையில் கிடந்தால், பட்டங்களும் பதவிகளும் உதவுமா?

ஆறறிவுள்ள மனிதர் நாம், இளமைக் காலத்தில் செய்த தவறுகளை முதுமை காலத்தில் பட்டறிந்து கொள்கின்றோம். அதாவது நமது செயலுக்கான பின் விளைவினைப் படிக்கின்றோம்.

கண்-பார்த்தல், காது-கேட்டல், மூக்கு-மணத்தல், நாக்கு-சுவைத்தல், தோல்-உணர்தல் ஆகிய ஐந்தும் ஐந்தறிவு என்கிறோம். அப்படியாயின், ஆறாம் அறிவு என்பது என்னவாக இருக்கும்?

ஐந்து புலன்களாலும் உள்வாங்கப்பட்ட தகவலைப் பகுத்தறிந்து, அதற்குப் பதில் வழங்கும் பணியை மூளை செய்கிறது. அந்த நுட்பத்தையே உள்ளம் (மனம்) என்கிறோம். அதாவது உள்ளத்தால் உள்வாங்கப்பட்ட தகவலை வைத்து, உள்ளத்தில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்போம். பின்னர் அதற்கான பதிலை நாம் சிந்திக்கின்றோம். அந்தப் பதில் எமது சொல்(பேச்சு), செயல், நடத்தை வழி வெளியிடுகிறோம்.

நாம் உள்ளத்தில் நல்லது-கெட்டது, நன்மை-தீமை, தேட்டம் (இலாபம்)-சோர்வு(நட்டம்), பயனுள்ளது-பயனற்றது, நேர் விளைவு, பக்க விளைவு, பின் விளைவு எனப் பல கோணங்களில் பகுப்பாய்வு செய்து நமக்கும் சூழ உள்ளோருக்கும் நன்மை தரும்/பயன் தரும், பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்றையே தெரிவு செய்கிறோம்; தெரிவு செய்ய வேண்டும். அதனையே பகுத்தறிவு என்கிறோம்.

ஆறாம் அறிவாகிய பகுத்தறிவுக்கு உள்ளம் அதாவது மூளை இயங்கும் நுட்பம் உதவுகிறது. நாம் படிக்கவும், படித்ததை மீட்டுப் பார்க்கவும் உள்ளம் உதவுகிறது. சிக்கல் வந்தால் தீர்வு காணவும் உள்ளத்தில் தான் சிந்திக்கின்றோம். அந்த வகையில் உள்ளத்தில் படித்து, உழைத்து, உயர்ந்த பதவிக்கு உயரப் பறக்க வேண்டுமெனத் தேவையானதைத் தேடிப் படிக்கிறோம்.

எல்லோரும் படிக்கக்கூடிய, உயர உயரப் பதவியில் இருக்கக்கூடிய திறனாற்றலைக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பயிற்சியும் முயற்சியும் எடுக்க வேண்டும். நாளுக்கு நாள் மாறும் நுட்பங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வகையில் கடினமாக உழைத்துப் பல பட்டங்களை பெற்றும் உயர உயரப் பதவி உயர்வு பெற்றும் உயர்ந்த பதவிகளில் பலர் வாழ்கின்றனர்.

இருப்பினும் ‘படுக்கையில் கிடந்தால், பட்டங்களும் பதவிகளும் உதவுமா?’ என்று ஒரு கேள்வி எழுகின்றது. அதற்கு இலக்கினை நோக்கி நகரத் தெரிந்த எமக்கு; குடும்ப வாழ்க்கை, குடும்ப உறவுகள், வாழ்க்கைக்குத் தேவையானவை போன்ற எல்லாவற்றையும் சிந்திக்கும்/பொருட்படுத்தும் ஒருவருக்கு இந்த கேள்வி ஒரு பொருட்டல்ல.

குடும்ப வாழ்க்கை, குடும்ப உறவுகள், வாழ்க்கைக்கு தேவையானவை என்றெல்லாம் திறம்படப் பகுப்பாய்வு செய்யத் தவறுவோருக்கே ‘படுக்கையில் கிடந்தால், பட்டங்களும் பதவிகளும் உதவுமா?’ என்ற கேள்வி சிக்கலை தோற்றுவிக்கலாம். அதில் என்ன சிக்கல் இருக்கு என்று நாமும் பகுப்பாய்வு செய்து பார்க்கலாமே!

படித்த அறிவு, பட்டறிவு மிக்க நீங்கள் உயர்ந்த பதவிகளில் இருக்கும் போது கீழுள்ள பணியாளர்கள் மீது காட்டும் பரிவு தான், அவர்களுக்கும் தங்களுக்கும் இடையேயான உறவு நிலையை பேண உதவுகிறது. நீங்கள் காட்டும் பரிவு தான் உங்களுக்கும் மாற்றாருக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்த உதவும். பட்டம், பதவியைப் பின்னுக்கு வைத்துப் போட்டு மாற்றாரும் எமது சகோதர, சகோதரிகள் என அரவணைத்துப் போனால் இறப்பு வரை நல்லுறவுகள் வலுவடைந்து தொடரும்.

பட்டம், பதவிகளைக் கடந்து பணியிடங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி எமது சொந்த உறவுகளுக்கு அப்பால் எல்லோரும் எம்மைப் போன்றவர்களே என்றவாறு எல்லோரிடத்திலும் அன்பு காட்டி உறவைப் பேணுவதால்; துன்பம் வரும் வேளை எல்லோரும் தோள் கொடுக்க முன்வருவார்கள். நாம் படுக்கையில் கிடந்தாலும் கூட, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சுகப்படுத்தி விடுவார்கள்.

நாம் அதிகம் படித்தவர், நாம் உயர்ந்த பதவியில் இருக்கிறோம் என்றவாறு பணியிடங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி மாற்றாரை விட நாம் ஒரு படி உயர்ந்தவர் எனப் பாகுபாடு பார்ப்போமானால், அதிகாரத் தொனியில் பழகுவோமானால் ‘படுக்கையில் நாம் விழுந்து கிடந்தாலும் எந்தக் கடவுளும் வந்து தூக்கி விடமாட்டார்’ என்றவாறு எவரும் உதவ முன்வரமாட்டினம்.

உண்மையில் எவராயினும் ஒரு நாள் படுக்கையில் விழுந்து கிடக்கலாம்; முடங்கியும் இருக்கக் கூடும். அந்த நேரம் நாம் படித்த படிப்பும் நாம் வகித்த பதவியும் உதவிக்கு வரமாட்டாது. அதனைக் கடந்து ‘உன்னை போல் உன் அயலானையும் நேசி’ என்ற முதுமொழிக்கு இணங்க; நாம் பிறரை ஆதரித்து, மதிப்பளித்து, அரவணைத்து, அன்பு காட்டி, பரிவு காட்டி, நல்லுறவைப் பேணினால் மட்டுமே; எவரும் துன்பம் வரும் வேளை தோள் கொடுக்க முன்வருவர்.

‘நம் வாழ்வு சிறக்க, மகிழ்வோடு நாம் வாழ நாலாபுறமும் நல்லுறவுகள் தேவை’ என்பதை உணர்ந்து, எமது உயர்ந்த நிலை, உயர்ந்தவர் என்று இறுமாப்பு எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு அன்பாலே அனைவரையும் ஆளப் பழகி வாழ்வை மேம்படுத்த முன்வாருங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.