Monthly Archives: ஜூன் 2014

மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய…

தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் “சிரிப்பும் சிந்தனையும் – http://www.gunathamizh.com/2014/06/blog-post_26.html ” என்ற பதிவை எல்லோரும் படித்துத் தான் ஆகவேண்டும். படங்களுடன் (கேலிச்சித்திரங்கள்) எடுத்தாளப்பட்ட உண்மைகளைப் படித்துத் தான் ஆகவேண்டும்.

நான் அவரது பதிவைப் படித்ததில் கீழுள்ளதை விரும்புகிறேன்.

முதலில் அவரது பதிவைச் சென்று படியுங்கள். அடுத்து எனது கருத்தைப் படிக்கத் தொடரலாம்.

மருத்துவம் என்பது உயிர் காக்கும் பணி. மருத்துவம் படிக்கும் வழியும் சிறந்து விளங்க வேண்டும். ஆனால், இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி அரச கல்வித் திட்டப்படி மருத்துவம் படிக்க முடியாதோர் பணமுள்ளோர் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவம் படித்து வெளியே தலையைக் காட்டுவோரால் மருத்துவக் கல்விக்கு மதிப்பிழப்பு ஏற்பட்டுவிட்டது. இதனை தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் பதிவு நன்றே உணர்த்துகிறது.

அன்றெல்லாம் மருத்துவர்கள் அரிது. இன்றெல்லாம் மருத்துவர்கள் அதிகம் என்றால் தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியே சான்று. இந்நிலை போலி மருத்துவர்கள் தலைகாட்ட இடமளிக்கிறது. எங்கேயோ எப்படியோ படித்தவர் போல சித்த மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் ஆங்கில (MBBS) மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளையும் வழங்கும் நிலை வந்துவிட்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் தமிழ் இலக்கியமாகவே இருக்க ஆங்கில (MBBS) மருந்துகள் எப்படி அதற்குள் நுழைந்திருக்கும்? இப்படிப் போனால் “உயிர் காக்கும் பணி” என்பது “உயிர் அழிக்கும் பணி” ஆகாதோ?

நான் ஓர் உளநல மதியுரைஞர் (Counsellor) என்ற வகையில், நோயாளிகள் எல்லோரும் அரச கல்வித் திட்டப்படி படித்த அல்லது அரச அனுமதி பெற்ற அதாவது அரச மருத்துவர் பதிவிலக்கம் பெற்றவரையே நாடவேண்டும் என்பேன். இவ்வாறே உளநல மதியுரைஞர் (Counsellor) எவரையும் நாடுவதாயின் அரச அனுமதி பெற்றவரையே நாட வேண்டும். எனவே, நோயாளிகள் தவறான இடத்தையோ தவறான ஆள்களையோ நாடினால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பும் உண்டு.

தன் (சுய) மருத்துவம் அல்லது பாட்டி மருத்துவம் மேற்கொண்டு தம்மை அழிப்பவரைப் போலவே தவறான இடத்தையோ தவறான ஆள்களையோ நாடுவோரும் தம்மை அழிக்கிறார்கள். நோயாளிகளோ நோயாளிகளைச் சூழவுள்ளோரோ உண்மையான, உண்மையற்ற மருத்துவ ஆளணிகளை அடையாளப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இது பற்றிய தெளிவை உண்மையான மருத்துவ ஆளணிகளும் ஊர்ப் பெரியோர்களும் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனால் நாட்டின் தேவையற்ற உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.

மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய விரும்பும் உறவுகளே! என் போன்றவர்கள் இப்படித் தான் மக்களுக்கு வழிகாட்டுவர். நீங்கள் அரச கல்வித் திட்டப்படி படித்து அல்லது அரச அனுமதி பெற்று அதாவது அரச மருத்துவர் பதிவிலக்கம் பெற்று மக்களுக்குப் பணி செய்ய முன்வர வேண்டும்.

அன்று யாழ்ப்பாணத்தில் (மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் மருத்துவர் கெங்காதரனும்) தனியார் மருத்துவக் கல்லூரியைத் திறக்க அன்றைய அறிஞர்கள், மருத்துவபீட யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தடுத்தமையால் நிறுத்தப்பட்டது. ஆனால், இன்று இலங்கையில் மாலபேயில் அரச அனுமதியுடன் தனியார் மருத்துவக் கல்லூரியைத் திறந்து இயங்க எவரும் பெரிதும் எதிர்த்ததாயில்லை. காலவோட்டத்தில் இது இயல்பென (இன்றைய நாகரீகமென) இருந்துவிட்டார்கள் போலும்.

ஆயினும், மக்கள் பணி என மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய விரும்புவோர் அரச கல்வித் திட்டப்படி படித்து மருத்துவரானால் மட்டுமே நன்மதிப்பை ஈட்டமுடியும். அவ்வாறானவர்களையே மக்கள் விரும்பி நாடும் காலம் நெருங்கி வருகிறது.

மனிதருக்குள்ளே உள்ள வேற்றுமைகளை விரட்ட

சாதி, மதம், இனம், ஊர், நாடு என பல வேற்றுமைகளை மனிதருக்குள்ளே பார்க்கமுடிகிறது. இதனை விரட்டி ஒற்றுமை பேணினால் எல்லோருக்கும் நன்மை உண்டு.
1.எல்லோரும் கடவுளின் படைப்பாகக் கருதுவோம்.
2. எல்லோரும் சேங்குருதிச் சாதியென அன்பு காட்டுவோம்.
3.நம்மைப் போல மாற்றானும் என அணைப்போம்.
4.பலனை எதிர்பாராது உதவுவோம். உதவுவதால் உறவைப் பேணலாம்.
5.பிறர் உதவியைப் பணிவோடு ஏற்போம். அதனால், உறவு வலுவடையும்.
6.எந்தவொரு வேறுபாட்டையும் மறந்து புதிய உறவுகளை ஏற்படுத்துவோம்.
7.உள்ள உறவுகளைப் பகைக்காமல் பேணுவோம்

“ஆயிரம் நண்பர்களை (ஆண்/பெண்) உருவாக்கலாம். ஆனால், ஓர் எதிரியை உருவாக்கிவிடாதே!” என்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். நம்மைச் சூழ அன்பால் இணையும் கூட்டம் அமைய வேண்டும். அதற்கு நாம் தான் அன்பைப் பரிசாக வழங்க வேண்டும். அப்ப தான் எதிரி உருவாக வாய்ப்பிருக்காது. அடுத்தது நம்பிக்கையைப் பேண வேண்டும். பிறர் மத்தியில் நாம் நம்பிக்கையை விதைக்காமல்; பிறரிடம் எப்படி நம்பிக்கையை அறுவடை செய்யலாம்?

முடிவாகப் பாகுபாடுகள், வேறுபாடுகளை உள்ளத்தில் இருத்தாமல் பிறர் மத்தியில் அன்பை, நம்பிக்கையை விதைத்தால் மனிதருக்குள்ளே உள்ள வேற்றுமைகளை விரட்ட வழி பிறக்கும். இதனைப் பிறரிடம் எதிர்பார்க்காமல், நாமே பிறரிடம் ஏற்படுத்த வேண்டும். இன்றே நாம் ஒவ்வொருவரும் இப்புனித முயற்சியில் இறங்குவோம்.

அடங்காச்செயல் (பிடிவாதம்) உள (மன) நோயல்ல…

முதலில் எனது “அடங்காச்செயல் (பிடிவாதம்)” என்ற கிறுக்கலைப் படித்துப் பாருங்கள். பின் உண்மை நிலையை அறிவோம்.

அடங்காச்செயல் (பிடிவாதம்) நீங்கில்
அடியோடு உள்ளம் சுத்தமாகும் – அது
நெடுநாள் நோயின்றி வாழ மருந்தாகும்
ஆனால்,
முடக்குவாதம் நீங்க மருந்துண்டு
நம்மூர்ப் பரிகாரி சொல்கின்றார்…
அடங்காச்செயல் (பிடிவாதம்) நீங்க
தன்னைத் தானுணர்ந்து
தன்நிலையை மாற்றாத வரை
மருந்து இல்லை என்பேன்!

நம்மாளுகளுக்கு ஏன் அடங்காச்செயல் (பிடிவாதம்) தொற்றிவிடுகிறது? தனது வட்டத்துக்கு வெளியே வராமல் தானென்ற குறுகிய வட்டத்துக்குள்ளே இருப்பதனால் தான் இந்நிலை. கிணற்றுத் தவளைக்கு வெளியுலகம் தெரியாது. அது போல இவர்களின் செயலைக் கண்டுகொள்ளலாம். அதற்காக இதனை உள (மன) நோய் என்று கூறக்கூடாது. இவ்வாறானவர்களுடன் பேச்சால் வெல்லமுடியாது. இவர்களுக்கு உண்மை நிலையைக் காட்சிப்படுத்தல் மூலமோ சான்றுப்படுத்தல் மூலமோ தெளிவுபடுத்த முடியும்.

அதாவது, தமது உள்ளத்தில் சில எண்ணங்களை சரியென்று பேணி வருகின்றமையால் தான் அடங்காச்செயலில் (பிடிவாதத்தில்) இறங்குகின்றனர். எப்படியாயினும் இவர்களை வெளியுலகத்திற்கு இழுத்துவர வேண்டும். பொது நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்கவேண்டும். மக்கள் மத்தியில் எளிமையாகப் பழகவிட வேண்டும். பிறரைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு ஊரூராக சுற்றுலாச் சென்று வரலாம். தன் (சுய) முன்னேற்ற நூல்களைப் படிக்க வைக்கலாம்.

இவ்வாறு தமது உள்ளத்தில் பேணி வரும் தமக்குச் சரியெனப்படும் எண்ணங்களைத் தாமாகவே மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் உளப் (மனப்) பக்குவம் ஏற்பட உதவலாம். இதனால் தமது எண்ணங்களை மீளாய்வு செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. சுருங்கக் கூறின் நாம் கால மாற்றம், சூழல் மாற்றம், மக்கள் எண்ணத்தில் மாற்றம் (ஊரோடு ஒத்துப் போதல்) என எல்லாவற்றிற்கும் எம்மை மாற்றிக்கொள்ளப் பழக வேண்டும். அவ்வாறு மாறும் உலகிற்கு ஈடுகொடுக்கத் தக்கதாக எம்மைப் பேணுவதால் அளவற்ற மகிழ்ச்சியை அடையலாம்.

சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி

நீரிழிவைக் கட்டுப்படுத்தினால் – நாம்
நீடுழி மகிழ்வோடு வாழலாம் – வாழவா
நீரிழிவை விரட்டும் வழிகளை – இதோ
நீங்களும் படித்தப் பயன்பெறுங்களேன்!

சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி.

via சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி.

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?

பகலில் குட்டித் தூக்கம் என்றால்
உடல் நலம் பாதிக்கும் என்ற பேச்சு
இனி இருக்கதே! – இது
பலருக்குத் தெளிவூட்டும்
சிறந்த ஆய்வுக் கட்டுரை ஆச்சே!

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?.

via பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?.

பாலூட்டுவதை நிறுத்தி அழகைப் பேணலாமா?

மருந்துக்கடைக்கு வந்த ஒருவர் “குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் தான். அதற்குப் பால் கொடுக்க ஏதாவது மாப்பால் இருக்குதா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அருகில் இருந்த எனக்குத் தலை சுற்றியது. பின்னர் “குழந்தை பிறந்த உடனே, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டி வளர்க்கலாம். அவ்வாறானவர்கள் புட்டிப் பாலையே நாடுவர்” என்று நானும் என்னைச் சமாளித்தேன்.

“குழந்தை பிறந்து ஆறு மாதம் வரைக்கும், தாய் பிள்ளைக்குப் பால் கொடுத்து ஆகவேணுமே” என்று அருகில் நின்ற ஆச்சி சொன்னாள். அந்தாளோ, “பிள்ளைக்குப் பால் கொடுத்தால் தாயின் அழகு கெட்டுப் போயிடும்” என்றார். “ஆண்டவா! இதென்னடா கொடுமை இது? பாலூட்ட விரும்பாத பெண்களைப் படைத்தது உன் குற்றமே!” என்று நான் கேட்டிருந்தால் “அவர்களுக்கு நோயைக் கொடுத்து வாட்டுவதை அறியாயோ?” என்று எனக்குப் பதிலளித்திருப்பார்.

நாடு எப்படிப் போகுது என்று சொல்ல இதைவிட வேறு சான்றுமுண்டோ? தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையே இதற்குக் காரணம். இதற்காகவே நேரில் நான் கண்ட காட்சியை இங்கு வெளிப்படுத்துகிறேன். இக்காட்சியே இப்பதிவை எழுதத் தூண்டியது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப் பால் தான் முழுமையான உணவு. குறைந்தது ஆறு மாதம் ஆயினும் பதினெட்டு மாதம் வரை தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டலாம். புட்டிப் பாலைவிடத் தாய்ப் பாலே சிறந்தது என எத்தனையோ விளம்பரங்கள் இட்டும் எங்கட தாய்மாருக்கு எப்பனும் விளங்குதில்லையே!

தன் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதால் அழகு கெட்டுப்போகும் என்ற பேச்சை ஏற்கமுடியாது. இடையிலே வந்த அழகு இடையிலேயே போய்விடும். ஆயினும், அழகைப் பேணுகின்ற காலம் வரை அழகு இருக்கும். தாய் பாலூட்டுவதால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை.

கணவன்மாருக்கு உதைக்கிற உதையில மனைவிமார் திருந்துவினம். மனைவிமார் இளமையாய் இருக்க வேணுமென்பதற்காக தாய்ப் பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப் பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

ஆய்வுகளின் படி புட்டிப் பாலூட்டி வளர்த்த குழந்தையைவிடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உள, உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை உள, உடல் நலத்தோடு வளரத் தாய்ப் பாலூட்டுவதையே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய இளைய பெண்களே! அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப் பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு. இது பற்றிய மேலதிகத் தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.

நோய்களை விரட்ட உடற்பயிற்சி தேவை

‘உடல் நலம் பேணப் பயிற்சிகள் தேவை’ (http://wp.me/p3oy0k-4y) என்ற எனது பதிவைப் படித்த பின் இப்பதிவைத் தொடருவது பயன்தரும். நண்பர் சிவசண் முகநூலில் பகிர்ந்த உடற்பயிற்சி வழிகாட்டல் பக்கத்தை இங்குப் படிக்கப் பதிவிறக்க வசதியாக இணைத்துள்ளேன். இதனை http://neilarey.com/workouts/walkers-workout.html தளத்தில் பதிவிறக்கினேன். நீங்களும் இது போன்ற பிற பயிற்சி வழிகாட்டல் பதிவுகளைப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாமே!

சென்ற பதிவில் உடற்பயிற்சியின் பயனைக் குறிப்பிட்டேன். உடற்பயிற்சி செய்வதால் நோய் நெருங்காது; ஆயுளை நீடிக்கலாம். குறைந்தது நாளுக்குநாள் 2km நடப்பதையோ 5km மிதிவண்டி மிதிப்பதையோ மேற்கொள்ளலாம். கீழே காட்டப்பட்ட எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்து பாருங்களேன். நீரருந்திய பின் இதனை மேற்கொள்ளக்கூடாது. நீரருந்தியிருப்பின் அரை மணி நேரம் கழித்துப் பின் தொடரவும்.