Monthly Archives: ஏப்ரல் 2014

வலிய, வளத்தில வரவைக்கப் போய்ப் பிரிவதா?

என்னைத் தன் காலில் விழவைக்க, என் எதிரிக்கு ஒரு நீண்ட நாள் விருப்பம். அதற்காகப் பலரிடம் மதியுரை கேட்டிருக்கிறான். மதியுரை கூறியவர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.
1. காசில்லாட்டி என்னட்டத் தானே வரணும் – ஓர் உறவு.
2. ஒருவரும் பெண் கொடுக்காட்டி, என்ர பிள்ளையைத் தானே கட்ட வேண்டி வரும் – இன்னோர் உறவு.
3. ஒருவரும் தொழில் கொடுக்காட்டி, என்னைத்தானே கெஞ்சுவார் – இன்னோர் உறவு.
4. இருக்கப், படுக்க இடமில்லாட்டி, என்னட்டத் தானே வரணும் – இன்னோர் உறவு.
இன்னும் அடுக்கலாம்… ஆனால், நான் இவற்றை நீட்ட விரும்பவில்லை.
அவரவர் தமது பக்கம் சார்ந்த மதியுரைகளைக் கூறியிருந்தார்கள். எந்த மதியுரைஞரும் என்னுடைய பக்கத்தைப் பொருட்படுத்த மறந்து போயினர். எதிரியும் இம்மதியுரைஞர்கள் கூற்றுப்படி நடக்குமென நம்பி, இவர்களைத் தவிர பிறருடனான உறவுகளை முறித்தான். எப்படியோ இவர்களைத் தவிர பிறரில்லாத நான், இவர்களிடம் விழுந்து விடுவாரென நம்பினார். அதனால் தனக்குக் கேடு வருமென நம்மி, தனது கண்காணிப்பில் இவர்களை வைத்திருந்தார். நானும் நெருக்கடி நேரம் இவர்களைத் தேடிய போது இதனை அறிந்தேன்.
எதிரியிடமிருந்து தப்புவதற்காக, மேற்படி உறவுகளை முறித்துக் கொண்டு பிறரின் உதவியைப் பெற்றுத் தப்பித்துவிட்டேன். எதிரியோ, நானும் வலிய, வளத்தில வந்து தன் காலில் விழுவேனென நம்பி ஏமாந்தான். எதிரியைக் கடந்தல்லவா, மேற்படி உறவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. வலிய, வளத்தில வரவைக்கப் போய் எல்லோரும் பிரிய, எனக்கோ புதிய உறவுகள் கிடைத்தது.
இந்தக் கதையில் எதிரியின் தோல்விக்கான சான்றுகள் என்ன? நான் எவரெவர் காலில் விழுவேன் எனத் தெரிந்தும், அவர்களைத் தனது கண்காணிப்பில் வைத்திருந்தமை. மதியுரை கூறியவர்களை நாடக்கூடியதாக எதிரி வஞ்சித்தமையால், பிறர் என்மீது இரங்கினர். பிறரது உதவியால் நான் நன்மையடைய, எதிரி பெற்ற மதியுரையும் பொய்யாயிற்று. வன்முறையால் எவரையும் பணியவைக்க முடியாது. அப்படிப் பணிய வைத்தாலும் கூட, முழுப் பயன்பாட்டையும் பெறமுடியாது.
எனது அன்புக்குரியவர்களே! வலிய, வளத்தில எத்தனை ஆள்களை வரவைக்கப் போறியள்? இதோ சில வழிகள்…
1. சரியாக முடிவு எடுங்கள் : மேலே சுட்டிய எதிரியைப் போன்று ஏமாறவும் கூடாது, எதிரியுடன் கூடிய உறவுகள் பிரிவுற்றது போல பிரியவும் கூடாது. எதிரியும் உறவுகளும் எவ்வாறான பிழையை விட்டிருக்கிறார்கள் என்றறிந்து சரியாக முடிவு எடுங்கள்.
2. விழுத்த வேண்டியவரையும் நினைத்துப் பாருங்கள் : என் மீது இரங்கி சிலர் உதவ, வன்முறையைப் பாவித்தது பிழை. எனது விருப்பைப் பொருட்படுத்தியும் மென்முறையைப் பாவித்தும் இருக்கலாம்.
3. மூன்று பக்கங்களைப் பொருட்படுத்த வேண்டும் : இங்கு முதற் பக்கம் – எதிரியும் உறவுகளும், இரண்டாம் பக்கம் – நான், மூன்றாம் பக்கம் – பார்வையாளர்களாகிய மக்கள். உங்கள் வெற்றியும் இம்மூன்று பக்கங்களிலேயே தங்கியிருக்கிறது. அதாவது மூன்று கோணங்களில் சிந்தியுங்கள்.
4. குறித்த செயலின் பின் நடப்பதென்ன? : குறித்த செயலால் உடனடி நன்மையா அல்லது குறுங்கால நன்மையா அல்லது வாழ்நாள் முழுவதும் நன்மையா? இதே போன்று தீமையும் கிட்டலாம். உறவுகள் வலுக்கலாம் அல்லது முறியலாம். அதே போன்று மக்கள் ஆதரவு பெருகலாம் அல்லது இல்லாமலே போகலாம். எந்தச் செயலையும் செய்ய முன், இது பற்றி அலசவும்.
5. வெற்றி தரும் முடிவு : நமது முடிவுகள் எல்லாம் வெற்றி தருவதில்லை. குறித்த முடிவை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலே தான் முடிவின் வெற்றி அமைகிறது. தமிழில் “ஊரோடு ஒத்துப் போ” என்பார்கள்.
6. ஒருவரின் மதியுரை போதாது : தமிழில் “ஐந்து விரலும் ஒரே அளவு இல்லை” என்பார்கள். அதாவது, ஐந்தாள்களின் படித்தறிவும் பட்டறிவும் வேறுபடலாம். பிறரிடம் மதியுரை கேட்பது நல்லது. ஆகையால், குறைந்தது ஐந்தாட்களின் மதியுரையைப் பெற்று அவற்றில் பொதுவானவற்றைப் பின்பற்றலாம்.
7. தன்னம்பிக்கை வேண்டும் : வெற்றியென்பது எட்டாப்பழம். எட்டாப்பழம் புளிக்குமென்று ஒதுங்கினால் வெற்றி கிட்டுமா? தோல்விகளைச் சந்தித்தாலும் தளராமல் வெற்றிகளை நோக்கி நடைபோடத் தன்னம்பிக்கை வேண்டுமே!
இதுக்கு மேலே அடுக்கினால் நீங்கள் என்னைத் திட்டுவியள். இவற்றை வைத்துக் கொண்டு வலிய, வளத்தில எத்தனை ஆட்களையும் வரவைக்கலாம். எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறி முடிக்கிறேன்.
அருந்ததி பல சரக்குக் கடைக்கு முன்னே அகலிகையும் பல சரக்குக் கடை ஒன்றைத் திறந்தாள். திறந்த சில ஏழல்களில் (வாரங்களில்) அகலிகையோ வாடிக்கையாளர் யாருமின்றி சோர்வுற்றாள். அருந்ததியை வெல்லவும் அருந்ததியின் வாடிக்கையாளர்களை தன் பக்கம் வலிய, வளத்தில வரவைக்கவும் அகலிகை முயற்சி செய்தாள். ஆயினும், அருந்ததிக்கு உயிராபத்தையோ அருந்ததியின் சொத்துக்களுக்கு அழிவையோ விளைவிக்கவில்லை. அப்படி அகலிகை என்ன தான் செய்திருப்பாள்?
ஒவ்வொரு பொருளுக்கும் அரசு விதித்த விலையில் இரண்டு விளுக்காடு விலைக் கழிவு தரப்படும் என அறிவிப்புச் செய்தாள். (ஒவ்வொரு பொருளிலும் அகலிகைக்குக் கிடைக்கும் பத்து விழுக்காடு தேட்டத்தில் இரண்டு விளுக்காடு விலைக் கழிவு கொடுப்பதால் பெரிதாகச் சோர்வு ஏற்படாது. அதேவேளை அரசு விதித்த விலையை விடக் குறைத்து விற்பதால் சட்டச் சிக்கல் ஏற்படாது.) இப்போது அகலிகை பல சரக்குக் கடைப் பக்கம், அருந்ததி பல சரக்குக் கடை வாடிக்கையாளர்கள் வலிய, வளத்தில வந்து விழுந்திட்டினம்.
குறித்த ஆணையோ, குறித்த பெண்ணையோ உங்கட பக்கம் வலிய, வளத்தில வந்து விழுந்திட இவ்வழிகளைக் கையாளலாம். ஆனால், திரைப் படங்களில் வருவதைப் பின்பற்றக் கூடாது. திரைப் படங்களில் எப்படியோ எதையாவது திணித்துப் போடுவாங்கள். அப்படியாயின், உங்கட ஆளை வலிய, வளத்தில வரவைக்க முடியாமல் போய்விடும். எனவே, மேலே வாடிக்கையாளர் அல்லது பயனாளி விருப்பறிந்து அகலிகை வெற்றி பெற்றது போன்று நீங்களும் உங்கட ஆளின் விருப்பறிந்து செயற்பட்டால் உங்கட ஆளை வலிய, வளத்தில உங்கட பக்கம் வரவைக்கலாமே!

மனிதா சாவைக் கூப்பிடலாமா?

தொற்றுக் கிருமிகள் மலிந்த
பொது மலசல கூடங்களில்
சுவாசிப்பதால்
சூழலிலுள்ள நஞ்சு/தொற்றுக் கிருமிகள்
உடலினுள்ளே செல்கிறதை அறிவாயா!
பொது மலசல கூடங்களில்
மலத்தை விட, சலத்தை விட
வெண்சுருட்டு(சிகரெட்) மீதியும்(பில்ரர்)
மதுபானக் குடுவைகளும்(போத்தல்களும்)
நிரம்பிக் கிடப்பதைப் பார்க்கிறியா!
நிக்கோடின் நஞ்சும் அற்ககோல் நஞ்சும்
உடலுக்குக் கேடு
அதேவேளை
சுகாதார மற்ற இடங்களில்
சுவாசிப்பதும் கேடு
மொத்தத்தில்
மனிதா சாவைக் கூப்பிடலாமா?
வாழ்க்கையிலே
புகைத்தலையும் மது குடித்தலையும்
பிறர் பெண்ணோடு கூடுவதையும்
நிறுத்தினால் தான்
சாவையே விரட்டலாம் மனிதா!