Monthly Archives: பிப்ரவரி 2023

படுக்கையில் கிடந்தால், பட்டங்களும் பதவிகளும் உதவுமா?

ஆறறிவுள்ள மனிதர் நாம், இளமைக் காலத்தில் செய்த தவறுகளை முதுமை காலத்தில் பட்டறிந்து கொள்கின்றோம். அதாவது நமது செயலுக்கான பின் விளைவினைப் படிக்கின்றோம்.

கண்-பார்த்தல், காது-கேட்டல், மூக்கு-மணத்தல், நாக்கு-சுவைத்தல், தோல்-உணர்தல் ஆகிய ஐந்தும் ஐந்தறிவு என்கிறோம். அப்படியாயின், ஆறாம் அறிவு என்பது என்னவாக இருக்கும்?

ஐந்து புலன்களாலும் உள்வாங்கப்பட்ட தகவலைப் பகுத்தறிந்து, அதற்குப் பதில் வழங்கும் பணியை மூளை செய்கிறது. அந்த நுட்பத்தையே உள்ளம் (மனம்) என்கிறோம். அதாவது உள்ளத்தால் உள்வாங்கப்பட்ட தகவலை வைத்து, உள்ளத்தில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்போம். பின்னர் அதற்கான பதிலை நாம் சிந்திக்கின்றோம். அந்தப் பதில் எமது சொல்(பேச்சு), செயல், நடத்தை வழி வெளியிடுகிறோம்.

நாம் உள்ளத்தில் நல்லது-கெட்டது, நன்மை-தீமை, தேட்டம் (இலாபம்)-சோர்வு(நட்டம்), பயனுள்ளது-பயனற்றது, நேர் விளைவு, பக்க விளைவு, பின் விளைவு எனப் பல கோணங்களில் பகுப்பாய்வு செய்து நமக்கும் சூழ உள்ளோருக்கும் நன்மை தரும்/பயன் தரும், பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்றையே தெரிவு செய்கிறோம்; தெரிவு செய்ய வேண்டும். அதனையே பகுத்தறிவு என்கிறோம்.

ஆறாம் அறிவாகிய பகுத்தறிவுக்கு உள்ளம் அதாவது மூளை இயங்கும் நுட்பம் உதவுகிறது. நாம் படிக்கவும், படித்ததை மீட்டுப் பார்க்கவும் உள்ளம் உதவுகிறது. சிக்கல் வந்தால் தீர்வு காணவும் உள்ளத்தில் தான் சிந்திக்கின்றோம். அந்த வகையில் உள்ளத்தில் படித்து, உழைத்து, உயர்ந்த பதவிக்கு உயரப் பறக்க வேண்டுமெனத் தேவையானதைத் தேடிப் படிக்கிறோம்.

எல்லோரும் படிக்கக்கூடிய, உயர உயரப் பதவியில் இருக்கக்கூடிய திறனாற்றலைக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பயிற்சியும் முயற்சியும் எடுக்க வேண்டும். நாளுக்கு நாள் மாறும் நுட்பங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வகையில் கடினமாக உழைத்துப் பல பட்டங்களை பெற்றும் உயர உயரப் பதவி உயர்வு பெற்றும் உயர்ந்த பதவிகளில் பலர் வாழ்கின்றனர்.

இருப்பினும் ‘படுக்கையில் கிடந்தால், பட்டங்களும் பதவிகளும் உதவுமா?’ என்று ஒரு கேள்வி எழுகின்றது. அதற்கு இலக்கினை நோக்கி நகரத் தெரிந்த எமக்கு; குடும்ப வாழ்க்கை, குடும்ப உறவுகள், வாழ்க்கைக்குத் தேவையானவை போன்ற எல்லாவற்றையும் சிந்திக்கும்/பொருட்படுத்தும் ஒருவருக்கு இந்த கேள்வி ஒரு பொருட்டல்ல.

குடும்ப வாழ்க்கை, குடும்ப உறவுகள், வாழ்க்கைக்கு தேவையானவை என்றெல்லாம் திறம்படப் பகுப்பாய்வு செய்யத் தவறுவோருக்கே ‘படுக்கையில் கிடந்தால், பட்டங்களும் பதவிகளும் உதவுமா?’ என்ற கேள்வி சிக்கலை தோற்றுவிக்கலாம். அதில் என்ன சிக்கல் இருக்கு என்று நாமும் பகுப்பாய்வு செய்து பார்க்கலாமே!

படித்த அறிவு, பட்டறிவு மிக்க நீங்கள் உயர்ந்த பதவிகளில் இருக்கும் போது கீழுள்ள பணியாளர்கள் மீது காட்டும் பரிவு தான், அவர்களுக்கும் தங்களுக்கும் இடையேயான உறவு நிலையை பேண உதவுகிறது. நீங்கள் காட்டும் பரிவு தான் உங்களுக்கும் மாற்றாருக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்த உதவும். பட்டம், பதவியைப் பின்னுக்கு வைத்துப் போட்டு மாற்றாரும் எமது சகோதர, சகோதரிகள் என அரவணைத்துப் போனால் இறப்பு வரை நல்லுறவுகள் வலுவடைந்து தொடரும்.

பட்டம், பதவிகளைக் கடந்து பணியிடங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி எமது சொந்த உறவுகளுக்கு அப்பால் எல்லோரும் எம்மைப் போன்றவர்களே என்றவாறு எல்லோரிடத்திலும் அன்பு காட்டி உறவைப் பேணுவதால்; துன்பம் வரும் வேளை எல்லோரும் தோள் கொடுக்க முன்வருவார்கள். நாம் படுக்கையில் கிடந்தாலும் கூட, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சுகப்படுத்தி விடுவார்கள்.

நாம் அதிகம் படித்தவர், நாம் உயர்ந்த பதவியில் இருக்கிறோம் என்றவாறு பணியிடங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி மாற்றாரை விட நாம் ஒரு படி உயர்ந்தவர் எனப் பாகுபாடு பார்ப்போமானால், அதிகாரத் தொனியில் பழகுவோமானால் ‘படுக்கையில் நாம் விழுந்து கிடந்தாலும் எந்தக் கடவுளும் வந்து தூக்கி விடமாட்டார்’ என்றவாறு எவரும் உதவ முன்வரமாட்டினம்.

உண்மையில் எவராயினும் ஒரு நாள் படுக்கையில் விழுந்து கிடக்கலாம்; முடங்கியும் இருக்கக் கூடும். அந்த நேரம் நாம் படித்த படிப்பும் நாம் வகித்த பதவியும் உதவிக்கு வரமாட்டாது. அதனைக் கடந்து ‘உன்னை போல் உன் அயலானையும் நேசி’ என்ற முதுமொழிக்கு இணங்க; நாம் பிறரை ஆதரித்து, மதிப்பளித்து, அரவணைத்து, அன்பு காட்டி, பரிவு காட்டி, நல்லுறவைப் பேணினால் மட்டுமே; எவரும் துன்பம் வரும் வேளை தோள் கொடுக்க முன்வருவர்.

‘நம் வாழ்வு சிறக்க, மகிழ்வோடு நாம் வாழ நாலாபுறமும் நல்லுறவுகள் தேவை’ என்பதை உணர்ந்து, எமது உயர்ந்த நிலை, உயர்ந்தவர் என்று இறுமாப்பு எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு அன்பாலே அனைவரையும் ஆளப் பழகி வாழ்வை மேம்படுத்த முன்வாருங்கள்.

தேக்கி வைத்தலும்(Pending’s) காலம் கடத்துதலும்(Postponing’s) உளநோயைத்(Mental Sickness) தந்துதவுமே!

சுடச் சுடச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்று நேரம் தப்பாமல் மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடத் தெரிந்த உறவுகளுக்கு, எந்தச் செயலையும் உடனுக்குடன் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணராமல் இருப்பது நன்மை தராது.
காலை விடிந்ததும் காலைக் கடமைகளை நிறைவேற்றத் தவற மாட்டோம். அதுபோல, அன்றைய நாள் வேலைகளைக் கூட அன்றன்றே மறக்காமல் செய்து முடித்திருந்தால் பாதிப்படைய வேண்டியிருக்காதே! அடுத்த நாள் விடிந்ததும் ‘நேற்றே செய்து வைத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது’ என்று எண்ணிப் பார்ப்பதிலும் பயனிருக்காது.
வீட்டிலும் சரி, பணியிடங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி தாங்கள் சுறுசுறுப்பானவர் என்றால் தரப்பட்ட எந்த வேலையும் உடனுக்குடன் செய்து முடித்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தங்களை சுறுசுறுப்பில்லாதவர் என்று அடையாளப்படுத்தி விடுவர்.
பின்னர் பின்னர் என்பதும் நாளை நாளை என்பதும் இறுதியில் இல்லை என்று ஆகிவிடும். அதாவது, காலம் கடத்திக் காலம் கடத்திக் கடைசியில் எதுவுமே நிறைவேற்றாமல் இருந்திருப்போம். எடுத்துக்காட்டாகத் தங்கள் வீட்டில் குடும்பமாக நண்பர் வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டு இருக்கலாம். இருப்பினும், பின்னர் பார்க்கலாம் நாளை பார்க்கலாம் என்றவாறு காலம் கடத்திய பின் நண்பர் வீட்டுக்கு செல்லாமல் இருந்திருப்போம்.
தங்கள் பணியிடத்தில் குறித்த வேலையை பின்னர் செய்யலாம் நாளை செய்யலாம் என்று தேக்கி வைத்து இருக்கலாம். அப்படியே ஒரு நாள் தேக்கி வைத்த(Pendings) எல்லாவற்றையும் எப்படி செய்து முடிப்பதென எண்ணிப் பார்க்கும்போது உள நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வரும்.
பணியிடங்களில் வேலையில் நெருக்கடி வந்து விட்டால் தான் தெரிகிறது; பின்னர் பின்னர் என்றும் நாளை நாளை என்றும் குறித்த வேலையைச் செய்து முடிக்காமல் காலம் கடத்தியது(Postponings) தான் தேக்க நிலையைத்(Pendings) தோற்றுவித்திருக்கிறது என்பதை. இதுவே இன்றைய வேலை நெருக்கடிக்கு காரணம் என்று அவ்வேளை உங்களால் படிக்க முடிந்திருக்கும்.
பணியிடங்களில் தமக்கு ஏற்பட்ட வேலை நெருக்கடி நேரத்தில் ‘எதை எப்படி விரைவில் செய்து முடிப்பது? எதை முதலில் விரைவாய்ச் செய்து முடிப்பது?’ என்று சிந்திக்கின்ற வேளை உளநெருக்கடியை அதாவது உள்ளத்தில் குழப்பத்தை(Mental Sickness) உணருகிறோம். எப்படியாவது செய்து முடிக்க வேண்டுமே எனச் சிந்திக்கும் போது தலையைச் சுற்றுது, தலை இடிக்கிறது, காய்ச்சல் காய்கிறது என்று உங்களுக்கே சோர்வு வருவதைக் கவனிக்க முடியும். இந்த நிலை இனி எந்த வேளையும் வராமல் இருக்கத் திட்டமிடல்(Planing) என்னும் மருந்து ஒன்றே போதும்.
வீட்டிலும் சரி, பணியிடங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி நிகழ்ச்சி நிரல் போட்டுத் தங்கள் பணிகளைச் செய்யலாம் அல்லது அந்தந்த வேலையை உடனுக்குடன் செய்து முடிக்கலாம். அவ்வாறு செய்யப் புகின் உளநெருக்கடி அல்லது உள்ள குழப்பம்(Mental Sickness) ஏற்படுவதை தடுக்கலாம்.
நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை முதலில் திரட்ட வேண்டும். பின்னர் அந்தந்த வேலைகளை செய்து முடிக்க நாள் நிகழ்ச்சி நிரல்(Daily Event List) ஒன்றை முன்கூட்டியே தயாரித்து அதன் படி நிறைவேற்றிக் கொள்ள முயற்சி எடுக்கலாம். (அந்த நாள் நிகழ்ச்சி நிரலில் எந்த வேலை எவ்வளவு நேரத்தில் முடியும், அதற்கு அடுத்த வேலை எந்த நேரத்தில் தொடங்க வேண்டும் என இணைத்திருக்க வேண்டும்).
எடுத்துக்காட்டாக முதல் நாள் தயாரித்த நாள் நிகழ்ச்சி நிரல்(Daily Event List) ஒழுங்கின்படி ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க வேண்டும்; செய்து முடிக்கச் செய்து முடிக்கச் செய்து முடித்தவற்றைப் புள்ளி இட்டு அந்த நாள் நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்து அன்றைய நாள் பணி முடியும் வரை கையாள வேண்டும். இதனால் தங்களது எல்லாப் பணிகளும் உளநிறைவோடு முடிவுறும். அதேவேளை உள்ள நெருக்கடியோ அல்லது உள்ள குழப்பமோ(Mental Sickness) ஏற்பட மாட்டாது.
தேக்கி வைத்தலும்(Pendings) காலம் கடத்துதலும்(Postponings) உளநோயைத்(Mental Sickness) தரும் என்பதால், நாம் நாள் நிகழ்ச்சி நிரல்(Daily Event List) தயாரித்து ஒவ்வொரு நாளும் எந்த இடத்திலும் எந்த வேலையையோ எந்த நிகழ்ச்சியையோ மேற்கொள்வதனால் உளநிறைவும் மகிழ்ச்சியும் நமக்குக் கிடைக்கும். இதனால் உடல் உறுப்புகளிடையே செந்நீர்(குருதி) சீராகப் பாயும். உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும். இதனால் நாம் உளநலம் மட்டுமல்ல உடல் நலத்தையும் பேண முடியும்.

உள்ளத்தில் நல்ல உள்ளம், பிறர் வாழ வழி விடுவதே!

எல்லோருக்கும் உடல் கட்டமைப்பு பொதுவானதாகவே அமைந்திருக்கும். இதில் ஆணுக்கு வேறு மூளை பெண்ணுக்கு வேறு மூளை என்று இருக்காது. எல்லோருக்கும் சமமான 1.4 kg அல்லது 1400g நிறையுள்ள மூளையே அமைந்திருக்கும்.

எப்படி இருப்பினும் மூளை இயங்கும் தொழில்நுட்பத்தையே உள்ளம் அல்லது மனம் என்கிறோம். நல்ல உள்ளம், கெட்ட உள்ளம் என்ற பாகுபாடு எவரிலும் இருப்பதில்லை. அப்படி இருக்கும்போது ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று எப்படி தலைப்பில் சேர்த்துள்ளீர் என நீங்கள் என் மீது கேள்விக்கணைகளை எறியலாம்.

உளப் பகுப்பாய்வின் முன்னோடி சிக்மன் ஃபிரைடு (Sigmund Freud) அவர்கள் தனது ஆய்வின்படி உணர்வு உள்ளம்(Conscious Mind), முன்னுணர்வு உள்ளம்(Preconscious Mind), உணர்வற்ற உள்ளம்(Unconscious Mind) என மூன்று பிரிவுகளாகக் காண்பித்தார்.

அதன் பின்னர் வந்த அறிஞர்களின் ஆய்வின்படி அதீத உணர்வு உள்ளம்(Superconscious Mind), உணர்வு உள்ளம்(Conscious Mind), துணை உணர்வு உள்ளம்(Subconscious Mind), உணர்வற்றை உள்ளம்(Unconscious Mind) என நான்கு பிரிவுகளாக வெளிப்படுத்தினர்.

இரண்டு உளப்பகுப்பாய்விலும் ஒரு பொதுத்தன்மை காணப்பட்டாலும் இரண்டாம் ஆய்வில் அதீத உணர்வு உள்ளம்(Superconscious Mind) அதாவது சிறப்பு உணர்வு உள்ளம் ஒன்றே வேறுபடுகிறது. அந்த நிலையானது உள்ளத்தை ஒருநிலைப்படுத்திப் பேணுவதாகும். அதாவது ஒரே நோக்கில் சிந்திப்பதாகும். எடுத்துக்காட்டாக இறைவனை எண்ணித் தியானித்தல். சுருக்கமாகக் கூறின் இந்நிலையைத் தியான நிலை என்றும் கூறலாம்.

இரண்டு உளப்பகுப்பாய்விலும் உணர்வு உள்ளம்(Conscious Mind) என்பது தான் சிந்திக்குமிடம். கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்ற புலன் உறுப்புகளில் இருந்து கிடைக்கின்ற செய்தி மூளைக்குச் செல்கிறது என நாம் குறிப்பிட்டாலும் அவை உணர்வு உள்ளத்திலே உள்வாங்கப்படுகிறது. அந்த இடத்திலேயே நாம் சிந்திக்க முனைகின்றோம். கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் மூக்கால் மணப்பதும் நாக்கால் சுவைப்பதும் தோலால் உணர்வதுமாக உள்வாங்கப்பட்டதிலிருந்து அதற்கு வெளியீடாக எமது எண்ணங்கள் உருவாகும் இடம் அல்லது நாம் வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்கள் தோன்றுமிடம் உணர்வு உள்ளத்திலே ஆகும்

இரண்டு உளப்பகுப்பாய்விலும் முன்னுணர்வு உள்ளம்(Preconscious Mind) அல்லது துணை உணர்வு உள்ளம்(Subconscious Mind) என்பது எமது எண்ணங்கள் சேமிக்கப்படும் இடமாகும். நாம் அதிகம் விரும்புவதும் எம்மை அதிகம் பாதித்ததும் ஒரே கவனிப்போடு பயணிக்கும் போது கண்ட காட்சிகளும் நேரடியாகவே இங்கு பதிவு செய்யப்படுகிறது. உணர்வு உள்ளத்தில் அடிக்கடி ஒளிப்படமாகவோ ஒளிஒலி(வீடியோ) காட்சியாகவோ பார்ப்பதும் மீள மீள வாசிப்பதும் மீள மீளச் செய்து பார்ப்பதும் ஊடாக எமது எண்ணங்களை இங்கு பதிவு செய்யலாம். இங்கு பதிவு செய்யப்பட்டவை தக்க சூழலில் தானியங்கியாக எமது சொல்(பேச்சு), செயல், நடத்தை வழி வெளிப்பட்டுவிடும்.

இரண்டு உளப்பகுப்பாய்விலும் உணர்வற்றை உள்ளம்(Unconscious Mind) என்பது உணர்வு உள்ளம்(Conscious Mind) இயங்காத போது தானாக இயங்கும் பகுதியாகும். உண்ட களையின் போது, குட்டித் தூக்கத்தின் போது, சிறிது நேரம் தூங்கி இருந்தால் கூட அதாவது உணர்வு உள்ளம் ஓய்வாக இருக்கும் போது உணர்வற்ற உள்ளம் தானியங்கியாகத் தன் வேலையைக் காட்டி விடும்.

இங்கு குமுகாய(சமூக) ஒழுக்கக் கோட்பாடுகளை மீறிய அதாவது நடைமுறைக்குச் சாத்தியப்படாத எண்ணங்களே தோற்றுவிக்கப்படும். இப்பகுதியைக் குரங்கு மனம் என்றும் சொல்லுவர். எட்டாக் கொப்பெல்லாம் தாவி வரும் குரங்கைப் போல விரும்பத்தகாத எண்ணங்களைத் தோற்றுவிக்கும். இவை இங்கு பதிவு செய்யப்படும். தக்க சூழலில் தானியங்கியாக எமது சொல்(பேச்சு), செயல், நடத்தை வழி வெளிப்பட்டுவிடும்.

இங்கு கெட்ட பதிவுகள் பதியப்பட்டிருப்பின் தானியங்கியாக வெளிப்படுத்தப்படும் போது அக்கெட்ட பதிவுகளால் சூழலில் எமக்குக் கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, முடிந்த அளவு உணர்வற்ற உள்ளச் செயற்பாட்டை உணர்வு உள்ளத்தால் கட்டுப்படுத்தியோ அல்லது அதற்கு ஈடான நல்லெண்ணங்களை வெளிப்படுத்தியோ நற்பெயரை நாம் ஈட்ட முயற்சிக்க வேண்டும்.

உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளின் படி குமுகாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் நல்ல எண்ணங்களைப் பேணுகின்ற உள்ளங்களோ குமுகாயத்துக்கு நல்லெண்ணங்களை வெளிப்படுத்துகின்ற உள்ளங்களோ குமுகாயத்தில் நற்பெயரை ஈட்டிக்கொள்ள முடிகிறது. நல்ல அறிஞர்களின் உயரிய எண்ணங்களைப் பின்பற்றுவதன் ஊடாக, நல்ல புத்தகங்களின் வாசித்த பட்டறிவின் ஊடாக குமுகாயத்துக்கு நல்லவற்றை பகிரும் உள்ளங்களும் நற்பெயரை ஈட்டிக்கொள்ள முடிகிறது.

இதனை எப்படி ஒவ்வொருவரும் நிறைவேற்றிக் கொள்கின்றனர். கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் மூக்கால் மணப்பதும் நாக்கால் சுவைப்பதும் தோலால் உணர்வதும் ஆகிய ஐந்தறிவையும் கடந்து ஆறாம் அறிவாகிய பகுத்தறிவைப் பயன்படுத்துவதன் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடிகின்றது. உள்ளத்தில் எது நல்லது, எது கெட்டது, எது பயன் தரும், எது கேடு விளைவிக்கும் என்றவாறு பகுத்தறிவதே பகுத்தறிவு ஆகும்.

நம்மிடம் உள்ளதை வைத்து அதாவது அறிவு வளம்(Knowledge) திறனாற்றல் வளம்(Skill) உடமைகள் வளம்(Resource) ஆகியவற்றை பாவித்து எமக்குத் தீங்கு விளைவிக்காதவாறு எண்ணுவது நேர் எண்ணமாகும் (Positive Thoughts). இதனால், உளநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. நேர் எண்ணம் எப்பவும் வெற்றியைத் தரும்.

நம்மிடம் உள்ள சில வளங்களை வைத்துக்கொண்டு பிறருடைய வளங்களை அல்லது கடனுக்கு பெற்றாவது எதையாவது அடையலாம் என்று எண்ணுவது எதிர் எண்ணமாகும் (Negative Thoughts). இங்கு பிறரிடம் பெற்றதோ கடனுக்கு பெற்றதோ மீளளிக்க முடியாத போது பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எதிரெண்ணம் எப்பவும் தோல்வியிலேயே முடியும்.

நாம் ஐந்தறிவும் ஆறாம் அறிவும் என்னவென்று கற்றுள்ளோம். எமது மூளை இயங்கும் தொழில்நுட்பமே உள்ளம் என்றும் கற்றுள்ளோம். சிக்மன் ஃபிரைடு (Sigmund Freud) காலத்து ஆய்வில் உள்ளத்தின் மூன்று நிலைகளையும் பிந்திய அறிஞர்களின் ஆய்வில் உள்ளத்தின் நான்கு நிலைகளையும் கற்றுள்ளோம். ஈற்றில் நேர் எண்ணங்களையும் எதிர் எண்ணங்களையும் கற்றுள்ளோம். இதன்படிக்கு வாழ்; வாழ விடு!(Live and Let Live) என்ற கோட்பாட்டின்படி நாமும் வாழ்ந்து மாற்றார் மகிழ்வோடு வாழ வழிவிடுவதுமாக வாழ்வதே நல்ல உள்ளங்களின் நடத்தையாகும். எனவே, உள்ளத்தில் நல்ல உள்ளம் என்பது தாமும் வாழ்ந்து பிறரும் வாழ வழி விடும் உளப்பாங்கு (Mind Set) பேணுதலாகும்.

கைக்கெட்டியதைக் கையாண்டு மகிழ்ச்சியாக வாழலாமே!

எல்லோரும் எல்லாமும் கற்பித்து தருவார்கள்; வாழ்க்கை என்றால் என்னவென்று கற்பித்துத்தர முடியாமல் தான் எல்லோரும் உள்ளனர். ‘பிறப்பும் இறப்பும் இறைவனின் கையில் இருக்கையில் வாழ்க்கை மட்டும் எங்கள் கையில் இருக்கு’ என்று எல்லோரும் பொதுவாக சொல்லுவர். அது தான் உண்மை என்றுணர்வோம்.

‘அன்பாலே அரவணைத்து போவதும் விட்டுக் கொடுப்பதும் ஏற்றுக் கொள்வதும் நன்நடத்தைகளாகப் பேணினால் மகிழ்ச்சியாக வாழலாம். நல்ல உறவுகளும் எமக்குப் பக்கபலமாக இருக்கச் சிறப்பாக வாழ முடியுமே!’ என்றும் எனக்கு பலர் வழிகாட்டி உள்ளனர். அதனையே தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

எமது உள்ளத்தில் நாம் எண்ணிக்கொள்வது போல (கற்பனை செய்வது போல) மாற்றாரும் தமது உள்ளத்தில் எண்ணிக் கொள்வர் (கற்பனை செய்பவர்) என்று நாம் படிக்க வேண்டும். மாற்றார் தாம் மகிழ்ச்சியாக வாழச் சிந்தித்து வாழ்வது போல நாமும் மகிழ்ச்சியாக வாழச் சிந்திக்கலாமே!

‘வாழ்க்கை என்பது எமக்கு மட்டும் சுமையாக இருக்கிறது; மாற்றாருக்கு இலகுவாக இருக்கிறது’ என்று மதிப்பிடுவதை விட; மாற்றாரும் எம்மைப் போன்றவரே, அப்படியாயின் நாமும் மாற்றாரைப் போல மகிழ்ச்சியாக வாழலாமே என்று தங்களைத் தாம் மதிப்பீடு செய்யலாமே!

கையில இருப்பதைக் கையாள முயற்சி எடுக்காமல், மகிழ்வான வாழ்க்கையைச் சுவைக்க என்னென்ன தேவை என்று அவற்றை அடைவதற்கான பயிற்சி எடுத்தும் என்ன பயன்? ‘இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை’ என்று மேயும் மாடுகளை போல மனிதரும் வாழ்க்கையைச் சுவைக்கத் தேவையானதைத் தேடித் தேடி வாழ வேண்டிய நேரத்தை கரைத்துக் கொண்டு இருக்கலாமோ?

நேரம் காட்டி முள்ளு ஓடிக்கொண்டு தான் இருக்கும். அதனைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரமும் ஓடிக்கொண்டிருப்பது தெரியவரும்.

வாழத் தேவையென, மகிழ்வான வாழ்வைச் சுவைக்கவெனக் கைக்கெட்டியதை விட்டிட்டு கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பதை அடைய முயற்சி செய்வது; வாழ வேண்டிய நேரத்தில் வாழ வேண்டிய வாழ்க்கையைத் தொலைத்து விட்டதாகத் தான் முடியும்.

‘கைகெட்டியதைக் கையாளு! கண்ணுக்கு எட்டாததை விட்டுட்டு கைகெட்டியதைக் கையாளு!’ என்று முழங்கிறியே ‘மகிழ்ச்சியான வாழ்க்கை கைக்கெட்டினால் சுவைக்காமல் விட்டிடுவோமா? மகிழ்வான வாழ்க்கை அமையாமல் தான் அதனைச் சுவைக்கத் தேடுகிறோம்’ என்று நீங்கள் முழங்கலாம்.

‘அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் தான் இருக்கிறது என்றால் கைக்கெட்டியதைக் கையாளும் தூரத்தில் தான் இருக்க முடியும்; கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருக்க முடியுமா?’ என்று எள்ளு அளவேனும் எண்ணிப் பார்த்தீர்களா?

ஒவ்வொருவரும் தமது பெற்றோரைப் பார்ப்பதாக; மனைவி, பிள்ளைகளைப் பார்ப்பதாக கூறிக்கொண்டு அவர்களுடன் கூடியிருந்து சாப்பிடக் கூட நேரமின்றி மகிழ்வான வாழ்க்கைக்கு தேவையானதைத் தேடிக்கொண்டு இருப்பதாகத் தெருவெங்கும் உலாவி என்ன பயன்? எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா?

வாழ்க்கைக்கு பணம் தேவை தான். வாழ்க்கையைச் சுவைக்க அல்லது மகிழ்வான வாழ்க்கையை அமைக்க, வீட்டிற்குத் தேவையானதை வேண்டத் தேடித் திரிவதில் தப்பில்லை தான்.

அதற்காகப் பெற்றோருடன் அதிக நேரம் கூடியிருந்து பேசிப் பறைஞ்சு உண்டு களித்து வாழ முடியாது போனால், எப்படி மகிழ்வான வாழ்வு அமையும் என்று சிறிதளவேனும் பிள்ளைகள் தான் எண்ணிப் பார்த்ததுண்டா?

துணைவருடன் பேசிப் பறைஞ்சு கூடித் திரிவதும் துணைவருடன் கூடியிருந்து பேசிப் பறைஞ்சு உண்டு களிப்பதும் இல்லாமல், உழைக்கப் போய்ப் பணம் தேடிச் சேமித்து என்ன பயன்? எந்தக் கணவரோ எந்த மனைவியோ எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று எண்ணிப் பார்த்தீர்களா?

கணவன், மனைவி கூடி வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றால் போதுமா? அவர்களை அள்ளி அணைத்துக் கொஞ்சிக் கைக்குள் அணைத்து வளர்க்க நேரம் ஒதுக்கினீர்களா? பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தால் அவர்களுக்கு அறிவூட்டிப் படித்த அறிஞர்கள் ஆக்க, தொழிலில் உயர்ந்த நிலைக்கு உயரப் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவு செய்தீர்களா?

‘தங்கள் பிள்ளைகளுடன் தாங்களும் சேர்ந்து படித்துக் காட்டினால், பிள்ளைகள் படிப்பதில் அதிக நாட்டம் கொள்வார்கள்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.’ என்று எண்ணிப் பார்த்தீர்களா?

மாதத்தில் இரண்டு தடவையேனும் கணவன், மனைவி கூடி வாழ்ந்து மகிழ்ந்தால் குறைந்தா போய்விடுவீர்கள்? கிடைத்த கணவரோ கிடைத்த மனைவியோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றாவது கூடி வாழ்ந்து மகிழ்ந்தீர்களா?

‘மூன்றுவேளை பெற்றோருடன், துணையுடன், பிள்ளைகளுடன் கூடியிருந்து பேசிப் பறைஞ்சு உண்டு களிக்க முடியாவிட்டாலும் குறைந்தது ஒரு வேளையாவது கூடியிருந்து பேசிப் பறைஞ்சு உண்டு களிக்க முடியாதா?’ என்றெண்ணிப் பாருங்கள் உறவுகளே!

மகிழ்வான வாழ்க்கை தேவையென, அதற்குத் தேவையானதைத் தேடி வரப் போய் வந்து மகிழ்வான வாழ்க்கையைச் சுவைக்க முடியுமா? என்று எள்ளளவேனும் எண்ணிப் பாருங்கள் உறவுகளே!

அப்படி வாழ வேண்டும், இப்படி வாழ வேண்டும், மற்றவரை விடக் கொஞ்சம் சிறப்பாக வாழ வேண்டும் என மகிழ்ச்சியான வாழ்வைச் சுவைக்கத் தேவையான எதனையும் வேண்டி வரத் தேடி அலைய நேரம் ஒதுக்கும் உறவுகளே! பெற்றோர், துணைவர், பிள்ளைகள் என வீட்டில் உள்ளவர்களுடன் கூடியிருந்து பேசிப் பறைஞ்சு உண்டு கழிக்க நேரம் ஒதுக்கினீர்களா?

தெருக்கடையில தாங்கள் விரும்பிய உணவைக் கண்டதும் ‘நா’ ஊறுதே என்று வேண்டி உண்டு கழிப்பதற்குப் பெயர் ‘கைக்கெட்டியதைக் கையாளு!’ என்கிறீர்களே, கைக்கெட்டிய துணையோடு கூடி வாழ்வது மகிழ்ச்சி இல்லையா? இருபத்திநான்கு மணி நேரத்தில் அதிக நேரம் பெற்றோர், துணைவர், பிள்ளைகள் எனக் கூடியிருந்து பேசிப் பறைஞ்சு உண்டு களித்து வாழ்வது மகிழ்ச்சி இல்லையா?

அப்படி, இப்படி வாழவும் மாற்றாரை விடச் சிறப்பாக வாழவும் எண்ணிக் கொண்டு அலைவதை விட்டிட்டு இருப்பதைக் கொண்டு அதாவது கைக்கெட்டியதைக் கையாண்டு வாழ்க்கையைச் சுவைக்க முயன்றீர்களா? வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது வீட்டில் இருந்து உறவுகளுடன் கூடியிருந்து பேசிப் பறைஞ்சு உண்டு களிப்பதில் இல்லையா?

அப்படி வாழ வேண்டும், இப்படி வாழ வேண்டும், மற்றவரை விடக் கொஞ்சம் சிறப்பாக வாழ வேண்டுமென்று எண்ணிக்கொண்டு எமக்குக் கிடைத்த மகிழ்ச்சியான வாழ்வைச் சுவைக்காமலே காலம் கடத்துகிறோம் என்பதை எப்ப உணரப்போகிறோம்.

அதனை இன்றே, இப்பவே உணர்ந்து கைக்கெட்டியதைக் கையாண்டு மகிழ்ச்சியாக வாழலாமே! நேரம் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும். நாம் கிடைத்த நேரத்தில் நமது வீட்டில் இருப்பதை அல்லது நம் கைக்கெட்டியதைக் கையாண்டு வீட்டில் உள்ளவர்களுடன் ஒன்றாய்க் கூடியிருந்து பேசிப் பறைஞ்சு உண்டு களித்துச் சுவைப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகும்

தன்நிறைவு காண முயன்றால் மகிழ்ச்சி தானாகவே வரும்.

‘உங்கள் வாழ்க்கை எப்படிப் போகுது?’ என்று ஒருவரிடம் கேட்டால் ‘சும்மா போகுது’ என்றார். அதிலிருந்து நாம் ‘வாழ்வில் மகிழ்ச்சி இல்லை போல…’ என்று ஊகித்துக் கொள்ள முடியும்.

‘உங்கள் வாழ்க்கை எப்படிப் போகுது?’ என்று வேறு ஒருவரிடம் கேட்டால் ‘கையில நாலு காசு இல்லை. காசு தேடி உழைப்புக்கு அலைகிறேன்.’ என்றார். அதிலிருந்து நாம் ‘சேமிப்புப் பழக்கம் இல்லைப் போல…’ என்று ஊகித்துக் கொள்ள முடியும்.

‘உங்கள் வாழ்க்கை எப்படிப் போகுது?’ என்று இன்னொருவரிடம் கேட்டால் ‘மனைவி கேட்டதெல்லாம் வேண்டிக் கொடுக்காமையால் பிரிந்து போயிட்டாள்.’ என்றழுதார். அதிலிருந்து நாம் ‘வருவாய் குறைவாய் இருக்கும் போல…’ என்று ஊகித்துக் கொள்ள முடியும்.

‘உங்கள் வாழ்க்கை எப்படிப் போகுது?’ என்று இன்னொருவரிடம் கேட்டால் ‘உழைக்கப் போகாத கணவனோடு பிழைக்க முடியாதெனக் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன்.’ என்றழுதார். அதிலிருந்து நாம் ‘குடும்பத் தலைவர் (கணவர்) உழைக்கப் போகாட்டி, எப்படி வாழ்க்கை நடத்துவது?’ என்று ஊகித்துக் கொள்ள முடியும்.

‘வீட்டுக்கு வீடு வாசற் படி’ என்றவாறு ஒவ்வொரு வீட்டிலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்மைக்கு ஒவ்வொரு சிக்கல் (பிரச்சினை) இருப்பதை ஒவ்வொருவராலும் உணர முடியும்.

உண்மையில் ‘வீட்டுக்கு வீடு வாசற் படி போல…’ ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படும் சிக்கலுக்குக் (பிரச்சனைக்கு) காரணம் ‘உழைப்பின்மை அதாவது பணம் இன்மை, சேமிப்பின்மை, வேண்டாத செலவுகள்’ எனப் பல இருக்கலாம். இதற்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு.

‘வீட்டுக்கு வீடு வாசற் படி போல…’ ஒவ்வொரு வீட்டுக் குடும்பத்தாரும் தன்நிறைவு அடைய வேண்டும். முதலில் ‘தன்னில் நிறைவு காணுங்கள்’. அடுத்துத் ‘தமக்குத் தேவையானதில் நிறைவு காணுங்கள்’. அடுத்துக் ‘குடும்பத்துக்கும் வீட்டிற்கும் வேண்டியதில் நிறைவு காணுங்கள்’. அதற்கடுத்தே தன்நிறைவு அடைந்ததாகக் கருத முடியும்.

ஒவ்வொருவருக்கும் விருப்பங்கள் (ஆசைகள்), பெரும் விருப்பங்கள் (பேராசைகள்), கனவுகள் (அடிக்கடி நினைவில் வருவன…), கற்பனைகள் (எதிர்பார்ப்புகள்), தேவைகள் (தனக்கு வேண்டியன), இலக்குகள் (குறிக்கோள்கள்) என உள்ளத்தில் உருண்டு கொண்டே இருக்கும்.

அதில் குறைந்த அளவேனும் கிடைக்கப் படாத பாடுபட்டு முயற்சி செய்கிறோம். அந்தந்த முயற்சிகள் வெற்றியடையும் வரை நாம் உழைக்கின்றோம் ‘எதனை எப்படி அணுகினால், அதனை அப்படியே அள்ள முடியும்’ என்று திட்டமிட்டு செயலாற்றினால் தான் தன்னில் நிறைவு காண வாய்ப்பு இருக்கும்.

தன்னில் நிறைவு கண்டால் தானே, தமது இணையர் மற்றும் பிள்ளைகள் நலன் கவனித்துத் தமக்கு வேண்டியதில் நிறைவு காண முயற்சி எடுக்கலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தன்னில் நிறைவு கண்டால் போதாது; இணையர் மற்றும் பிள்ளைகள் நலன் கவனித்து எல்லோருக்குமான தேவைகளை நிறைவு செய்ய முயற்சி எடுக்க வேண்டும். தமக்கான அனைத்திலும் நிறைவு காண்பது எப்படியெனத் திட்டமிட்டுச் செயலாற்றினால் தான் தமக்கானதில் நிறைவு காண வாய்ப்புக் கிட்டும்.

தமக்கானதில் நிறைவு காண முயன்று வெற்றி காண்பதிலேயே குடும்பம், வீடு என எண்ணங்கள் விரியும். குடும்ப நிறைவு, வீட்டு நிறைவு ‘எவை எவை என்று எண்ணிக் கொண்டு, அவை அவை எப்படி கிடைக்கும்’ என அதற்கான திட்டமிடல் என்னவென்று வரைந்து செயலாற்றினாலே தாங்கள் நிறைவடைய வாய்ப்புக் கிட்டும்.

தான், தான் சார்ந்தவர்கள், குடும்பம், வீடு என வேண்டிய யாவிலும் நிறைவு காண்பதிலேயே தன்நிறைவு கிடைக்கிறது. தன்நிறைவு கிட்டும் போது தான் மகிழ்வான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசற் படி போல…’ ஒவ்வொரு வீட்டிலும் தான், தான் சார்ந்தவர்கள், குடும்பம், வீடு என எல்லோரும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் மகிழ்வான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தன்நிறைவு கிடைக்க வேண்டுமெனப் பயிற்சி, முயற்சி எடுத்து உழையுங்கள். அதுவே நோயின்றி நீடூழி வாழவும் வழிவிடும்.