பாலூட்டுவதை நிறுத்தி அழகைப் பேணலாமா?

மருந்துக்கடைக்கு வந்த ஒருவர் “குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் தான். அதற்குப் பால் கொடுக்க ஏதாவது மாப்பால் இருக்குதா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அருகில் இருந்த எனக்குத் தலை சுற்றியது. பின்னர் “குழந்தை பிறந்த உடனே, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டி வளர்க்கலாம். அவ்வாறானவர்கள் புட்டிப் பாலையே நாடுவர்” என்று நானும் என்னைச் சமாளித்தேன்.

“குழந்தை பிறந்து ஆறு மாதம் வரைக்கும், தாய் பிள்ளைக்குப் பால் கொடுத்து ஆகவேணுமே” என்று அருகில் நின்ற ஆச்சி சொன்னாள். அந்தாளோ, “பிள்ளைக்குப் பால் கொடுத்தால் தாயின் அழகு கெட்டுப் போயிடும்” என்றார். “ஆண்டவா! இதென்னடா கொடுமை இது? பாலூட்ட விரும்பாத பெண்களைப் படைத்தது உன் குற்றமே!” என்று நான் கேட்டிருந்தால் “அவர்களுக்கு நோயைக் கொடுத்து வாட்டுவதை அறியாயோ?” என்று எனக்குப் பதிலளித்திருப்பார்.

நாடு எப்படிப் போகுது என்று சொல்ல இதைவிட வேறு சான்றுமுண்டோ? தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையே இதற்குக் காரணம். இதற்காகவே நேரில் நான் கண்ட காட்சியை இங்கு வெளிப்படுத்துகிறேன். இக்காட்சியே இப்பதிவை எழுதத் தூண்டியது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப் பால் தான் முழுமையான உணவு. குறைந்தது ஆறு மாதம் ஆயினும் பதினெட்டு மாதம் வரை தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டலாம். புட்டிப் பாலைவிடத் தாய்ப் பாலே சிறந்தது என எத்தனையோ விளம்பரங்கள் இட்டும் எங்கட தாய்மாருக்கு எப்பனும் விளங்குதில்லையே!

தன் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதால் அழகு கெட்டுப்போகும் என்ற பேச்சை ஏற்கமுடியாது. இடையிலே வந்த அழகு இடையிலேயே போய்விடும். ஆயினும், அழகைப் பேணுகின்ற காலம் வரை அழகு இருக்கும். தாய் பாலூட்டுவதால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை.

கணவன்மாருக்கு உதைக்கிற உதையில மனைவிமார் திருந்துவினம். மனைவிமார் இளமையாய் இருக்க வேணுமென்பதற்காக தாய்ப் பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப் பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

ஆய்வுகளின் படி புட்டிப் பாலூட்டி வளர்த்த குழந்தையைவிடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உள, உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை உள, உடல் நலத்தோடு வளரத் தாய்ப் பாலூட்டுவதையே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய இளைய பெண்களே! அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப் பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு. இது பற்றிய மேலதிகத் தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.

8 responses to “பாலூட்டுவதை நிறுத்தி அழகைப் பேணலாமா?

  1. குடும்பஸ்தர்கள், குறிப்பாகப் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நல்ல பதிவு.

  2. இப்படிப்பட்ட பெண்கள் குழந்தை பெறாமலிருப்பதேமேல்

  3. எது அழகு என்பதில் இங்கே பிரச்சனை இருக்கிறது/