புகழ் யாருக்கு?

மனிதன் ஏதோ ஓர் எதிர்பார்ப்பை முன் வைத்தே எதனையும் செய்ய முயல்கின்றான். சிலர் வருவாயைக் குறித்தும் சிலர் பெயரையும் புகழையும் (இங்கு பெயரும் புகழும் பிரிக்க முடியாத இணைத் தொடராகும். புகழ் யாருக்கு எனில் குறித்த ஆளின் பெயர் சுட்டப்படுகிறது) குறித்தும் சிலர் மகிழ்ச்சியைக் குறித்தும் என எத்தனையோ எதிர்பார்ப்புகளை ஒவ்வொருவரும் தங்கள் உள்ளங்களில் பேணலாம்.

“புகழ் யாருக்கு?” என்ற கேள்விக்குப் பதில் தருபவர், முதலில் எதனைக் கருத்திற் கொள்வார்? எடுத்துக்காட்டாக ஒரு பிள்ளை படிப்பில் முதலிடம் பெறுகிராரெனக் கருதினால், அப்பிள்ளை அடைகின்ற புகழ்; முதலில் அப்பிள்ளையின் பெற்றோருக்கும் இரண்டாவதாக அப்பிள்ளைக்குப் படிப்பித்த ஆசிரியர்களுக்கும் மூன்றாவதாக அப்பிள்ளையின் முயற்ச்சிக்கும் என்றே புகழின் உரிமையைப் பகிர முடிகிறது.

ஏன் இவ்வாறு புகழின் உரிமையைப் பகிர வேண்டும்? பெற்றோரின் வளர்ப்புத் தான் புகழுக்கான பின்னுாட்டி (Feedback), கற்பித்தவரின் அறிவோ வழிகாட்டலோ தான் புகழுக்கான பின்புலம் (Background) இவ்விரண்டும் இல்லாமல் எவரும் முயற்ச்சி செய்து புகழீட்ட முடியாதே…

இன்னொரு எடுத்துக்காட்டாக மக்களுக்குத் தொண்டு செய்பவரைக் கருதினால், ஊரறிய, நாடறிய “மக்கள் தொண்டன்” எனப் புகழ் பெறலாம். இப்புகழில் பெற்றோரின் வழிகாட்டல், இப்பணிக்குத் தோள்கொடுத்து உதவியவரின் செயல், மூன்றாவதாக முயற்சித்தவரும் புகழின் உரிமையைப் பகிர முடிகிறது.

“புகழ் யாருக்கு?” என்ற கேள்வியை நீங்கள் உங்கள் உள்ளத்தினுள்ளே கேட்டுப் பாருங்கள். ஒருவர் பெறுகின்ற கெட்ட புகழோ நல்ல புகழோ, எத்தனை ஆட்களைப் பாதிக்குமோ எத்தனை ஆட்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ என்று நினைத்துப் பாருங்கள். இதனடிப்படையில் கெட்ட புகழால் ஒருவர் மக்களிடமிருந்து தனிமைப்பட வேண்டி வரலாம். அதேவேளை ஒருவர் நல்ல புகழால் மக்கள் விருப்புக்கு உள்ளாகி நாட்டுத் தலைவராகவோ உலகில் புகழ் பூத்த மனிதராக வரலாம்.

கல்வி என்பது
வெறும் தகுதிச் சான்றிதல் அல்ல
பயனாளர் அடைகின்ற பெறுதிகளே!
நீங்கள் படித்தவரா?
உங்கள் பெறுதிகளைப் பெற்ற
மக்கள் சொல்லியே
உலகம் நம்புகின்றது என்பதை
நீங்கள் மறந்துவிடாதீர்கள்!

எனவே, நல்லதையே செய்யுங்கள்… நற்புகழையே பெறுங்கள்… அதனால் மகிழ்வடையும் அத்தனை உள்ளங்களும் உங்களைப் போற்றிப் புகழ்வார்களே! அதேவேளை நீங்களும் மகிழ்வடைவீர்களே!
யாரப்பா உங்களைப் போற்றிப் புகழப் போறாங்கள்?
முதலாவது உங்களைப் பெற்றவங்கள்…
இரண்டாவது உங்களுக்குப் படிப்பித்தவங்க…
மூன்றாவது உங்களிடமிருந்து பயன்பெற்றவர்கள்
நான்காவது உங்கள் நாடு
ஐந்தாவது உலகம் முழுவதும்
உலகம் முழுவதும் வேண்டாமப்பா…
முதலில ஊருக்க நற்பெயரெடுக்க முயற்ச்சி செய்வோம்.
பின்னாளில் உலகம் எங்களைப் புகழட்டும்.

2 responses to “புகழ் யாருக்கு?

  1. சிறந்த எண்ணங்கள்! எல்லோரும் படித்துப் பயன்பெறலாம். தங்கள் பணி தொடர வாழ்த்த்கள்!