நடைபேசிகளும் நடைப்பிணங்களும்

நடைபேசிப் பாவனை அதிகம் ஆகிவிட்டது. ஆளுக்கு ஒன்றல்ல ஒன்றிற்கு மேற்பட்ட நடைபேசிகளைக் கையாளுகின்றனர். ஆயினும், நடைபேசிகளைக் கையாளும் ஒழுக்கநெறியைக் கவனத்தில் கொள்ளாது நம்மாளுகள் நடைபேசிகளைக் கையாளுவதால் தேவையற்ற உயிரிழப்புகளைச் சந்திக்கின்றனர்.

மேலுள்ள படம் தினகரன் செய்திப் பிரிவினரால் முகநூலில் வெளியிடப்பட்டது. அதனை நம்மாளுகள் விழிப்புணர்வு பெறும் நோக்கில் மீளப் பதிவு செய்கிறேன்.

மழைக்காலம், இடிமின்னல் வேளை நடைபேசிகளைக் கையாளும் போது இடிதாக்கி நம்மாளுகள் தேவையற்ற சாவைச் சந்திக்கின்றனர். இது பற்றிப் பலர் வழிகாட்டினாலும் கூட, எவரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.

நடைபேசிகளுக்கு மின்னைச் சேமிக்கும் (Charging) வேளை தொலைவில் உள்ள ஒருவருடன் நடைபேசி ஊடாகக் கதைக்கக் கூடாது என்பர். அதாவது, நடைபேசி வெப்பமேறுதல் அல்லது மின்னிணைப்பில் தீப்பற்றல் அல்லது வேறு காரணங்களால் நடைபேசி ஊடாகக் கதைப்பவர் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

அடடே!
மேலுள்ள படம்
எதனைச் சுட்டிக் காட்டுகிறது
இடது புறம்
மின்னேற்றி (Charger) எரிந்து கிடக்கிறது
நடுவே
அப்பிள் நடைபேசி வெடித்துக்கிடக்கிறது
வலது புறம்
நம்மாளு மூஞ்சி சிதறிக்கிடக்கிறது
இந்தப் படத்தை – என்
இல்லாளுக்குக் காட்ட
தலையைச் சுற்றுகிறது என்று ஒதுங்கினாள்
எனக்குக் கூட
உள்ளத்தைத் தாக்கிய படம் தான்
இந்தப் படத்தைப் பார்த்தாவது
நடைபேசிப் பேச்சாளர்கள் – தங்கள்
உயிரைக் காப்பாற்றுவார்களாயின் – அதுவே
இன்றைய தேவை என்பேன்!

இலத்திரனியல் கருவிகள் (தொலைக்காட்சி, வானொலி, கணினி, நடைபேசி) மட்டுமல்ல வேறெந்தக் கருவிகளைக் கையாள முற்பட்டாலும் அதனைக் கையாளும் வேளை பின்பற்றவேண்டிய வழிகாட்டலையும் மதியுரையையும் (ஆலோசனையையும்) கருத்திற்கொள்ளுமாறு பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.

Advertisements

8 responses to “நடைபேசிகளும் நடைப்பிணங்களும்

  1. படத்தைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.

    • நடைபேசிகளுக்கு மின்னைச் சேமிக்கும் (Charging) வேளை தொலைவில் உள்ள ஒருவருடன் நடைபேசி ஊடாகக் கதைப்பதன் விளைவு இப்படி இருக்கலாம்.

  2. தேவையான கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் ! கருவிகளின் பயன்பாட்டு முறை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்தும் !

  3. இவ்வளவு சிறிய செல்போனால் எவ்வளவு பெரிய தொல்லை ?சிந்திக்க வைக்கும் பதிவு !

  4. விழிப்புணர்வுப்பகிர்வு.நன்று