Category Archives: உளநலப் பேணுகைப் பணி

சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே!

எனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அதனைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். அக்குரல் செய்திக்குப் பின்னணி இசை சேர்த்துப் பதிவு செய்துள்ளேன். அதனைக் கேட்டுணரக் கீழுள்ள படத்தில் சிவப்பு, வெள்ளை நிற செய் (Play) அழுத்தியை (Button) அழுத்தவும்.

இந்தக் குரல் வழிச் செய்தி ஊடாக வேதியியல் (Chemistry) கற்ற பொறியியலாளர் ரமேஸ் அவர்கள் பஞ்சு மிட்டாய், சுவைகளி (Chocolate), குளிர்களி (Ice Cream), மற்றும் சுவையூட்டி கலந்த உணவுகளால் நமது உடலுக்குத் தீங்கு வரும்; அதனைச் சாப்பிட வேண்டாம் என வழிகாட்டுகின்றார். அவரது வேண்டுதலை ஏற்று “சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே!” என இப்பதிவை வலைப்பூ உறவுகளுடன் பகிருகின்றேன்.
இப்பதிவினை முழுமையாகப் படிக்க, கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது புதிய தளத்திற்கு வருகை தாருங்கள்.
http://www.ypvnpubs.com/2016/05/blog-post_30.html

புண் ஆறாமல் உறவு இல்லையே!

வாய் இருந்தால் வங்காளம் சுற்றி வரலாம் என்பர். அந்த வாயாலே தான் இயமன் உலகத்துக்கும் (இயமலோகத்துக்கும்) செல்கிறார்கள். என்னம்மா கண்ணு? இதெல்லாம் விளங்குமா?

பேச்சாற்றல் இருந்தால் வங்காளம் மட்டுமல்ல உலகமே சுற்றி வரலாம். அதே பேச்சாற்றல் மாற்றாரின் வயிற்றெரிச்சலை ஏற்படுத்த, அது மோதலாகிப் பின் சாவிலே முடியலாம்.

இனி உண்மையை உணருவோமா! “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!” என்று முன்னோர்கள் சொன்னதில் பிழையேதும் இருக்காதே! மூடிய உள்ளக் கதவைக் கூடத் திறக்க வைக்கும் சக்தி அன்புக்கு உண்டென்பதே பொருள். அதே உண்மையைக் காண அன்பொழுகத் தேனொழுக அள்ளி அணைத்துப் பேசிப் பழகுங்கள்.

அன்பு முற்றினால் காதல்!
காதல் முற்றினால் திருமணம்!
திருமணம் முடிந்தால் குடும்பம்!
குடும்பம் என்று இறங்கிவிட்டால்
பிள்ளைகள் பிறக்கத் தான் செய்யும்!
ஆயினும்
எல்லாக் குடும்ப உறவுகளையும்
அன்பாலே கட்டிப் போடலாமே – அதை
எந்நாளும் மறக்க எவருமில்லையே!

பேச்சிலே அன்பில்லை என்றால் வெறுப்புத் தான் வரும்! வெறுப்படையப் பேசியிருந்தால் உறவுகள் முறிவடையத் தான் இடமிருக்கும். முறிவடைந்த உறவுகளால் என்றைக்கும் தலையிடி தான்.

நம்மாளுகளுக்குக் கோபம் தலைக்கேறினால் செந்நீர் (குருதி) தலைக்கேறாது. அதனால், மூளை செயற்பட மறுக்கும். அந்நேரம் நம்மாளுகள் கண்ட கண்ட சொல் கணைகளைச் செலுத்திவிடுவர். அவை போய் அடுத்தவர் உள்ளத்தைப் புண்ணாக்கும். பிறகென்ன புண் ஆறாமல் உறவு என்ற பேச்சுக்கு இடமிருக்காதே!

“வில்லம்பு பட்ட புண் உள் ஆறும்;
ஆறாதே சொல் அம்பு பட்ட புண்.” என்றும்

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.” என்றும்

சும்மாவா பெரியவங்க சொல்லி வைச்சாங்க! அப்ப உள்ளப் புண் ஆறாமைக்கு என்ன காரணம்? மருந்து போட வசதி இல்லையா? நல்ல கேள்வி தான்.

உள்ளத்தில் ஆழமாகப் (sub conscious mind – ஆழ் மனத்தில்) பதிந்துள்ள விருப்பமற்றவை; அவற்றை விதைத்தவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியாறு இருக்கும். இதுவே உள்ளப் புண் எனலாம். உள்ளம் என்பது மூளை செயற்படும் அமைவு எனின் மருந்து போட வசதி இல்லைத் தான். ஆயினும், உள்ளப் புண்ணை ஆற்றுப்படுத்தலாம் (ஆறவைக்கலாம்).

அதாவது, உள்ளத்தில் ஆழமாகப் (sub conscious mind – ஆழ் மனத்தில்) விதைக்கப்பட்டவை; விதைத்தவர் அடையாளம் அல்லது செயலைக் கண்டதும் வெறுப்பின் விளைவுகளை வெளிப்படுத்தும். எனவே, விதைத்தவர் அடையாளம் அல்லது செயல் நுகரப்படாமல் பேணினால் உள்ளப் புண்ணை ஆற்றுப்படுத்தலாம் அல்லது ஆறவைக்கலாம்.

ஆயினும், சம்பந்தப்பட்டவர்கள் உள்ளம் திறந்து பேசித் தவறுகளை ஏற்று விட்டுக்கொடுப்புகளைச் செய்து அன்பைக் கொடுத்துவேண்டி (பரிமாறி) ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமும் உள்ளப் புண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றுப்படுத்தலாம் அல்லது ஆறவைக்கலாம். அதேவேளை உறவையும் மேம்படுத்த முடியும். ஆளுக்காள் எட்ட விலகிச் செல்வதால் உறவுகள் மேம்பட வாய்ப்பிருக்காது.

“நன்மை செய்யப் பிறந்த – நீ
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாமலிரு!” என்ற
விவேகானந்தரின் வழிகாட்டலை
“அன்பைப் பகிரப் பிறந்த – நீ
அன்பைப் பகிராவிட்டாலும்
சுடுசொல் பேசாமலிரு!” என்று
மாற்றிப் பின்பற்றுவோம் வாருங்கள்!

நம்ம சூழலில் எவருடைய உறவு முறிந்தாலும்; அதனைக் கேள்விப்பட்டதும்
“வாயைக் கொஞ்சம் சும்மா வைச்சிருக்கேலாமல்
ஏதாவது, வாயாலே உளறி இருந்திருக்கலாம்” என்றும்
“வேண்டாத பேச்சாலே வெட்டுப்பட்டதே
(வெட்டு ஒன்று துண்டு இரண்டாக)
விருப்புக்குரிய உறவுகளே!” என்றும்
நம்மாளுகள் பேசிக்கொள்வதும் வழக்கம் தானே!

உறவு முறிய, மோதல் தொடங்க ஒரே வழி சுடுசொல் பேசுவது தான். அப்படியாயின் நன்றாகப் பேசலாம். ஆனால், நாம் பேசிய எல்லாம் நம்மைக் கட்டுப்படுத்தும்; நாம் பேசாத எல்லாவற்றையும் நாமே கட்டுப்படுத்தலாம்.

அன்பை வெளிப்படுத்தும் சொல்லையோ சுட்டெரிக்கும் சுடுசொல்லையோ உச்சரிக்க நாக்குத் தேவை. நரம்பில்லாத நாக்காலே எதையும் சொல்லலாம். அப்படியாயின் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது,
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

நல்ல நட்பு, நல்ல காதல், நல்ல குடும்பம், நல்ல உறவு தேவையாயின் உங்கள் பேச்சிலே அன்பு என்னும் தேன் கலந்து பேசுங்கள். தேன் போன்று தித்திக்கும் உங்கள் பேச்சைக் கேட்டு எல்லோரும் உங்கள் மீது அன்பு காட்டுவர். அதனால், உள்ளப் புண்ணும் ஏற்படாது; உறவுகளும் முறியாதே!

உள்ளத்தில் இருந்து பழசை அழிக்க முடியாதே!


பள்ளிக்கூடம் போகாமல் இருந்ததைக் கண்ட அப்பன், அடுப்பில கிடந்த கொள்ளித் தடியால மகனுக்குக் கையில சுட்டுப்போட்டார். எப்பவும் அப்பனைக் கண்டதும் கையில சுட்டதை எண்ணி எண்ணிப் பிள்ளை ஓடியொழிப்பது வழக்கமாயிற்று.

பொன்னம்மானைக் கண்டால் முத்தம்மாவோ கொதித்தெழுவாள். தன்னைக் கட்டுறேனெனக் காதலித்துப் போட்டு, தன் தங்கை பித்தம்மாவைக் கடத்திச் சென்று தாலி கட்டியவன் என்றுதான்.

உவன் சின்னப்பொடியன், அவள் தெய்வானையைக் காதலித்தவன். அவளோ வேறொருவனோட ஓடிப்போனதால, ஒரு பெண்ணையும் பிடிக்காதெனத் தாடி, மீசை, குடுமியாட்டம் போடுறானே!

நம்ம ஊரைச் சுற்றிச் சுழன்று, பறந்து வீட்டிற்கு வீடு போய் ஆளை ஆள் சந்தித்து ஆய்வு செய்தால் இப்படி எத்தனையோ உளப் (மனப்) பாதிப்பு உள்ளவர்களை அடையாளம் காணலாம்.

இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு. உள்ள (மன) நோய்க்கு உள்ளம் (மனம்) தான் மருந்து. அப்படி என்றால் எப்படித் தான் கையாள்வது? வெந்த புண்ணில வேல் பாய்ச்சாமல் எப்படிப் பேணுகிறோமோ, அப்படித் தான் நொந்த உள்ளத்தில (மனத்தில) நோவை ஏற்படுத்தாமல் பேண வேண்டும்.

உள (மன) நோவைக் கொடுத்தவர்களை விலக்கி வைக்கலாம் அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு/ இவ்வாறு நிகழாதெனப் பாதிப்புற்றவர் நம்பும் வகையில் உறுதிப்படுத்தலாம். வெற்றிடத்தை நோக்கிக் காற்று வீசுவது போல உள (மன) அமைதியைத் தரும் உறவை ஏற்படுத்த முயன்றால் நற்பயன் உண்டு.

உள்ளத்தில் (மனத்தில்) எழுதப்பட்டதை அழிக்க முடியாது. ஆயினும் அவற்றை நினைவூட்டாமல் பேண முடியும். அவ்வாறு நினைவூட்டாமல் பேணப் பல வழிகள் இருக்கின்றன. பாதிப்புற்றவர் நிலையறிந்து அவருக்கேற்ற வழிகளில் அவரது உளப் (மனப்) புண்களை ஏற்படுத்தும் காரணிகளை நினைவூட்டாமல் பேணுவதாலேயே உள (மன) நோய்களைக் குணப்படுத்த முடிகிறது.

புண்படுத்தியவர்கள் விலகி நிற்பதாலேயே, புண்பட்டவர்கள் பழசை மறந்து மகிழ்வாக இருக்க முடிகிறது. அதேபோல புண்படுத்திய சொல், செயல், கதை, நிகழ்வு, ஆள்கள் என எல்லாம் நினைவூட்டாமல் பேணுவதாலும் பழசை மீட்டுப் பார்க்காமல் செய்யலாம். ஆயினும் உள்ளத்தில் இருந்து பழசை அழிக்க முடியாதே!

அடுத்தவர் உள்ளத்தைப் (மனத்தைப்) புண்படுத்தாதீர்கள். ஒரு போதும் புண்பட்ட உள்ளம் (மனம்) உங்களை விரும்பாது. எவ்வளவோ நம்பும் வகையில் எதையும் எடுத்துச் சொல்லி உறவைப் பேண முயன்றாலும் பாதிப்புற்றவர் அவற்றை எல்லாம் நம்பக்கூடியவராக இருக்கமாட்டார். அடுத்தவரைப் புண்படுத்திய பின் முறிந்த உறவை எண்ணி அழுவதை விடப் புண்படுத்தாமல் இருப்பதே நன்று.

 

சிக்கலுக்கான எனது தீர்வுகள்

சிக்கல் (பிரச்சனை) என்று வந்துவிட்டால்
சிக்கலை (பிரச்சனையை) உண்டாக்குவோரும்
சிக்கலுக்கு (பிரச்சனைக்கு) உள்ளாகுவோரும்
சந்திப்பதைக் கண்டிருப்பியளே!

இவ்விரு பகுதியினரில்
ஒரு பகுதி அமைதி பேணினால்
மறுபகுதி நிறுத்துவதைக் கண்டிருப்பியளே!

இவ்விரு பகுதியினரில்
இவ்விரு பகுதியினருமே மோதிக்கொண்டால்
தீர்வின்றித் தொடருவதைக் கண்டிருப்பியளே!

சிக்கலைச் சிக்கலாக எடுத்தால் தானே
சிக்கல் என்பார்கள்
சிக்கலைப் படிப்பாகக் கருதினால் தானே
தீர்வினைக் கற்பார்கள்
சிக்கலுக்குத் தீர்வு தேடும் போதே
இப்படியும் இருக்கென்பதைக் கண்டியளோ!

அமைதி வலுத்தால் தீர்வு கிட்டும்
மோதல் வலுத்தால் தீர்வு கிட்டாதே
இதுவே எனது தீர்வு கண்டியளோ!

இந்த
என் தீர்வுக்குப் பெறுமதியில்லைக் காணும்
அந்த வள்ளுவர்
“எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு. (467)” என்று
சொன்னாரே – அந்தத்
தீர்வே பெறுமதியானது என்பேன்!

குறிப்பு: சிக்கல் (பிரச்சனை) வந்த பின் எண்ணுவதை விட ஒவ்வொரு செயலிலும் இறங்கு முன் சிக்கல் (பிரச்சனை) வந்துவிடாமல் எண்ணிக்கொள்வதே எனது தீர்வாகும். இதற்குச் சரியாக முடிவெடுக்கப் பழகுங்கள்.
https://mhcd7.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

உடல் நோய்கள் பல, நாம் உணவு உட்கொள்ளும் முறைகளில் தங்கியிருக்கிறது. அதனை அறிந்துகொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள். via மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்.

உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…

உறவுகளே!
மருத்துவரும் நம்மைப் போலத் தான்…
மனித உடலைச் சீர் செய்பவரும் அவரே…
அவரிடம்
நமது உடலைக் காண்பிப்பதில்
ஏன் முகம் சுழிக்க வேண்டும்?
சொன்னால் நம்ப மாட்டியள்…
எனது ஆணுறுப்பில் புண் வந்துவிட்டது…
அருகிலுள்ள மருத்துவமனையில்
அழகான, இளமையான
பெண் மருத்துவர் தான் இருக்கின்றார்.
எனது ஆணுறுப்பை
பெண் மருத்துவரிடம் காட்டினால் – எனது
மதிப்புக் குறைந்துவிடும் என அஞ்சினால்
எனக்குச் சாவுதான் பரிசாகக் கிட்டியிருக்குமே!
ஆனால்,
எனது ஆணுறுப்பை – குறித்த
பெண் மருத்துவரிடம்
நான்கு முறைக்கு மேல் காட்டியிருப்பேன்
ஏன்?
எனது ஆணுறுப்பில் வந்த புண்
மாறவேண்டும் என்பதற்காக…
இறுதியில் – எனது
ஆணுறுப்பில் வந்த புண் மாறிவிட்டது…
புண்ணுக்குக் காரணமே
நீரிழிவு நோய் தான்!
உடலில்
குளுக்கோசின் அளவு கூடியதால் – அது
சலத்துடன்(Urine) வெளியேறியதாம் – அவ்வாறு
சலத்துடன்(Urine) வெளியேறுவதால்
ஆணுறுப்பின் முன்மேற்றோலில் பாதிப்பு ஏற்பட
புண் தோன்றுவதாகக் கூறி
நீரிழிவைக் கட்டுப்படுத்தியதும்
புண் மாறியதாக – குறித்த
பெண் மருத்துவர் விளக்கமளித்தாரே!
பெண் மருத்துவரிடம்
எனது ஆணுறுப்பைக் காட்டினால்
என்னை மதிக்க மாட்டாரென
அஞ்சியிருந்தால் – இந்த
உண்மையை உங்களுக்குச் சொல்ல
நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேனே!
உறவுகளே
பால் நிலை வேறுபாட்டைக் கருதியோ
மதிப்புக் குறைந்து போய்விடும் என அஞ்சியோ
மருத்துவரிடம் நாடி உதவி பெறாவிடின்
எந்தக் கடவுள் வந்தாலும்
உங்களைக் காப்பாற்ற இயலாதே!
எடுத்துக் காட்டாக
அழகிய பெண்ணொருத்தி – தனது
மார்பகத்தில் (Breast) தோன்றிய
சிறு காயைக்/ கட்டியைக் கூட
ஆண் மருத்துவரிடம் காட்டினால்
தன் அழகுக்கு இழுக்கு வருமென அஞ்சி
தானாக மாறுமெனக் காலம் கடத்தினாளே!
காலப் போக்கில்
மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) வந்து – குறித்த
அழகிய பெண் சாவடைந்தாளே!
இப்படித்தான்
அழகிய பெண்ணொருத்தி
தனது பெண்ணுறுப்புக்குக் கிட்ட
அடிக்கடி கையை நீட்டி சொறிந்ததை
திருமண நிகழ்வொன்றில் பார்த்தேன்…
“என்னம்மா? – இது
உங்களுக்கே சரியா?” என்று
கேட்ட போது தான் தெரிந்தது…
பெண்ணுறுப்பருகே
இருபக்கத்திலும் கடியாம்…
வேப்பிலை அரைத்துப் பூசியும்
குறையவில்லையாம் என்றாளே!
இதெல்லாம்
உடைகளால் ஏற்படும் தொற்றுத் தான்
உடனடியாகவே
மருத்துவரிடம் காட்டுங்கள் என்றேன்…
மறுநாள் – அப்பெண்
என் வீட்டிற்கே வந்துவிட்டாளே!
குப்புசாமி மருத்துவரிடம் காட்டியதால்
“இலகுவில் பெண்ணுறுப்பில்
தொற்றுகள் ஏற்பட வாய்புண்டெனக் கூறி
உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்
தொற்றுகள் – பிற
நோய்களையும் ஏற்படுத்தும்” என்று கூறி
அவர் கொடுத்த மருந்தால்
தனக்கு நோய் குணமாயிற்று என்றாளே!
மருத்துவரை நாட வைத்த
எனக்கு நன்றி சொல்லவே
என் வீட்டிற்கு – தான்
வந்ததாகச் சொன்னாளே!
உறவுகளே!
மருத்துவரும் நம்மைப் போலத் தான்…
மனித உடலைச் சீர் செய்பவரும் அவரே…
அவரிடம்
நமது உடலைக் காண்பிப்பதில்
ஏன் முகம் சுழிக்க வேண்டும்?
அவரிடம்
எமது நோய் பற்றிய
உண்மைகளை எடுத்துக் கூறுவதால்
என்ன தான் மதிப்புக் குறையப் போகிறது?
உறவுகளே!
நோய்கள் அணுகாமல் உடலைப் பேணுங்கள்…
நோய்கள் அணுகினால்
உடனுக்குடன் மருத்துவரை அணுகி
சாவிலிருந்து விடுபட்டுக் கொள்ளவும்
நீண்ட ஆயுளுடன் வாழவும்
முயற்சி செய்யுங்களேன்!

திட்டமிட்டால் தானே மகிழ்வான வாழ்வு

ஆண், பெண் வேறுபாட்டை
அறிய முயன்ற அகவையிலே
வரவையும் செலவையும் மறந்தேன்!
இளமை துள்ளி விளையாடும் வேளை
எதிர்காலத்தை மறந்தேன்!
மணவாழ்க்கை அமைந்த வேளை
துணைவியைப் பார்த்தேனே தவிர
இணைந்து வாழும் வேளை தான்
வாழத் தேவையானதை
தேடிவைக்க மறந்ததை நினத்தேன்!
வாழ்க்கையில்
ஏதேதோ சந்தித்த வேளை
எதை எதையோ மறந்த பின்
முகம் கொடுக்கும் வேளை தான்
முழி பிதுங்கி நிற்கிறோமே!
இவ்வளவும் இருந்திருந்தால்
இப்படி நிகழுமென அறிந்திருந்தால்
நாம் எப்படியோ
மகிழ்வாக வாழ்ந்திருப்போமென
நினைப்பதை நிறுத்திவிட்டு,
நாளைக்கு
மகிழ்வாக வாழ்வதற்கு வேண்டியவற்றை
இன்றைக்கே
அழகாக ஒழுங்குபடுத்த
மறக்காமல் இருந்தால் போதாதா?
திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும்
செயலாற்றலுக்குப் பக்கத்துணையே
நிறைவான செயலாற்றலே
மகிழ்வடையப் பக்கத்துணையே
மகிழ்வான வாழ்க்கையே
நெடுநாள் வாழ மருந்து!

காதல் முறிவு (Love Break) ஆகாமல் இருக்க…

இன்றைய இளசுகள் காதல் என்பது என்னவென்று தெரியாமல் காதலித்தால் அவர்களுக்கு அகவை காணாது என்பேன்.
இன்றைய இளசுகள் காதல் என்பது என்னவென்று தெரிந்து காதலித்தாலும் அவர்களுக்குக் காதல் முறிவு (Love Break) வந்தால் அவர்களிடம் அறிவில்லை என்பேன். காதல் முறிவு (Love Break) ஆகாமல் இருக்க எப்படியான அறிவு வேண்டும்? கீழுள்ள வரிகளைப் படித்தால் புரியும் என்பேன்.

ஆண்களே – தங்கள்
காசுப்பை வெற்றுப்பை ஆனால்
காதலா – நான்
உங்களை – அந்த
எண்ணத்தில் பார்த்ததே இல்லை
நீங்கள்
எனக்கு அண்ணை/தம்பி மாதிரின்னு
பெண்களே – உங்களை
கழட்டி விட்டிடுவாங்களென்று
சொல்ல வந்தேன்!

பெண்களே – தங்களை விட
பணக்காரியோ அழகியோ அகப்பட்டால்
காதலா – நான்
உங்களை – அந்த
எண்ணத்தில் பார்த்ததே இல்லை
நீங்கள்
எனக்கு அக்கா/தங்கை மாதிரின்னு
ஆண்களே – உங்களை
கழட்டி விட்டிடுவாங்களென்று
சொல்ல வந்தேன்!

மேலுள்ள வரிகளில் ஒளிந்திருக்கும் உளவியல் என்னவென்று கண்டுபிடித்தாச்சா? ஒவ்வொருவரும் உள்நோக்கம் ஏதாவது ஒன்றை வைத்துத் தானே பழகிறாங்க… அதனைக் கண்டுபிடிக்கும் அறிவு இல்லாமையே காதல் முறிவு (Love Break) ஏற்படக் காரணம் ஆகிறது என்பேன். குறுகிய காலப் பழக்கத்தில் காதல் (Love) ஏற்பட்டால் இந்நிலை தான் முடிவு.

நீண்ட காலப் பழக்கத்தில் காதல் (Love) ஏற்பட்டுக் காதல் முறிவு (Love Break) ஏற்படக் காரணம் ஒருவர் எதிர்பார்ப்பை அடுத்தவர் அறிந்து கொள்ளாமையே! ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் எதிர்பார்ப்பைச் சரி செய்திருந்தால் ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் அதிகரிக்கும் நம்பிக்கை வலுவடையும் காதல் முறிவு (Love Break) ஏற்பட வாய்ப்பு இருக்காது. அப்படியென்றால் காதலிக்க முன்னர் ஆளை ஆள் படிக்க வேண்டும்.

தற்கொலையா? ஜயோ… வேண்டாம்!

“வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ” என்றெழுதிய பாவரசரின் எண்ணத்தில் மனிதன் இறந்த பின சாவு ஊரவலத்தை கண்;டது போல அல்ல அந்நிலையில் (சாவடைந்த ஒருவரின் நிலையில்) உறவுகளின் நிலையை எண்ணிப் பார்த்திருக்கிறார். சாவடைந்த ஒருவரால் இக்காட்சியைக் காண முடியுமா? இது இயற்கையின் பணி என்று தானே எண்ணி நாமும் வாழ்கிறோம். ஆனால், நம்மில் சிலர் இப்பாடல் வரியில் குறிப்பிட்ட சூழலில் வாழ்வதாக எண்ணித் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அதாவது, தமது எண்ணங்களுக்கோ விருப்பங்களுக்கோ ஏற்றால் போல உறவுகள் இல்லாத வேளை தற்கொலையை நாடுகிறார்கள். சூழல் எதிர்பார்க்கும் அளவுக்கு வாழ்ந்தோமோ இல்லையோ தமக்கு வேண்டியதைச் சூழலிலிருந்து பெற முடியாத வேளை தற்கொலை எண்ணம் சிலரது உள்ளத்தில் தோன்றிவிடுகிறது. அதாவது தன்னம்பிக்கை முற்றலுமின்றி பிறரில் தங்கியிருந்தால் தான் இந்நிலை ஏற்படுகின்றது. அதேவேளை தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற (சூழலுக்குப் பதிலளிக்க முடியாத போது) இயலாத போதும் சூழலில் தலையை நிமிர்த்தி நடைபோட முடியவில்லையெனத் தற்கொலையை நாடுகிறார்கள்.

எனவே இவ்வாறான நிலையில் சாவைத்தவிர வேறு பயனில்லை என்று பேச்சுத் தொடுப்பவர்கள் இருந்தால் அல்லது சூழலை விட்டுத் தூர விலகித் தற்கொலை செய்யக்கூடிய சூழலை நாடுகிறாரெனத் தெரிந்தால் அவர்களை உளநல மருத்துவரிடம் காட்டுங்கள். உளநல மருத்துவர் அதற்கான சிகிச்சை அளித்து இயல்பு வாழ்க்கைக்கு அவர்களைத் திருப்புவார்.

ஏன் இப்பேற்பட்டவர்கள் தற்கொலையை நாடுகிறார்கள்? அவர்கள் இருந்த இருப்பைத் தொடர்ந்து பேண முடியாத துயரம் தான். தமது தவறுகளால் தான் அல்லது சிறந்த வழியில் செல்லாததால் தான் தாம் இடையூறுகளையும் இழப்புக்களையும் சந்திப்பதாக உணர மறுக்கிறார்கள். அதற்குக் காரணம்; இதை செய்தால் இன்னது கிடைக்குமென அதிகம் நம்புவதே.

தேர்வில் சிறந்த புள்ளி எடுக்காட்டிப் பிறர் மதிக்கமாட்டினம் என நம்பி

காதலித்துத் தோல்வியுற்றால் பிறர் தம்மை விரும்பாயினம் என நம்பி

கையாடல் செய்வதையோ கையூட்டல் பெறுவதையோ கண்ணுற்ற மக்கள் மத்தியில் எடுப்பாக உலாவ முடியாதென நம்பி

சோர்வு (நட்டம்)/ கடன் செலுத்த முடியாமை காரணமாக முகம் சுளித்துத் துன்பப்படுவதை எண்ணி

இளம் பெண்கள் மாற்றான் கற்பை அழித்தால் தன்னை மணம் முடிக்க எவரும் முன்வராயினும் என நம்பி

இவர்களுக்கு
“வெற்றி வேணுமா
போட்டுப்பாரடா எதிர்நீச்சல்” என்ற
பாடல் வரியைத்தான் கூற முடியும்.

நேராகவே எங்கட பலத்தை வைத்து முயற்சி எடுத்தால் எங்கட எண்ணம் நிறைவேறும் என்பது பொய். எதிராகவும் சிந்திக்க வேண்டும். எங்கட எண்ணத்தை நிறைவேற்றப் பாவிக்கின்ற எங்கட பலத்துக்குக் குறுக்கே நிற்கின்ற அத்தனைக்கும் முகம் கொடுக்க வேண்டி வருமென எண்ணிச் செயற்பட்டால், நம்பி எதிர்நீச்சல் போட்டு வெற்றியும் காணலாம். நாம் காணும் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே, நம்ம சூழல் எம்மைச் சூழ்ந்து மொய்க்குமே! அப்போது தற்கொலையா? ஜயோ… வேண்டாமெனவும் எதிர்நீச்சல் போட்டு உலகளவு மகிழ்வை வாழ்ந்து பெறலாம் எனவும் எண்ணத் தோன்றும்.

நம்பிக்கையே நல்மருந்து என்பேன்!

நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நம்புவீர்களா? அதே போல நம்பிக்கை உள்ளவர்கள் சாவைக் கூட நெருங்க விடாமல் ஆயுளையும் பெருக்குவார்களே! நம்பிக்கை பற்றிச் சிறு கருத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.

திடீரென நோயுற்ற ஒருவரை அமைதிப்படுத்தி, கீழ் குறிப்பிட்டவாறு ஒரு உளநல மதியுரைஞர் குறித்த நோயாளியை மருத்துவரிடம் சேர்ப்பிக்கிறார்.

“பனங்கட்டியைக் கொடுத்து; இந்த மருந்தை உண்ணுங்கள் உங்களுக்கு நோய் குணமாகிவிடும்” என்று சிலருக்கு வழங்கி நோயின் தாக்கத்தைக் குறைத்துள்ளனர். இங்கு பனங்கட்டி போலி மருந்தாகக் கையாளப்பட்டுள்ளது. ஆயினும், உண்மை மருந்தாக நம்பிக்கை பயன்பட்டுள்ளது.

நமது ஆழ் உள்ளத்தில்(மனத்தில்) எதை நினைக்கிறோமோ, அது உடலின் செயலாகிறது. “நோய் குணமாகிவிடும்” என்று ஆழ் உள்ளத்தில்(மனத்தில்) நினைவுபடுத்தத் தூண்டியதால், உடலின் செயலால் இங்கு நோயின் தாக்கம் குறைந்துள்ளது,

இம்முறை நோயாளியை மருத்துவரிடம் கொண்டு செல்லும் முன் பாவிக்கப்படுகிறது. நோயின் தாக்கம் அதிகரிக்கும் முன் மருத்துவர் நோயாளியைக் குணப்படுத்த இம்முறை உதவுகிறது. விஜயகாந் படமொன்றிலும் இவ்வாறான காட்சி வருகிறது.

நம்பிக்கை
மருந்தாக மட்டுமன்றி
ஒவ்வொருவர் வெற்றிக்கும்
வழிகாட்டும்…
ஒவ்வொருவர் முயற்சிக்கும்
துணைநிற்கும்…
நாம்
உள்ளத்தில் பேணும் நம்பிக்கை தான்
எம்மை இயக்குகிறது!
நல்லதே நடக்கும்
நோயொன்றும் நெருங்காது
எதிலும் வெற்றியே கிட்டும்
விருப்பங்கள் நிறைவேறும் என்றே
ஆழ் உள்ளத்தில்(மனத்தில்)
படம் போலப் பதியும் வண்ணம்
ஒவ்வொரு நாளும் நினையுங்களேன்…
அவை
உடலின் செயலாக மாற
உங்கள் வாழ்வில்
இடம் பெறுவதை உணர்வீர்களே!
நோய் நெருங்காமல் நெடுநாள் வாழவும்
எங்கும் எதிலும் எப்போதும்
வெற்றியை நோக்கி நெருங்கி விடவும்
நம்பிக்கையே நல்மருந்து என்பேன்!

“நம்பிக்கை என்னும்
நெம்புகோலால்
உலகை
உருட்டலாம் வாருங்கள்” என்று பாவலர் வைரமுத்து கூறுவது போல; நானும் உங்களை அழைக்கின்றேன். உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை இருப்பின்; உங்களால் முடியாதது எதுவுமே இருக்காது. உள்ளத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துவோம், நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முயற்சிப்போம்.