Monthly Archives: ஜூலை 2014

வெற்றி பெறப் படிப்போம் வாங்க…

வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) என்பது முடிவுகளைச் சொல்வதோ அல்லது திணிப்பதோ அல்ல. குறித்த ஆள் தாமாகவே முடிவுகளை எடுக்கக்கூடிய ஆற்றலை ஏற்படுத்துவதே என்பேன். அதற்கு உளநலப் பேணுகை உதவுகிறது.

“இந்தச் சூழலில் இப்படி நடந்தால் வெற்றி தான்” என நாளுக்கு நாள் எண்ணமிடுங்கள். அவை ஆழ்உள்ளம் (ஆழ்மனம்/ Sub Conscious Mind) இல் சேமித்து வைக்கப்படும். தக்க சூழலில் தக்கவாறு நடக்க ஆழ்உள்ளம் (ஆழ்மனம்/ Sub Conscious Mind) என்பது சேமித்த தகவல்களை நாடி, நரம்பு வழியே புலனுறுப்பு வழியே வெளிப்படுத்த உதவுகிறது. இதனால் எமக்கு வெற்றிகள் குவியும்.

ஆயினும், ஒழுங்கு முறையில் திட்டமிடவும்; கட்டுப்பாட்டோடு செயற்படவும் நாளுக்கு நாள் எண்ணமிட்டுப் பழகுங்கள். அதாவது, வெற்றியடைவதற்கான அமைப்பை (System) திரைப்படம் போல உள்ளத்தில் (மனத்தில்) வந்து போகும் காட்சிகளாக எண்ணமிட்டுப் பழகுங்கள். அப்படி எண்ணமிட்டுப் பழக அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் “என்றும் துணை எது…?” என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். அதற்கான இணைப்பு கீழே தரப்படுகிறது.

http://dindiguldhanabalan.blogspot.com/2014/07/Control-Yourself.html

இது திண்டுக்கல் தனபாலன் தளம் அறிமுகமல்ல, அது பிறிதொரு வலைப்பூவில் இடம்பெறும்.

ஆறுவது சினம் – ஔவையார் சொன்னது

ஆத்திச்சூடியில் ஔவையார் “ஆறுவது சினம்” என்று எமக்கு வழிகாட்டினார். அதாவது பொறாமை, துவேஷம், காதல், காமம் என்பன ஆறாவிட்டாலும் கோபம்/சினம் ஆறும் என்று கருதலாம். ஆறவைப்பது நாமாகத்தான் இருக்க முடியும்.

யார் மீதாவது கோபம் வந்தால், முதலில் அந்த இடத்தை விட்டு அகன்றால் கோபம் தணியும்/ஆறும். கோபமாய் இருக்கும் போது பேசாதீர்கள்; சண்டை போடாதீர்கள்; அமைதியாய் இருங்கள். ஏனென்றால்… “ஆறுவது சினம்” என்று ஔவையார் சொன்னது.

கோபம் வரும் வேளை, மூளைக்குச் செந்நீர்/குருதி செல்வது குறையும். அதனால், முடிவு எடுப்பதில் குழப்பம் வரலாம். அதாவது, சரியான முடிவு எடுக்க முடிவதில்லை. எடுத்த வீச்சில வெட்டுக் கொத்தில முடியலாம். எனவே, கோபம் தணியும்/ஆறும் வரை ஒதுங்கி இருப்பதே நலம்.

“சாமானியனின் கிறுக்கல்கள்!” என்ற தளத்தில் “ரெளத்திரம் பழகு!” என்ற பதிவைப் படித்தேன். அப்பதிவு கோபம் தணிய/ஆற என்ன செய்யலாமென வழிகாட்டுகிறது. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பயனுள்ள அப்பதிவைப் படியுங்கள்.

ரெளத்திரம் பழகு!
http://saamaaniyan.blogspot.com/2014/07/blog-post_22.html

அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?

நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
கல்லும் முள்ளும்
மேடும் பள்ளமும்
இருந்திருக்கும்…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை தடவை
விழுந்திருப்பாய்
எழுந்திருப்பாய்
விழுந்தும் எழும்ப முடியாமல்
இருந்தும் இருப்பாய்…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
படித்திருப்பாய்
பட்டறிந்திருப்பாய்
கண்டுபிடித்திருப்பாய்
அத்தனையும் நினைவில் உருளுமே…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
அறிந்திருந்தாய்
நீ மீட்டுப் பார்த்திருந்தால்
அத்தனை அத்தனை
அறிவும்
உனக்கு வழிகாட்டும் போது
அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?

ஓடு எயிட்ஸே ஓடு

என்னங்க
மார்கழி ஒன்று வந்தால்
“எயிட்ஸ்” என்று
உலகெங்கும் நினைவூட்டுறாங்களே…
எதுக்குத் தெரியுமா?
“ஓடு எயிட்ஸே ஓடு” என்று
எயிட்ஸை விரட்டவாம்!
எந்தக் கடவுள் வந்தும்
“ஓடு எயிட்ஸே ஓடு” என்று
விரட்டினால் கூட
ஒழிக்க முடியாத எயிட்ஸை
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
ஒழுங்கில் வாழ்ந்தால் மட்டுமே
எயிட்ஸை நெருங்க விடாமல்
தடுக்கலாம் பாருங்கோ…
நெருங்காத எயிட்ஸை
விரட்டத் தேவை இல்லையே!
ஊசி மருந்து ஏற்றல்,
குருதி வழங்கல்,
இன்னும் பல வழிகளில்
தொற்றுக்களாய்
உடலுக்குள் ஊடுருவ முன்னரே
முற்காப்பு வழிகளை அறிந்தால்
எயிட்ஸை நெருங்க விடாமல்
பேணலாம் பாருங்கோ…
“ஓடு எயிட்ஸே ஓடு” என்று
விரட்டினால் கூட
ஒழிக்கமுடியாத எயிட்ஸை
நாங்கள் தான்
முற்காப்புடனும் ஒழுக்கத்துடனும்
எயிட்ஸை நெருங்க விடாமல்
வாழ வேண்டுமே…
நெருங்காத எயிட்ஸை
விரட்டத் தேவை இல்லையே!

 

நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக…

நம் வீட்டில மட்டுமல்ல, நம்ம நாட்டில மட்டுமல்ல, உலகில் எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு வீடு நுழைவாயில் தான். ‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்பது வெறும் பேச்சுத்தான். வீட்டுக்கு வீடு சென்று பார்த்தால் தான் தெரியும், ‘குடும்பம் ஒரு குழப்பக் கழகம்’ என்று… குழப்பக் கழகத்தைப் பல்கலைக் கழகமாக்க பின்வரும் வழிகளை கையாண்டு பார்க்கவும்.

1-ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்றல்.
2-ஒருவர் சொல்லை ஒருவர் கேட்டல்.
3-ஒருவர் செயலுக்கு ஒருவர் உதவணும்.
4-ஒருவர் கருத்தை ஒருவர் பொருட்படுத்தணும்.
5-குடும்பம் என்ற வட்டத்திற்கு உள்ளேயே இருக்கணும்.
6-அண்டை அயலை அணைக்க வேண்டும்.
7-நேற்றைய வழிகாட்டலை மீறாமல் இன்றே நிறைவாய் வாழ்தல்.
8-நாளை என்ற நாளை உள்ளத்தில் இருத்தி நாளைக்கு வாழத் தேவையானதை சேமிக்கணும்.
9-சுகம் காண வேண்டிய இன்றைய வாழ்வை, நாளைக்கு வாழலாம் என்று தள்ளிப் போடாதே!
10-எதற்கும் “நேரமில்லை” என்று பதில் கூறாமல், 24 மணி நேரத்தையும் திட்டமிட்டுப் பாவிக்கணும்.

இந்தப் பத்தை விட, இன்னும் பல எழுதலாம். இந்தப் பத்தையும் உங்கள் சொத்தாக நினைத்துப் பேணினால் கூட, குடும்பம் ஒரு குழப்பக் கழகம் ஆகாமல் பல்கலைக் கழகமாகப் பேண முடியுமே! வாழ்க்கை என்பது நல்ல குடும்பத்தில் தான் அமைகிறது. நல்ல குடும்பம் அமைய மேற்காணும் பத்தும் உங்களுக்கு வழிகாட்டுமே

நல்ல நேரம் பார்த்துப் புகைக்கலாமா?

“எந்த நேரத்தில் புகைக்கலாம்” என்றொரு ஆய்வுப் பதிவைப் படித்தேன். தலைப்பைக் கண்டதும் புகைக்க நல்ல நேரம் இருக்கென நம்பினேன். தொடர்ந்து படித்த போது தான் தெரிந்தது; புகைத்தலால் வரும் விளைவை ஆய்வு செய்திருக்கிறார்கள் என்றறிந்தேன். முடிவில் நல்ல நேரம் பார்த்தாவது புகைக்க வேண்டாமென மருத்துவர் எச்சரிக்கை செய்திருப்பதைக் கண்டேன். இப்பதிவு பலருக்கு நன்மை தருமென இங்கே தங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.

எந்த நேரத்தில் புகைக்கலாம்.
via
எந்த நேரத்தில் புகைக்கலாம்.

செலவு செய்வதென்றால் சும்மாவா?

ஏழைக்கு அச்சம் இல்லை
செலவு செய்யப் பணம் இருந்தும்
நாளைக்கும் கொஞ்சம் வைப்பான்
முடிந்தால் அயலுக்கும் உதவுவான்
நோயின்றி வாழ்வான்…
பணக்காரனுக்கு அச்சம் இருக்கும்
செலவு செய்யப் பணம் இருந்தும்
நாளைக்கும் நிறைய வைப்பான்
முடிந்தாலும் அயலுக்கு உதவான்
நோயோடு வாழ்வான்…
இது தான்
ஏழைக்கும் பணக்காரனுக்கும்
இடைப்பட்ட வேறுபாடு…
ஏழை வாழ்க்கையைச் சிந்திக்கிறான்
பணக்காரன் தேட்டத்தைச் சிந்திக்கிறான்
ஏழைக்கும் பணக்காரனுக்கும்
“பிறரைப் போல நாமும்” என்ற
எண்ணம் வந்ததே கிடையாது!
அப்படியென்றால் பாரும்
“பிறரைப் போல நாமும்” என்ற
எண்ணம் யாருக்குத் தான் தோன்றும்?
“தனக்குப் பின் தானம்” என்பதை
ஏற்றுப் பிறருக்குக் கொடுத்து உதவும்
உள்ளங்களுக்கு வரலாம் – அவர்களுக்கு
எனது
உளநல வழிகாட்டலும் மதியுரையும்
தேவைப்படாது என்பேன்!
இஞ்சாருங்கோ
இன்னொரு குழு இருக்கங்கோ
“பிறரைப் போல நாமும்” என்ற
எடுப்பு எடுக்கிற ஆள்கள் பாரும்…
தன் வயிறு பட்டினி என்றாலும்
எதிரார் எடுப்புக்கு நிகர் தாமென
உடுத்திப் படுத்தி எடுப்பாய் நிற்பினம்
அவர்களுக்கு – எனது
உளநல வழிகாட்டலும் மதியுரையும்
தேவைப்படாலம் என்பேன்!
ஆனாலும்,
உளவியல் வழிகாட்டலை விட
மெய்யியல் வழிகாட்டல்
அவர்களுக்கு உதவும் என்பதால்
கோட்பாட்டுப் (தத்துவப்) பாடல் தந்து
நல்வழிகாட்டும் அறிஞர்
திண்டுக்கல் தனபாலன் அவர்களின்
“எது நாகரீகம்…?” என்ற பதிவை
தங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்!
எடுத்துக்காட்டுக்காக
காந்தியையும் தென்கச்சியாரையும்
உதவிக்கு இழுத்து இருக்கின்றார்!
படித்தேன்… சுவைத்தேன்…
எதிரார் எடுப்புக்கு நிகர் தாமென
உடுத்திப் படுத்தி எடுப்பாய் நிற்கிற
ஆள்களுக்கு உரிய
மெய்யியல் வழிகாட்டல் இதுவென
நானுரைத்தாலும் கூட
எல்லோருக்கும் சிறந்த
பட்டறிவு (அனுபவம்) நிறைந்த
வழிகாட்டல் பதிவு இதுவென்பதாலே
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்!
http://dindiguldhanabalan.blogspot.com//2014/07/Civilisation.html

 

உள்ளத்தைப் பேணுவோம்

பழசு எல்லாம்
மீட்டுப் பார்க்காத வரை
நினைவில் உருளாது
ஆனால்
மூளையில் பதியப்பட்டது
அழிவதும் இல்லையே!
பழசை நினைத்தால்
உளநோய் வருமாயின்
பழசுகளை நினைவூட்டாத இடத்தை
நாடுவதே நலம்!
புதிதாகத் தொடங்கும் எதற்கும்
உளநோய் வரமாட்டாதெனின்
பழசுகளை நினைவூட்டினால்
கற்றுக் கொண்ட பாடங்கள்
வழிகாட்டுமே!
பழசுகளைக் கிளறினால்
சிலருக்கு உளநோய்
சிலருக்கு வழிகாட்டல்
இதெல்லாம்
தமக்கு ஏற்பட்ட
பாதிப்பின் வேறுபாடே!
பழசுகளை நினைவூட்டாத இடத்தை
நாடமுடியாதோர்
பழசை நினைத்தால் வரும்
உளநோயைக் கட்டுப்படுத்த முடியாதோ?
பழசுகளை
மீட்டுப் பார்த்தாலும் கூட
உளநோய் வராமல் வாழ
உளப் பாதிப்பைத் தரும்
எதனையும் பொருட்படுத்தாதே!
பிறர் உள்ளத்தைத் தாக்காமல்
இருந்தால் தானே
பிறரால் நம்முள்ளம்
தாக்குதலுக்கு உள்ளாகாமலே இருக்க
நாம்
நலமாக வாழ முடிகிறதே!
உள்ளத்தைப் பேணுவோம் என்பது
நம்முடையதை மட்டுமல்ல
பிறருடைய உள்ளத்தையும்
புண் படாமல் பேணவும் வேண்டுமே!

 

குடியை அடியோடு மறப்பாங்களா?

உறவுகளே! “மனிதா சாவைக் கூப்பிடலாமா? http://wp.me/p3oy0k-44 ” என்ற என் பதிவை முதலில் படியுங்கள். குடிப்பதே கேடு… அதுவும் கழிவறைகளின் உள்ளே குடிப்பதே மிகக் கேடு… என்பதைச் சுட்டியிருந்தேன்.

நம்மாளுகளின் குடியாலே தாமழிந்து, தம் குடும்பம் அழிந்து, ஈற்றில் எங்கள் இனம் அழியத் தான் முடியும். இதனைக் கருத்திற் கொண்டு குடிகாரங்களை நல்வழிக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு சூழலில் உள்ளோருக்கும் இருக்கு. முடிந்தால் முயன்று பாருங்கள்!

“குடியை அடியோடு மறப்போம்” என எதையும் நான் சொல்ல முன்வரவில்லை. ஆயினும், குடிப்போரின் உறவுகள் குடிகாரரைக் குடிக்காத வேளை பார்த்து குடியின் விளைவுகளை எடுத்துக்கூறலாம். குடியின் விளைவுகளைப் பற்றி “ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!! http://tamil4health.blogspot.com/2014/07/drinking-alcohol.html ” என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளார்கள். அதனைச் சற்றுக் கற்றுத் தேர்ந்தால் நீங்களும் வழிகாட்டலாம்.

உறவுகளே! “குடியை அடியோடு மறப்போம்” என ஒரு போதும் குடிகாரங்க சொல்லமாட்டாங்க. சூழவுள்ளோரின் வழிகாட்டலும் கண்காணிப்பும் குடிகாரங்க உள்ளத்தில நல்ல மாற்றங்களை ஏற்படுத்துமாயின், அதுவே இன்றைய தேவை. என்றாலும் குடிகாரங்க உள்ளம் மாறாதுங்க…

சுட்டால் தானே தெரிகிறது
பட்டது நெருப்பு என்று
பட்டால் தானே தெரியும்
சுட்டது குடிச்சது என்று
“குடிகாரங்க நிலை!”

உளவியல் நோக்கில் பட்டுத் தெளிய வைக்கும் அணுகுமுறை உண்டு. ஆயினும், முதலில் மருத்துவரை அணுகி மதியுரை பெறுங்கள். பின் உளநல மதியுரைஞரை நாடலாம். அதற்கு முன் கீழுள்ள இணைப்பைப் படிக்க மறந்து விடாதீர்கள்.

http://tamil4health.blogspot.com/2014/07/drinking-alcohol.html

சேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்?

இனிய குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது சேமிப்பில் உள்ள இருப்பில் (பணம், பொன், பொருள்) தான் தங்கியுள்ளது. அப்படியாயின் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்?

இல்லத் தலைவன் (கணவன்)
இல்லத் தலைவி (மனைவி)
இருவரும் இணைந்து

ஒரு கேள்விக்கு மூன்று விடைகள் வந்ததேன்? அப்படியாயின் மூன்று விடைகளும் சரியானவையே! ஆயினும், குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது இல்லத் தலைவனிலோ இல்லத் தலைவியிலோ தங்கியிருக்க முடியாது. எனவே, மூன்றாவது விடையே சரியானது எனலாம்.

இளமை
பூத்துக் குலுங்கும் அகவையிலே
பாலியல் உணர்வலைகள்
மோதிக்கொள்ளும் வேளையிலே
நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை)
தாமாக ஓடிப் போய்க் கூடியோ
தாமாகக் கூடிப் பின் ஓடியோ
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
சேமிப்புப் பற்றிச் சிந்திக்காமையால்
சீரழிந்து போகின்றனரே!

என்றொரு எண்ணம் என்னில் மோத மேற்படி வரிகளை எழுதினேன். நொடிப் பொழுதுப் பாலியல் சுகம் குடும்பத்தின் மகிழ்ச்சி அல்ல. ஆண்டுக்கு 24×365 மணி நேரச் சுகமான வாழ்வே குடும்ப மகிழ்ச்சி எனலாம். ஓராண்டுக்கான 24×365 மணி நேரச் சுகமான வாழ்விற்கு வேண்டிய பொருண்மிய நிலை (வருவாய் அல்லது சேமிப்பு) தேவை என்பதை நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை) படித்திருந்தால் சீரழியத் தேவையில்லை.

எனவே, முதல்ல படிப்பு அடுத்து நல்ல உழைப்பு அடுத்துப் போதிய சேமிப்பு, அடுத்துக் காதல் அல்லது திருமணம் அடுத்துப் பாலியல் தேர்வு, பிள்ளை குட்டிகள் அடுத்துக் குழந்தை வளர்ப்பு என நீளும் குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது பொருண்மிய நிலை (வருவாய் அல்லது சேமிப்பு) என்பதை நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை) படித்திருக்க வேண்டுமென மதியுரை கூறும் பெரியோர்கள் தங்கள் குடும்ப நிலையை இவ்வாறு பேணுகிறார்களா? அவர்களும் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டுமே! முதுமை நெருங்கினால் தொழிலின்றி வருவாயின்றி இருக்கையில் கைகொடுப்பது சேமிப்பு மட்டுமே!