Monthly Archives: ஓகஸ்ட் 2014

பெற்றோர்கள் கவனத்திற்கு…

மணமுடித்தாச்சு, பிள்ளை பெற்றாச்சு, பிள்ளையைப் பள்ளியில் சேர்த்தாச்சு என்றளவில் தான் நம்மாளுகளின் அக்கறை காணப்படுகிறதே தவிர, பிள்ளையின் கூட்டாளிகள் யார்? அவர்களின் நடத்தைகள் எப்படி? பள்ளியில் பிள்ளை படிப்பிலா விளையாட்டிலா அக்கறை? பெற்றவர்களின் கண்ணில் படாமல் பிள்ளை என்னென்ன செய்யுது? பிள்ளையின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் விருப்பம் என்ன? ஆகிய கேள்விகளைத் தமக்குள் கேட்டுப்பார்த்துப் பிள்ளைகளைப் பேணுவது கிடையாது எனலாம்.

எடுத்துக்காட்டாகச் சீனாவில் ஒரு சிறுவனுக்கு IPOD தொலைபேசி வேண்ட விருப்பம். பெற்றோர் பிள்ளையின் விருப்பைப் பொருட்படுத்தவில்லையா அல்லது அதனைப் பிள்ளைக்கு வேண்டிக் கொடுக்க வசதி இல்லாதவர்களா என்பது இராண்டாம் கேள்வி. சிறுவன் தனது சிறுநீரகத்தை(Hidney) விற்று IPOD தொலைபேசி வேண்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது யாவரும் அறிந்ததே. அதில் சிறுநீரகத்தை விற்று IPOD தொலைபேசியுடன் சிறுவன் வீடு திரும்பியதும் விசாரித்த போது தான் பெற்றோருக்கே இந்த உண்மை தெரிந்ததாம் என்பது வேடிக்கையான ஒன்றாகும்.

பெற்றோர்களே! பிள்ளையைப் பெற்று வளர்த்து பள்ளியில் சேர்த்து விட்டால் போதாது. பள்ளி ஆசிரியர்கள் குறுகிய நேரத்துக்குள் கோடிக்கணக்கில் படிப்பிப்பதில் அக்கறை காட்டினாலும் உங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் உள்ள விருப்பங்களை அறியமாட்டார்கள். பிள்ளைகளுடன் பெற்றவர்கள் கூடிய நேரம் பழக வேண்டும். பிள்ளைகளின் விருப்பங்களை இயன்றவரை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அடித்து, நொறுக்கி, அச்சுறுத்திப் பிள்ளைகளை வளர்க்காமல் உங்கள் நண்பர்களுடன் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படி உங்கள் பிள்ளைகளுடன் பழகுங்கள். “அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்” என்பதற்கிணங்க அன்பாலே வளர்த்தெடுத்த பிள்ளைகள் தான் உங்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாமல் முதுமையிலும் உங்களை தங்கள் வீட்டில் வைத்துப் பார்ப்பார்கள்.

எனவே உங்கள் பிள்ளைகளுக்கு சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் வரும்வரை உண்டு, படித்து, உறங்க ஒழுங்கு செய்வதோடு அவர்களது நடத்தைகளைக் கவனித்து அவர்களது விருப்பங்களை நிறைவேற்றிச் சிறந்தவர்களாக உருவாக்கும் கடமையும் பெற்றோர்களுக்கு இருக்கு என்பதையும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையை எண்ணிப் பாரும்!

வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும்
நான் அறிந்ததில்லை…
வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும்
இயற்கையின் நிகழ்ச்சி நிரலென
வழிகாட்டிகள் சொல்கிறார்களே…
ஆனால்
எங்கும் எவரும் வாழ்க்கை பற்றி
சொல்லித்தர முன் வந்ததில்லையே!
அப்பா, அம்மா பெற்றெடுத்த பின்
படிக்கவும் உழைக்கவும் தூண்டினரே…
ஆனால்
இளம் கன்று பயம் அறியாதென
நான் பள்ளியில் துள்ளித் திரிந்தேன்!
நல்லது, கெட்டது எல்லாவற்றிலும்
தலையை நீட்டிய போதெல்லாம்
கெட்டதைச் சுட்டி வெட்டி விட்ட
ஆசிரியர்களின், உறவுகளின்
கம்படியும் கண்டிப்பும் தான் – நான்
நல்ல பக்கம் நடைபோட வைத்ததே!
பதினொன்று தொட்டு பத்தொன்பது வரை
ஆண்டவனே வந்து தடுத்தாலும் – அந்த
அகவை(வயது)க் கோளாறு முட்டி மோத
நல்லவராவதும் கெட்டவராவதும்
நம்மாளுகளின் தெளிவான முடிவிலேயே
உறுதிப்படுத்தப்படுவதை உலகம் அறியுமே!
ஆண், பெண் உறவை உணர
காதல் வந்து முட்டிமோதும் வேளை
அண்ணன் பத்து வேண்டினால்
நான் இருபது வேண்டணுமென
ஆண்களில் பலர் ஒதுங்கிப் போக…
கண்ட கழுதைகளையும் நம்பிக் கெட்டு
ஊரொதுக்க முன்
தானொதுங்க வேண்டிவருமென
பெண்களில் பலர் ஒதுங்கிப் போக…
நானறியாவிட்டாலும்
எஞ்சியோர் பெற்றுக்/கற்றுக் கொண்ட
மோதிய காதலின் அறுவடையை
உலகம் சொல்லி எல்லோரும் அறிவோமே!
மணவாழ்க்கை வெறும் போலியென
துறவு வாழ்க்கை நாடியோர் இருக்கையில்
இல்வாழ்வில் இறங்கி வெறுத்து ஒதுங்கிய
ஆணும் பெண்ணும் பிரிந்து இருக்கையில்
துன்பங்களைக் கண்டு துயருறும்
கண்ணீர் வடிக்கும் குடும்பங்களின் முன்னிலையில்
துன்பங்களைத் தூக்கி எறிந்து போட்டு
மகிழ்வோடு வாழ்க்கை நடத்துவோரும் உள்ளனரே!
வாழ்க்கை பற்றிச் சொல்லித் தராவிட்டாலும்
வாழ்கின்றவர்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமென்றும்
பெரிதாய் எண்ணியும் சிறிதாய்க் கிடைத்தாலும்
கிடைத்ததை மகிழ்வோடு ஏற்பது நன்றென்றும்
காலவோட்டத்தை எவராலும் நிறுத்த முடியாமையால்
சமகாலம் கரையுமுன் வாழவேணும் என்றால்
காலநேர முகாமையே மகிழ்வைத் தருமென்றும்
ஆளுக்காள் அறிவுரை தருவதில் குறைவில்லையே!
போதாக்குறைக்கு “வாழ்; வாழ விடு” என்று
கோட்பாடு(தத்துவம்) ஒன்றையும் சொல்கிறார்களே…
‘வாழ்;
மாற்றாருக்கு இடையூறின்றி வாழ்’ என்றும்
‘வாழ விடு;
மாற்றாரையும் மகிழ்வோடு வாழ விடு’ என்றும்
கோட்பாட்டை விளக்குவதையும் பாருங்களேன்!
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்குமாம்
எனக்குள் எண்ணுகிறேன்
என் வாழ்விலும் – இன்னும்
எத்தனை ஆயிரம் இருக்குமென்று தானே!


http://wp.me/pTOfc-b1
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!