Monthly Archives: திசெம்பர் 2014

நான் சொல்லுவது என்னவென்றால்…

மக்கள் முன்னே உலாவி வரும் வேளை சிலர் உதவுவதையும் சிலர் உதவாமல் செல்வதையும் கண்டிருப்பியள். சிலர் உதவும் வேளை உதவி பெற்றவர் கடவுள் போல வந்து உதவினீர்கள் என நன்றி கூறுவதையும் கண்டிருப்பியள். சிலர் உதவாத வேளை உதவி பெறாதவர் ஒரு துளியேனும் உள்ளத்திலே அன்பு, இரக்கம், கருணை இல்லாதவர்களெனத் திட்டித் தீர்ப்பதையும் கண்டிருப்பியள்.

மெய்யியல், உளவியல், சமயம் (மெய்ஞானம்), அறிவியல் (விஞ்ஞானம்) நோக்கில் வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதை விட இவ்வாறான சூழலில் காணப்படும் சிக்கல்களுக்கு அமைதியான தீர்வுகளை முன்வைப்பது நல்லது என்றே நான் புரிந்து கொள்கிறேன். ஆயினும், இவ்வாறான சூழலில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் என்ன எண்ணத் தோன்றுகிறது என்பதை அலசும் போது உளவியல் வந்துவிடுகிறது. அதாவது, உள்ளம் பற்றிய அறிவியலே உளவியல் என்று சொல்லவந்தேன்.

மேலுள்ள சூழலில் உங்கள் உள்ளம் என்ன சொல்லும் என்பதை எண்ணிப் பாருங்கள். பின் எனது எண்ணங்களைப் படியுங்கள். நான் சொல்லுவது என்னவென்றால் உங்களுக்கு உதவக் கடவுள் வரமாட்டார்; நம்மாளுகளில் எவரோ உதவலாம். ஆயினும், உதவும் உள்ளங்களில் கடவுள் இருக்கின்றார் என்பேன். ஆகையால், நாமே நம்மாளுக்கு முன்கூட்டியே உதவியிருந்தால், எப்போதும் நம்மாளுகள் உதவுவார்களே!

அடுத்தவருக்கு உதவ எமக்கு நேரம் அமையாத போதும் நாம் இடரொன்றில் சிக்கியிருந்தால், அவ்வேளை சிலர் உதவலாம்; பலர் உதவாமல் விடலாம். அவ்வேளை நாம் என்ன செய்வோம். அதைத்தானே தொடக்கத்திலேயே சொல்லிவிட்டேன். ஆயினும், பிறரது உதவியை எதிர்பார்க்கவும் கூடாது. பிறரது உதவியில் தங்கியிருக்கவும் கூடாது. அவை எம்மை முட்டாளாக்க உதவும். அதாவது, எமது தன் (சுய) முயற்சியில் நாம் இறங்காமல் சொர்வடையச் செய்துவிடும்.

தேவை ஏற்பட்டால் மட்டுமே
நம்மாளுகள்
எதையாச்சும் எண்ணிப்பார்க்கிறார்கள்…
எதையாவது கண்டுபிடிக்கிறார்கள்…
உதவிகள் கிட்டும் வேளை
தேவைகள் ஏற்படாமல் போக
எண்ணிப்பார்க்க ஏதுமின்றி
கண்டுபிடிக்க ஏதுமின்றி
நம்மாளுகள் முட்டாளாகின்றனரே!
என்னைப் பொறுத்தவரையில்
கடவுள் போல வந்து உதவினார்களென
உதவியோருக்கும் நன்றி கூறுவேன்…
கடவுள் எம்மைப் படைத்தது போல
நானும்
ஏதாவது எண்ணிப் படைக்க வழிவிட்ட
உதவாதவர்களுக்கும் நன்றி கூறுவேன்…
ஏனெனில் – அது தான்
எனது அடையாளம் என்பேன்!

“அடையாளம்” என்ற தலைப்பில் ஆக்கிய எனது கிறுக்கலில் சொன்னது போல உதவாதவர்களுக்கும் நன்றி கூறுங்கள். எவரும் உதவாத வேளை தான் நாம் எமக்குள்ளே இருக்கும் ஆற்றலைப் பாவிக்கிறோம். அவ்வேளை தான், தன் (சுய) முயற்சியே தன்னை வாழ வைக்கும் என்ற தன்னம்பிக்கை எமக்குள் பெருகிறது. சிலர் இன்று உதவலாம்… சிலர் நாளை உதவலாம்… எல்லோரும் எமக்குத் தேவை தான்! எம்மால் இயன்ற வரை எல்லோருக்கும் உதவலாம்.