உளநோய் நெருங்காமல் பேணுவோம்.

உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால் மட்டும் போதாது, உள்ளத்தால் நல்லதையும் கெட்டதையும் வேறாக்கி நமக்குப் பயன்தரும் நல்லதை முடிவு செய்து பயன்படுத்த முடிந்தாலே நலமான உள்ளம்.

செலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்க வழிகாணத் தெரிய வேண்டும். பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தித் தவறான செயல்களில் ஈடுபடாதிருக்க வேண்டும். சிக்கல் வருகின்ற போதும் சிக்குப்படாமல் நழுவத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு எல்லாவகையிலும் உள்ளத்தால் உறுதியான நலம் தரும் முடிவுகளை எடுக்க முடியும் என்றால் உளநோய் நெருங்காத உள்ளம் என்று கூறலாம்.

அப்படியாயின், உளநோய் பற்றி நான் சொல்லாமலே நீங்களே உங்களால் புரிந்தது கொள்ள முடியுமே! உள்ளத்தால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாதிருப்பதுடன் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு வழியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரின் உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்ற வாய்ப்பு ஏற்படலாம். அதாவது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலை தோன்றலாம். இதனைச் சரி செய்யக்கூடிய உளக்குறைபாடு எனலாம். உளநல மருத்துவரின் மதியுரைப்படி பயிற்சிகளைச் செய்துவர இயல்பு நிலைக்கு மீளலாம். உளநல மதியுரைஞரின் மதியுரையையும் நாடலாம்.

உளநோய் என்றால் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று கருதக்கூடாது. அவ்வாறு எண்ணி மருத்துவரை நாடாவிட்டால் இலகுவான உளக்குறைபாடு பெரிய பெரிய உளநோய்கள் ஏற்பட வழி அமைத்துவிடும். இயல்பு நிலையில் ஏனையோரைப் போன்று முடிவு எடுத்தலிலும் நடத்தை மாற்றத்திலும் சற்றுத் தளர்வு காணப்படின் உளநல மருத்துவரை(Psychiatrist) நாடிக் குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறான உளக்குறைபாடு ஏற்படாமல் இருக்கச் சில வழிகள்:
நாளுக்கு நாள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் ஓட முயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது நேரம் பந்தடியுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் மிதிவண்டியை மிதியுங்கள்.
நாளுக்கு நாள் யோகாசனம், தியானம் செய்யலாம்.
இவ்வாறான பயிற்சிகள் சுயமுயற்சிகளே! இவற்றை விடச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கத் துணிச்சலை வளர்க்க வேண்டும். இல்லையேல் குறித்த சூழலை விட்டுத் தன்னம்பிக்கையுடன் விலகிப் புதிய சூழலை நாடி புதிய உறவுகளுடன் இணைய வேண்டும்.

அன்பான உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இவ்வாறு நிகழாமல் இருக்க:
குடும்பத்தில் சமநிலையில் எல்லா உறவுகளையும் பேணுதல் வேண்டும்.
குடும்பத்திலோ பணித்தளத்திலோ விளையாட்டுத் திடலிலோ பிற எந்தச் சூழலிலும் எவரையேனும் ஒதுக்கி வைத்தல் கூடாது.
பிறரது உள்ளம் நோகும் படி எதையாவது செய்துவிடாதீர்கள்.
ஒதுங்கும் உள்ளங்களைக் கூட அன்பாலே கட்டிப்போட்டு சூழலுக்குள் உள்வாங்க வேண்டும்.
சூழலில் நிகளும் எந்த நிகழ்விலும் ஒதுங்கியுள்ள உறவுகளை உள்வாங்கி இயல்பு நிலைக்கு முகம் கொடுக்க வைக்கவேண்டும்.

இதற்கு மேலும் இயல்பு நிலையில் சூழலை விட்டு ஒருவர் ஒதுங்கி இருப்பாராயின் அல்லது எல்லோரிடம் இருந்தும் ஒருவர் வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டிருப்பாராயின்; அவருக்கு உளநோய் இருப்பதாகக் கருதி உளநல மருத்துவரி(Psychiatrist)டம் காட்டுங்கள். எப்படியாயினும் உளநல மதியுரைஞரி(Counsellor)டம் காட்டவேண்டாம். ஏனெனில், குறித்த ஆளுக்கு “உடல் நோயா? உள நோயா?” என்பதை உளநல மருத்துவரே(Psychiatrist) முடிவு செய்வார்.   மருத்துவர் அனுதித்தால் மட்டுமே மதியுரைஞரை(Counsellor) நாடலாம்.

ஓருயிர் உலகத்தை விடப் பெறுமதியானது. ஒருவரின் பணி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரிய முதலீடு. எவரையேனும் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று ஒதுக்கி வைக்காமல் உளநோய் முற்றவிடாமல் தொடக்கத்திலேயே சரி செய்யக்கூடிய உளக்குறைபாடுகளை மருத்துவரி(Psychiatrist)டம் அல்லது மதியுரைஞரி(Counsellor)டம் காட்டிக் குணப்படுத்த முன்வாருங்கள்.

ஒருவர் செயலிழக்க உடன்பட்டால் நீங்கள் இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கீறீர்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒருவரின் உளநோயைக் குணப்படுத்தி இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்காமல் குறித்த ஆளின் வளத்தை நாட்டுக்கும் உலகுக்கும் பயன்படுத்த நல்வழி செய்யுங்களேன். இதனால் நமது சூழலில் உளநோயாளர்களை இல்லாமல் செய்யலாம்.

6 responses to “உளநோய் நெருங்காமல் பேணுவோம்.

  1. நீங்கள் சொல்லி இருக்கும் ஆலோசனைகளை கடைப்பிடித்தாலே போதுமே ,உளநோய் எப்படி வரும் ?

  2. ”..ஓருயிர் உலகத்தை விடப் பெறுமதியானது. ஒருவரின் பணி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரிய முதலீடு..”’
    நல்ல பதிவு.
    பயனடையட்டும் பலர்.
    வேதா. இலங்காதிலகம்.

  3. உளக்குறைபாடு ஏற்படாமல் இருக்கச் சில வழிகள் அனைத்தும் அருமை.