Category Archives: உளநலக் கேள்வி – பதில்

எங்கட இளசுகளே! இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே!

தினக்குரல் கேள்வி பதில்கள்- உடற்சோர்வு, ஒருபால் உறவு, சுயஇன்பம்
02/08/2016 Dr.M.K.Muruganandan ஆல்

கேள்வி:- கே.சு….. மட்டுவல
எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான். அத்தோடு அவனைவிட வயதில் மூத்த ஆண்களோடு தவறான உறவில் ஈடுபடுகின்றான். இதற்கு காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன?

இணைப்பு:

https://hainalama.wordpress.com/2016/08/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/

எனது புதிய தளம் பார்க்க வாங்க
http://www.ypvnpubs.com/

தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?

சென்ற பதிவில் பாலியல் (Sex) நோக்கில் மணமுறிவு (divorce) ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படித்த பின் இதனைப் படித்தால் பயனடையலாம் என நம்புகிறேன்.
மணமுறிவு வேண்டாமா? வேண்டுமா?

மேற்காணும் பதிவில் “ஐயம்!” என்ற தலைப்பின் கீழ் முறையற்ற உறவு பற்றிய எண்ணங்களும் மணமுறிவு (divorce) இற்கு வழிவிடலாம் எனத் தொட்டுக்காட்டியிருந்தேன். அதனால், “தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?” என்று எழுதலாம் என முன்வந்தேன்.

மக்களாய (சமூக) த்தில் ஒருவனுக்கு ஓருவள் என்ற ஒழுங்கை மீறுபவர்களைக் கீழ்த்தரமானவர்கள் என்று கணிக்கப்படுகிறது. அதேவேளை உடல்நலம் பற்றி எண்ணும் போது உயிர்கொல்லி (Aids) நோய் ஏற்பட இடமுண்டு என எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஆயினும் குடும்பநலம் பற்றி எண்ணும் போது மணமுறிவு (divorce) ஏற்பட இடமுண்டு என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி முறையற்ற உறவு வைத்துக்கொள்வோரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

எந்தெந்தச் சூழலில் முறையற்ற உறவு மேற்கொள்ள வழிகிட்டும் என அலசுவது அழகல்ல. ஆயினும், பாலுணர்வு மேலீட்டால் இருபாலாருமே முறையற்ற உறவில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது. அது பற்றி அலசுவதும் அழகல்ல. ஆயினும், முறையற்ற உறவால் ஏற்படும் பின்விளைவை அலசுவது அழகாகவே இருக்கும்.

பெரும்பாலும் முறையற்ற உறவில் ஈடுபடுவோர் பாலுணர்வு மேலீட்டால் பின்விளைவை எண்ணமாட்டார்கள்; அகப்பட்ட ஆளோடு முறையற்ற உறவில் ஈடுபடுவதால் பாலியல் நோய்கள் (sexual decease) ஏற்பட இடமுண்டு. தொடக்கத்தில் பாலியல் உறுப்புகளில் கடி, சொறி, புண் என எதுவும் வரலாம். அப்படி ஏற்பட்டதும் மதிப்புக் குறைந்துவிடுமென அஞ்சி மருத்துவரை நாடாது இருப்பது பாலியல் நோய்கள் முற்றிச் சாவையே தரும்! அதேவேளை சாவையே தரும் உயிர்கொல்லி (Aids) நோய் ஏற்படவும் முறையற்ற உறவு இடமளிக்கிறதே!

பெண்களுக்கு மாதமொரு தடவை மாதவிடாய் வட்டம் ஏற்படும். அதுபற்றியறிய மாதவிடாய் (http://ta.wikipedia.org/s/ivw) என்ற இணைப்பைச் சொடுக்குக. அக்காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அதுகூட முறையற்ற உறவு என்றே கூறலாம். அதாவது, பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறும் கழிவுச் செந்நீர் (குருதி) ஆணுறுப்பிற்குத் தொற்று ஏற்படுத்துவதால் பாலியல் நோய்கள் (sexual decease) வர வாய்ப்புண்டு. அதாவது, மனைவியைத் தவிரப் பிறர் தமது மாதவிடாய்க் கால நாள்களைத் தெரிவிக்க மாட்டார்கள். மனைவியைத் தவிரப் பிறருடன் உறவைப் பேணும் வேளை இச்சிக்கல் ஏற்படலாம்.

மனைவி ஓருவளே உண்மையைச் சொல்லக்கூடியவள். அதனால், மாதவிடாய்க் கால நாளிற்கு இரண்டு முன்று நாள் முன்னிருந்து மாதவிடாய் வந்து ஏழு நாள் வரையான பத்து நாள்கள் உடலுறவைப் பேணாது பாதுகாப்பு எடுக்கலாம். அதேவேளை மனைவியும் தானும் உடலைச் சுத்தமாகப் பேணி உடலுறவைப் பேணலாமே! ஒருவனுக்கு ஓருவள் என்ற ஒழுங்கைப் பேணினால் தலை போகின்ற பாலியல் நோய்கள் (sexual decease) வர வாய்ப்பிருக்காதே! எனவே, மனைவியை விலக்கி வைத்துவிட்டுப் பிறருடன் முறையற்ற உறவு வைத்திருந்தால் தலை போவதைத் / சாவதைத் தடுக்க இயலுமா?

மணமுறிவு வேண்டாமா? வேண்டுமா?

அன்புள்ளங்களே!

மணமுடித்து வாழுங்கள்! மணமுறிவு ஏற்பட வாழாதீர்கள்!
காதலிக்கலாம்; திருமணம் செய்யலாம்! மணமுறிவு (Divorce) எதற்கு?
அதற்கு முன் காதல் முறிவு (Love Break) ஏன் ஏற்படுகிறது?
காதல் அரும்பிய வேளை காட்டிய உள்ளம் வெளிப்படுத்தியது வேறு…
காதல் முற்றிய வேளை உள்ளம் வெளிப்படுத்திக் காட்டுவது வேறு…
அதனால் தான் காதல் முறிவு (Love Break) என்பேன்!

ஆனால், மணமுறிவு (Divorce) அப்படியல்ல…
மனைவியின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யமுடியாத ஆண்களால்…
கணவனின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யமுடியாத பெண்களால்…
இவற்றை அலசி, ஆய்வு செய்ய நெடுநாள் நீடிக்கும்…
அடிக்கடி நானறிந்த மணமுறிவு (Divorce), பாலியல் (Sex) அடிப்படையிலே தான் அமைந்திருப்பதைக் கண்டேன். அது பற்றிக் கிடைத்த சான்றுகளைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

தன்மகிழ்வு / சுயஇன்பம் (Masturbation)!
திருமணம் செய்ய முன்னர் இருபாலாரும் தன்மகிழ்வில் ஈடுபட்டிருக்கலாம். திருமணமாகிய பின் இருபாலாரும் தன்மகிழ்வைக் கைவிட முடியாமையால் பாலியல் (Sex) உறவில் நிறைவடைய முடிவதில்லை. இந்நிலை நீடிப்பதால் மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

ஐயம்!
பெண்ணுக்குக் கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது…
ஆணுக்கு மனைவி பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது…
இந்த ஐயம், சில வீடுகளில் உண்மையாவதால் மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

குடி!
சில வீடுகளில் பெண்களும் குடிக்கிறார்கள்…
ஆயினும், ஆண்கள் தான் எல்லா வீடுகளிலும் குடிக்கிறார்கள்…
குடி, பாலியல் (Sex) உணர்வுகளைக் குறைத்துவிட மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

புகைத்தல்!
சில வீடுகளில் பெண்களும் புகைக்கிறார்கள்…
ஆயினும், ஆண்கள் தான் எல்லா வீடுகளிலும் புகைக்கிறார்கள்…
புகைத்தல், பாலியல் (Sex) உணர்வுகளைக் குறைத்துவிட மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

மேற்காணும் நான்கு தலைப்புகளில் மணமுறிவு (Divorce) ஏற்படாதவாறு அவரவர் தம்மைத் தாமே மேம்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். அதேவேளை ஒருவருக்கொருவர் உண்மை நிலையைக் கூறி தமக்குள்ளே தாம் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொருவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்ய முயன்றால் மணமுறிவு (Divorce) ஏற்பட வாய்ப்பிருக்காது என்பேன்! மணமுறிவு வேண்டுமா? வேண்டாமா? என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

அடுத்த பகுதி
தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?

அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?

நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
கல்லும் முள்ளும்
மேடும் பள்ளமும்
இருந்திருக்கும்…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை தடவை
விழுந்திருப்பாய்
எழுந்திருப்பாய்
விழுந்தும் எழும்ப முடியாமல்
இருந்தும் இருப்பாய்…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
படித்திருப்பாய்
பட்டறிந்திருப்பாய்
கண்டுபிடித்திருப்பாய்
அத்தனையும் நினைவில் உருளுமே…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
அறிந்திருந்தாய்
நீ மீட்டுப் பார்த்திருந்தால்
அத்தனை அத்தனை
அறிவும்
உனக்கு வழிகாட்டும் போது
அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?

குடியை அடியோடு மறப்பாங்களா?

உறவுகளே! “மனிதா சாவைக் கூப்பிடலாமா? http://wp.me/p3oy0k-44 ” என்ற என் பதிவை முதலில் படியுங்கள். குடிப்பதே கேடு… அதுவும் கழிவறைகளின் உள்ளே குடிப்பதே மிகக் கேடு… என்பதைச் சுட்டியிருந்தேன்.

நம்மாளுகளின் குடியாலே தாமழிந்து, தம் குடும்பம் அழிந்து, ஈற்றில் எங்கள் இனம் அழியத் தான் முடியும். இதனைக் கருத்திற் கொண்டு குடிகாரங்களை நல்வழிக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு சூழலில் உள்ளோருக்கும் இருக்கு. முடிந்தால் முயன்று பாருங்கள்!

“குடியை அடியோடு மறப்போம்” என எதையும் நான் சொல்ல முன்வரவில்லை. ஆயினும், குடிப்போரின் உறவுகள் குடிகாரரைக் குடிக்காத வேளை பார்த்து குடியின் விளைவுகளை எடுத்துக்கூறலாம். குடியின் விளைவுகளைப் பற்றி “ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!! http://tamil4health.blogspot.com/2014/07/drinking-alcohol.html ” என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளார்கள். அதனைச் சற்றுக் கற்றுத் தேர்ந்தால் நீங்களும் வழிகாட்டலாம்.

உறவுகளே! “குடியை அடியோடு மறப்போம்” என ஒரு போதும் குடிகாரங்க சொல்லமாட்டாங்க. சூழவுள்ளோரின் வழிகாட்டலும் கண்காணிப்பும் குடிகாரங்க உள்ளத்தில நல்ல மாற்றங்களை ஏற்படுத்துமாயின், அதுவே இன்றைய தேவை. என்றாலும் குடிகாரங்க உள்ளம் மாறாதுங்க…

சுட்டால் தானே தெரிகிறது
பட்டது நெருப்பு என்று
பட்டால் தானே தெரியும்
சுட்டது குடிச்சது என்று
“குடிகாரங்க நிலை!”

உளவியல் நோக்கில் பட்டுத் தெளிய வைக்கும் அணுகுமுறை உண்டு. ஆயினும், முதலில் மருத்துவரை அணுகி மதியுரை பெறுங்கள். பின் உளநல மதியுரைஞரை நாடலாம். அதற்கு முன் கீழுள்ள இணைப்பைப் படிக்க மறந்து விடாதீர்கள்.

http://tamil4health.blogspot.com/2014/07/drinking-alcohol.html

சேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்?

இனிய குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது சேமிப்பில் உள்ள இருப்பில் (பணம், பொன், பொருள்) தான் தங்கியுள்ளது. அப்படியாயின் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்?

இல்லத் தலைவன் (கணவன்)
இல்லத் தலைவி (மனைவி)
இருவரும் இணைந்து

ஒரு கேள்விக்கு மூன்று விடைகள் வந்ததேன்? அப்படியாயின் மூன்று விடைகளும் சரியானவையே! ஆயினும், குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது இல்லத் தலைவனிலோ இல்லத் தலைவியிலோ தங்கியிருக்க முடியாது. எனவே, மூன்றாவது விடையே சரியானது எனலாம்.

இளமை
பூத்துக் குலுங்கும் அகவையிலே
பாலியல் உணர்வலைகள்
மோதிக்கொள்ளும் வேளையிலே
நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை)
தாமாக ஓடிப் போய்க் கூடியோ
தாமாகக் கூடிப் பின் ஓடியோ
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
சேமிப்புப் பற்றிச் சிந்திக்காமையால்
சீரழிந்து போகின்றனரே!

என்றொரு எண்ணம் என்னில் மோத மேற்படி வரிகளை எழுதினேன். நொடிப் பொழுதுப் பாலியல் சுகம் குடும்பத்தின் மகிழ்ச்சி அல்ல. ஆண்டுக்கு 24×365 மணி நேரச் சுகமான வாழ்வே குடும்ப மகிழ்ச்சி எனலாம். ஓராண்டுக்கான 24×365 மணி நேரச் சுகமான வாழ்விற்கு வேண்டிய பொருண்மிய நிலை (வருவாய் அல்லது சேமிப்பு) தேவை என்பதை நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை) படித்திருந்தால் சீரழியத் தேவையில்லை.

எனவே, முதல்ல படிப்பு அடுத்து நல்ல உழைப்பு அடுத்துப் போதிய சேமிப்பு, அடுத்துக் காதல் அல்லது திருமணம் அடுத்துப் பாலியல் தேர்வு, பிள்ளை குட்டிகள் அடுத்துக் குழந்தை வளர்ப்பு என நீளும் குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது பொருண்மிய நிலை (வருவாய் அல்லது சேமிப்பு) என்பதை நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை) படித்திருக்க வேண்டுமென மதியுரை கூறும் பெரியோர்கள் தங்கள் குடும்ப நிலையை இவ்வாறு பேணுகிறார்களா? அவர்களும் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டுமே! முதுமை நெருங்கினால் தொழிலின்றி வருவாயின்றி இருக்கையில் கைகொடுப்பது சேமிப்பு மட்டுமே!

எதனால் பாலியல் அத்து மீறல்கள் நிகழுகின்றன?

அதி உணர்வு உள்ளம் (Super Consicious Mind), உணர்வு உள்ளம் (Consicious Mind), துணை உணர்வு உள்ளம் (Sub Consicious Mind), உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) என மனித உள்ளம் என்பது நான்கு வகைப்படும். இங்கு பாலியல் அத்து மீறல்கள் நிகழ உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) முக்கிய பங்காற்றுகின்றது.

மனிதனின் சிந்தனை, செயல், எண்ணம் எல்லாம் உணர்வு உள்ளம் (Consicious Mind) இல் இடம்பெறுகிறது. சுயகட்டுப்பாட்டோடு இவை பேணப்பட நல்லெண்ணங்களே துணை உணர்வு உள்ளம் (Sub Consicious Mind) இல் பதியப்படுகிறது. இங்குள்ள தகவல் மனித நடத்தைகளாக நல்லெண்ண வெளிப்பாடாகவே வெளிக்காட்டும். அதனால், மனிதனின் நல்ல முகத்தைப் பார்க்க முடிகிறது.

உணர்வு உள்ளம் (Consicious Mind) ஓய்வாக இருக்க, உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) தன் வேலையைக் காட்டத்தொடங்கிவிடும். இது நடைமுறைக்கு ஒவ்வாத எண்ணங்களைத் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டாக நாட்டின் அல்லது உலகின் உயர்ந்த பதவியை அடைய விரும்புவது. அதேவேளை எதிர்ப்பாலாரைக் கண்டதும் பாலியல் உணர்வுகளை அடைய நினைப்பது. இவை உணர்வு உள்ளம் (Consicious Mind) தால் வடிகட்டப்படாமல் இருக்க உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) இல் பதுங்கிக் கிடக்கும்.

இவ்வாறு உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) இல் பதுங்கிக் கிடக்கும் ‘பாலியல் உணர்வுகளை அடைய நினைத்தது’ சூழல் அமைவாக இருக்க வெளியே தலையைக் காட்டும். வெளிப்பட்ட இவ்வெண்ணம் பாலியல் அத்து மீறல்களை ஏற்படுத்த உந்துகிறது. எடுத்துக்காட்டாக வெளிநாட்டுப் பெண்ணொருத்தி, தனிவீடெடுத்து இருப்பதையறிந்த பாலியல் உணர்வுகளால் உந்தும் ஆள் பாலியல் அத்து மீறல்களை மேற்கொள்ள முனைகிறார். அதாவது உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) இல் உள்ள தகவல் தக்க சூழலைக் கண்டதும் அடைய முயற்சிப்பதால் மனிதனின் கெட்ட முகத்தைப் பார்க்க முடிகிறது.

இதற்கு ஒரே வழி உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) தன் வேலையைக் காட்டத்தொடங்கினால் உணர்வு உள்ளம் (Consicious Mind) ஆல் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். விரும்பிய நூல்களைப் படித்தோ இறைவழிபாட்டை மேற்கொண்டோ என ஒரு வழியில் உள்ளத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்பட்ட உள்ளமே அதி உணர்வு உள்ளம் (Super Consicious Mind) என்பேன். இந்நிலையில் உயர்ந்த நல்லெண்ணங்களையே எதிர்பார்க்கலாம்.

மணவாழ்க்கை என்பது அகவைக்கு வந்தாலும் குடும்பம் நடாத்தத் தேவையான வருவையும் வேண்டும். இதனையே பெற்றோர்கள் கவனிக்கின்றனர். ஆனால், பிள்ளைகள் இதனைப் பொருட்படுத்துவதில்லை. அதாவது நல்ல இடம் சந்தித்தால் மணமுடித்து வைக்கலாமெனப் பெற்றோரும் காலம் தள்ளிப் போவதை பிள்ளைகள் விரும்பாத நிலையும் காணமுடிகிறது. இதுவும் உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) இன் செயலைத் தூண்டலாம். பெற்றோர்கள் தம் நிலையைப் பிள்ளைகளுக்குப் புரிய வைத்திருந்தால் இவ்வாறு நிகழாது.

உள்ளக் கூறுகளாக Id, Ego, SuperEgo என மூன்றைக் கருதுகிறார்கள். அதாவது, பசி, தாகம், பாலுணர்ச்சி போன்ற உள்ளுணர்வுகளுக்கு Id உம் உடனடியாக அவை நிறைவேற வேண்டும் என Ego உம் அவை நெறிமுறைகளை பின்பற்றித்தான் நிறைவேற்ற வேண்டும் என SuperEgo உம் செயற்படும். கீழ்வரும் எடுத்துக்காட்டுடன் புரிந்துகொள்க.

Id – அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வேண்டும்.
Ego – இப்பவே அது நிகழ வேண்டும்.
SuperEgo – கூடாது. அவள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனைவி அல்ல.

இங்கு Id, Ego, SuperEgo ஆகிய மூன்றிற்குமிடையே போர் நிகழும். இதில் Ego வெற்றி பெற்றால் பாலியல் அத்து மீறல்கள் நிகழும். ஆயினும் SuperEgo வெற்றி பெற்றால், மணமுடித்த பின் பார்க்கலாமென Ego இணங்கிப் போக Id, Ego, SuperEgo ஒன்றிணைந்து நல்லெண்ண வெளிப்பாட்டைத் தூண்டும்.

பெற்றோரும் ஆசிரியர்களும் வழிகாட்டிகளும் பொறுப்புள்ள ஊடகங்களும் வழிகாட்டத் தவறுவதனாலேயே பாலியல் அத்து மீறல்கள் நிகழுகின்றன. பாலியல் அத்து மீறல்கள் நிகழாதிருக்க ஊரூராக நாடெங்கும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் வழிகாட்ட வேண்டும். அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் “நிசப்தம்” தளத்தில் “பாலியல் அத்து மீறல்கள்” என்ற பதிவைப் படித்ததும் இப்பதிவை எழுத வேண்டுமென்ற விருப்பம் தோன்றியதால் இதனை எழுதினேன்.

எதனால் பாலியல் அத்து மீறல்கள் நிகழுகின்றன என்பதற்கு “பாலியல் வறட்சி தான் (Sexual Dryness) அடிப்படையான காரணம் என்கிறார்கள். ஒரு பக்கம் பண்பாடு விழுமியங்கள் என்று பாலியல் சுதந்திரங்களை கட்டுக்குள் வைக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் ஊடகங்கள் வழியாகவும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் வழியாகவும் உணர்ச்சிகளை சுண்டி விடுகிறார்கள். மற்றொரு பக்கம் மது இன்னபிற போதை வஸ்துகளை பரப்பி வைத்திருக்கிறார்கள்.” என்ற அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் தகவலைக் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் பதிவைப் படிப்பதனாலேயே இப்பதிவின் நோக்கம் விளங்கும்.

பாலியல் அத்து மீறல்கள்

வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா?

“வெற்றி பெறப் படிக்கவும் வேண்டுமா?” என்பது நல்ல கேள்வி தான். “வெற்றி பெறப் படிக்கவும் வேண்டும்!” என்பது எனது கருத்து.

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது அறிஞர் ஒருவரின் வழிகாட்டல். அதாவது, வெற்றி பெற முயற்சி எடுத்தால் வெற்றி கிட்ட வாய்ப்பு உண்டு. எந்தக் குறிக்கோளை அடைந்தால் வெற்றி கிட்டுமோ, அந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழியைப் படித்து முயற்சி எடுத்தால் வெற்றி கிட்டும் வாய்ப்பு அதிகமாகும். எனவே, வெற்றி பெறப் படிக்க வேண்டும்!

உளவியல் நோக்கில் குறிக்கோளை அடைவதற்கான வழியை நெருங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நேர் (Positive) என்றும் உங்கள் முயற்சிகளுக்குக் குறுக்கே எதிர்ப்படுவன (எடுத்துக்காட்டாகத் தடைகள்) எல்லாம் மறை (Negative) என்றும் கருதலாம். அதாவது, நேர் (Positive) ஆகத் தன்னம்பிக்கையைக் கருதினால், தன்னம்பிக்கையைத் தளர வைக்கும் எல்லாம் மறை (Negative) ஆகும். எனவே, நேர் (Positive) ஆகவும் மறை (Negative) ஆகவும் எண்ணித் தடையின்றிக் குறிக்கோளை அடைய முயற்சி எடுத்தால் வெற்றியை உறுதிப்படுத்தலாம்.

உள்ளத்தை அடி உள்ளம் (மனம்), மேல் உள்ளம் (மனம்) என இரு பகுதிகளாகக் கருதினால்; மேல் உள்ளம் (மனம்) எண்ணமிட அடி உள்ளம் (மனம்) அதனைச் சேமிக்கும். மேல் உள்ளத்தில் படக்காட்சி போன்று குறிக்கோளை அடைவதற்கான வழியையும் முயற்சிகளையும் எண்ணிக்கொள்ளவும். இவ்வாறு பலமுறை எண்ணும் போது அவை அடி உள்ளத்தில் பதிந்துவிடுகிறது. வெற்றியை நோக்கி நடைபோடுகையில் அடி உள்ளத்தில் பதிந்தவை குறிக்கோளை அடையத் துணை நிற்பதால் வெற்றி கிட்ட வாய்ப்பு நெருங்கும்.

இவ்வாறான அடிப்படை எண்ணக்கருக்களை வைத்து வெற்றி பெறப் படிக்கவென பல நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும், தன்னம்பிக்கையைப் பெருக்கப் பல தன் (சுய) முன்னேற்ற நூல்களும் வெளிவந்துள்ளன. நாளேடுகளிலும் ஏழல் (வார), மாத ஏடுகளிலும் வெற்றி பெறப் படிக்கப் பல பதிவுகள் வெளிவருகின்றன. இவற்றை எல்லாம் படிக்காமல் வள்ளுவர் ஆக்கிய ஏழு குறள்களைப் பொருளறிந்து படித்தால் வெற்றி கிட்டுமென அறிஞர் என்.கணேசன் தெரிவிக்கின்றார். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அவற்றைப் படிக்கவும்.

வெற்றிக்கு ஏழு குறள்கள்!

உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி?

உளநல மதியுரைஞர்களிடம் வழமையாகக் கேட்கப்படும் கேள்வி.

உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி?.

via உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி?.

படம்

கருக்கலைப்பும் சிசுக்கொலையும் தேவைதானா?

இன்றைய உலக நடப்பில் அதிகம் பேசப்படும் செய்தியாக கருக்கலைப்பும் சிசுக்கொலையும் காணப்படாமல் இருந்தாலும் மறைமுகமாக இடம்பெறுகிறதே! போர் சூழலில் இவை இடம் பெறலாம். இலங்கையில் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கிறது. ஒரு குழந்தைக்குக் கூடுதலாகப் பெற்றால் அரச ஒறுப்புக்கு(தண்டனைக்கு) உட்பட வேண்டியிருப்பதால் சீனாவிலும் இடம்பெறுகிறது. இந்தியாவில் பெண் பிள்ளை பிறந்தால் குப்பைத் தொட்டியில் போடுவதாய் செய்தி ஒன்றில் படித்தேன். இவை பற்றி அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. கருக்கலைப்பும் சிசுக்கொலையும் தேவைதானா? என்பதற்கு உரிய பதிலை மட்டும் கருத்திற் கொள்க.

ஏன் கருக்கலைப்பும் சிசுக்கொலையும்?
ஒழுக்கமுள்ளவர்கள் தவறு செய்ய மாட்டார்களே! அம்மாவுக்கு ஒன்று அப்பாவுக்கு ஒன்று போதுமென்றா? தவறான எண்ணங்களில் பழகியதாலா? இதே போன்று பல கேள்விகள் எழுப்பப்படலாம். ஆயினும், ஏதோ காரணம் கூறி நம்மாளுகள் கருக்கலைப்பும் சிசுக்கொலையும் செய்கிறார்கள். மத வழிகாட்டலின் படி குற்றம்/தவறு என்கிறார்கள். “ஆண்டவர் படைத்த உயிரை அழிக்க, நமக்கு ஆண்டவர் அனுமதி அளிக்கவில்லை.” என்பது பொதுவான மதவாதிகளின் கருத்தாகும்.

“குழந்தை வேண்டாமென்றால் மருத்துவர் கூறும் வழிகாட்டலின்படி வாழலாம்.” என்பது எல்லோரினதும் ஒரே கருத்தாகும். பள்ளிக்கூடங்களில் இத்தகைய தவறு நிகழாமல் இருக்கவே பாலியல் கல்வி கற்பிக்கிறார்கள். அரசு திருமண அகவை(வயது) எல்லையை வகுத்தது ஏன்? ஏன் எங்கள் இளசுகளை மக்களாயம்(சமூகம்) கண்காணிக்கிறது? எல்லாம் இவற்றைக் கட்டுப்படுத்தவே!

கருக்கலைப்பும் சிசுக்கொலையும் செய்வதால் நன்மை உண்டா?
கருவுறாமல் தம்மைக் காத்தால் கருக்கலைப்புத் தேவையில்லை. கருவுற்றால் 90 நாட்களுக்குள் (3 மாதத்திற்குள்) தகுந்த மருத்துவரின் துணைகொண்டு கருக்கலைப்புச் செய்யலாம். ஆனால், மருத்துவருக்குப் பொய் கூறியோ தகுந்த மருத்துவரின் உதவியை நாடாமலோ பெண்கள் கருக்கலைப்புச் செய்வதால் தாமே உயிரிழக்க நேரிடலாம்.

இப்பின்விளைவை உணர்த்திக் குறித்த பெண்ணின் பெற்றோர், கருக்கலைப்புச் செய்யாமல் குழந்தையைப் பெற வைக்கிறார்கள். குழந்தையைப் பெற்றதும், மக்களாயம்(சமூகம்) குழந்தையின் அப்பா பெயரைக் கேட்டால் பதிலளிக்க முடியாமையால் தான் சிசுக்கொலை செய்கிறார்கள்.

குழந்தையைப் பெற்ற பின்னர், சாக வைத்து நிலத்திற்குள் புதைப்பதையோ உயிரோடு குப்பைத் தொட்டிக்குள் இடுவதையோ உயிரோடு பற்றைக் காட்டுக்குள் வீசுவதையோ எனப் பல வழிகளைக் கையாண்டு பெண்கள் தப்பிக்க முனைகிறார்கள். குழந்தை இன்றி அலையும் பெற்றோருக்கோ குழந்தைகள் காப்பகத்திலோ உங்கள் குழந்தைகளை வழங்கி சிசுக்கொலையை நிறத்தலாமே!

ஒழுக்கம் என்பது பேச்சில் இருந்தால் போதாது, செயலிலும் வேண்டும். தவறு செய்தால் தப்பலாம் என்று கழிவு உறுப்புகளின் செயலைச் சோதிக்கப் போவதும் முட்டாள் செயலே. ஆணும் பெண்ணும் பாலியல் உறவு வைத்தால் உயிர் ஒன்று கருவாகும் எனத் தெரிந்து கொண்டும் ஒழுக்கத்தை மீறலாமா? எல்லாவற்றுக்கும் உள்ளத்தில்(மனதில்) உறுதி வேண்டும்.

“பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போடலாம் வாங்க…” என்ற தலைப்பில் கடையில் விற்கின்ற பொத்தகங்களை வாங்கிப் படித்துத் தவறு செய்ய வேண்டாம். எனவே, மருத்துவரின் நேரடி வழிகாட்டலில் உங்கள் எண்ணங்களை அடையலாம். தவறுகள் செய்வதற்கல்ல, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்வே.

இனி வரும் காலங்களில், கருக்கலைப்பும் சிசுக்கொலையும் இடம் பெறாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இது பற்றிய ஐயங்களை இத்தளத்திலேயே பரிமாறுங்கள்.