Daily Archives: ஜனவரி 12, 2014

உளநோய்கள் கிட்ட நெருங்காமல் இருக்க…

“உண்ணாமல் கெட்டது உறவு” என்பார்கள். ஏன் தெரியுமா? உறவுகள் வீட்டில் உண்டுகளித்துத் திரும்பினால்; அவர்கள் அடிக்கடி தமக்குள் நினைவூட்ட, நம்ம வீட்டுப் பக்கம் நாட முனைவார்கள். இவ்வாறே நமக்கிடையே உறவுகள் வலுக்கும் என்பது உளவியல் நோக்கு. சில விருந்தாளிகள் உறவு கெடாமல் ஒரு முடக்குத் தண்ணீர் வேண்டிக் குடித்த பின்னரே தம் வீடு திரும்புவதும் இதனடிப்படையிலே.

“கேளாமல் கெட்டது கடன்” என்பார்கள். ஏன் தெரியுமா? பெற்றவர் திருப்பிக் கொடுக்க வேண்டியதை நினைவில் நிறுத்தினால், கடனைத் திருப்பிக் கொடுப்பார் என்பது உளவியல் நோக்கே. “கடன் திரும்பக் கிடைக்குமா? கிடைக்காதா?” என்றறியவும் இது உதவலாம்.

இப்படி முன்னோர் சொல்லி வந்த கோட்பாடுகளில் (தத்துவங்களில்) உளவியல் ஒளிந்திருக்கிறது. பிறகு தான் சிந்தித்தேன், மெய்யியலி(தத்துவவியல்)லிருந்து தான் உளவியல் வந்ததென்று. எனக்கொரு மருத்துவர் இவ்வாறு வழிகாட்டியிருந்தார். அதாவது, தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு மனிதரும் உளவியல் நோக்கிலேயே முடிவு எடுக்கிறார்கள்.

அப்படியாயின், பிள்ளைகளுக்கோ உறவுகளுக்கோ உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு ஏன் வருகிறதென்றால் உளவியல் நோக்கில் எப்படிச் சொல்லலாம்?

அணைக்காமையால், அன்பு காட்டாமையால், பொருட்படுத்தாமையால், புரிந்துணர்வு இன்மையால், விருப்பு வெறுப்புகளை மதிக்காமையால் எனப் பல சாட்டுகளைச் சொல்லி வந்தது உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு என முடிக்கலாம்.

எடுத்துக் காட்டாக, பெற்றோர் தங்கள் கைக்குள் பிள்ளைகளை அணைத்து வளர்த்திருந்தால் பிள்ளைகளின் உள்ளத்தில் அன்பு ஊற்றெடுக்கும். அதனால், பிள்ளைகள் தனிமையை வெறுத்து பெற்றோர்களுடன் இணைந்து வாழ முயல்வர்.

பிறிதோர் எடுத்துக் காட்டாக, உறவுக்காரர்களுடன் அன்பு காட்டுங்கள். அந்த அன்புக்காக அவர்கள் உங்களை உள்ளத்தில் நினைவூட்டி, தனிமை வரும் போதெல்லாம் உங்களை நாடித் தங்களை ஆற்றுப்படுத்த முயல்வர்.

இன்னோர் எடுத்துக் காட்டாக, யாரோ எவரோ உங்களை மதித்துத் தனது கருத்துக்களையோ விருப்புக்களையோ வெளிப்படுத்த வரும் போது அதனைப் பொருட்படுத்துங்கள். அவ்வாறானவர்கள் தனிமை வரும் போதெல்லாம், உங்களை நாடித் தம்மை ஆற்றுப்படுத்த இடமுண்டு.

இம்மூன்று எடுத்துக் காட்டுகளிலும் நீங்கள் வழங்கும் வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) தான், அடுத்தவர் தனிமையை நாடாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் பற்றுவைக்க இடமளிக்கும். இதனால், அவர்களுக்கு உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு வருவதற்கு வாய்ப்பில்லை.

“யாரை நம்பி நான் பிறந்தேன்.
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும்
வென்ற பின் வாங்கடா வாங்க…” என்ற
பாவரிகளைப் படித்துத் தன்னம்பிக்கையுடன் தனித்து வாழ்ந்தாலும் உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு நெருங்காது. ஏனெனில், இலக்கு ஒன்றைக் குறித்து முயற்சியில் எந்நேரமும் இறங்குவதால் தனிமைப்பட நேரம் கிடையாது. அதாவது, தெருத் தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல தேவையற்ற அல்லது பிறருடைய சிக்கல்களைத் தன் தலையில் போட்டுடைத்து உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவை வேண்டிக்கட்ட இடமிருக்காது.

அப்படி என்றால் தனிமை தான் உள(மன) நோய் அல்லது உள(மன) நலக் குறைவு வருவதற்குக் காரணம் என நீங்களே ஊகிக்கலாம். அதாவது வேலையின்றி, பொழுதுபோக்கின்றி, கருத்துப் பகிர்வுக்கு ஆளின்றி, அன்பு காட்ட உறவின்றி வாழ்க்கையை வெறுக்கும் நோக்கில் தனித்து இருந்தால் ஆயிரமாயிரம் சிக்கல்களை எண்ணிப்பார்க்க நேரிடலாம். அதனால், உள்ளத்தை ஒரு நிலைப்படுத்த முடியாமற் போகலாம். இந்நிலையில் நீங்கள் ஊகித்த காரணம் சரியே!

தனிமையின் போது ஒருவர் தன்னைத் தானே எடை போட வேண்டி வருகிறது. அவர் அணைக்கேல்லை…, இவர் மதிக்கேல்லை…, உவர் உதவேல்லை…, மொத்தத்தில எவரும் அன்பு காட்டேல்லை… என்று தான் தனிமைப்பட்டதற்குக் கணக்குப் போட்டு வாழ்க்கையில் வெறுப்படைந்து இறுதியில் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். தற்கொலை என்பதும் உள(மன) நோயே! அதாவது, உள(மன) நலக் குறைவின் உச்சக் கட்டம் எனலாம்.

எனவே, உள(மன) நோய் வராமல் பேணப் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையோட வாழப் பழக்குங்கள். அவர்கள் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களிடமிருந்து எவரையும் ஒதுங்கிச் செல்லவிடாமல் அணையுங்கள். அதாவது, எவரையும் தனிமைப் பட இடமளிக்காதீர்கள்.

உள(மன) நோய் நெருங்காமல் இருக்க, உள(மன) நலக் குறைவானவர்களை மட்டுமல்ல எல்லோரையும் உள்ளம் புண்படாமல் உங்கள் உறவுகளாக அணைத்துக் கொள்ளுங்கள். எவருக்கும் வெறுப்பும் தனிமையும் ஏற்படா வண்ணம் அன்புகாட்டி அணைக்கும் உறவுகள் இருக்கும் வரை உள(மன) நோயோ உள(மன) நலக் குறைவோ கிட்டவும் நெருங்காது என நம்பலாம்.