Category Archives: உளநலக் கேள்வி – பதில்

வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா?

“வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா?” என்பது நல்ல கேள்வி தான். “வெற்றி பெறப் படிக்கவும் வேண்டும்!” என்பது எனது கருத்து.

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது அறிஞர் ஒருவரின் வழிகாட்டல். அதாவது, வெற்றி பெற முயற்சி எடுத்தால் வெற்றி கிட்ட வாய்ப்பு உண்டு. எந்தக் குறிக்கோளை அடைந்தால் வெற்றி கிட்டுமோ, அந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழியைப் படித்து முயற்சி எடுத்தால் வெற்றி கிட்டும் வாய்ப்பு அதிகமாகும். எனவே, வெற்றி பெறப் படிக்க வேண்டும்!

உளவியல் நோக்கில் குறிக்கோளை அடைவதற்கான வழியை நெருங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நேர் (Positive) என்றும் உங்கள் முயற்சிகளுக்குக் குறுக்கே எதிர்ப்படுவன (எடுத்துக்காட்டாகத் தடைகள்) எல்லாம் மறை (Negative) என்றும் கருதலாம். அதாவது, நேர் (Positive) ஆகத் தன்னம்பிக்கையைக் கருதினால், தன்னம்பிக்கையைத் தளர வைக்கும் எல்லாம் மறை (Negative) ஆகும். எனவே, நேர் (Positive) ஆகவும் மறை (Negative) ஆகவும் எண்ணித் தடையின்றிக் குறிக்கோளை அடைய முயற்சி எடுத்தால் வெற்றியை உறுதிப்படுத்தலாம்.

உள்ளத்தை அடி உள்ளம் (மனம்), மேல் உள்ளம் (மனம்) என இரு பகுதிகளாகக் கருதினால்; மேல் உள்ளம் (மனம்) எண்ணமிட அடி உள்ளம் (மனம்) அதனைச் சேமிக்கும். மேல் உள்ளத்தில் படக்காட்சி போன்று குறிக்கோளை அடைவதற்கான வழியையும் முயற்சிகளையும் எண்ணிக்கொள்ளவும். இவ்வாறு பலமுறை எண்ணும் போது அவை அடி உள்ளத்தில் பதிந்துவிடுகிறது. வெற்றியை நோக்கி நடைபோடுகையில் அடி உள்ளத்தில் பதிந்தவை குறிக்கோளை அடையத் துணை நிற்பதால் வெற்றி கிட்ட வாய்ப்பு நெருங்கும்.

இவ்வாறான அடிப்படை எண்ணக்கருக்களை வைத்து வெற்றி பெறப் படிக்கவென பல நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும், தன்னம்பிக்கையைப் பெருக்கப் பல தன் (சுய) முன்னேற்ற நூல்களும் வெளிவந்துள்ளன. நாளேடுகளிலும் ஏழல் (வார), மாத ஏடுகளிலும் வெற்றி பெறப் படிக்கப் பல பதிவுகள் வெளிவருகின்றன. இவற்றை எல்லாம் படிக்காமல் வள்ளுவர் ஆக்கிய ஏழு குறள்களைப் பொருளறிந்து படித்தால் வெற்றி கிட்டுமென அறிஞர் என்.கணேசன் தெரிவிக்கின்றார். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அவற்றைப் படிக்கவும்.

வெற்றிக்கு ஏழு குறள்கள்!

Advertisements

உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி?

உளநல மதியுரைஞர்களிடம் வழமையாகக் கேட்கப்படும் கேள்வி.

உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி?.

via உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி?.

படம்

கருக்கலைப்பும் சிசுக்கொலையும் தேவைதானா?

இன்றைய உலக நடப்பில் அதிகம் பேசப்படும் செய்தியாக கருக்கலைப்பும் சிசுக்கொலையும் காணப்படாமல் இருந்தாலும் மறைமுகமாக இடம்பெறுகிறதே! போர் சூழலில் இவை இடம் பெறலாம். இலங்கையில் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கிறது. ஒரு குழந்தைக்குக் கூடுதலாகப் பெற்றால் அரச ஒறுப்புக்கு(தண்டனைக்கு) உட்பட வேண்டியிருப்பதால் சீனாவிலும் இடம்பெறுகிறது. இந்தியாவில் பெண் பிள்ளை பிறந்தால் குப்பைத் தொட்டியில் போடுவதாய் செய்தி ஒன்றில் படித்தேன். இவை பற்றி அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. கருக்கலைப்பும் சிசுக்கொலையும் தேவைதானா? என்பதற்கு உரிய பதிலை மட்டும் கருத்திற் கொள்க.

ஏன் கருக்கலைப்பும் சிசுக்கொலையும்?
ஒழுக்கமுள்ளவர்கள் தவறு செய்ய மாட்டார்களே! அம்மாவுக்கு ஒன்று அப்பாவுக்கு ஒன்று போதுமென்றா? தவறான எண்ணங்களில் பழகியதாலா? இதே போன்று பல கேள்விகள் எழுப்பப்படலாம். ஆயினும், ஏதோ காரணம் கூறி நம்மாளுகள் கருக்கலைப்பும் சிசுக்கொலையும் செய்கிறார்கள். மத வழிகாட்டலின் படி குற்றம்/தவறு என்கிறார்கள். “ஆண்டவர் படைத்த உயிரை அழிக்க, நமக்கு ஆண்டவர் அனுமதி அளிக்கவில்லை.” என்பது பொதுவான மதவாதிகளின் கருத்தாகும்.

“குழந்தை வேண்டாமென்றால் மருத்துவர் கூறும் வழிகாட்டலின்படி வாழலாம்.” என்பது எல்லோரினதும் ஒரே கருத்தாகும். பள்ளிக்கூடங்களில் இத்தகைய தவறு நிகழாமல் இருக்கவே பாலியல் கல்வி கற்பிக்கிறார்கள். அரசு திருமண அகவை(வயது) எல்லையை வகுத்தது ஏன்? ஏன் எங்கள் இளசுகளை மக்களாயம்(சமூகம்) கண்காணிக்கிறது? எல்லாம் இவற்றைக் கட்டுப்படுத்தவே!

கருக்கலைப்பும் சிசுக்கொலையும் செய்வதால் நன்மை உண்டா?
கருவுறாமல் தம்மைக் காத்தால் கருக்கலைப்புத் தேவையில்லை. கருவுற்றால் 90 நாட்களுக்குள் (3 மாதத்திற்குள்) தகுந்த மருத்துவரின் துணைகொண்டு கருக்கலைப்புச் செய்யலாம். ஆனால், மருத்துவருக்குப் பொய் கூறியோ தகுந்த மருத்துவரின் உதவியை நாடாமலோ பெண்கள் கருக்கலைப்புச் செய்வதால் தாமே உயிரிழக்க நேரிடலாம்.

இப்பின்விளைவை உணர்த்திக் குறித்த பெண்ணின் பெற்றோர், கருக்கலைப்புச் செய்யாமல் குழந்தையைப் பெற வைக்கிறார்கள். குழந்தையைப் பெற்றதும், மக்களாயம்(சமூகம்) குழந்தையின் அப்பா பெயரைக் கேட்டால் பதிலளிக்க முடியாமையால் தான் சிசுக்கொலை செய்கிறார்கள்.

குழந்தையைப் பெற்ற பின்னர், சாக வைத்து நிலத்திற்குள் புதைப்பதையோ உயிரோடு குப்பைத் தொட்டிக்குள் இடுவதையோ உயிரோடு பற்றைக் காட்டுக்குள் வீசுவதையோ எனப் பல வழிகளைக் கையாண்டு பெண்கள் தப்பிக்க முனைகிறார்கள். குழந்தை இன்றி அலையும் பெற்றோருக்கோ குழந்தைகள் காப்பகத்திலோ உங்கள் குழந்தைகளை வழங்கி சிசுக்கொலையை நிறத்தலாமே!

ஒழுக்கம் என்பது பேச்சில் இருந்தால் போதாது, செயலிலும் வேண்டும். தவறு செய்தால் தப்பலாம் என்று கழிவு உறுப்புகளின் செயலைச் சோதிக்கப் போவதும் முட்டாள் செயலே. ஆணும் பெண்ணும் பாலியல் உறவு வைத்தால் உயிர் ஒன்று கருவாகும் எனத் தெரிந்து கொண்டும் ஒழுக்கத்தை மீறலாமா? எல்லாவற்றுக்கும் உள்ளத்தில்(மனதில்) உறுதி வேண்டும்.

“பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போடலாம் வாங்க…” என்ற தலைப்பில் கடையில் விற்கின்ற பொத்தகங்களை வாங்கிப் படித்துத் தவறு செய்ய வேண்டாம். எனவே, மருத்துவரின் நேரடி வழிகாட்டலில் உங்கள் எண்ணங்களை அடையலாம். தவறுகள் செய்வதற்கல்ல, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்வே.

இனி வரும் காலங்களில், கருக்கலைப்பும் சிசுக்கொலையும் இடம் பெறாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இது பற்றிய ஐயங்களை இத்தளத்திலேயே பரிமாறுங்கள்.

உங்கள் ஆயுளை நீடிக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஆயுளை நீடிக்க முடியாது என்பது உங்கள் கருத்து. அதனை நானும் ஏற்கிறேன். ஆனால், ஆண்டவன் வழங்கிய ஆயுளைச் சிலர் குறைக்கிறார்களே! அவ்வாறு குறைக்கின்ற ஆயுளை நீடிக்க அதாவது கூட்டிக்கொள்ள என்ன செய்யலாம்.

1. உணவுக் கட்டுப்பாட்டைப் பேணுதல்
2. புகைத்தல், குடிப் பழக்கத்தைத் தவிர்த்தல்
3. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் வாழ்தல்
4. வியர்வை சிந்த உடற் பயிற்சி செய்தல்
5. உள்ளத்தில் அமைதியைப் பேணல்
6. சிக்கல்களை(பிரச்சனைகளை) உடனடியாகத் தீர்த்து மகிழ்வடைதல்
7. நோய் வந்தால் கை மருத்துவம் பார்க்காமல் மருத்துவரை நாடுதல்

எனக்குத் தெரிந்த ஆறேழைச் சொன்னேன். உங்கள் ஆயுளை நீடிக்க; இன்னும் எத்தனையோ முயற்சிகள், பயிற்சிகள் இருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லித் தாருங்கோவேன். நானும் உங்கட உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் பாவித்து ஆயிரம் ஆண்டுகள் வாழப் பார்க்கிறேன்.

காதலிக்காமல் இருக்கலாமோ?

என் வாழ்வில் இயற்கையில் காதல் அமையவில்லை. என் நண்பர்கள் ஒவ்வொரு வடிவுக்கு அரசியையும் காட்டிக் காதலிக்கச் சொல்வாங்கள். திரைப்படக் கதை கூறிக் காதலிக்கப் படிப்பித்துப் பார்த்தும் சரிவரேல்லை. காதல் இயற்கையாக வரவேணும் என்று சொல்லிப்போட்டு நானும் பேச்சுத் திருமணம் தான் செய்தேன். நீங்களும் என்னைப் போல பேச்சுத் திருமணம் செய்ய இருந்தால் காதலிக்காமல் இருக்கலாம்.

நான் திருமணமாகிய பின், தோழி ஒருத்தி விபத்துக்குள்ளானாள். அவ்விடத்தில் அவளுக்கு உறவென்று சொல்ல எவருமில்லை. நானே அவளுக்குரிய எல்லாப் பணிகளையும் செய்தேன். மூன்றாம் நாள் சுகமாகியதும் மருத்துவ மனையால வெளியேற்றியதும் வீட்டிலும் சேர்ப்பித்தேன்.

பின், நடைபேசியில் இடை இடையே கதைத்து வந்தாள். ஒரு நாள் நேரிலே சந்தித்து “உங்களைப் போல நல்ல ஆளைத் தேடியும் பிடிக்கேலாது. நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருக்கலாமோ?” என்று கேட்டாள். திருமணம் செய்தவரைக் காதலிக்கக் கூடாதென ஆற்றுப்படுத்தினேன்.

இந்நிலையில் “நான், எப்படி ஆற்றுப்படுத்தி இருப்பேன்?” என்றும் “நான், ஏன் காதலிக்காமல் இருந்தேன்?” என்றும் நீங்கள் கேட்கலாம். “என்னையும் நம்பி, ஒருத்தி தலையை நீட்டினாள்; நானும் அவளுக்குத் தாலியைக் கட்டினேன். அவளையும் மீறி, உன்னைக் காதலித்தால்; அவளின் நிலை என்னாகும். அவளிற்கு நாற்பது காசு வருவாய்; எனக்கோ நாலு காசு வருவாய்; நான் உன்னைக் காதலித்தால் என் நிலைமை என்னாவாகும்.

நீ விரும்பினால், உனக்கோ எத்தனையோ ஆண்கள் வலிய வருவாங்கள்; விரும்பிய ஒருத்தரைக் கட்டலாமே! அதனால், அடுத்தவருக்குத் தீங்கில்லையே! எவரும் எதையும் செய்யலாம்; ஆனால், அவை அடுத்தவருக்குத் தீங்கு விளைவிக்காதிருக்க வேண்டும். அப்போது தான் உள்ளத்தில் உறுத்தல் ஏதுமிருக்காது; மகிழ்சியை மட்டும் அடையலாமே!” என்று கூறி அவளை ஆற்றுப்படுத்தியதோடு, நான் எவளையும் காதலிக்காமையையும் சொல்லி முடிக்கிறேன்.

ஆழமறியாமல் காலை விட்டது போல, அந்தப் பெண் “உங்களைப் போல நல்ல ஆளைத் தேடியும் பிடிக்கேலாது. நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருக்கலாமோ?” என்று கேட்டது சரியா?

அவள் இளகிய உள்ளம் கொண்டிருந்தால், நோயாளி என்று அன்பு காட்டும் எவரையும் தன்னை விரும்புவார் என நம்பியிருக்கலாம். நோயுற்ற வேளையாயினும் பிற செயலின் போதும் குறித்த ஒருவரின் உதவி முக்கிய பங்காற்றி இருப்பின் அந்தாளை விரும்பலாம். ஆனால், மணமுடித்த ஒருவர் மீது விருப்பங்கொள்வதை ஏற்க முடியாது. நாம் தமிழர். தமிழர் பண்பாட்டில் இதற்கு இடமில்லை.

நீண்ட நாள் பழகி இருந்தும் I Love You சொல்லாமல் இருந்தும் ஒருவர் உதவியில் இன்னொருவர் நன்மை அடைந்திருந்தால் அதனை அவர் அடிக்கடி நினைவூட்டுகையில் குறித்த ஆளின் மீது இருந்த விருப்புக் காதலாக மாறலாம். மறுமுனையில் உள்ளவருக்கு வெளிப்படுத்தினால்; அவரும் ஏற்றுக்கொண்டால் காதலிக்க முடியும். இல்லையேல், ஒரு தலைக் காதல் தான்.

ஆனால், திருமணம் செய்யாத நீங்கள் இப்படியான சூழலில் காதலிக்காமல் இருக்கலாமோ? இயற்கையாக அமையாத போது கண்டிப்பாகக் காதலிக்காமல் இருக்கலாம்! ஆனால், இயற்கையாக அமையின் காதலிக்காமல் இருக்கலாமோ?

ஊரே ஒன்றுகூடி ஏற்குமென்றால் காதலிக்கலாம் தான்! அதாவது மணமானால் குடும்பத்தைக் காக்கும் வருவாய்; ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம்; இருவரின் பெற்றோர்களது இணக்கம் இருந்தால் காதலிக்கலாம் தான்! அப்படியாயின் மகிழ்வான வாழ்வும் அமையுமே!

இவற்றையெல்லாம் கடந்தும் பாலுணர்வுத் தூண்டலால் ஈர்க்கப்பட்டுக் காதலித்தோர் பின் பிரிகின்றனர். பிரிந்த பின்னே தங்கள் தவறுகளை உணருகின்றனர். இவற்றையெல்லாம் கடந்தும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்தோர் இருவரின் பெற்றோர்களது உறவுகளைப் பிரிந்து; அவர்கள் காணாத தொலைவில் வாழ்கின்றனர். பெற்றோர்களது உறவுகளைப் பிரிந்து வாழ முனைந்தவர்களும் முழு மகிழ்வின்றி வாழ்வதைக் காணலாம்.

ஒருவர் நிலையை ஒருவர் அறிந்தும் ஒருவர் உள்ளத்தை ஒருவர் புரிந்தும் வாழ்வதற்கான வளங்களைப் பேணியும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தும் காதலித்தால் காதலும் வரும்; மகிழ்வான வாழ்வும் அமையும். எதற்கெடுத்தாலும் இருவரது உள்ளத்திலும் ஒற்றுமை இருப்பின் (அதாவது, இருவரது முடிவும் ஒன்றாயின்), உண்மைக் காதலை உடைக்க முடியாதே!

 

 

நீரிழிவும் ஆணுறுப்பு இயங்காமையும்

நண்பர் ஒருவர் தனது ஆணுறுப்புச் சோர்வாகவும் கையடிக்கவோ மனைவியோட உடலுறவு கொள்ளவோ ஒத்துழைக்காமல் இயங்க மறுப்பதாகவும் எனக்குச் சொன்னார். இதனால், உள்ளம் நொந்து தனது துயரை என்னுடன் பகிர நேர்ந்ததாகவும் அந்நண்பர் சொன்னார்.

எனக்குத் தெரிந்த (ஒன்றாகப் பள்ளியில் படித்த) தோழி கண்ணகியிடம் நண்பரை அழைத்துச் சென்றேன். அவளும் நண்பரை கையை நீட்டென்றாள்; ஊசி ஒன்றை மோதிர விரல் நுனியில் குத்தினாள்; கருவி ஒன்றில் வடிந்த செந்நீரை (குருதியை) நனைத்தாள்; முன்னூற்றி எண்பதில நிற்குது என்றாள்.


நண்பரோ எதுவும் தெரியாத அப்பாவியாக இருந்தான். எனக்கோ தோழி எதற்காக இதெல்லாம் செய்கிறாள் என்று புரியவில்லை. நமக்குள்ளே “என்னத்துக்கடா என்னத்துக்கடா” என்று ஆளைஆள் பார்த்துக் கேட்டவேளை, தோழியே உண்மை உடைத்து வைத்தாள்.

“செந்நீரில் (குருதியில்) குளுக்கோசின் அளவு அதிகரித்து இருப்பின் நீரிழிவு நோய் என்று சொல்வார்கள். இது உடலில் உள்ள இன்சுலின் சுரப்பு சுரக்கப்படாமையால் ஏற்படுகிறது. இது நேரடியாக எதுவும் செய்யாது.

ஆனால் பாலுணர்வைத் தடுத்தல், கண்ணை மறைத்தல், கைகால் விறைப்பு ,உடற் கலங்களை உருவாக விடாமல் தடுத்தல், வேகமாகச் செந்நீர் (குருதி) செல்லவிடாமல் தடுத்தல் என உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு முக்கிய ஊக்கியாக நீரிழிவு செயற்படுகிறது.

பாவற்காயைப் பிழிந்து நாளுக்கு ஒரு முறை ஒரு முடர் (வாய்)குடிக்கலாம். சிறு குறிஞ்சான் இலையை நறுக்கிச் சம்பல் போட்டுச் சாப்பிடலாம். வியர்வை வெளியேறக் கால் மணி நேரம் நாள்தோறும் பயிற்சி செய்யலாம். இனிப்புச் சேர்ந்த எதனையும் உண்பதோ குடிப்பதோ தவிர்க்க வேண்டும்.

எப்படியிருப்பினும் நீரிழிவு நோய் இருப்பது கண்டிறியப்பட்டதும் குறித்த நோயாளி மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது நல்லது. ஆகையால், அடிக்கடி வந்து செந்நீர் (குருதி) சோதனை செய்யுங்கள். விரைவில் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.” என்று தோழி விளக்கமளித்தாள்,

“எல்லாம் சரி தோழி, நண்பரின் நிலைக்குக் காரணம் என்ன?” என்று நானும் கேட்டேன். “நாடி, நாளங்களில் வேகமாகச் செந்நீர் (குருதி) செல்லாமையால் ஆணுறுப்பு விறைப்படையாது காணப்படுகிறது” என்று தோழியும் பதிலைத் தந்தாள்.

மூன்று வேளையும் ஒவ்வொரு குளிகை போடுமாறு கொஞ்ச வெள்ளைக் குளிகைகளைத் தந்து மூன்று நாளைக்குப் பின் வரச் சொன்ன தோழி, மேற்காணும் வழிகாட்டலையும் பின்பற்றுமாறு சொல்லி வைத்தாள்.

 

வாழ்வு அமையாவிடில் சாவதா?

சாவைத் தழுவ முயற்சி செய்தோர்; சாவைத் தழுவ முயற்சி செய்கின்றோர்; சாவைத் தழுவ முயற்சி செய்யவுள்ளோர் ஆகியோருக்காக “வாழ்வு அமையாவிடில் சாவதா?” என்ற கேள்விக்கு எனது சுருக்கமான பதிலைத் தருகின்றேன்.

வாழ்வு அமைவதெல்லாம் இறைவன் கையிலில்லை. சிலருக்குப் பெற்றோர் கையிலும் சிலருக்கு அவரவர் செயலாலும் நல்வாழ்வு அமையாமல் போகலாம். அதற்குச் சாவு தான் மருந்தென்றால் முட்டாள் முடிவு என்று தான் சொல்ல வேண்டும்.

பெற்றவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள், அவர்கள் விருப்பப்படி மணமுடிக்கிறார்கள். எதிர்பாராமல் இணை(தம்பதி)யர்களிடையே முரண்பாடுகள் தோன்றினால்; மணவிலக்கு(Divorce)ப் பெற்றால் இன்னொருவரை மணமுடிக்கலாம் அல்லது தனித்து வாழலாம், ஆனால் சாவடைந்தால் எவருக்கு என்ன தேட்டம்(இலாபம்)?

காதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான். வாழ்வில் அதுவும் நன்றாக, நம்பிக்கையுடன் நீண்ட நாள் பழகிய இரு உள்ளங்களும் கருத்தொருமிக்கக் காதல் வரலாம் அல்லது துன்பப்படும் வேளை அக்கறையாக உதவினால் கூட காதல் வரலாம். இயற்கையாக இவ்வாறு காதல் அமைந்தால் குறிப்புப்(Horoscope) பொருத்தம் பார்க்கவே தேவையில்லை. இது சோதிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது கடவுள் அமைத்த காதல். உண்மையானதும் நம்பிக்கையானதும் நல்வாழ்வை அமைக்கக்கூடியதும் எனலாம்.

நம்ம திரைப்படப்(Cinema) பாணியில காதலித்தும் பதின்ம அகவையில்(Teen Age) காதலித்தும் அழகின் ஈர்ப்பால் அல்லது பணம், பொன், சொத்தென மயங்கிக் காதலித்தும் சிலர் தங்கள் வாழ்வைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள்.

இயற்கையில் காதல் தோன்றாமல் “நான் உன்னைக் காதலிக்கிறேன்(I Love You)” என்று பல முறை சொல்லித்தான், அதுவும் தொல்லை தாங்காமல் உடன்படுவதாலும் செயற்கையாகக் காதலித்து மணமுடிப்பதால் “விருப்பம்(ஆசை) அறுபது நாள் ஈர்ப்பு(மோகம்) முப்பது நாள்” என்றபடி வாழ்ந்து முடிய “வாழ்க்கை கசக்குதையா… வர வர வாழ்க்கை கசக்குதையா…” என்று சில நாள் பாடலாம். இதன் பின் பிரிந்து வாழ்ந்தால் பரவாயில்லை. வாழ்வே வேண்டாமெனச் சாவை ஆயுதமாகக் கையிலெடுத்தால் எப்படி நல்வாழ்வை அமைப்பது?

நீங்கள் எந்தவொரு வழியிலும் வாழ்க்கை கசந்து போனால் சாவை மருந்தாக்காமல்; வாழ வேறு வழியில் முயற்சிக்கலாம். வாழ்ந்து தான் ஆகவேண்டும்; ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காட்ட முன்வாருங்கள்.

ஒரு வழி மூடப்பட்டால்; ஏழு வழிகள் திறக்கப்படலாம்(இது பைபிளில் இருப்பதாகப் பத்திரிகையில் படித்தேன்). சாவிற்கு மாற்று வழி கிடையாதா? ஏழு வழிகளில் ஒரு வழியிலாவது பயணிக்க இறங்கியிருக்கலாமே!

வாழ்க்கை என்பது கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் வழுக்கி விழுத்தும் சேறும் வெள்ளமும் நிறைந்தே இருக்கும். வாழ்க்கை என்பது போர்க்களம் தான்; போராடித்தான் வெல்லவேண்டும். போராட இறங்காமல் மகிழ்வான வாழ்வை எப்படி அமைக்கலாம். போராட அஞ்சி சாவை நாடுவது பிழை தானே!

நூறு ஆண்டுகள் வாழ்ந்து சாவடைந்தவர் கூட நூற்றுக்குப் பத்து விளுக்காடு(வீதம்) தான் மகிழ்வான வாழ்வைச் சுவைத்தார்களாம். இதனையும் பத்திரிகையில் தான் படித்தேன். மிகுதியை வாழ்வை முயற்சி செய்யாமலே சுவைக்காமல் விட்டிருக்கலாம்.

எனவே தான் காதல் தோல்வி அல்லது மணமுறிவு என்றதும் சாவை நாடுவதை விட முழுமையான வாழ்வை மாற்று வழிகளில் வாழ முன் வாருங்கள். எந்தவொரு சிக்கலு(பிச்சனை)க்கும் சாவு தான் முடிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்று வழிகளைத் தேடுவோம்; மகிழ்வான வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.