உள்ளத்தில் இருந்து பழசை அழிக்க முடியாதே!


பள்ளிக்கூடம் போகாமல் இருந்ததைக் கண்ட அப்பன், அடுப்பில கிடந்த கொள்ளித் தடியால மகனுக்குக் கையில சுட்டுப்போட்டார். எப்பவும் அப்பனைக் கண்டதும் கையில சுட்டதை எண்ணி எண்ணிப் பிள்ளை ஓடியொழிப்பது வழக்கமாயிற்று.

பொன்னம்மானைக் கண்டால் முத்தம்மாவோ கொதித்தெழுவாள். தன்னைக் கட்டுறேனெனக் காதலித்துப் போட்டு, தன் தங்கை பித்தம்மாவைக் கடத்திச் சென்று தாலி கட்டியவன் என்றுதான்.

உவன் சின்னப்பொடியன், அவள் தெய்வானையைக் காதலித்தவன். அவளோ வேறொருவனோட ஓடிப்போனதால, ஒரு பெண்ணையும் பிடிக்காதெனத் தாடி, மீசை, குடுமியாட்டம் போடுறானே!

நம்ம ஊரைச் சுற்றிச் சுழன்று, பறந்து வீட்டிற்கு வீடு போய் ஆளை ஆள் சந்தித்து ஆய்வு செய்தால் இப்படி எத்தனையோ உளப் (மனப்) பாதிப்பு உள்ளவர்களை அடையாளம் காணலாம்.

இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு. உள்ள (மன) நோய்க்கு உள்ளம் (மனம்) தான் மருந்து. அப்படி என்றால் எப்படித் தான் கையாள்வது? வெந்த புண்ணில வேல் பாய்ச்சாமல் எப்படிப் பேணுகிறோமோ, அப்படித் தான் நொந்த உள்ளத்தில (மனத்தில) நோவை ஏற்படுத்தாமல் பேண வேண்டும்.

உள (மன) நோவைக் கொடுத்தவர்களை விலக்கி வைக்கலாம் அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு/ இவ்வாறு நிகழாதெனப் பாதிப்புற்றவர் நம்பும் வகையில் உறுதிப்படுத்தலாம். வெற்றிடத்தை நோக்கிக் காற்று வீசுவது போல உள (மன) அமைதியைத் தரும் உறவை ஏற்படுத்த முயன்றால் நற்பயன் உண்டு.

உள்ளத்தில் (மனத்தில்) எழுதப்பட்டதை அழிக்க முடியாது. ஆயினும் அவற்றை நினைவூட்டாமல் பேண முடியும். அவ்வாறு நினைவூட்டாமல் பேணப் பல வழிகள் இருக்கின்றன. பாதிப்புற்றவர் நிலையறிந்து அவருக்கேற்ற வழிகளில் அவரது உளப் (மனப்) புண்களை ஏற்படுத்தும் காரணிகளை நினைவூட்டாமல் பேணுவதாலேயே உள (மன) நோய்களைக் குணப்படுத்த முடிகிறது.

புண்படுத்தியவர்கள் விலகி நிற்பதாலேயே, புண்பட்டவர்கள் பழசை மறந்து மகிழ்வாக இருக்க முடிகிறது. அதேபோல புண்படுத்திய சொல், செயல், கதை, நிகழ்வு, ஆள்கள் என எல்லாம் நினைவூட்டாமல் பேணுவதாலும் பழசை மீட்டுப் பார்க்காமல் செய்யலாம். ஆயினும் உள்ளத்தில் இருந்து பழசை அழிக்க முடியாதே!

அடுத்தவர் உள்ளத்தைப் (மனத்தைப்) புண்படுத்தாதீர்கள். ஒரு போதும் புண்பட்ட உள்ளம் (மனம்) உங்களை விரும்பாது. எவ்வளவோ நம்பும் வகையில் எதையும் எடுத்துச் சொல்லி உறவைப் பேண முயன்றாலும் பாதிப்புற்றவர் அவற்றை எல்லாம் நம்பக்கூடியவராக இருக்கமாட்டார். அடுத்தவரைப் புண்படுத்திய பின் முறிந்த உறவை எண்ணி அழுவதை விடப் புண்படுத்தாமல் இருப்பதே நன்று.

 

கனவு பற்றிச் சற்று எண்ணிப் பாருங்களேன்!

மனிதன் சுறுசுறுப்பாக இருக்கிறான் என்றால் மூளையும் அவ்வாறே இயங்கும். மனிதன் தூங்கிவிட்டால் மூளையும் அவ்வாறே தூங்காது விழித்துக்கொண்டே இருக்கும். அவ்வேளை மூளை என்ன செய்துகொண்டிருக்கும்? மனிதன் தூங்குமுன் பதிவு செய்து வைத்திருந்த தகவலை மீள வாசித்துக்கொண்டிருக்குமாம். அதாவது, ஒலிப்பதிவு கருவியில் (Tape Recorder இல்) பதிவு செய்ததை மீட்டுக் (Rewind செய்து) கேட்பது போல இயங்குமாம். அவ்வாறு இயங்கும் வேளை தான் கனவு தோன்றுவதாகப் பத்திரிகை ஒன்றில் படித்த நினைவு.

மூளை இயங்கும் செயலையே உள்ளம் (Mind) என்கிறோம். அப்படி நோக்குகையில் உணர்வு (நனவு) உள்ளம் (Conscious Mind) ஓய்வடைய உணர்வுத்துணை (நனவுத்துணை) உள்ளம் (Sub Conscious Mind), உணர்வற்ற (நனவிலி) உள்ளம் (Unconscious Mind) இயங்கும். அவ்வேளை அவை உணர்வூட்டப்பட்ட (உணர்ச்சி வசப்பட்ட) தகவலை மீள வாசித்துக்கொண்டிருக்கையில், குறித்த ஆள் உணர்வூட்டப்பட (உணர்ச்சி வசப்பட) விழித்துக் கொள்வதாகவும் அதனையே கனவு தோன்றியதாக எண்ணுகின்றனர்.

அதாவது உணர்வுத்துணை (நனவுத்துணை) உள்ளத்தில் (Sub Conscious Mind) பதியப்பட்ட தகவலாக இருப்பின் பயணம் செய்யும் போது வழியில் விபத்துக்குள்ளாக நேரிட்ட நிகழ்வு கனவாகத் தோன்றலாம். அல்லது உணர்வற்ற (நனவிலி) உள்ளத்தில் (Unconscious Mind) எழும் நடைமுறைக்குப் பொருந்தாத எண்ணங்களாக இருப்பின் அடுத்த தேர்தலில் நாட்டின் தலைவராக இடமுண்டெனக் கனவாகத் தோன்றலாம். எனவே, கனவு மெய்ப்படும் என்பதெல்லாம் பொய் என்பேன்.

இப்படித் தான் நான் படித்திருந்தாலும் “கனவுலகின் மர்மக் கோட்டைகளில் புது வெளிச்சம்” என்ற மருத்துவர் முருகானத்தன் ஐயா அவர்களின் பதிவில் “நினைவு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆழ்ந்த தூக்கமுமற்ற முழு நினைவுமற்ற நிலை இருக்கிறது. அவ்வேளையில்தான் கனவுகள் காண்கிறோம். அவ்வாறு காணும் கனவுகளின் போது தான் கனவு காண்பதாக உணர்கிறோம்.” என்று விளக்கம் தந்து பதிவு நீண்டு செல்கிறது. அதனைத் தாங்களும் படித்து “கனவு பற்றிச் சற்று எண்ணிப் பாருங்களேன்!” என்று சொல்ல வந்தேன். கீழுள்ள அப்பதிவின் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பயன்பெறவும்.

கனவுலகின் மர்மக் கோட்டைகளில் புது வெளிச்சம்

ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு நாளும் எண்ணிப்பாருங்க…

இப்ப கொஞ்ச நாளாக நானும் வலைப்பூப் பக்கம் வாறது குறைவு. அந்த வகையில, எதிர்பாராத வேளை வலைப்பூப் பக்கம் வந்த நேரம்…”டேய்! யாழ்பாவாணா! நீங்களும் உங்க பதிவும்” என்று எழுதாமல் “அடப்போங்கப்பா…! நீங்களும் உங்க பதிவும்…!” என்று எல்லோர் உள்ளங்களையும் ஈர்த்த அறிஞர் திண்டுக்கல் தனபாலன் எழுதியதைப் படிக்க முடிந்தது.

நான் உளநல வழிகாட்டல் பதிவுகளை வழங்குகின்ற வேளை, அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மெய்யியல் வழிகாட்டல் பதிவுகளை வழங்குகி வருகின்றார். அந்த வகையில, “அடப்போங்கப்பா…! நீங்களும் உங்க பதிவும்…!” என்ற பதிவு உளநல வழிகாட்டல் போன்று என் கண்ணைப் பறித்தது.

உண்மையில் உள (மன) மெய்யியலும் உடற்கூற்றியலும் கூடிப் பிறந்தது தான் இன்றைய அறிவியல் (விஞ்ஞான) உளவியல் என்கிறோம். அவ்வாறான ஒரு பதிவாகத் தான் அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நூறு ரூபாத் தாளை வைத்து “தங்கத்துக்குக் கரி பூசினாலும் கழுவினால் கரி நழுவத் தங்கம் மின்னும்” என்றவாறு நமக்குக் கிட்டும் கெட்ட அறுவடையாலோ தோல்விகளாலோ இழப்புகளாலோ எமக்கான பெறுமதி குறையாது என்கிறார். அதாவது, தன்னம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் தங்கத்தைக் கழுவி மின்ன வைப்பது போல தமது அழுக்குகளைக் கழுவி மின்னலாம். நூறு ரூபாத் தாளுக்குள்ள பெறுமதி போல தங்கள் பெறுமதியை தாமே பேணி வெற்றி காண முன் வாருங்கள்.

மேலும், படிக்கும் வேளை “நேர்முகத் தேர்வுக்குப் போகும் மூத்தவனே, ஒழுங்காகக் கவனி…!” என்று பதினெட்டு வழிகாட்டலை கிள்ளிக் கிள்ளித் தருகின்றார். நாம் அள்ளி அள்ளிப் பொறுக்கலாம். அடுத்து நம்ம வெற்றிகளைத் தரும் பிள்ளையாரை ஒப்பிட்டு ஐந்து வழிகாட்டலை சுட்டிச் சொல்கின்றார். அடுத்துப் பட வெளியீட்டோடு ஓர் ஆய்வு செய்யெனத் தொட்டுக் காட்டுகின்றார். அப்பாலே நகர்ந்தால், எல்லாவற்றையும் மீட்டுப்பாரென மீளவும் ஆங்கிலத்தில பதினெட்டு வழிகாட்டலை அடுக்கி வைக்கின்றார்.

அப்பப்பா என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். அத்தனையும் சிறந்த வழிகாட்டல்களே! அத்தனை வழிகாட்டல்களையும் ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு நாளும் எண்ணிப்பாருங்க… உங்கள் வெற்றி உங்களை விட்டுப் பிரியாமல் உங்களுடனே ஒட்டிக்கொள்ளும்! சரி! வெற்றிகாண வேண்டுமா? கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பாரு!

http://dindiguldhanabalan.blogspot.com/2015/03/Internal-Audit.html

கண்ணீரும் தண்ணீரும் கண் கண்ட மருந்து!

நம்மாளுகள் அழுகின்ற வேளை வடிக்கின்ற கண்ணீரில் பல கழிவுப்பொருள் மட்டுமல்ல மருந்துப்பொருளும் இருக்கிறதாம். ஒரு கடகம் சின்ன வெங்காயம் அரிந்தால்/நறுக்கினால்/வெட்டினால் கண்ணில் படரும் படலத்தை நீக்கச் சத்திரசிகிச்சை செய்யத் தேவையில்லை என்று ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் எனக்குச் சொல்லியிருந்தார்.

எத்தனை சொட்டுக் கண்ணீர் வடிக்கிறீர்கள் என்றறிய ஒரு சின்ன வெங்காயத்தை உரித்தால் போதுமே! அப்படியாயின் ஒரு கடகம் சின்ன வெங்காயத்தை நறுக்கினால், நீங்கள் கண்ணீரால் குளித்து விடுவீர்களே! அந்தக் கண்ணீரில் கலந்திருக்கும் மருந்துப்பொருள் கண்ணில் படரும் படலத்தைக் கரைத்து விடுவதனால் சத்திரசிகிச்சை செய்யத் தேவையில்லை என அந்த மருத்துவரே விளக்கம் அளித்தார்.

நான் அழும் போது என் அழுகை நிறுத்த எவரும் எனக்கு உதவவில்லை. என்ர பிள்ளையை ஏன்டா அழுவிக்கிறியள் என்று ஆச்சி கேட்க, அழுதால் தான் நோய்கள் குணமடையுமென எனக்கடித்த சித்தப்பா விளக்கமளித்தார். அந்தக் காலத்தில கண்ணீரும் கண் கண்ட மருந்து என்று நானறியேன்.

இந்தக் காலத்தில மதியுரை நாடி வருவோர் அழுதழுது தங்கள் துயரைப் பகிரும் போது நானும் தடுப்பதில்லை. முழுத் துயரையும் கேட்டறிதல் எனது நோக்காயினும் முழுத் துயரையும் பகிருவதால், குறித்த ஆள் தனது உள்ளத்துச் சுமையை இறக்கி வைக்க முடிவதால் உள்ளத்தில் அமைதி கிட்டுமென்பது என் கருத்து. எனவே, அழுகையும் கண்ணீரும் நமக்கு மருந்தாகலாம்.

அழுகையும் கண்ணீரும் தொடர்ந்தால், நா வறண்டு தண்ணீர் விடாய்க்குமே! அப்படியாயின் நம்முடலுக்குத் தண்ணீரும் தேவை தானே! அடடே! தண்ணீரும் நா வறட்சி, உடல் வறட்சி போக்கும் கண் கண்ட மருந்து என்றே சொல்லலாம். நாம் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு ஆறு லீற்றர் தண்ணீர் குடித்து வந்தால் உடல் நலம் பேணலாம் என்கிறார்கள்.

விடிகாலை எழுந்ததும் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் உடல் குளிர்மையாக இருக்குமாம். நோய்கள் வர வாய்ப்புக் குறைவாம். மேலும், தண்ணீர்ச் சிகிச்சை (Water Therapy) பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள். அது பற்றி அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://tamilaarokyam.blogspot.com/2014/03/blog-post_86.html

மேலும், அறிஞர் புதுவை வேலு/யாதவன் அவர்கள் தனது வலைப்பூவில் “ஆரோக்கிய அமுதம் தண்ணீர்! தண்ணீர்!” என ஒரு பதிவைப் படைத்துள்ளார். அதனைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://kuzhalinnisai.blogspot.com/2015/03/blog-post_2.html

இனிய அன்புள்ளங்களே! கண்ணீரும் தண்ணீரும் கண் கண்ட மருந்து! அதற்காக அழவும் வேண்டாம், போக்குவரவு நேரத்தில், செயலகங்களில் சலம் (Urine) போகுமெனத் தண்ணீரும் குடிக்காமல் இருக்க வேண்டாம். பாவரசர் கண்ணதாசன் “இரண்டடக்கேல்” என்று சொல்லியிருக்கார். அதாவது மலம், சலம் போவதை அடக்காதீர் என்று பொருள். உண்ணுங்கள், குடியுங்கள் ஆனால் இரண்டடக்கேல் பேணுங்கள். அதுவே உளநலம் , உடல் நலம் பேண உதவும் என்பேன்.

தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?

சென்ற பதிவில் பாலியல் (Sex) நோக்கில் மணமுறிவு (divorce) ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படித்த பின் இதனைப் படித்தால் பயனடையலாம் என நம்புகிறேன்.
மணமுறிவு வேண்டாமா? வேண்டுமா?

மேற்காணும் பதிவில் “ஐயம்!” என்ற தலைப்பின் கீழ் முறையற்ற உறவு பற்றிய எண்ணங்களும் மணமுறிவு (divorce) இற்கு வழிவிடலாம் எனத் தொட்டுக்காட்டியிருந்தேன். அதனால், “தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?” என்று எழுதலாம் என முன்வந்தேன்.

மக்களாய (சமூக) த்தில் ஒருவனுக்கு ஓருவள் என்ற ஒழுங்கை மீறுபவர்களைக் கீழ்த்தரமானவர்கள் என்று கணிக்கப்படுகிறது. அதேவேளை உடல்நலம் பற்றி எண்ணும் போது உயிர்கொல்லி (Aids) நோய் ஏற்பட இடமுண்டு என எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஆயினும் குடும்பநலம் பற்றி எண்ணும் போது மணமுறிவு (divorce) ஏற்பட இடமுண்டு என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி முறையற்ற உறவு வைத்துக்கொள்வோரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

எந்தெந்தச் சூழலில் முறையற்ற உறவு மேற்கொள்ள வழிகிட்டும் என அலசுவது அழகல்ல. ஆயினும், பாலுணர்வு மேலீட்டால் இருபாலாருமே முறையற்ற உறவில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது. அது பற்றி அலசுவதும் அழகல்ல. ஆயினும், முறையற்ற உறவால் ஏற்படும் பின்விளைவை அலசுவது அழகாகவே இருக்கும்.

பெரும்பாலும் முறையற்ற உறவில் ஈடுபடுவோர் பாலுணர்வு மேலீட்டால் பின்விளைவை எண்ணமாட்டார்கள்; அகப்பட்ட ஆளோடு முறையற்ற உறவில் ஈடுபடுவதால் பாலியல் நோய்கள் (sexual decease) ஏற்பட இடமுண்டு. தொடக்கத்தில் பாலியல் உறுப்புகளில் கடி, சொறி, புண் என எதுவும் வரலாம். அப்படி ஏற்பட்டதும் மதிப்புக் குறைந்துவிடுமென அஞ்சி மருத்துவரை நாடாது இருப்பது பாலியல் நோய்கள் முற்றிச் சாவையே தரும்! அதேவேளை சாவையே தரும் உயிர்கொல்லி (Aids) நோய் ஏற்படவும் முறையற்ற உறவு இடமளிக்கிறதே!

பெண்களுக்கு மாதமொரு தடவை மாதவிடாய் வட்டம் ஏற்படும். அதுபற்றியறிய மாதவிடாய் (http://ta.wikipedia.org/s/ivw) என்ற இணைப்பைச் சொடுக்குக. அக்காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அதுகூட முறையற்ற உறவு என்றே கூறலாம். அதாவது, பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறும் கழிவுச் செந்நீர் (குருதி) ஆணுறுப்பிற்குத் தொற்று ஏற்படுத்துவதால் பாலியல் நோய்கள் (sexual decease) வர வாய்ப்புண்டு. அதாவது, மனைவியைத் தவிரப் பிறர் தமது மாதவிடாய்க் கால நாள்களைத் தெரிவிக்க மாட்டார்கள். மனைவியைத் தவிரப் பிறருடன் உறவைப் பேணும் வேளை இச்சிக்கல் ஏற்படலாம்.

மனைவி ஓருவளே உண்மையைச் சொல்லக்கூடியவள். அதனால், மாதவிடாய்க் கால நாளிற்கு இரண்டு முன்று நாள் முன்னிருந்து மாதவிடாய் வந்து ஏழு நாள் வரையான பத்து நாள்கள் உடலுறவைப் பேணாது பாதுகாப்பு எடுக்கலாம். அதேவேளை மனைவியும் தானும் உடலைச் சுத்தமாகப் பேணி உடலுறவைப் பேணலாமே! ஒருவனுக்கு ஓருவள் என்ற ஒழுங்கைப் பேணினால் தலை போகின்ற பாலியல் நோய்கள் (sexual decease) வர வாய்ப்பிருக்காதே! எனவே, மனைவியை விலக்கி வைத்துவிட்டுப் பிறருடன் முறையற்ற உறவு வைத்திருந்தால் தலை போவதைத் / சாவதைத் தடுக்க இயலுமா?

மணமுறிவு வேண்டாமா? வேண்டுமா?

அன்புள்ளங்களே!

மணமுடித்து வாழுங்கள்! மணமுறிவு ஏற்பட வாழாதீர்கள்!
காதலிக்கலாம்; திருமணம் செய்யலாம்! மணமுறிவு (Divorce) எதற்கு?
அதற்கு முன் காதல் முறிவு (Love Break) ஏன் ஏற்படுகிறது?
காதல் அரும்பிய வேளை காட்டிய உள்ளம் வெளிப்படுத்தியது வேறு…
காதல் முற்றிய வேளை உள்ளம் வெளிப்படுத்திக் காட்டுவது வேறு…
அதனால் தான் காதல் முறிவு (Love Break) என்பேன்!

ஆனால், மணமுறிவு (Divorce) அப்படியல்ல…
மனைவியின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யமுடியாத ஆண்களால்…
கணவனின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யமுடியாத பெண்களால்…
இவற்றை அலசி, ஆய்வு செய்ய நெடுநாள் நீடிக்கும்…
அடிக்கடி நானறிந்த மணமுறிவு (Divorce), பாலியல் (Sex) அடிப்படையிலே தான் அமைந்திருப்பதைக் கண்டேன். அது பற்றிக் கிடைத்த சான்றுகளைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

தன்மகிழ்வு / சுயஇன்பம் (Masturbation)!
திருமணம் செய்ய முன்னர் இருபாலாரும் தன்மகிழ்வில் ஈடுபட்டிருக்கலாம். திருமணமாகிய பின் இருபாலாரும் தன்மகிழ்வைக் கைவிட முடியாமையால் பாலியல் (Sex) உறவில் நிறைவடைய முடிவதில்லை. இந்நிலை நீடிப்பதால் மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

ஐயம்!
பெண்ணுக்குக் கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது…
ஆணுக்கு மனைவி பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது…
இந்த ஐயம், சில வீடுகளில் உண்மையாவதால் மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

குடி!
சில வீடுகளில் பெண்களும் குடிக்கிறார்கள்…
ஆயினும், ஆண்கள் தான் எல்லா வீடுகளிலும் குடிக்கிறார்கள்…
குடி, பாலியல் (Sex) உணர்வுகளைக் குறைத்துவிட மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

புகைத்தல்!
சில வீடுகளில் பெண்களும் புகைக்கிறார்கள்…
ஆயினும், ஆண்கள் தான் எல்லா வீடுகளிலும் புகைக்கிறார்கள்…
புகைத்தல், பாலியல் (Sex) உணர்வுகளைக் குறைத்துவிட மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

மேற்காணும் நான்கு தலைப்புகளில் மணமுறிவு (Divorce) ஏற்படாதவாறு அவரவர் தம்மைத் தாமே மேம்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். அதேவேளை ஒருவருக்கொருவர் உண்மை நிலையைக் கூறி தமக்குள்ளே தாம் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொருவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்ய முயன்றால் மணமுறிவு (Divorce) ஏற்பட வாய்ப்பிருக்காது என்பேன்! மணமுறிவு வேண்டுமா? வேண்டாமா? என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

அடுத்த பகுதி
தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?

சிக்கலுக்கான எனது தீர்வுகள்

சிக்கல் (பிரச்சனை) என்று வந்துவிட்டால்
சிக்கலை (பிரச்சனையை) உண்டாக்குவோரும்
சிக்கலுக்கு (பிரச்சனைக்கு) உள்ளாகுவோரும்
சந்திப்பதைக் கண்டிருப்பியளே!

இவ்விரு பகுதியினரில்
ஒரு பகுதி அமைதி பேணினால்
மறுபகுதி நிறுத்துவதைக் கண்டிருப்பியளே!

இவ்விரு பகுதியினரில்
இவ்விரு பகுதியினருமே மோதிக்கொண்டால்
தீர்வின்றித் தொடருவதைக் கண்டிருப்பியளே!

சிக்கலைச் சிக்கலாக எடுத்தால் தானே
சிக்கல் என்பார்கள்
சிக்கலைப் படிப்பாகக் கருதினால் தானே
தீர்வினைக் கற்பார்கள்
சிக்கலுக்குத் தீர்வு தேடும் போதே
இப்படியும் இருக்கென்பதைக் கண்டியளோ!

அமைதி வலுத்தால் தீர்வு கிட்டும்
மோதல் வலுத்தால் தீர்வு கிட்டாதே
இதுவே எனது தீர்வு கண்டியளோ!

இந்த
என் தீர்வுக்குப் பெறுமதியில்லைக் காணும்
அந்த வள்ளுவர்
“எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு. (467)” என்று
சொன்னாரே – அந்தத்
தீர்வே பெறுமதியானது என்பேன்!

குறிப்பு: சிக்கல் (பிரச்சனை) வந்த பின் எண்ணுவதை விட ஒவ்வொரு செயலிலும் இறங்கு முன் சிக்கல் (பிரச்சனை) வந்துவிடாமல் எண்ணிக்கொள்வதே எனது தீர்வாகும். இதற்குச் சரியாக முடிவெடுக்கப் பழகுங்கள்.
https://mhcd7.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/

கடலூர், வடலூரில் உளநல வழிகாட்டலும் மதியுரையும்

மதிப்புமிக்க, அன்புக்குரிய தமிழக உறவுகளே!
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
என்ற எனது பதிவை நீங்கள் படித்திருக்கலாம். அவ்வேளை உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) தேவைப்படுவோர் சந்திக்கும் வேளை அதற்கான தீர்வுகளை என்னால் வழங்க முடியும். அதாவது, தங்கள் உளநலம், உடல்நலம், குடும்பநலம் பேணுவதெப்படி என என்னுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

உங்கள் யாழ்பாவாணன் 02/02/2015 – 07/02/2015 வரை தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் தங்கியிருப்பார். மேற்படி கருத்தாடலில் பங்குபற்றச் சந்திப்பு நாளை 04/02/2015 அன்று கீழ்வரும் நடைபேசி (Mobile) எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தலாம்.
சுஷ்ரூவா – 091 087 54979451

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உண்மையா?

நான் உட்பட உண்மை இல்லை என்று சொல்லப் பலர் இருக்கலாம். ஆமாம்,
தமிழுக்கு முதல் நாள் என்றதும் புத்தாண்டுப் பிறப்பென்றதும் அன்றைய நாள் புதிய பயணத்தின் தொடக்க நாள் என்றதும் நல்லதோர் இலக்குக் குறித்து நன்நெறி வழியே செல்லும் வேளை வெற்றி கிட்டும் என்பது உண்மையே! இவ்வாறு நாம் இப்புனித நாளில் பயணம் செய்வோம்; வெற்றிகள் கிட்ட வழி பிறக்குமே!

புகைவண்டி இயந்திரம் நின்றுவிட்டால், தொடரும் பெட்டிகளும் நின்றுவிடும். அதற்காக முதல் நாள் செயற்திட்டம் நின்றுவிட்டால், தொடரும் செயற்திட்டமும் நின்றுவிடும் என்று பொருள் கொள்ளவேண்டாம். புகைவண்டி இயந்திரம் திருத்தப்பட்டால் பயணம் தொடருவது போல, முதல் நாள் செயற்திட்டம் திறம்பட இடம்பெற்றால் தொடரும் நாள்களிலும் வெற்றி கிட்டுமே!

முடிவாகச் சொல்வதாயின் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது உண்மை தான். நல்லதோர் இலக்குக் குறித்து நன்நெறி வழியே செல்லும் ஒவ்வொருவருக்கும் உண்மை தான். எனவே, 2015 தைப்பொங்கல் நாளில் இருந்து வாழ்வின் வெற்றிக்கான வழிகளில் பயணிக்க வாழ்த்துகிறேன்.

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

உடல் நோய்கள் பல, நாம் உணவு உட்கொள்ளும் முறைகளில் தங்கியிருக்கிறது. அதனை அறிந்துகொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள். via மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்.