Monthly Archives: ஜனவரி 2014

வாழ்க்கைக் கணக்கு

பிறந்தவன் இறப்பது வழமை…
உருவான பொருள்களும்
ஒரு நாள் அழிவது இயல்பு…
உழைத்தால் ஈட்டலாம் வருவாய்…
சோர்வாய்க் கிடந்தால்
இருப்பதெல்லாம் விற்று முடிய
பிச்சை எடுக்கலாம் போங்கள்…
இது தான்
பாட்டி சொல்லும் உள்ளக் கணக்கு!
இழப்புகளையும் சோர்வுகளையும்
செலவில் பதிவு செய்தும்
வருவாயும் தேட்டமும்
வரவில் பதிவு செய்தும்
வரவளவு செலவைக் கணித்து
வாழ்ந்தாலும் கூட
உடல் வலுவற்ற வேளை
பயனீட்டச் சேமிப்பிலும் வைத்து
வாழ்வதே வாழ்க்கைக் கணக்கு!
உள்ளக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும்
முறையாக் கற்று வாழ்பவரே
எல்லாவற்றிலும் வெற்றியீட்டுவர்!

வலைத்தள மதியுரைஞர்களைக் (Counsellor) கேட்பது சரியா?

நாளேடுகள், ஏழலேடுகள், மாதவேடுகள், வலைப் பூக்கள், வலைப் பக்கங்கள் என எதனூடாகவும் (கேள்வி – பதில் பகுதியூடாக) உளநல மதியுரை (Psychological Counselling) கேட்பது சரியா?

உளவியல், பாலியல் ஐயங்களைப் போக்கிக் கொள்ளவே நாளேடுகள், ஏழலேடுகள், மாதவேடுகள் எல்லாவற்றிலும் கேள்வி – பதில் பகுதி அமைத்திருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. போலிப் பெயர், போலி முகவரி வழங்கிக் கேட்கப்படும் கேள்விகளைக் கண்ணுற்றதும் இப்படித்தான் எண்ணத் தோன்றும். தங்கள் தங்கள் குறைகளைப் போக்கிக் கொள்ள இவ்வழியைக் கையாளுகிறார்கள் போலும்.

இன்றைய நாள்களில் வலைப் பூக்கள், வலைப் பக்கங்கள், கருத்துக்களத் தளங்கள் என எந்தப் பக்கத்திலும் இந்நிலை தொடருகிறது. இவற்றிலும் போலி மின்னஞ்சல் (Fack Mail), போலி அடையாளம் (Fack Id) காட்டுவோர் நிறையவவே உள்ளனர். 2010 இலிருந்து நானும் உளநல மதியுரை (Psychological Counselling) பல தளங்களில் செய்து வருகிறேன். அதனாலே தான் இதனை அறிய முடிந்தது. உளநலம், உடல்நலம் பற்றிக் கேட்பதை விட குடும்ப நல(பாலியல்) ஐயங்கள் தான் அதிகம் கேட்பார்கள். என் அறிவுக்கு எட்டிய வரை நானும் பதிலளிப்பேன்.

இவ்வாறு பதிலளிப்பவவர்களின் தகுதியை அறியாமல், தெரியாமல் வலைத்தளமூடாக தங்கள் ஐயங்களைக் கேட்பது பிழை என்றே நான் கூறுவேன்.

எடுத்துக்காட்டாக என்னைக் கருதினால், நான் மருத்துவர் இல்லை; அதேவேளை உளவியலில் பட்டப்படிப்புப் படித்தவருமல்லை. அப்படி இருக்கையில் என்னிடம் உங்கள் ஐயங்களைக் கேட்டால், நான் கற்ற உளவியல், உளப் பாலியல் அறிவோடு திருமணமாகிப் பதினைந்து ஆண்டு இல்லற வாழ்வைப் பட்டறிந்த (அனுபவ) அறிவையும் கலந்து பதிலளிப்பேன். அது சற்று உங்களைக் களிப்பூட்டினாலும் நிறைவைத் தரமுடியாது.

ஏன் தெரியுமா? உளநல மதியுரை (Psychological Counselling) என்பது உளச் சிக்கலைத் தீர்க்க உதவும் பணி. அப்படியாயின் உங்கள் உடலில் நோய்கள் இல்லை; உள்ளத்தில் குறை இருப்பதால் நிகழும் சிக்கல் என மருத்துவர் உறுதிப்படுத்தியபின் மதியுரைஞரை (Counsellor) நாடலாம். ஆனால், இணைய வழி உளநல மதியுரை (Psychological Counselling) வழங்குவோரிடம் (என் போன்றோரிடம்) தொடர்புகொள்வது நல்ல பயனைத் தராது.

அதாவது அருகிலுள்ள மருத்துவரோ (Doctor), மதியுரைஞரோ (Counsellor) உங்கள் நிலையை நேரில் கண்டறிவதால் பயன்தரும் நல்ல தீர்வுகளைத் தர வாய்ப்புண்டு. ஆனால், நீங்கள் விளக்கும் உங்கள் நிலையை வைத்து இணைய வழி உளநல மதியுரை (Psychological Counselling) வழங்குவோர், உங்கள் உண்மையான நிலையை நேரில் கண்டறியாமல் மதியுரை (Counselling) வழங்கினாலும் நன்மை கிட்டாதே!

எனது கருத்துப்படி, மதியுரை (Counselling) என்பது மருத்துவர் (Doctor) உடலில் நோய் ஏதுமில்லை; உள்ளத்தில் தான் சிக்கல் என்று உறுதிப்படுத்திய பின்னர்; நம்பிக்கைக்குரிய அல்லது மருத்துவர் குறிப்பிடும் மதியுரைஞரை (Counsellor) நேரில் சந்தித்து உங்கள் சிக்கலுக்குத் தீர்வு காணுங்கள். நேரில் சந்திக்க முடியாத ஒருவரிடம் மதியுரை (Counselling) பெற முயல்வது நல்ல பயனைத் தராது. உங்கள் கருத்தை வாக்களித்தோ பின்னூட்டமாகவோ தெரிவிக்கலாம்.

இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

தன்னம்பிக்கை தான்
உளப்பலம் – அதுவே
உடல்நலம் பேண உதவும்…
விடிந்தால் தைப்பொங்கல்
முடிந்தவரை
நலமாக வாழ முயல்வோம்!

உளநோய்கள் கிட்ட நெருங்காமல் இருக்க…

“உண்ணாமல் கெட்டது உறவு” என்பார்கள். ஏன் தெரியுமா? உறவுகள் வீட்டில் உண்டுகளித்துத் திரும்பினால்; அவர்கள் அடிக்கடி தமக்குள் நினைவூட்ட, நம்ம வீட்டுப் பக்கம் நாட முனைவார்கள். இவ்வாறே நமக்கிடையே உறவுகள் வலுக்கும் என்பது உளவியல் நோக்கு. சில விருந்தாளிகள் உறவு கெடாமல் ஒரு முடக்குத் தண்ணீர் வேண்டிக் குடித்த பின்னரே தம் வீடு திரும்புவதும் இதனடிப்படையிலே.

“கேளாமல் கெட்டது கடன்” என்பார்கள். ஏன் தெரியுமா? பெற்றவர் திருப்பிக் கொடுக்க வேண்டியதை நினைவில் நிறுத்தினால், கடனைத் திருப்பிக் கொடுப்பார் என்பது உளவியல் நோக்கே. “கடன் திரும்பக் கிடைக்குமா? கிடைக்காதா?” என்றறியவும் இது உதவலாம்.

இப்படி முன்னோர் சொல்லி வந்த கோட்பாடுகளில் (தத்துவங்களில்) உளவியல் ஒளிந்திருக்கிறது. பிறகு தான் சிந்தித்தேன், மெய்யியலி(தத்துவவியல்)லிருந்து தான் உளவியல் வந்ததென்று. எனக்கொரு மருத்துவர் இவ்வாறு வழிகாட்டியிருந்தார். அதாவது, தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு மனிதரும் உளவியல் நோக்கிலேயே முடிவு எடுக்கிறார்கள்.

அப்படியாயின், பிள்ளைகளுக்கோ உறவுகளுக்கோ உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு ஏன் வருகிறதென்றால் உளவியல் நோக்கில் எப்படிச் சொல்லலாம்?

அணைக்காமையால், அன்பு காட்டாமையால், பொருட்படுத்தாமையால், புரிந்துணர்வு இன்மையால், விருப்பு வெறுப்புகளை மதிக்காமையால் எனப் பல சாட்டுகளைச் சொல்லி வந்தது உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு என முடிக்கலாம்.

எடுத்துக் காட்டாக, பெற்றோர் தங்கள் கைக்குள் பிள்ளைகளை அணைத்து வளர்த்திருந்தால் பிள்ளைகளின் உள்ளத்தில் அன்பு ஊற்றெடுக்கும். அதனால், பிள்ளைகள் தனிமையை வெறுத்து பெற்றோர்களுடன் இணைந்து வாழ முயல்வர்.

பிறிதோர் எடுத்துக் காட்டாக, உறவுக்காரர்களுடன் அன்பு காட்டுங்கள். அந்த அன்புக்காக அவர்கள் உங்களை உள்ளத்தில் நினைவூட்டி, தனிமை வரும் போதெல்லாம் உங்களை நாடித் தங்களை ஆற்றுப்படுத்த முயல்வர்.

இன்னோர் எடுத்துக் காட்டாக, யாரோ எவரோ உங்களை மதித்துத் தனது கருத்துக்களையோ விருப்புக்களையோ வெளிப்படுத்த வரும் போது அதனைப் பொருட்படுத்துங்கள். அவ்வாறானவர்கள் தனிமை வரும் போதெல்லாம், உங்களை நாடித் தம்மை ஆற்றுப்படுத்த இடமுண்டு.

இம்மூன்று எடுத்துக் காட்டுகளிலும் நீங்கள் வழங்கும் வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) தான், அடுத்தவர் தனிமையை நாடாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் பற்றுவைக்க இடமளிக்கும். இதனால், அவர்களுக்கு உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு வருவதற்கு வாய்ப்பில்லை.

“யாரை நம்பி நான் பிறந்தேன்.
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும்
வென்ற பின் வாங்கடா வாங்க…” என்ற
பாவரிகளைப் படித்துத் தன்னம்பிக்கையுடன் தனித்து வாழ்ந்தாலும் உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு நெருங்காது. ஏனெனில், இலக்கு ஒன்றைக் குறித்து முயற்சியில் எந்நேரமும் இறங்குவதால் தனிமைப்பட நேரம் கிடையாது. அதாவது, தெருத் தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல தேவையற்ற அல்லது பிறருடைய சிக்கல்களைத் தன் தலையில் போட்டுடைத்து உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவை வேண்டிக்கட்ட இடமிருக்காது.

அப்படி என்றால் தனிமை தான் உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு வருவதற்குக் காரணம் என நீங்களே ஊகிக்கலாம். அதாவது வேலையின்றி, பொழுதுபோக்கின்றி, கருத்துப் பகிர்வுக்கு ஆளின்றி, அன்பு காட்ட உறவின்றி வாழ்க்கையை வெறுக்கும் நோக்கில் தனித்து இருந்தால் ஆயிரமாயிரம் சிக்கல்களை எண்ணிப்பார்க்க நேரிடலாம். அதனால், உள்ளத்தை ஒரு நிலைப்படுத்த முடியாமற் போகலாம். இந்நிலையில் நீங்கள் ஊகித்த காரணம் சரியே!

தனிமையின் போது ஒருவர் தன்னைத் தானே எடை போட வேண்டி வருகிறது. அவர் அணைக்கேல்லை…, இவர் மதிக்கேல்லை…, உவர் உதவேல்லை…, மொத்தத்தில எவரும் அன்பு காட்டேல்லை… என்று தான் தனிமைப்பட்டதற்குக் கணக்குப் போட்டு வாழ்க்கையில் வெறுப்படைந்து இறுதியில் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். தற்கொலை என்பதும் உள(மன) நோயே! அதாவது, உள(மன) நலக் குறைவின் உச்சக் கட்டம் எனலாம்.

எனவே, உள(மன) நோய் வராமல் பேணப் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையோட வாழப் பழக்குங்கள். அவர்கள் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களிடமிருந்து எவரையும் ஒதுங்கிச் செல்லவிடாமல் அணையுங்கள். அதாவது, எவரையும் தனிமைப் பட இடமளிக்காதீர்கள்.

உள(மன) நோய் நெருங்காமல் இருக்க, உள(மன) நலக் குறைவானவர்களை மட்டுமல்ல எல்லோரையும் உள்ளம் புண்படாமல் உங்கள் உறவுகளாக அணைத்துக் கொள்ளுங்கள். எவருக்கும் வெறுப்பும் தனிமையும் ஏற்படா வண்ணம் அன்புகாட்டி அணைக்கும் உறவுகள் இருக்கும் வரை உள(மன) நோயோ உள(மன) நலக் குறைவோ கிட்டவும் நெருங்காது என நம்பலாம்.

உள நோய்கள் நெருங்காமல் இருக்க…

“உள்ளம் என்பது ஆமையடா – அதில்
உண்மை என்பது ஊமையடா” என்று
ஒரு திரை இசைப் பாடல் வரிகள் இருக்கிறது. முதலில், இதன் கோட்பாடு (தத்துவம்) என்னவென்று எனக்குத் தெரியாது. உள நலப் பேணுகைப் பணி செய்யலாமென உளவியல் (மனோதத்துவம்) படிக்கின்ற போதுதான் இவ்விரு வரிகளின் உண்மையை உறிஞ்சினேன்.

மண்டை ஓட்டின் உள்ளே மனித மூளை இருப்பதை ஆமையின்
உடலமைப்புக்குப் பாவலர் ஒப்பிட்டிருக்கிறார். மனித மூளையின்
செயலையே உள்ளம் (மனம்) என்று நாம் ஒப்பிட்டுப் படிக்கின்றோம்.
ஆமை தனது உறுப்புக்களை எவ்வளவு நேரமும் ஓட்டிற்கு உள்ளே
வைத்திருக்கும். அதேவேளை தேவைப்பட்ட நேரமெல்லாம்
அவ்வுறுப்புகளை (தலை, கைகள், கால்கள்) வெளியே நீட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. அதேபோல, மனித உள்ளமும்
தனக்குள்ளே பல உண்மைகளை உள்வாங்கி வைத்திருக்கும். சூழல்
வாய்த்த போதெல்லாம் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளும்.
பாவலரின் ஒப்பிட்டை உளவியல் (மனோதத்துவம்) நோக்கில்
இப்படி விரித்துக் கூறமுடியும். அதிலும், மனித உள்ளத்தில் உள்ள
உண்மை எல்லா வேளையிலும் வெளிவராமல் இருப்பதை பாவலர்
ஊமைக்கு ஒப்பிட்டிருக்கிறார்.
பாட்டு வரிகளுக்குப் பொருள் தரக்கூடிய பாவலன் நானல்லன்.
ஆயினும், உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகள்
இடையிடையே வெளியே தலையைக் காட்டுவதால் மனித
நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, எந்தச் சூழலிலும் ஏமாற்றிய ஒருவரைக் கண்டதும் குறித்த ஆளுக்குக் கோபம் பொங்கிவரும். இவ்வாறான நடத்தை மாற்றங்களால் ஒருவர் சூழலிலுள்ளவர்களைப் பொருட்படுத்தாமல் எதை எதையோ செய்யக்கூடும். இச்செயல்களை நேரில் கண்டவர்கள், ஆளுக்குப் பைத்தியம்(விசர்) பிடிச்சிட்டுது என்பர். மருத்துவ உலகில் இதனை பைத்தியம்(விசர்) என்று சொல்வதில்லை. இதனை உளப் பாதிப்பின் தொடக்கம் என்று தான் மருத்துவர்கள் கூறுவர்.

ஏமாற்றம் அடைந்தவரது உள்ளத்தில் “ஏமாற்றியவரைப் பழிக்குப்
பழி வேண்ட வேணும்” என்ற எண்ணம் அழுக்காகப் படிந்திருக்கும்
அல்லது உறங்கிக் கொண்டிருக்கும். உள்ளத்தில் அழுக்கு என்னும்
மேற்படி உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையை உள்ளத்திலிருந்து
அகற்றினால் உளப் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். உளப்
பாதிப்புகள் வராமல் தடுப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
உருவாக்கமுடியும். அதேவேளை உடற் பலத்தையும்
அதிகரிக்கலாம். நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ இச்செயற்பாடு
உதவும்.

எடுத்துக்காட்டாக, டேவிட்டின் சிக்கலை (பிரச்சனையை) எடுத்துக்
கொள்வோம். டேவிட்டும் காசிம்மும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் கருத்து முரண்பட்டு ஆளுக்காள் அடிபட்டனர்.
அன்றிலிருந்து டேவிட்டிற்குக் காசிம்மைக் கண்டால் கோபம்
ஊற்றெடுக்க ஆளே மாறிவிடுவான். இதைத் தான், உள்ளத்தில்
உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகள் வெளியே தலையைக்
காட்ட ஏற்படும் நடத்தை மாற்றம் என்கிறோம். நண்பர்கள்
இருவரையும் சந்திக்க வைத்துப் பழைய சிக்கலை விசாரித்த போது
டேவிட்டின் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த உண்மை
வெளிப்பட்டது.

அதாவது, கருத்து முரண்பட்டுக் கொண்ட நாளன்று காசிம்
டேவிட்டின் முகத்துக்கு நேரே கைநீட்டிக் கதைக்க
முற்பட்டிருக்கிறான். பதிலுக்கு டேவிட்டும் கையை நீட்ட,
சமகாலத்தில் காசிம்மின் கை டேவிட்டின் முகத்தில் மெல்லியதாக
பட்டிருக்கிறது. பின்னர் ஆளுக்காள் உறைப்பாக அடிபட, நல்ல நட்பு
என்றால் அடிபாடு வைத்திருக்கக் கூடாதென ஏனைய நண்பர்கள்
அவர்களைப் பிரித்துவைத்தனர். ஆயினும், நல்ல நண்பனாக இருந்து
கொண்டு “காசிம் முதலில் தனக்கு அடித்தது பிழை” என்று டேவிட்
கோபப்பட்டிருக்கிறான். காசிம்மோ தவறுதலாகத் தனது கை
டேவிட்டின் முகத்தில் பட்டதற்கு “டேவிட் தனக்கு இறுக்கி அடித்தது
பிழை” என்று காசிம் கோபப்பட்டிருக்கிறான். இதிலிருந்து டேவிட்
தான், “உண்மையில் காசிம் அடிச்சிட்டான்” என நம்பி உறைப்பாக
அடிக்க முயன்றதை ஏற்றுக்கொண்டதால் இருவரும் தங்கள்
தவறுகளை உணர்ந்தனர்.

இன்று இரு நண்பர்களும் தமது உள்ளங்களில் இருந்த தவறான
எண்ணங்களை (உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை)
தாமாகவே தங்கள் உள்ளங்களிலிருந்து அகற்றியதால் மீளவும்
நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். இனி, எந்தக் கடவுள் வந்தாலும்
இவர்களைப் பிரிக்கமுடியாது. நண்பர்களே, காதலர்களே, கணவன்
மனைவிமார்களே உங்கள் வாழ்விலும் தவறான எண்ணங்களை
(உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை) உங்கள்
உள்ளங்களிலிருந்து அகற்றினால் மகிழ்சியடையலாம்.

உறவுகளைப் பிரிப்பது இலகு. ஆனால், இணைத்து வைப்பதென்பது
முடியாத ஒன்றாகும். எனவே, உள்ளத்தில் உறங்கிக்
கொண்டிருக்கும் உண்மைகளை(தவறான எண்ணங்களை)
வெளிப்படுத்துங்கள். ஊமையான உண்மைகள் பேசத் தொடங்கினால் தான் உளத் தூய்மை கிட்டும். உளத் தூய்மை இருந்தால் தான் உள நலத்தையும் நல்லுறவையும் பேண முடியும்.

உள நோய்கள் மட்டுமல்ல உடல் நோய்களும் நெருங்காமல் இருக்க
உளத் தூய்மை, உடற் தூய்மை, சூழல் தூய்மை, உணவுக்
கட்டுப்பாடு, நிறைவான தூக்கம்(6-8 மணி), உடற்பயிற்சி அல்லது
கடின உழைப்பு என்பன தேவை. உங்கள் வாழ்வை இவ்வாறு
நகர்த்துவீர்கள் ஆயின் நீண்ட ஆயுளுடன் வாழவும் முடியும்.
மேலும், உங்கள் உள்ளத்தில் தோன்றும் ஐயங்களை உடனுக்குடன்
இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

இப்பதிவை http://tamilnanbargal.com/user/4852/posts/all என்ற தளத்தில் பதிவு செய்த போது நண்பர் வினோத் கன்னியாகுமரி கீழ்வரும் கருத்தை முன்வைத்தார்.

“உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை(தவறான எண்ணங்களை) வெளிப்படுத்துங்கள்”
சில பிரச்சனைகள் நாட்பட்டால் ஆறிப்போய்விடும். ஆனால் சில பிரச்சனைகளை பேச ஆரம்பித்தால் அது அதிகரிப்பதைவிட குறைவதில்லை. உண்மையாகச்சொல்வதென்றால் பிரச்சனையை விட்டு சமாதானமாக வேண்டும் என நாம் விரும்புவதில்லை.
இவைகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தான் தீர்வோ அல்லது பிரச்சனை அதிகரிப்பதோ இருக்கிறது என நினைக்கிறேன்.
மனவியல் சார்ந்த மேலும் கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

நண்பர் வினோத் கன்னியாகுமரி அவர்களின் கருத்திற்கு நான் வழங்கிய பதில் கீழே தரப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை உள(மன) நிறைவோடு ஏற்றுத் தொடர்ந்தும் இது போன்ற படைப்புகளைத் தருவேன்.
“உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை(தவறான எண்ணங்களை) வெளிப்படுத்துங்கள்” என்கிறீர்கள் : அது சரி செய்யப்பட்டதும் தீர்வு கிடைக்கின்றது. உளநலமும் பேணப்படுகிறது.
“சில பிரச்சனைகள் நாட்பட்டால் ஆறிப்போய்விடும்” என்கிறீர்கள் :
அப்படியல்ல, குறித்த சிக்கலால்(பிரச்சனையால்) ஏற்பட்ட பாதிப்பு உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். அதனை நினைவூட்டினால் மீளத் தலையை நீட்டும்.
“சில பிரச்சனைகளை பேச ஆரம்பித்தால் அது அதிகரிப்பதைவிட குறைவதில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் பிரச்சனையை விட்டு சமாதானமாக வேண்டும் என நாம் விரும்புவதில்லை” என்கிறீர்கள் : உண்மை தான். ஏற்றுக்கொள்ளும் உள(மன)பாங்குடன் விட்டுக்கொடுக்கும் உள(மன)பாங்குடன் தீர்வுகளை முன்வைக்காமல் பேசுவதில் பயனில்லை.
“எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தான் தீர்வோ அல்லது பிரச்சனை அதிகரிப்பதோ இருக்கிறது என நினைக்கிறேன்” என்கிறீர்கள் : உண்மை தான். ஒவ்வொரு சிக்கலையும்(பிரச்சனையையும்) கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. கையாளும் முறை தவறினால் இணைய வேண்டியவர்கள் கூடப் பிரிந்து போகலாம்.
முடிவாகப் பிறர் உள்ளம்(மனம்) புண்படா வகையில் அன்பாகப் பழகினால் எல்லோருடனும் நல்லுறவைப் பேணலாம்.