நம்ப வைத்தலே மதியுரையின் இலக்கு

உளநோய் உள்ளவர்களில் நம்பிக்கையற்ற நிலையைக் காணமுடியும். கடவுள் நம்பிக்கையோ தனியாள் நம்பிக்கையோ தன்னம்பிக்கையோ இல்லாதவர்களாக அவர்களைப் பார்க்கமுடியும். அதனால் தான் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகின்றனர். இவர்களில் காணப்படும் நம்பிக்கையற்ற நிலையைப் போக்கினால் இயல்பு நிலைக்கு மீளவும் வந்துவிடுவர்.

ஆண்டவன் படைப்புகளான பகவத் கீதை, வேதாகமம் (பைபிள்), குர்ஆன், பௌத்த போதனைகள் போன்றவற்றில் உள்ள உண்மைகளை நடைமுறையுடன் ஒப்பிட்டு விளக்கி நம்ப வைக்கலாம்.

அன்பாகவும் பணிவாகவும் அணுகி உளநோய் உள்ளவர்களின் விருப்பத்துக்கு சற்று இசைந்து நம்மீது நம்பிக்கை ஏற்படவைக்கலாம். அந்நிலையில் எமது கருத்தேற்றங்களை (Suggestion) வழங்க முடியும்.

மேற்காணும் வழிகளில் நல்லெண்ணங்களை விரும்பவைத்து தன்னம்பிக்கை வைக்க முயற்சி செய்யலாம். இதனால் தன் (சுய) முடிவுகளை எடுக்கத் தூண்டலாம். உளநோய் உள்ளவர்கள் தாமாகவே தன்னம்பிக்கையுடன் இறங்கி வெற்றிகாணத் துணைநிற்பதால் அவர்களது தன் (சுய) முடிவுகளை எடுக்கும் ஆற்றலை வலுப்படுத்தலாம்.

நம்பிக்கை ஒன்றே நம்மை நெடுநாள் வாழவைக்கிறது. நம்பிக்கை தானே நாம் நன்நெறியில் செல்ல இடமளிக்கிறது. ஆயினும், நல்ல வழியில் நடைபோடத் தக்க நம்பிக்கையைப் பேணவேண்டும். அப்போது தான், நல்ல முடிவுகளை எடுக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகளே நல்ல தீர்வுகளைக் காண இடமளிக்கிறது. முடிவு (Decision) என்பது ‘கோயிலுக்குப் போதல்’ என்றால்; தீர்வு (Solution) என்பது நடந்து செல்வதா, மிதிவண்டியில் செல்வதா என்பதாகும்.

நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் ஒவ்வொருவரும் முடிவுகளை எடுக்கிறோம் என்பதை மறக்க முடியாது. நமது வசதிகளுக்கு ஏற்ற வகையிலேயே தீர்வுகளை முன்வைக்கிறோம் என்பதையும் மறக்க முடியாது.

எனவே, நம்ப வைத்தலே மதியுரையின் இலக்கு என்றாலும் நல்ல முடிவுகளையோ தீர்வுகளையோ எடுப்பதற்கு நம்பிக்கையான சூழல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதோடு நம்பிக்கையான உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அப்போது தான் உளநோய் உள்ளவர்களை இயல்பு நிலைக்கு வரவைக்கலாம்.

தன்னம்பிக்கையுடன் தன் (சுய) முடிவுகளை எடுக்கும் ஆற்றலைப் பெற்றுத் தானாகவே (சுயமாகவே) எந்தச் செயலிலும் இறங்கினால் தானே இயல்பு நிலைக்கு வந்தவர் எனலாம். இதற்கு மதியுரையின் போது உளநோய் உள்ளவர்களை நம்ப வைத்தலிலே வெற்றி காணவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.