ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!

மருத்துவத்துறையில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அலோபதி, கோமியோபதி, சீன அக்குப்பங்சர், போதாக்குறைக்குப் பாட்டி/இயற்கை மருத்துவம் என ஏராளம் மருத்துவங்கள் காணப்படுகின்றன. இதற்கப்பால் மாற்று மருத்துவம் என வேறொன்றும் சொல்லுறாங்க… அதற்கப்பால் வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்), உளச்சிகிச்சை என வேறு பலவும் நம்மாளுகள் பேசிக்கொள்கிறாங்க… பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, வலைப்பூக்கள் என எல்லா ஊடகங்களிலும் மருத்துவங்கள் விளம்பரமாக மின்னுகிறது. இச்சூழலில் யாழ். பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து வெளியேறிய அழகான பெண் மருத்துவரிடம் (MBBS) உங்கள் யாழ்பாவாணன் ஒரு பத்திரிகையாளராகத் தனது ஐயங்களைக் கேட்டுப் பகிர்ந்தளிக்கின்றார்.

photo

யாழ்பாவாணன் : ஆயிரம் ஆள்களைக் கொன்றவர் அரை மருத்துவர் என்கிறார்களே, அது உண்மையா?

மருத்துவர் : அண்ணை! உதெல்லாம் பழசுகளின் கட்டுக்கதை…

யாழ்பாவாணன் : பொய் சொல்லாதையுங்கோ! நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கை கூடுதே?

மருத்துவர் : அண்ணை! அதெல்லாம் நோயாளியை உரிய நேரத்தில மருத்துவரிடம் காட்டாமையே…

யாழ்பாவாணன் : இது பற்றிய அறிவை மக்களுக்கு யார் வழங்க வேண்டும்?

மருத்துவர் : நோயாளிக்கு, நோய் பற்றிய தெளிவும் நோயைக் குறைக்கவோ மீள வராமல் தடுக்கவோ என்ன செய்யலாம் என்பதை முதலில் அறிவுறுத்துகிறோம்.

யாழ்பாவாணன் : ஏனையோருக்கு என்ன செய்யலாம்?

மருத்துவர் : பொது அமைப்புகளும் படித்தவர்களும் ஊர் ஊராக விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்தி வழிகாட்ட முடியுமே!

யாழ்பாவாணன் : மருத்துவர் எல்லோரும் முதல் நோயாளியைக் குணப்படுத்த மாட்டாங்களாம் அல்லது சாக்காட்டிப் போடுவாங்களாமே!

மருத்துவர் : உதெல்லாம் பொய் அண்ணை! என்னுடைய கணவர் கூட, நான் படித்து முடித்துப் பணிக்கு வந்த போது முதலில் பார்த்த நோயாளி தானே!

யாழ்பாவாணன் : அதெப்படி?

மருத்துவர் : எனது முதல் நாள் அறிவரைப் படி, ஒழுக்கத்தைப் பேணி முறைப்படி மருந்தெடுத்தார். தீராத நோய் ஒன்றை முற்றாக விரட்ட, தொடர்ந்து ஆறு மாதம் என்னைச் சந்திக்க வேண்டியிருந்தது. முதலாம் நோயாளி என்றதால், நானும் பரிவு காட்டினேன். அதனாலே…

யாழ்பாவாணன் : மக்கள் புதிய மருத்துவர்களை விட்டிட்டு, பழைய மருத்துவர்களை நாடுவதேன்?

மருத்துவர் : பழைய மருத்துவர்களிடம் பட்டறிவு கூடுதலாக இருக்கலாம். ஆனால், புதியவர்களால் முடியாவிட்டால் பழையவர்களிடம் அல்லது சிறப்புத் தகுதியானவர்களிடம் ஒப்படைப்பார்கள் தானே!

யாழ்பாவாணன் : புதிய மருத்துவர்களாலே மருந்துகளை மாற்றிக் கொடுத்துக் குணப்படுத்த இயலாதா?

மருத்துவர் : குறித்த நோய்க்குக் குறித்த மருந்து தான்! ஆனால், ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியது மருத்துவரின் கடமை. அதனாலேயே அப்படிச் செய்கிறோம்.

யாழ்பாவாணன் : சிறப்புத் தகுதியானவர்களால் எப்படிக் குணப்படுத்த முடிகிறது?

மருத்துவர் : பட்டறிவின் அடிப்படையில் மாற்றுவழிகளைக் கையாள்வதால் சாத்தியப்படுகிறது.

யாழ்பாவாணன் : வழி நெடுக மாற்று மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் இயங்குகின்றனவே, அவர்கள் ஆயிரம் ஆட்களைக் கொல்வாங்களா?

மருத்துவர் : மற்றைய மருத்துவங்கள் வேறு. மாற்று மருத்துவம் என்பது வேறு.

யாழ்பாவாணன் : மற்றைய மருத்துவங்கள் சிலவற்றைக் கூறுங்களேன்?

மருத்துவர் : இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, அலோபதி, அக்குப்பஞ்சர், அத்தோட பாட்டி மருத்துவம், தாத்தாவின் முறிவு, நெரிவு மருத்துவம் எனப் பல…

யாழ்பாவாணன் : இத்தனையும் இருந்தும் ஆங்கில மருத்துவத்தை விழுத்த முடியவில்லையே!

மருத்துவர் : மற்றைய மருத்துவங்களால் வீழ்ந்தவர்களைக் கூட நிமிர்த்த வல்லது ஆங்கில மருத்துவம் என்பதாலே…

யாழ்பாவாணன் : பச்சைப் பொய் சொல்லாதையுங்கோ… ஆங்கில மருத்துவத்தால தான் அதிகம் சாகிறாங்களே!

மருத்துவர் : எல்லா மற்றைய மருத்துவங்களிலும் காட்டிச் சுகப்படுத்த முடியாமல் தான் இறுதியில் ஆங்கில மருத்துவத்திடம் வருகிறார்கள். இயன்றவரை எல்லா உயிர்களையும் காப்பாற்றுகிறோமே! முதலில், உடனடியாக ஆங்கில மருத்துவத்திடம் வந்திருந்தால் சாவுகளைத் தடுத்திருக்கலாமே…

யாழ்பாவாணன் : பிறகும் பச்சைப் பொய்யைத் தானே சொல்லிறியள்… ஆங்கில மருந்தை விழுங்கி விழுங்கி சிறுநீரகம் சிதைந்து சாவதற்கு அஞ்சியே, மற்றைய மருத்துவங்களை நம்மாளுகள் நாடுகிறாங்களே…

மருத்துவர் : நீங்க சொல்லுறது நீலப் பொய்யே! மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை வழங்கும் போது உடலைப் பாதிக்காத வகையில் தான் அறிவுரை கூறி வழங்குகின்றார்கள். பிறகு நோயாளர்கள் அஞ்சத் தேவையில்லையே!

யாழ்பாவாணன் : பிறகும் பச்சைப் பொய்யைத் தானே சொல்லிறியள்… எயிட்ஸ், புற்றுநோயை விட சிறுநீரகப் பாதிப்பாலே தான் சாவடைபவரே அதிகம் பாருங்கோ… இதற்கு என்ன காரணம்?

மருத்துவர் : முதலில், ஆங்கில மருத்துவத்தில பழி போடாதீங்க… எல்லா மருத்துவ மருந்துகளும் சிறுநீரகத்தைப் பாதிக்கச் செய்யும். எனவே, மருத்துவரின் மதியுரைப்படி விழுங்கினால் பாதிப்பு வராது.
முதலாவதாக நோயாளிகளில் சில தவறுகளும் உண்டு. அதாவது, தெருக் கடையில் தகுதியற்ற மருந்துக் கலவையாளர் (pharmacit) இருக்கலாம். கண் கண்ட நோய்க்கு தெருக் கடையில் மருந்து எடுத்தலும் மருத்துவர் அல்லாதவர் சொற்கேட்டு மருந்து விழுங்குதலும் தான் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இரண்டாவதாக நம்மாளுகள் மதுபானங்கள் மற்றும் உணவுடன் சேர்த்துண்ணும் போதைப்பொருள்கள், வேதியியல்(இரசாயன) பொருள் கலந்த உணவுகள்(எடுத்துக்காட்டாக, தெருவில் விற்கும் hot dogs-சுடுநாய் உணவுகள்) மற்றும் அற்ககோல் கலந்த குளிர்பானங்கள் உண்டு குடிப்பதாலும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒன்றை மட்டும் தெரிச்சுக்கணும் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடிய உணவுகளையோ குடிபானங்களையோ மருந்துகளையோ (அதாவது, மருத்துவர் வழிகாட்டலின்றி) உட்கொள்ளாமல் இருந்தால் இந்நோய் வரவே வராது.

யாழ்பாவாணன் : இப்ப ஒரு சின்னப் பொய் சொல்லிட்டியளே! எந்த வகையிலும் உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் தம்மிடம் இருப்பதாக எல்லா மற்றைய மருத்துவ மருத்துவர்கள் சொல்கிறார்களே… அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மருத்துவர் : இப்ப தான் நீங்க ஒரு பெரிய பொய் சொல்லிறியள்… மற்றைய மருத்துவ மருத்துவர்கள் சொல்கிறது போல உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் உலகில் இல்லை. ஏதோ ஒன்று ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். எடுத்துக் காட்டாகப் பருப்பை நாள் தோறும் உண்டால் கூட நோய் வரலாம்.

யாழ்பாவாணன் : அப்படியென்றால், எந்த வகையிலும் உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் வழங்கும் மருத்துவம் எது?

மருத்துவர் : மாற்று மருத்துவம் தான்.

யாழ்பாவாணன் : மாற்று மருத்துவம் என்கிறீர்கள், அவர்களுக்கு எந்தப் பள்ளிக்கூடத்தில “மருத்துவர்” பட்டம் வழங்கிறாங்கள்?

மருத்துவர் : மாற்று மருத்துவம் என்றால் மருந்தில்லா மருத்துவம் தான். நோய்த் தொற்றுக்கள் ஏற்படாது தடுத்தல், நோய் தொற்றாமல் சூழலைச் சுத்தப்படுத்தல், உள்ளத் தூய்மை பேணல் ஆகியவற்றைக் கொண்ட வழிகாட்டலும் மதியுரையுமே (ஆலோசனையுமே). தொடக்க காலத்திலிருந்தே மருத்துவர்கள் தான் செய்து வருகிறார்கள். காலப் போக்கில் சிறப்பாக வழிகாட்டலும் மதியுரையும் கற்றவர்களாலும் இப்பணியைச் செய்யலாமென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆயினும், இதற்கும் அரச அனுமதிச் சான்றிதல் (Licence) பெற்றிருத்தல் வேண்டும்.

யாழ்பாவாணன் : அப்படியென்றால், சந்திக்குச் சந்தி மாற்று மருத்துவம் செய்யும் நிலைய மருத்துவர்கள்; ஆயிரம் ஆள்களைக் கொன்றவர் அரை ஆங்கில மருத்துவர் என்றால், அவர்கள் ஆயிரக் கணக்கில கொல்லும் கால் மருத்துவராக இருப்பினமோ?

மருத்துவர் : உங்கள் பழமொழி எனக்கு வேண்டாம். உதை வைத்து, ஐந்து ஆண்டுகள் துன்பப்பட்டு படித்து வந்த மருத்துவரை உதைக்கவும் வேண்டாம்.

யாழ்பாவாணன் : எப்படியோ மக்கள் தானே சாகினம். அதை விடுவம். உணவு மருத்துவம் , தியான மருத்துவம், யோகா மருத்துவம் , உடற் பயிற்சி மருத்துவம், உள மருத்துவம் என்று கனக்க அளக்கினம் பாருங்கோ… பிறந்த மனிதன் இறக்காமலிருக்க, ஒரு மருத்துவமும் இல்லையே?

மருத்துவர் : பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல். நோயின்றி வாழ உதவுபவனே மருத்துவர். உணவு, தியானம், யோகாசனம், உடற் பயிற்சி (உள மருத்துவம் ஆங்கில மருத்துவத்திலேயே இருக்கிறது) என்பன உள, உடல் நலம் பேணுவதால் நோய்களை விரட்டலாம். இவை நோய் வருமுன் காக்க உதவும்.

அடுத்த பகுதியைப் படிக்க
http://wp.me/p3oy0k-3M

(தொடரும்)

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.