Monthly Archives: திசெம்பர் 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

படம்

கருக்கலைப்பும் சிசுக்கொலையும் தேவைதானா?

இன்றைய உலக நடப்பில் அதிகம் பேசப்படும் செய்தியாக கருக்கலைப்பும் சிசுக்கொலையும் காணப்படாமல் இருந்தாலும் மறைமுகமாக இடம்பெறுகிறதே! போர் சூழலில் இவை இடம் பெறலாம். இலங்கையில் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கிறது. ஒரு குழந்தைக்குக் கூடுதலாகப் பெற்றால் அரச ஒறுப்புக்கு(தண்டனைக்கு) உட்பட வேண்டியிருப்பதால் சீனாவிலும் இடம்பெறுகிறது. இந்தியாவில் பெண் பிள்ளை பிறந்தால் குப்பைத் தொட்டியில் போடுவதாய் செய்தி ஒன்றில் படித்தேன். இவை பற்றி அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. கருக்கலைப்பும் சிசுக்கொலையும் தேவைதானா? என்பதற்கு உரிய பதிலை மட்டும் கருத்திற் கொள்க.

ஏன் கருக்கலைப்பும் சிசுக்கொலையும்?
ஒழுக்கமுள்ளவர்கள் தவறு செய்ய மாட்டார்களே! அம்மாவுக்கு ஒன்று அப்பாவுக்கு ஒன்று போதுமென்றா? தவறான எண்ணங்களில் பழகியதாலா? இதே போன்று பல கேள்விகள் எழுப்பப்படலாம். ஆயினும், ஏதோ காரணம் கூறி நம்மாளுகள் கருக்கலைப்பும் சிசுக்கொலையும் செய்கிறார்கள். மத வழிகாட்டலின் படி குற்றம்/தவறு என்கிறார்கள். “ஆண்டவர் படைத்த உயிரை அழிக்க, நமக்கு ஆண்டவர் அனுமதி அளிக்கவில்லை.” என்பது பொதுவான மதவாதிகளின் கருத்தாகும்.

“குழந்தை வேண்டாமென்றால் மருத்துவர் கூறும் வழிகாட்டலின்படி வாழலாம்.” என்பது எல்லோரினதும் ஒரே கருத்தாகும். பள்ளிக்கூடங்களில் இத்தகைய தவறு நிகழாமல் இருக்கவே பாலியல் கல்வி கற்பிக்கிறார்கள். அரசு திருமண அகவை(வயது) எல்லையை வகுத்தது ஏன்? ஏன் எங்கள் இளசுகளை மக்களாயம்(சமூகம்) கண்காணிக்கிறது? எல்லாம் இவற்றைக் கட்டுப்படுத்தவே!

கருக்கலைப்பும் சிசுக்கொலையும் செய்வதால் நன்மை உண்டா?
கருவுறாமல் தம்மைக் காத்தால் கருக்கலைப்புத் தேவையில்லை. கருவுற்றால் 90 நாட்களுக்குள் (3 மாதத்திற்குள்) தகுந்த மருத்துவரின் துணைகொண்டு கருக்கலைப்புச் செய்யலாம். ஆனால், மருத்துவருக்குப் பொய் கூறியோ தகுந்த மருத்துவரின் உதவியை நாடாமலோ பெண்கள் கருக்கலைப்புச் செய்வதால் தாமே உயிரிழக்க நேரிடலாம்.

இப்பின்விளைவை உணர்த்திக் குறித்த பெண்ணின் பெற்றோர், கருக்கலைப்புச் செய்யாமல் குழந்தையைப் பெற வைக்கிறார்கள். குழந்தையைப் பெற்றதும், மக்களாயம்(சமூகம்) குழந்தையின் அப்பா பெயரைக் கேட்டால் பதிலளிக்க முடியாமையால் தான் சிசுக்கொலை செய்கிறார்கள்.

குழந்தையைப் பெற்ற பின்னர், சாக வைத்து நிலத்திற்குள் புதைப்பதையோ உயிரோடு குப்பைத் தொட்டிக்குள் இடுவதையோ உயிரோடு பற்றைக் காட்டுக்குள் வீசுவதையோ எனப் பல வழிகளைக் கையாண்டு பெண்கள் தப்பிக்க முனைகிறார்கள். குழந்தை இன்றி அலையும் பெற்றோருக்கோ குழந்தைகள் காப்பகத்திலோ உங்கள் குழந்தைகளை வழங்கி சிசுக்கொலையை நிறத்தலாமே!

ஒழுக்கம் என்பது பேச்சில் இருந்தால் போதாது, செயலிலும் வேண்டும். தவறு செய்தால் தப்பலாம் என்று கழிவு உறுப்புகளின் செயலைச் சோதிக்கப் போவதும் முட்டாள் செயலே. ஆணும் பெண்ணும் பாலியல் உறவு வைத்தால் உயிர் ஒன்று கருவாகும் எனத் தெரிந்து கொண்டும் ஒழுக்கத்தை மீறலாமா? எல்லாவற்றுக்கும் உள்ளத்தில்(மனதில்) உறுதி வேண்டும்.

“பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போடலாம் வாங்க…” என்ற தலைப்பில் கடையில் விற்கின்ற பொத்தகங்களை வாங்கிப் படித்துத் தவறு செய்ய வேண்டாம். எனவே, மருத்துவரின் நேரடி வழிகாட்டலில் உங்கள் எண்ணங்களை அடையலாம். தவறுகள் செய்வதற்கல்ல, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்வே.

இனி வரும் காலங்களில், கருக்கலைப்பும் சிசுக்கொலையும் இடம் பெறாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இது பற்றிய ஐயங்களை இத்தளத்திலேயே பரிமாறுங்கள்.

தொற்று நோய்கள் வரலாம்

கோடை மழையால் தொற்று ஏற்பட்டு நோய்கள் வரலாம் என்பதை எவரும் நம்புவதில்லை. வெயில் காலம் அம்மன் நோய் வரலாம் என்று நம்புகிறார்கள். உள்ளமும் உடலும் சுத்தமில்லை என்றால் எப்பவும் நோய்கள் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கோடை வெயில் நிலநீரை ஆவியாக்க; கோடை மழை பெய்ய; அதனை நிலமுறிஞ்ச ஒரு நாற்றமடிக்கும். கோடை வெயில், கோடை மழை, நிலம், நிலத்தின் மேல் மக்கள் போட்ட குப்பைகள் ஆகியோருக்கிடையேயான மோதலின் அறுவடை தான் அது.

இக்கட்டத்தில் தான் தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய உயிரிகள் (கிருமிகள்) பெருக்கெடுக்கும். மாரி காலத்தில் இது இயல்பு. அதற்காகக் கோடை காலத்தில் இவ்வாறு நிகழாது என இருந்துவிட முடியாதே!

இவ்வாறான சூழலில் காற்றடிக்க நாற்றமடிப்பதால், காற்றோடு கலந்து தொற்றுக்களும் மூக்கினுள் நுளையலாம். இப்போரில் உங்களுக்கு நோய் வந்தால் உடனே மருத்துவரை நாடவும்.
இவ்வாறான சூழலை ஏற்படுத்தா வண்ணம், நாம் நமது சூழலைச் சுத்தமாகப் பேணுவதன் ஊடாகவே தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்.

ஓர் உரையாடல்…
ஒருவர் : ஏன் காணும் காலைத் தூக்கிச் செல்கிறீர்?

மற்றவர் :-
எச்சமிட்ட மனிதர்
சருகாலே மறைத்துப் போக
கத்திரி வெயில் போட்ட
வெள்ளத்தால் வந்த சேறா
மனித எச்சமா என்றறிய
மருத்துவரிடம் காட்ட…

“அந்தளவிற்கு பாதிப்பா?” நண்பர் rajudranjit கேட்க; “தெருக் குப்பையும் தெரு வெள்ளமும் மோதிக் கொண்டால் (சுகாதாரம்) எப்படி இருக்குமென எண்ணிப்பார்த்தேன்.” என்று நானும் பதிலளித்தேன்.

( கோடை மழையால் தொற்று ஏற்பட்டு நோய்கள் வரலாம் )

இப்போதைக்குச் சரியென்றால்; பின்னுக்கு என்னாவது?

நம்மில் பலர் எந்தச் சிக்கலுக்கும் இப்போதைக்குச் சரியென்றால் போதுமென முடிவு எடுக்கின்றனர். அம்முடிவுகள் அப்போதைக்குச் சரியென்றால் பின்னுக்கு என்னாவது?

சில முடிவுகள் உடனடியாகச் சிக்கலைத் தவிர்க்கலாம். அது பின்னுக்குப் பெரிய விளைவுகளைத் தரலாம். எடுத்துக்காட்டாகப் பணமில்லாத போது என்னைக் கழித்துவிட்டவர்கள், பணமுள்ள போது என்னை நெருங்க முடியாமற் போயிற்று.

சிலர் ஊராள்களுடன் முரண்பட்டு, பிறவூருக்குப் போய்ச் சேருவர். இப்போதைக்கு இது போதுமென ஊரை விட்டு வெளியேறியோர், சில காலம் கழித்து ஊருக்கு வந்தாலும் கூட பழைய முரண்பாடுகள் தொடருமே!

எப்படிப்பட்ட சிக்கலாயினும் உடனடித் தீர்வு காணவேண்டும். ஆயினும் இப்போதைக்குச் சரியென்றால் போதுமென எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. எடுக்கின்ற முடிவால் உடனடி நெருக்கடியைத் தீர்க்க முடிந்தாலும், அது பின்னுக்குப் பாதிப்பைத் தரலாம்.

பின்னுக்குக் கிடைக்கப் போகும் நன்மை, தீமைகளை எண்ணிப் பார்த்தே முடிவு எடுக்க வேண்டும். இளமையில் தகாத உறவை வைத்த பின், சில காலம் செல்ல உயிர் கொல்லி நோய் (Aids) வந்து வாட்டுவதை காண்பீர்.

தகாத உறவை வைக்கும் முன், பின்னர் உயிர் கொல்லி நோய் (Aids) வந்தால் என்ன செய்யலாம் என எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். எனவே, முடிவெடுப்பது சிக்கலல்ல; முடிவெடுக்க முன் சிந்திப்பதே நன்று.

நாம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறுவதனாலேயே சிறு உளப்பாதிப்புக்கு உள்ளாகவேண்டி வருகிறது. இச்சிறு உளப்பாதிப்பில் இருந்து விடுபட முடியாத நிலை வரும்போது உளநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.

உடனடியாக முடிவெடுக்கப் போய் பின்விளைவில் கோட்டை விடுவதை விட; சற்று ஆறுதலாக முடிவெடுத்தால் இப்போதைக்கு மட்டுமல்ல; பின்னுக்கும் நன்மை தருமே!

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கினால், முடிவெடுப்பது பற்றிப் படிக்க வாய்ப்பிருக்கிறதே!

http://wp.me/P3oy0k-24

உங்கள் ஆயுளை நீடிக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஆயுளை நீடிக்க முடியாது என்பது உங்கள் கருத்து. அதனை நானும் ஏற்கிறேன். ஆனால், ஆண்டவன் வழங்கிய ஆயுளைச் சிலர் குறைக்கிறார்களே! அவ்வாறு குறைக்கின்ற ஆயுளை நீடிக்க அதாவது கூட்டிக்கொள்ள என்ன செய்யலாம்.

1. உணவுக் கட்டுப்பாட்டைப் பேணுதல்
2. புகைத்தல், குடிப் பழக்கத்தைத் தவிர்த்தல்
3. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் வாழ்தல்
4. வியர்வை சிந்த உடற் பயிற்சி செய்தல்
5. உள்ளத்தில் அமைதியைப் பேணல்
6. சிக்கல்களை(பிரச்சனைகளை) உடனடியாகத் தீர்த்து மகிழ்வடைதல்
7. நோய் வந்தால் கை மருத்துவம் பார்க்காமல் மருத்துவரை நாடுதல்

எனக்குத் தெரிந்த ஆறேழைச் சொன்னேன். உங்கள் ஆயுளை நீடிக்க; இன்னும் எத்தனையோ முயற்சிகள், பயிற்சிகள் இருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லித் தாருங்கோவேன். நானும் உங்கட உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் பாவித்து ஆயிரம் ஆண்டுகள் வாழப் பார்க்கிறேன்.