வாழ்; வாழ விடு!

வாழ்; வாழ விடு! (Live and Let Live)

உளநலப் பேணுகைப் பணியின் (Mental Health Care Duty) முக்கிய கோட்பாடு (Principle) வாழ்; வாழ விடு! (Live and Let Live) என்பதாகும். வாழ் என்றால் மாற்றாருக்கு இடையூறின்றி வாழ்வதாகும். வாழ விடு என்றால் மாற்றாருக்கு உதவுவதால் அவர்களும் நம்மைப் போல வாழ வழியமைத்துக் கொடுப்பதாகும். உதவுதல் என்றால் பொன், பொருள், பணம் என எதனையும் கொடுத்து உதவுதல் என்று பொருள் கொள்ளக்கூடாது. பொன், பொருள், பணம் என எதனையும் எவ்வாறு பெறலாம்; எப்படிச் சேமிக்கலாம் என்பதற்கு வழிகாட்டுதலே மாற்றார் வாழ உதவும் செயலாகும். உளநலப் பேணுகைப் பணி (Mental Health Care Duty) என்ற எனது வலைப்பூவும் எல்லோரும் வாழ வழிகாட்டும் பணியைச் செய்யும்.

உளவியலும் உளச்சிகிச்சையும் (Psychology and Psychotherapy)
நான் ஒன்றும் சிவபெருமானின் கணக்கப்பிள்ளையாம் குபேரனைப் போன்ற செல்வந்தர் (பணக்காரர்) இல்லைக் காணும். ஆகையால் பொன், பொருள், பணம் என எதனையும் கொடுத்து உதவ என்னிடம் வசதி இல்லைக் காணும். என்னை நானே ஏழை என்று சொல்வதில் மகிழ்சி அடைகிறேன். ஏழை என்றாலும் மாற்றாருக்கு உதவலாம் தானே! அந்த வகையில் நான் பெற்ற படித்தறிவு, பட்டறிவு யாவும்; அதாவது எனக்குத் தெரிந்ததை மட்டும் மாற்றாருக்கு அளிக்க முடியும் என்பது உண்மையே!

ஒருவரது உள்ளத்தில் இருப்பதை இன்னொருவர் பார்க்க முடியாவிட்டாலும் உளவியல் (Psychology) ஊடாக உணர முடியும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு குழப்பங்களுக்குத் தீர்வு காணும் முறையே உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Psychological Guidance and Counselling) ஆகும்.

உள்ளத்தைப் பற்றிய அறிவாக உளவியலைக் கருதினாலும் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரிவுகள் (அதாவது துறைசார் பிரிவுகள்) உளவியலில் காணப்படுகின்றன. புண்பட்ட உள்ளத்தை ஆற்றுப்படுத்த உதவுவது உளச்சிகிச்சை (Psychotherapy) ஆகும். அதிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட உளச்சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன.

“கற்றது கைப்பிடி மண்ணளவு, கற்கவேண்டி இருப்பது உலகளவு” என்பதற்கமைய நானறிந்த உளவியல் (Psychology) மற்றும் உளச்சிகிச்சை (Psychotherapy) அறிவிற்கமைய உளநலப் பேணுகைப் பணி (Mental Health Care Duty) செய்திட இவ்வலைப்பூவை ஆக்கினேன். இதனூடாக உளநலம், உடல் நலம், குடும்ப நலம் (காதல், திருமணம், இல்வாழ்வு, மகப்பேறு), மக்கள் நலம் (சமூக அபிவிருத்தி), கல்வி, தொழிற்றுறை, கணினி நுட்பங்கள் போன்ற தேவைகளுக்கு உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்கலாம் என எண்ணியுள்ளேன்.

Take a right Decision

உளநல வழிகாட்டல் (Psychological Guidance)
எவரும்
நல்வழி காட்டலாம் என்பது
உங்கள் கருத்து!
நேர் விளைவு
எதிர் விளைவு
பக்க விளைவு
எதுவானாலும் தருகின்ற
உளமகிழ்வு, உளப்பாதிப்பு இரண்டையும்
எடுத்துக் கூறும் கருத்தே
உளநல வழிகாட்டல் என்பேன்!

மனித முயற்சியும் சூழல் அமைவும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. அதாவது, ஒருவரது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம்; அவர் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்வதிலேயே தங்கியிருக்கிறது. சுருங்கக் கூறின் ஓடுவதாயின் ஓட்ட அரங்கிலும் நடிப்பதாயின் நாடக அரங்கிலும் பயிற்சி செய்திருத்தலே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறது.

தோல்விகளை எவராலும் தாக்குப்பிடிக்கலாம் (சமாளிக்கலாம்). ஆனால், கெட்ட பெயர் கிடைப்பதையோ பொருண்மிய இழப்பு ஏற்படுவதையோ எவராலும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடிவதில்லை. இதற்கு உளநல வழிகாட்டல் தேவைப்படுகிறது.

தன்னாலான இயன்றளவு முயற்சியும் தனது உச்சத் தகுதியின் அடிப்படையிலான முடிவும் நேர் எண்ணம் (Positive Thoughts) எனக் கூறலாம்.

ஒவ்வொருவரது நேர் எண்ணமும் வெற்றி பெறத் தேவையான பின்னூட்டி (Feed Back) மற்றும் பின்புலம் (Background) பற்றிய ஒழுங்கைச் சரி செய்தல் எதிர் எண்ணம் (Negative Thoughts) எனக் கூறலாம்.

குறிக்கோளை எட்டுவதற்கோ வருவாயை ஈட்டுவதற்கோ நன்மை அடைவதற்கோ ஒருவர் எந்தச் சூழலையும் எந்தவொரு ஆட்பலத்தையும் (எதிரியாயினும் சரி, நண்பராயினும் சரி) பயன்படுத்த முனைவது நேர் மறை முயற்சி (PMA – Positive Mental Attitude) எனக் கூறலாம்.

எங்கேயும் எப்போதும் எதிலும் ஐயப்படுதலும் விருப்பமான சூழலை எதிர்பார்ப்பதும் எவரது (எதிரியாயினும் சரி, நண்பராயினும் சரி) உதவியையும் மறுத்தலோ குறைத்து மதிப்பிடுதலோ எதிர் மறை முயற்சி (NMA – Negative Mental Attitude) எனக் கூறலாம்.

உளநல வழிகாட்டலின் படி Positive, Negative, PMA ஆகியவற்றைச் சிந்திப்பவர் இலகுவில் வெற்றியையும் நன்மையையும் அடைவர். அதேவேளை Positive, NMA ஆகியவற்றைச் சிந்திப்பவர் இலகுவில் தோல்விகளையும் இழப்புகளையும் சந்திப்பர். இதனால், சிலர் தற்கொலை முயற்சியையும் நாட இடமுண்டு. எந்தச் செயலில் நீங்கள் இறங்கினாலும் உளநல வழிகாட்டலின் படி வெற்றி பெறலாம்.

Guidance and Counselling is best solution

உளநல மதியுரை (Psychological Counselling) 
மதியுரை (ஆலோசனை) என்பது
படித்தறிவுள்ளவரோ
பட்டறிவுள்ளவரோ
கூறக்கூடியது என்பது
உங்கள் கருத்து!
உள்ளம் நோகாமல்
உள்ளத்துப் புண்ணை
உள்ளாற வைக்கும்
ஆற்றுப்படுத்தல் செயலும்
நொந்த உள்ளம் சுகமடைய
கூறும் கருத்துரையும்
உளநல மதியுரை என்பேன்!

மனித உள்ளமும் மனித உடலும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. அதாவது, உடல் நோய் உள்ளத்தையும் உளநோய் உடலையும் பாதிப்புறச் செய்யும். நோயின்றி வாழ உளநல மதியுரை கூறுவதென்றால் உள நலம், உடல் நலம், சூழல், மற்றும் உணவு ஆகிவற்றில் அக்கறை காட்டுங்கள் என்று தான் கூறமுடியும்.

வழமைக்கு மாறான உணவு, அளவுக்கு அதிகமான உணவு, ஒன்றை உண்ட பின்னர்; அது சமிபாடைய (நான்கு மணி நேரம்) முன்னரே மற்றையதை உண்ணுதல், சிற்றுண்டி (Short Eats) என்று மூக்குமுட்ட(அளவுக்கு அதிகமாக) உண்ணுதல், உணவுண்டு அரை மணி நேரமானதும் குளித்து முழுகுதல் என்பன முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அழுக்கான, என்றும் அமைதியற்ற, விருப்பமற்ற, வீண் தொல்லை தரும், பழையதைக் கிளறி உள்ளத்தை நோக வைக்கும் சூழலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

10km மிதிண்டி (சைக்கிள்) மதித்தல், 2km கையை வீசி நடத்தல், அரை மணி நேரம் முச்சை அடக்கி விடாத (ஏரோபி) இலகு உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றில் நாள் தோறும் ஒன்றைச் செய்வதால் உடல் உறுப்புகளை ஒழுங்காக இயங்கச் செய்யலாம்.

நாள் தோறும் நல்ல எண்ணங்களை நினைவூட்டுவதும் நற்பணி செய்ய முனைவதும் நேர் மறை எண்ணங்களைக் கையாளுவதும் பலமான நிலையில் உள்ளத்தைப் பேண உதவும்.

உணவு, சூழல், உடல், உள்ளம் ஆகிய நான்கும் ஒழுங்காக இருப்பின் மருத்துவமனைக்கு ஓட்டம் பிடிப்பதோ மருத்துவரை நாடுவதோ தேவைப்படாது.

(ஆங்கில) மருந்தடிமை, மது அடிமை, புகைத்தல் அடிமை, உடல் வணிகர் உறவுக்கு அடிமை போன்றன சாவுக்கு வழிவிடும் நடத்தைகளாகும். இவற்றிலிருந்து மீண்டு நலமாக வாழ உளநல மதியுரை உதவும்.

இன்றைய உலகில் தியானம் (Meditation), யோகாசனம் (Yoga), உள மருத்துவம் (Psychotherapy), இயற்கை மருத்துவம் (Natural Medicine) என்பன பயன்பாட்டில் உள்ளன. இதனைப் பயன்படுத்தும் நோக்கம், ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் நம் ஆயுளைக் குறைக்கும் என்பதேயாகும். இன்றைய ஆங்கில மருத்துவர்கள் கூட இது பற்றி மதியுரை வழங்குவதை நானறிவேன்.

குறிப்பு: இவை யாவும் உங்களுக்கு நான் மதியுரை கூறக் குறிப்பிடவில்லை. இப்படி நீங்களும் மதியுரை வழங்கலாம். மருத்துவர்களை நாடாமல் பாட்டி மருத்துவம், கைமருத்துவம் செய்துகொண்டு இருப்போரை உடனடியாக மருத்துவரை நாடச் செய்யுங்கள். அவர்களுக்கு அறிவூட்டவே இச்சிறுகுறிப்பைத் தொகுத்துள்ளேன்.

முடிவாகச் சொல்லப் போனால்…
அமைதியான, சுத்தமான சூழல், வழமையாக உண்ணும் உணவு, நலமாகவுள்ள உடலுறுப்புகள், மகிழ்வான உள்ளம் ஆகியவற்றிலேயே மனித வாழ்க்கை தங்கியிருக்கிறது. எவரெவர் தங்கள் உடல் நலத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்களோ, அவர்கள் இதனைக் கற்றிருப்பர்.

நல்வழியைத் தெரிவு செய்வதன் முலமே ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கமுடியும். உளநலம், உடல்நலம் ஆகிய இரண்டையும் ஒழுங்காகப் பேணுவதன் மூலமே நீண்ட ஆயுளுடன் மகிழ்வாக வாழலாம்.

வாழ்க்கை என்பது வெற்றி தரும் செயலல்ல, அதுவொரு போராட்டம் என்பதனை நானறிவேன். அதாவது வழுக்கி விழுத்தும் சேற்றின் மேலே (விழுந்துவிடாமல்) நடந்து செல்லும் பயணமே வாழ்க்கை என்பேன். எனவே நீங்கள் காணும் துன்ப, துயரங்களுக்கான தீர்வுகளை என்னிடம் கேட்டுப் பெறலாம்.

பிறப்புத் தொடக்கம் இறப்பு வரை ஒவ்வொரு மனிதரும் எத்தனையோ சிக்கல்களுக்கு முகம் கொடுக்கவேண்டி வரலாம். அவ்வேளை மதியுரை கூறக்கூட எவரும் இல்லாமலும் இருக்கலாம். அப்போது எனது உளநல வழிகாட்டலும் மதியுரையும் தேவைப்படலாம்.

கல்வி என்பது
கற்றதற்கான சான்றிதழல்ல!
மாற்றார் ஈட்டும் பயன்
பிறருக்கு ஈயும் பணி
பயனாளர் கூறும் மதிப்பீடு
என்பனவெல்லாம் கல்வியின் பெறுதியே!
நான் பெற்ற கல்வி
இவ்வுலகமும் பெற
எனக்குத் தெரிந்ததை மட்டும்
உமக்கு அளிக்க முடியுமென்பது
உண்மையே!
கேட்டும் படித்தும் அறிவது அறிவல்ல
பட்டும் தேடியும் புரிவது
அறிவென்று நானறிவேன்!
நல்ல நூல்களைப் படித்தால்
அந்நூலாசிரியர்களின் அறிவை
நல்ல அறிஞர்களுடன் உரையாடினால்
அவர்கள் அறிவை
நாம் பகிர்ந்த சுகமிருக்கும்!
நல்ல நண்பர்களுடன் உரையாடினால்
தலைக் கனத்தை
கொஞ்சம் இறக்கி வைக்கலாம்!
நல்ல மதியுரைஞர்களுடன் உரையாடினால்
எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு
நல்ல நல்ல தீர்வுகள்
நம் கைக்குக் கிட்டுமே!

இவ்வண்ணம்
காசி.ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)
Counsellor (உளநல/ குடும்பநல மதியுரைஞர்)

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.