பக்க விளைவுகள் (Side Effects) பற்றி…

நகைச்சுவை என்பது சிரிக்க வைப்பதை விட சிந்திக்க வைப்பதிலே வெற்றி பெறுகிறது என்பேன். அப்படியோர் நகைச்சுவை ஆக்குனர் பகவான்ஜீ ஐயா பக்க விளைவுகள் (Side Effects) பற்றி எழுதிய நகைச்சவையைக் கண்டதும் இப்பதிவை எழுதுகிறேன். முதலில் அவரது நகைச்சவையைப் படியுங்கள்.

இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு!

”அதோ, அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா இருக்கே, எப்படி ஆச்சு?”

”வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம்!”

மூலம்: http://www.jokkaali.in/2014/03/blog-post_24.html

சிந்திக்க வைக்கும் நகைச்சுவையால் நாடி, நரம்புகள் சுறு சுறுப்பாக இயங்கும். உடலெங்கும் செந்நீர் (குருதி) விரைவாகச் செல்லும். அதனால், நகைச்சுவை உங்கள் உள நலம், உடல் நலம் ஆகிய இரண்டையும் பேண உதவும். மேற்காணும் இணைப்பைச் சொடுக்கி பகவான்ஜீ ஐயா அவர்களின் ஜோக்காளி தளத்தைப் பார்த்துப் பயனடையுங்கள். அவரது தளம் பற்றிய திறனாய்வை பிறிதொரு தளத்தில் வெளியிட இருப்பதையும் இங்கு நினைவுகூருகிறேன்.

“நம்மாளுங்க
வழுக்கையைப் போக்க நினைக்கிறாங்க
வழுக்கை போகப் போட்ட மருந்தால்
வந்து சேரப் போகும்
பக்கவிளைவைக் (சைடுஎபெக்ட்) கொஞ்சம்
நினைக்க மறக்கிறாங்களே!” என்று
அவரது நகைச்சவையைப் படித்ததும் சிந்தித்தேன்.

பிறிதோர் பக்க விளைவு (Side Effect) பற்றிச் சற்று நோக்குவோம். இரத்த அழுத்த (Blood Pressure) நோய்க்காரர் ஒருவர் வைப்பாட்டி (சின்னவீடு) ஆக இளமைத் துடிப்புக்காரி ஒருவரைப் பிடிச்சிட்டார். ஒரு நாளும் கூடிப் பார்த்தார். சரிப்பட்டு வரவேயில்லை. அடுத்த நாளோ வைப்பாட்டி மறுப்புத் தெரிவித்து ஆளைவிட்டு அகல, அதற்கெல்லாம் வயாக்ரா மருந்திருக்கென அந்தாளோ அவளை இணங்க வைத்துவிட்டார்.

பின்னர் நடந்ததென்ன தெரியுமா?
உறவின் உச்சத்தை அடைய
உயிர் கொடுக்கும் மருந்தாகிய வயாக்ரா
அந்தாளின் உயிரையே பறித்துவிட
வைப்பாட்டியோ
உரிந்ததை உடுத்திக்கொண்டு
ஓடி மறைந்து விட்டாளே!
இளமைத் துடிப்புக்காரியைச் சுவைக்கத் தேடிய
வயாக்ரா
அந்தாளின் உயிரையே குடித்துவிட்டதே!

இளமைத் துடிப்புக்காரியைச் சுவைக்கப் போனவரின் சாவைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்களேன். ‘வயாக்ரா’ ஆனது உடலில் உள்ள நாடி, நரம்புகளை விரிவடையச் செய்கிறதாம். அதனால், செந்நீர் (குருதி) விரைவாகச் செல்லுமாம். அடுத்ததாக உறவின் உச்சத்தை அடைய ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை கூடுகிறதாம். இது தான் ‘வயாக்ரா’ இன் வேலை என ஒரு மருத்துவர் தனது நூலொன்றில் எழுதியிருந்தார்.

இரத்த அழுத்த (Blood Pressure)
நோய்க்காரரின் நாடி, நரம்புகள் விரிய
விரைவான செந்நீர் (குருதி) ஓட்டம் நிகழ
மாரடைப்பு (Heart Attack) நிகழ்ந்து விட
அந்தாளோ உயிரை விட்டார்!
ஒருத்திக்காக
ஒரு வயாக்ரா தான்
ஒரே ஒரு தடவை தான்
ஒரு உயிரையே பறித்துவிட்டதே!

மருந்துகள் என்னும் போது “அருமருந்து” என்ற தமிழ்ச் சொல்லைத் தெரிந்து கொள்ளுங்கள். அருமையான (கிடைத்தற்கரிய) மருந்து என்பதை “அருமருந்து” என்றாலும் அருமையாக (எப்பாலும் இருந்திட்டு அல்லது நீண்ட இடைவெளிக்குப் பின்) உண்ண வேண்டியது மருந்தென்று செல்லலாம். அதற்காக மருத்துவர் அனுமதியின்றி அருமருந்தும் உண்ணல் ஆகாது.

நோயொன்றிற்குப் பல நிற, பல வகை, பல அளவு, பல நிறை என எத்தனையோ மருந்துகள் இருப்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொருவர் உடல் நிலைக்கேற்ப ஒவ்வொரு மருந்து இருப்பதை நாம் உணர வேண்டும். ஆகையால், பெட்டிக் கடைகளிலே மருந்து வேண்ட நினைத்தால் அம்மருந்து தரும் பக்க விளைவுகள் (Side Effects) பற்றி நாம் உணர வேண்டும். எனவே, நோயைக் கண்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படியே “அருமருந்து” என்றாலும் உண்ணவேண்டும்.

4 responses to “பக்க விளைவுகள் (Side Effects) பற்றி…

 1. அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி !
  தங்களின் திறனாய்வை காண காத்திருக்கிறேன் நீங்கள் ஏற்கனவே மருத்துவர் ஆகையால் மீண்டும்’டொக்டர்’ பட்டம் தேவைப் படாது என்று நினைக்கிறேன்!

  • ஐயா! முதலில் நான் மருத்துவரல்ல; நானொரு குடும்பநல ஆலோசகர் (Counsellor) என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து, தங்கள் தளத்தை சில வாரங்களின் பின் http://yarlpavanan.wordpress.com/ தளத்தில் திறனாய்வு செய்வேன். தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
   மிக்க நன்றி.

   • தங்களின் எழுத்து படைப்புகளை வாசிக்கும் போது ,இதுநாள் வரையிலும் தங்களை டாக்டர் என்றே நினைத்து இருந்தேன் ,அந்த அளவிற்கு தங்களின் உளநல பேணுகை பணி ஆக்கபூர்வமாக உள்ளது !
    திறனாய்வு ஒன்றும் அவசரமில்லை ,நிதானமாக செய்யுங்கள் !
    செய்கிறேன் என்று சொன்னதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது !