தன் முன்னேற்றம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியே! அதற்கு இன்றைய தொழில்நுட்பப் போக்கிற்கு ஏற்ப எம்மை நாம் மேம்படுத்த வேண்டியிருக்கிறது. மேலும் தன்னைத் தான் மதிப்பீடு செய்து தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. தனது இலக்கினை அடையத் தேவையான சரியான வழிகளைத் தெரிவு செய்து பயணிக்க வேண்டியிருக்கிறது.
தன் முன்னேற்றத்தில் வெற்றி பெறப் பின்வரும் வழிகளில் சிந்திக்கலாம்.
- தன் முன்னேற்றத்தின் தேவைகளை அடையாளப்படுத்துதல்.
- தன்னை மேம்படுத்துவதற்கான செயல்களைத் திட்டமிடுதல்.
- தங்கள் செயல்த் திட்டங்களை நிறைவேற்ற முனைதல்.
- தனது படித்த அறிவு, பட்டறிவு, வளங்களை முறையாகக் கையாளுதல்.
- தனது வெற்றிகரமான வளர்ச்சிக்கு தன் விழிப்புணர்வு, தன் கட்டுப்பாடு தேவை.
- தன் முன்னேற்ற வழிகளை ஆவணப்படுத்தி, அடிக்கடி வாசிப்பதால் உள்ளத்தில் பேண முடியும். உள்ளத்தில் இருப்பதே செயல்களைத் தூண்டும்.
- “இங்கே மற்றும் இப்போது” என்ற இலக்கினைப் பேணி, எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தன் முன்னேற்றத்தை அடையத் தயார்ப்படுத்த வேண்டும்.
- தன் முன்னேற்றத்தை அடைவதில் தன்நம்பிக்கை வைத்துப் பயிற்சியும் முயற்சியும் எடுத்திருக்க வேண்டும்.
- ‘தன்னால் முடியும் தன்னிடமுள்ளதைப் பேணி இலக்கினை அடையலாம்’ என்ற நேர்ச் சிந்தனையில் (Positive Thoughts) செயற்பட வேண்டும்.
- மாற்றாரை ஓப்பிட்டுத் தம்மைக் குறைத்து மதிப்பிடும் எதிர்ச் சிந்தனையைக் (Negative Thoughts) கைவிட வேண்டும்.
- பிறகு பார்க்கலாம் நாளைக்குப் பார்க்கலாம் எனக் காலம் கடத்துவது தன் முன்னேற்றத்தினை அடைய இடமளிக்காது.
- தோல்விகளிலும் பின்னடைவுகளிலும் கற்றுக்கொண்ட பாடங்களை முறையாகக் கையாண்டு வெற்றி பெறுவதில் அக்கறையாக இருக்க வேண்டும்.
- உள நலம், உடல் நலம், குடும்ப நலம், பொருண்மிய வளங்கள் போன்றவற்றில் அக்கறையாக இருக்க வேண்டும்.
- வெற்றியாளர்களின் அல்லது சாதனையாளர்களின் வரலாற்றினைக் கற்று எம்மிடமுள்ள கெட்ட பழக்க வழக்கங்களை நீக்கிக்கொள்ள வேண்டும்.
- தன் முன்னேற்ற வழிகள் (Ways of Self Improvement) பற்றிய நல்ல பொத்தகங்களைத் தேடிப் படிக்கலாம். தன் முன்னேற்ற வழிகள் (Ways of Self Improvement) பற்றிய கட்டுரைகளை ஊடகங்கள் வாயிலாகவும் கற்றுக்கொள்ளலாம்.
எம்மால் முன்னேற இயலாமைக்கு நாம் அக்கறை இல்லாமல் இருந்திருக்கலாம். தன் முன்னேற்ற வழிகள் (Ways of Self Improvement) என்னவென்று அறிந்த பின் முன்னேறாமல் இருப்பது எங்கள் முட்டாள் செயலாகும். எனவே, எல்லோரும் அறிவாளிகளாக மாறுங்கள். உங்கள் முன்னேற்றத்தில் நீங்கள் அக்கறை காட்டுங்கள். மகிழ்ச்சிகரமான, வெற்றிகரமான உங்கள் வாழ்க்கையை நீங்களே அமைத்துக்கொள்ளலாம்.