Daily Archives: ஒக்ரோபர் 29, 2014

குழந்தைகளுடன் பழகுவது எப்படி?

“தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு” என்று
பாடித் திரிவதில் பயனில்லைக் காணும்
“தென்னையை வளர்த்தால் உடற்பயிற்சி
பிள்ளையை வளர்த்தால் உளப்பயிற்சி” என்று
கொஞ்சம் எண்ணிப் பார்த்தால் என்ன?

என்ன காணும்… எப்படி எல்லாம் எண்ணிப் பார்க்கிறியள்? தென்னம் பிள்ளை வைத்து ஆடு, மாடு கடிக்காமல் வேலி போட்டுப் பசளை இட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க எப்பாடுபட்டிருப்பியள்? எல்லாம் உடற்பயிற்சியாக இருக்குமென நம்பிச் செய்தியளா? அப்படி, இப்படி, உப்படி வளர்ப்பு முறை தெரிந்து தென்னையை வளர்த்ததன் பயனாகத் தானே இளநீரும் தேங்காயும் கிடைக்கிறது.

அதே போலப் பிள்ளையைப் பெத்ததும் அப்படி, இப்படி, உப்படி வளர்ப்பு முறை தெரிந்து வளர்த்தெடுத்தால் பின் நாளில் நன்மை உண்டாம்.

அடித்து நொருக்கிக் குழந்தையை வளர்த்தால் பிள்ளைக்கு உங்கள் மீது வெறுப்பு வர பிரியும் வாய்ப்பு பின் நாளில் வர நீங்கள் முதியோர் இல்லம் செல்ல நேரிடும்.

அங்கும் மிங்கும் நடத்திக் காட்டி, அன்பு என்னும் தேன் கலந்து, அறிவு என்னும் பால் கலந்து, சத்துள்ள உணவூட்டி வளர்த்துப் படித்த ஆளாக்கினால்:
பிள்ளை எந்நாளும் அன்பு காட்டும்.
பிள்ளை படித்த ஆளாகியதும் பெற்றோருக்குத் தானே பெருமை சேரும்.
பின் நாளில் நீங்கள் முதியோர் இல்லம் செல்ல நேரிடாது.
வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை வந்தே சேரும்.
இன்னும் நீட்டலாம்…

அதற்கு முன், ஒரு மணித்துளி எண்ணிப் பாருங்கள். உங்கள் குழந்தைகளின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டீர்களா? “வாய் பேசாக் குழந்தை என்னத்தைக் கேட்கும், நாம் என்னத்தைச் செய்யிறது” என்று நீங்கள் வாயைப் பிளக்கிறியளே! இதற்குத் தான் தாய்மாருக்கு உளப்பயிற்சி தேவை என்கிறது.

உளவியல் என்றால் உள்ளம் பற்றிய அறிவு தான். குழந்தையின் உள்ளம் எதை விரும்புதோ அதை அடைய அழுது காட்டும். அதனாலே தான் குழந்தை அழுதவுடன் தாய் பாலூட்டுவதைக் காண்கிறோம். சற்று வளர்ந்த குழந்தை முன்னே இனிப்பைக் காட்டினால் அதை அடையும் வரை அழுதே தீரும். அவ்வேளை கொஞ்சமாய் இனிப்பைக் கொடுத்த பின் மிகுதியை ஒளித்து வைக்கும் தாயைப் பார்த்திருப்பியள். இதெல்லாம் அத்தாயின் உளப்பயிற்சி என்பேன்.

பிறந்த குழந்தை, வளர்ந்த பின், வாய்ப் பேச்சு வந்த பின், குழந்தை விரும்புவதைப் புரிந்துகொண்டு செயற்படுகிறீரா? இல்லை என்றே நான் கூறுவேன். ஓர் எடுத்துக்காட்டு:

உணவூட்ட நீங்கள் நீட்டலாம், ஆனால், குழந்தை வேண்டாம் என்கிறது. உடனே என்ன செய்கிறியள்?

சிலர் பேய் பிடிக்கும், காகம் கொத்தும் கெதியாச் சாப்பிடு என்று அச்சமூட்டி உணவூட்டுவர்.

சிலர் படம் காட்டி, நிலவைக் காட்டி, பக்கத்தில் உள்ள பிள்ளைக்கு ஊட்டிக்காட்டி உணவூட்டுவர்.

எனவே இரண்டாவதாகக் காட்டிய வழியே சிறந்தது என்பேன். எமக்கு மட்டும் உள்ளம் இருப்பதாக எண்ணிவிடாதீர்கள்; பிறந்த குழந்தைக்கும் உள்ளம் இருக்கிறது. குழந்தை வளர்க்கும் போது தான் குழந்தையின் உள்ளத்தில் ஒவ்வொன்றாக எழுதப்படுகிறது. அதனால் தான் குழந்தை வளர்ப்பு முதன்மை பெறுகிறது.

இன்னோர் எடுத்துக்காட்டு:

வாயைப் பிளக்கும் குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்பகமான, நிறைவு தரும் பதிலை பெற்றோர் வழங்காமை, குழந்தை மாற்று வழியில் எண்ணமிடும். அதாவது, கிணற்றடிக்குப் போகும் வேளை “எங்கேயம்மா போறியள்” என்றால் “இருங்கோ இப்ப வாறன்” என்பியள்.

இது குழந்தைக்கு நிறைவு தராமையால், தாயைத் தொடர்ந்து குழந்தையும் நடைபோடும். விளைவு: தாய் குழந்தையைத் திரும்பிப் பார்க்காவிட்டால், வழித்தடங்கலில் குழந்தை விழுந்துவிட நேரிடுகிறது. இந்நிலை வராமைப் பேண முதலில் இன்னொரு உறவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டுச் செல்லலாமே!

இப்படித்தான் குழந்தைகளுடன் பழக வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ப, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப தாய் பழக வேண்டும். குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்பகமான, நிறைவு தரும் பதிலை வழங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுத்து மாத்துப் பதிலை வழங்கினால் குழந்தை மாற்று வழியில் எண்ணமிட்டு தவறான வழியில் செல்ல இடமுண்டு.

எனவே, இது பற்றிய அறிவை “எப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள்?” என்ற அறிஞர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் பதிவைப் படித்துப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும், அவரது குழந்தை வளர்ப்புத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://wp.me/p2IA60-2iN