Monthly Archives: செப்ரெம்பர் 2013

வாழ்வு அமையாவிடில் சாவதா?

சாவைத் தழுவ முயற்சி செய்தோர்; சாவைத் தழுவ முயற்சி செய்கின்றோர்; சாவைத் தழுவ முயற்சி செய்யவுள்ளோர் ஆகியோருக்காக “வாழ்வு அமையாவிடில் சாவதா?” என்ற கேள்விக்கு எனது சுருக்கமான பதிலைத் தருகின்றேன்.

வாழ்வு அமைவதெல்லாம் இறைவன் கையிலில்லை. சிலருக்குப் பெற்றோர் கையிலும் சிலருக்கு அவரவர் செயலாலும் நல்வாழ்வு அமையாமல் போகலாம். அதற்குச் சாவு தான் மருந்தென்றால் முட்டாள் முடிவு என்று தான் சொல்ல வேண்டும்.

பெற்றவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள், அவர்கள் விருப்பப்படி மணமுடிக்கிறார்கள். எதிர்பாராமல் இணை(தம்பதி)யர்களிடையே முரண்பாடுகள் தோன்றினால்; மணவிலக்கு(Divorce)ப் பெற்றால் இன்னொருவரை மணமுடிக்கலாம் அல்லது தனித்து வாழலாம், ஆனால் சாவடைந்தால் எவருக்கு என்ன தேட்டம்(இலாபம்)?

காதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான். வாழ்வில் அதுவும் நன்றாக, நம்பிக்கையுடன் நீண்ட நாள் பழகிய இரு உள்ளங்களும் கருத்தொருமிக்கக் காதல் வரலாம் அல்லது துன்பப்படும் வேளை அக்கறையாக உதவினால் கூட காதல் வரலாம். இயற்கையாக இவ்வாறு காதல் அமைந்தால் குறிப்புப்(Horoscope) பொருத்தம் பார்க்கவே தேவையில்லை. இது சோதிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது கடவுள் அமைத்த காதல். உண்மையானதும் நம்பிக்கையானதும் நல்வாழ்வை அமைக்கக்கூடியதும் எனலாம்.

நம்ம திரைப்படப்(Cinema) பாணியில காதலித்தும் பதின்ம அகவையில்(Teen Age) காதலித்தும் அழகின் ஈர்ப்பால் அல்லது பணம், பொன், சொத்தென மயங்கிக் காதலித்தும் சிலர் தங்கள் வாழ்வைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள்.

இயற்கையில் காதல் தோன்றாமல் “நான் உன்னைக் காதலிக்கிறேன்(I Love You)” என்று பல முறை சொல்லித்தான், அதுவும் தொல்லை தாங்காமல் உடன்படுவதாலும் செயற்கையாகக் காதலித்து மணமுடிப்பதால் “விருப்பம்(ஆசை) அறுபது நாள் ஈர்ப்பு(மோகம்) முப்பது நாள்” என்றபடி வாழ்ந்து முடிய “வாழ்க்கை கசக்குதையா… வர வர வாழ்க்கை கசக்குதையா…” என்று சில நாள் பாடலாம். இதன் பின் பிரிந்து வாழ்ந்தால் பரவாயில்லை. வாழ்வே வேண்டாமெனச் சாவை ஆயுதமாகக் கையிலெடுத்தால் எப்படி நல்வாழ்வை அமைப்பது?

நீங்கள் எந்தவொரு வழியிலும் வாழ்க்கை கசந்து போனால் சாவை மருந்தாக்காமல்; வாழ வேறு வழியில் முயற்சிக்கலாம். வாழ்ந்து தான் ஆகவேண்டும்; ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காட்ட முன்வாருங்கள்.

ஒரு வழி மூடப்பட்டால்; ஏழு வழிகள் திறக்கப்படலாம்(இது பைபிளில் இருப்பதாகப் பத்திரிகையில் படித்தேன்). சாவிற்கு மாற்று வழி கிடையாதா? ஏழு வழிகளில் ஒரு வழியிலாவது பயணிக்க இறங்கியிருக்கலாமே!

வாழ்க்கை என்பது கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் வழுக்கி விழுத்தும் சேறும் வெள்ளமும் நிறைந்தே இருக்கும். வாழ்க்கை என்பது போர்க்களம் தான்; போராடித்தான் வெல்லவேண்டும். போராட இறங்காமல் மகிழ்வான வாழ்வை எப்படி அமைக்கலாம். போராட அஞ்சி சாவை நாடுவது பிழை தானே!

நூறு ஆண்டுகள் வாழ்ந்து சாவடைந்தவர் கூட நூற்றுக்குப் பத்து விளுக்காடு(வீதம்) தான் மகிழ்வான வாழ்வைச் சுவைத்தார்களாம். இதனையும் பத்திரிகையில் தான் படித்தேன். மிகுதியை வாழ்வை முயற்சி செய்யாமலே சுவைக்காமல் விட்டிருக்கலாம்.

எனவே தான் காதல் தோல்வி அல்லது மணமுறிவு என்றதும் சாவை நாடுவதை விட முழுமையான வாழ்வை மாற்று வழிகளில் வாழ முன் வாருங்கள். எந்தவொரு சிக்கலு(பிச்சனை)க்கும் சாவு தான் முடிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்று வழிகளைத் தேடுவோம்; மகிழ்வான வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.

நம்பிக்கை

வாழ்க்கைக்குத் தேவை
நம்பிக்கை தான்…
அது
கடவுள் நம்பிக்கையாக இருக்கலாம்…
இல்லையேல்
தன்னம்பிக்கையாகக் கூட இருக்கலாம்…
உண்மையில்
எம்மால் முடியுமென்ற நம்பிக்கையே
எமக்கு
வெற்றியை ஈட்ட உதவுகிறதே!
உளவியலில்
நம்பிக்கையே முதல் மருந்து!

உளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதெப்படி?

உள்ளத்தில் துயர் உலாவத் தான் செய்யும், அதனை அடிக்கடி மீட்டுக்கொள்ள வேண்டாம். அது தானாகவே நினைவுக்கு வந்தால், பிடித்தமான பொழுதுபோக்கில் அல்லது செயலில் அல்லது படிப்பில் என இறங்கி உள்ளத்தை இழுத்துக்கொள்ளுங்கள். இதனால், துயரை விரட்டி மகிழ்வடையலாம்.

துயர் தந்த ஆள்களைத் தொடர வேண்டாம். துயர் தந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். துயர் விளைவித்த நிகழ்வுகளை மீட்டுப்பார்க்க வேண்டாம். இவற்றைப் பேண முடியாத போது மாற்று வழிகளைக் கையாள வேண்டும். இதனால், துயரை விரட்டி மகிழ்வடையலாம்.

துயர் தந்த ஆள்களைக் கண்டால் பொருட்படுத்தாதீர். துயர் தந்த இடங்களுக்குச் செல்ல வேண்டி வந்தால் பழைய நிகழ்வை மறந்து புதிய இடத்திற்குச் செல்வதாக எண்ணிக்கொள்ள வேண்டும். துயர் விளைவித்த நிகழ்வுகள் உள்ளத்தில் தோன்றினால், அதனை விரட்ட புதிய எண்ணங்களை உள்ளத்தில் விதைக்க வேண்டும். எடுத்துக்காட்டாகப் பழைய காதலி/ காதலன் நினைவு வந்தால், சாவுக்கடலில் விழுந்திடாமல் தப்பிப்பிழைத்தேனென எண்ணி அவளை/ அவனை மறக்க முனையலாம் அல்லது புதிய துணையிருக்கப் பழசெதற்கென மறக்கலாம்.

படித்த படிப்புக்கு ஏற்ற தொழில் கிட்டாத வேளை துயர் வரலாம். தொழில் என்பது உளநிறைவைத் தருவதோடு உயர் வருவாயையும் தரவேண்டும். முதலில் அதனை எட்டிப்பிடிக்கலாம். இரண்டாவதாக படிப்புக்கு ஏற்ற தொழிலை நாடலாம். படித்த படிப்புக்கு ஏற்ற தொழில் கிட்டும் வரை வருகின்ற/ வந்த தொழிலைக் கைவிட்டால் துயர் தான் மிஞ்சும். ஆகையால், வருகின்ற/ வந்த தொழிலைக் கைப்பற்றி உழைத்து நாலு பணத்தை மிச்சம் பிடித்தால் மகிழ்வடையலாம். இருக்கின்ற தொழிலில் இருந்துகொண்டு எதிர்பார்ப்புக்கேற்ற தொழிலை நாடலாம். அவ்வாறு அமையின் துயரின்றி மகிழ்ச்சியைப் பெருக்கலாம்.

மகிழ்ச்சியைப் பெருக்க நமக்குக் குறுக்கே நமது நாக்கு வந்து தடுக்கும். எடுத்த வீச்சுக்குச் சுடுசொல் பேசவைப்பதும் இந்த நாக்குத் தான். நரம்பில்லா நாக்கால கண்டபடி திட்டிக் கொட்டிப்போட்டு, உள்ள நல்லுறவுகளையும் முறித்துப்போட்டு ஈற்றில் துயருற்று என்ன பயன்?

நல்லுறவைப் பேண அமைதி (மௌனம்) பேணலாம். அதாவது வாய்க்குப் பூட்டுப் போடலாம். “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்னும் முதுமொழிக்கமைய அன்பாகப் பேசி எதிரியையும் எம்பக்கம் இழுக்கலாம் என்றால் அன்பு மொழி பேசி நல்லுறவைப் பேணலாமே! பேசுமுன் ஒன்றுக்குப் பலமுறை எண்ணி இன்சொல் பேசலாம்; பிறர் உள்ளம் நோகாது நல்லதைப் பேசலாம். எனவே, நாக்கை உள்ளத்தாலே கட்டுப்படுத்தலாம். வாய்ப் பூட்டு நல்ல இனிய உறவுகளைத் தரும். நாளெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தலாம்.

காதலிக்கையில் மகிழ்ச்சிக் கடலில் நீந்தியோர்; மணமுடித்த பின் துயரக் கடலில் நீந்துவதேன்? காதல் இளமை ஈர்ப்பால் வந்திருந்தால் இது தான் நிகழும். இளமைத் தூண்டலைப் பேணக் காதல் துணை நின்றமையால் மகிழ்ச்சிக் கடலில் நீந்த முடிந்திருக்கலாம். மணநிகழ்வு/ திருமணம் என்பது வாழ்க்கையைத் தொடர மக்களாய(சமூக)த்தால் தரப்படும் அனுமதியே! மணவாழ்வில் நுழைந்ததும் குடும்பம் வட்டத்திற்குள் திட்டமிடலுடன் வாழ்ந்தால் மகிழ்வை எட்டலாம்.

காதலிக்கையில் குடும்பம் ஆனால்; எப்படியிருக்கும் எம்நிலைமை என எண்ணியிருந்தால் சற்று அதிக மகிழ்வைப் பெறலாம். காதலித்தாச்சு, குடும்பம் ஆனாச்சு என்றால் குடும்பம் நாடாத்தப் புரிந்துணர்வை இருவரும் ஏற்படுத்தினால் மகிழ்வு கிட்டலாம். புரிந்துணர்வு என்பது ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்றுக் கொள்வதிலும் விட்டுக் கொடுப்பதிலும் தான் அமைந்திருக்கிறது. நல்ல புரிந்துணர்வு எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தவே வழிவிடும்.

மகிழ்வான குடும்பத்திற்கு பாலியல்(Sex) தேவை தான். பாலியலிலும்(Sex) உச்ச மகிழ்ச்சியைப் பெறப் புரிந்துணர்வு தேவைப்படுகிறது. மகிழ்வான குடும்பத்திற்குப் பணமும் தேவை தான். வந்த பணத்தைச் செலவு செய்தால் துயரம் தான் பரிசு. எனவே, பணத்தைச் சேமித்து வைத்தால் வருவாய் கிட்டாத போதும் மகிழ்வான குடும்பத்தை நடாத்தலாமே! மேலும், “குப்பைக்குள் போட்ட குண்டுமணியும் ஒரு நாள் தேவைப்படும்” என எண்ணி எல்லோரையும் பகைக்காமல் இருந்தால் கூட குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பெருக்கலாம்.

பிறப்பில் இருந்து இறப்பு வரைத் துயரை விரட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறர் உள்ளத்தை அன்பாலே வெல்ல வேண்டும். பலனை எதிர்பாராது பிறருக்கு உதவ முன்வர வேண்டும். உண்மையைக் கூறி உறவுகளை வலுப்படுத்த வேண்டும். வருவாய்க் கேற்றவாறு விருப்பங்களை (ஆசைகளை) மட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு மகிழ்ச்சியை அடைய உள்ளத்தில் நல்ல திட்டமிடல் வேண்டும். உளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதென்பது இவ்வாறு தான்!

உளவியல் நோக்கில் மதநம்பிக்கை

உளச் சிகிச்சைகளில் (Psycho Therapy) மதவழிச் சிகிச்சை (Religious Therapy) என்ற ஒன்றுள்ளது. அதாவது, அவரவர் மதவழி ஆற்றுப்படுத்துகை மேற்கொள்ளும் முறை இது.

நாம்(மனிதர்) நம்பிக்கை அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம். மனிதன் எப்போது நம்பிக்கை இழக்கிறானோ, அப்போதே நிலைகுலைகின்றான். ஈற்றில் பைத்தியமாகியே விடுவான். உளநல மதியுரைஞர்களாகிய நாம் உளச் சிகிச்சை (Psycho Therapy) செய்வதாகக் கூறி, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையை ஊட்டுகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மனிதன் நலமாக வாழமுடிகிறது.

கடவுள் என்ற ஒருவர் தான், இந்தப் பூமியையும் மக்களையும் படைத்தார் என்பது நம்பிக்கை. மதம் என்பது அந்தக் கடவுளைக் காண வழிகாட்டுகிறது. அதனை ஆன்மீக வழிகாட்டல் என்கிறோம். எவன் கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறானோ, அவன் நோய்களின்றி நெடுநாள் வாழமுடியும் என்பதும் நம்பிக்கை தான்.

மனிதனின் உயிர் நாடியே நம்பிக்கை தான். எனவே, மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை தேவை. ஆனால், மதங்கள் தேவையில்லை. ஆயினும், மதங்கள் தரும் ஆன்மீக வழிகாட்டல் கடவுள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். மதங்களின் பெயரால் மக்களை ஆற்றுப்படுத்த வேண்டுமே தவிர, பிற எதனையும் செய்தலாகாது. வழித்தோன்றல் வழியாக பின்பற்றிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம். மதமாற்றத்தை ஏற்கமுடியாது. இதனடிப்படையில் மதங்கள் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

ஆண்(கணவன்), பெண்(மனைவி) குடும்ப மகிழ்வைப் பெருக்க…

விட்டில் மகிழ்ச்சி வெள்ளம் முட்டி மோத ஆண்(கணவன்), பெண்(மனைவி) உறவிலும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். அதாவது கருத்து முரண்பாடுகள், சிறு சிறு முறுகல்கள், விருப்பு வெறுப்புகள் பேணாமை எனப் பல குறுக்கே வந்து நின்று மகிழ்ச்சியைக் கெடுக்கின்றதே! உங்கள் கருத்து, உங்கள் தீர்வு, உங்கள் தெரிவு ஒவ்வொரு குடும்ப மகிழ்வுக்கும் உதவுமென நம்புகிறேன்.

1 – ஒருவருக்கு ஒருவர் விருப்பு வெறுப்புகளை மதித்தால் போதுமே!
2 – கருத்து முரண்பாடுகளைக் களைந்து பொது உடன்பாட்டிற்கு வரலாமே!
3 – கோபம் வந்தால் தண்ணீர் குடிக்கலாமே, அதற்காக மோதல், முறுகல் வேண்டாம்.
4 – ஒருவர் தலைமையை ஒருவர் ஏற்றால் நலமே!
5 – ஒருவருக்கு ஒருவர் மதியுரைஞர்(ஆலோசர்) ஆகலாமே!
6 – குடும்ப மகிழ்வுக்கு ஏற்றுக்கொள்ளும் உள(மன)ப்பாங்கு ஒருவொருவருக்கும் வேண்டுமே!
7 – உளவியல் நோக்கில் பார்த்தால் மேற்கூறிய எல்லாமே தேவை.

சரி! ஆண்(கணவன்), பெண்(மனைவி) குடும்ப மகிழ்வைப் பெருக்க; நீங்கள் கூறும் மதியுரை என்ன?

எச்சூழலில் நிறைவான பாலியல் சுகம் கிடைக்கும்?

எப்படியாயினும் இளசுகள் தவறான வழியைத் தெரிவு செய்யாமல் இருக்க, உங்கள் பதில் பதிலடியாக இருக்குமென நம்புகிறென். 10 தொடக்கம் 100 வரையான விளுக்காடுகளில் (வீதங்களில்) புள்ளி வழங்கலாம். முக்கியமாக எயிட்ஸ் பாதுகாப்புப் பற்றிக் கருத்திற் கொள்ள வேண்டும். கீழ்வரும் தரவுகளை வைத்து உங்கள் பதிலைத் தரலாம். புதிய கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

1. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் கோட்பாட்டுக்கு அமைய மணமுடித்த பின் நேர்மையாகக் கூடும் போது…

2. மணமுடிக்காமல் காதலித்துக் களவாகக் கூடும் போது…

3. மாற்றான் மனைவியோடு அல்லது மாற்றாள் கணவனோடு களவாகக் கூடும் போது…

4. சூழல் ஒத்துழைப்பில் அகப்பட்டவருடன் களவாகக் கூடும் போது…

5. உடலை விற்கும் தோழியோடு அல்லது உடலை விற்கும் தோழனோடு களவாகக் கூடும் போது…

6. ஒருவனை அல்லது ஒருத்தியைக் கடத்திச் சென்று பயமுறுத்திக் களவாகக் கூடும் போது…

குழந்தைகளின் நாடகம்

எனது இலக்கியப் பதிவுகளில் அதிகம் வழிகாட்டலையும் மதியுரையையும் சேர்த்துக் கொள்கிறேன். அந்த வகையில் இந்தப் பதிவு.

நல்ல நாடகம்

(ஞாயிறு விடுமுறை நாளாகையால் ஊர்க்கோழி உரிச்சுக் காய்ச்சித் தின்று முடிய தாய், தந்தை, பிள்ளைகள் வீட்டின் முன் பகுதியில் குளிர்களி வேண்டிக் குடித்த வண்ணம் இருந்தனர்.)
பிள்ளை-01 : அப்பா! ஓர் உதவி செய்வியளே!
தகப்பன் : இப்ப ஏலாது. கோழிக்கறியும் சோறும் செமிக்கப் படுத்து நித்திரை கொள்ளுங்கோ…
பிள்ளை-02 : அம்மா! ஓர் உதவி செய்வியளே!
தாய் : கொப்பர் படுக்கச் சொல்கிறார், பிறகு, எனக்கு ஏன் தொல்லை தாறியள்…
(இரண்டு பிள்ளைகளும் அறைக்குள் நுழைந்து சிறிது நேரத்தின் பின் வெளியே வந்து நின்று…)
இரண்டு பிள்ளைகளும் : அப்போய்! அம்மோய்! நாங்க படம் பார்க்கப் போறோம்…
தகப்பன் : என்ன படமடா?
இரண்டு பிள்ளைகளும் : உதில தான், “கல்லடியான்” படமாளிகையில தான்… “திண்டு வளர்ந்தான்” படந்தான்
தகப்பன் : படத்துக்குக் காசு எங்கால…
இரண்டு பிள்ளைகளும் : உங்கட கால்சட்டைக்குள்ளே கையைவிட்டு எடுத்தோம்…
தாய் : அப்பாடை காசைக் கொடுங்கோ! வாற கிழமை படம் பார்க்கலாம்…
தகப்பன் : சீ! சீ! இப்பவே போவோம்! காசைத் தாங்கோ…
இரண்டு பிள்ளைகளும் : இந்தாருங்கோ… வாங்கோ படத்துக்குப் போவோம்!
தாய் : பிள்ளைகளுக்கு இணங்கிப் போறது நல்லதுக்கில்லை…
தகப்பன் : எங்கட விருப்பத்தைத் திணித்தால், பிள்ளைகள் தங்கட கைவரிசையைக் காட்டத்தான் செய்வினம். பிள்ளைகளோட அணைஞ்சு போறது நல்லது தானே…
(பிள்ளைகள் விருப்பத்தை அறியணும் அவர்களுக்கு ஏற்றாற் போல இசையணும் என்றவாறு எல்லோரையும் படத்துக்குத் தந்தை கூட்டிச் செல்கிறார்.)

இந்தப் பதிவைப் படித்ததும் உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றுகிறது? உண்மையில் குழந்தைகளுக்கு வேண்டிய எல்லாம் செய்து கொடுக்கலாம். அதற்காகக் கேட்டதெல்லாம் செய்து கொடுக்க ஏலுமே! தவறான வழிகளை உள்ளத்தில் எண்ணிக்கொள்ள இடமளிக்காது மாற்று வழிகளை நினைவூட்டலாம். தவறான எண்ணங்களை குழந்தைகள் உள்ளத்தில் வேரூன்ற இடமளியாது பேண, இந்தப் பதிவில் தகப்பன் எடுத்த முடிவு சரிதானே! உங்கள் மாற்றுக் கருத்துகளை நீங்களும் முன்வைக்கலாம்.

சிரிப்பு நல்ல மருந்து

உடனடி முடிவு எடுப்பவருக்கு அறிவுக் குறைவாம் (அதாவது அவசரக் குடுக்கைக்கு புத்தி மத்திமம் என்பர்.) உண்மையா? ஆம், கோபப்படும் வேளை 13 நரம்புகள் தானாம் இயங்குகிறதாம். மூளைக்குச் செந்நீர்(குருதி) செல்வது குறைவு என்பதால் சிறந்த முடிவுகள் எடுக்க முடியாமையே இந்நிலைக்கு ஏதுவாம். அதே வேளை நகைச்சுவையுடன் சிரிக்கும் போது 65 நரம்புகள் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. சிரித்துச் சிரித்து முடிவெடுத்து வெற்றி பெறுவோர்களையும் பார்க்கிறோமே!

திரைப் படங்களில் செந்தில் கவுண்டரிடம் உதை வேண்டுவதையும் வடிவேலுவும் விவேக்கும் அகப்பட்டவரிடம் அடிவேண்டுவதையும் பார்த்துச் சிரித்து மகிழ்வது எல்லோருக்கும் தெரியும், வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமென்பர், அது போல சிரித்து மகிழ்வோருக்கு நோய் அணுகுவது குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். அப்படியாயின் சிரிப்பு நல்ல மருந்தா?

“நகைச்சுவை” சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் போது உடலில் உள்ள எல்லா நரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். மூளைக்குப் போதிய அளவு செந்நீர்(குருதி) செல்லும். இதனால், சோர்வுற்ற மூளை சுறுசுறுப்படைய உடலில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் ‘ஒழுங்காக இயங்கு’ என்று கட்டளை போடும். அதனால், உடலுறுப்புக்கள் சீராக இயங்க நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எனவே, அடிக்கடி நகைச்சுவை கேட்பதாலும் படிப்பதாலும் உள்ளத்தையும் உடலையும் நோய் அணுகாமல் பேணமுடியும்.