ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!

http://wp.me/p3oy0k-3M முதலிரு பகுதிகளையும் படித்த பின் வாசிக்கத் தொடரவும்

யாழ்பாவாணன் : MBBS மருத்துவத்தில உளவியல் இருக்கென்கிறியள், அதுதான் கேட்டேன்.

மருத்துவர் : தமிழாக்களிடம் ஒற்றுமை இன்மை வர அவரவர் சுயநலமே காரணம். ஒருவர் முன்னேற உதவாமல் தானும் முன்னேறத் துடிப்பது, உன்னைப் போல் அயலானையும் விரும்பு(நேசி) என்பதிற்குப்பதிலாக அயலானை விடத் தானுயர வேண்டுமென்பதற்காக அயலானை மதிப்பதில்லை, எதற்கெடுத்தாலும் தாழ்வுள(மன)ப் பாங்கு எனப் பல இருக்கு. தமிழாக்களிடம் ஒற்றுமை வரவேணுமென்றால் யார் குற்றினாலும் அரிசியாகட்டும் என்று ஆளுக்காள் ஒத்தழைப்பு வழங்கவேண்டும்.

யாழ்பாவாணன் : நம்ம தமிழாக்கள் படிப்பில புலிகள் அம்மா! இன்றைக்கும் தமிழரின் சொத்து படிப்புத்தானே! எப்படியோ அயலானை விடத் தானுயர எண்ணுவதில் பிழையில்லைத் தானே?

மருத்துவர் : பிழையில்லைத் தான். அயலார், சுற்றம், சூழல் எல்லோருக்கும் உதவி, ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு தானுயரவோ முன்னேறவோ முயன்றால் ஒற்றுமை தானாகவே வருமே! எதையும் நான்/நாம் செய்தால் தான் நல்லம் அடுத்தவர் செய்தாலும் நம்மினத்திற்கு நன்மை தருமென எண்ணாமல், அதனால் தனக்கு நற்பெயர் கிட்டாதென்ற தாழ்வுள(மன)ப் பாங்கு இருக்கும் வரை தமிழருக்குள் ஒற்றுமைக்கு இடமில்லையே!

யாழ்பாவாணன் : சரி போதும் அம்மா! நம்ம நாட்டு அரசு படிக்க வேண்டிய உளவியலையும்(Psychology) உளச்சிகிச்சைகளையும்(Psycho Therapy) எடுத்துக்கூறுவீர்களா? மக்கள் படும் துன்பங்களுக்கு அரசு தீர்வுகளை முன்வைக்க முடியாமல் முக்கிறதே… அதுதான் கேட்கிறன்?

மருத்துவர் : அரசுக்கு வழிகாட்ட என்னால முடியாதையா! நன்றியுடன் இவ்வளவோட நிற்பாட்டுங்கோ…

யாழ்பாவாணன் : இல்லை! இல்லை! மேலோட்டமாகவாவது கூறுங்களேன்?

மருத்துவர் : அரசோ அரசியல்வாதிகளோ அரச உயர்மட்டத் தலைவர்களோ அன்றி எல்லோரும் மனிதவள முகாமைத்துவமும் மேம்பாடும்(Human Resources Management and Development) படிக்கலாம். இதனால் அரச அமைப்புகளிற்கோ அரச சார்பற்ற அமைப்புகளிற்கோ தனியார் அமைப்புகளிற்கோ சிறு நிறுவனங்களிற்கோ மனிதவளத்தை சரியாகவும் முறையாகவும் பயன்படுத்த வழிகள் கிட்டுகின்றன.

யாழ்பாவாணன் : அதென்னங்க சரியாகவும் முறையாகவும் என்று ஒரு போடு ஒன்று போடுறியள்?

மருத்துவர் : ஆளணித் தேர்வில் துறைசார் அறிவாளிகளைத் தெரிவு செய்வது சரியாகவும் எனக் கருதுக; அவ்வவ் துறைக்கு அவ்வவ் துறைசார் அறிவாளிகளைப் பணிக்கு அமர்த்துதல் முறையாகவும் எனக் கருதுக. இதனால் குறைந்த மனிதவளத்துடன் அதிகூடிய வருவாயை ஈட்டலாம். ஆனால், அரசிற்கு வழிகாட்டியதாகக் கருத்திற் கொள்ளவேண்டாம்.

யாழ்பாவாணன் : மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களே! தங்கள் படிப்பை நிறைவு செய்து வந்ததும் இடக்கு முடக்காக “ஆயிரம் ஆட்களைக் கொன்றவர் அரை மருந்துவர்” என்ற பழமொழியை வைத்து தொல்லை மேல் தொல்லை தரும் கேள்விகளைக் கேட்டுப்போட்டேன். அதற்கு முதலில தங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

மருத்துவர் : காலம் காலமாகக் கூறி வரும் பழமொழி தானே! மக்கள் நோய் குணமாகமல் உறவுகள் சாவடைந்த வேளை சொல்லிச் சொல்லி வந்த பழமொழி தானே!

யாழ்பாவாணன் : இனி நம்ம நாட்டு மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

மருத்துவர் : படிப்பு முடித்து முதன் முதலாக உங்கட ஊருக்குப் பணிசெய்யுமாறு கலைத்துப் போட்டாங்கள். வந்த கையோட நீங்களும் கையைக் குலுக்கிப் போட்டியள். ஐந்தாண்டுகள் மருத்துவப் படிப்பிற்குள்ளேயே இருந்த எனக்கு, மக்கள் மத்தியில் இத்தனை ஐயங்கள் இருக்கென்பதை உங்கள் மூலமாகத் தான் அறிந்தேன்.

வழி நெடுகக் கடைகளில் தொங்கிக் கிடக்கும் நூல்களின் தலைப்புகளைப் பார்த்தோ அல்லது அதனை வேண்டிப் படித்தோ இத்தனை அழகாகக் கேள்விகளைக் கேட்டியள். நூல்கள் நோய்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தவே தவிர, நூல்களை வைத்து மருத்துவம் நடாத்தவல்ல என்பதை அறிவீரா? மருத்துவம் என்ற சொல்லைப் பிற்சேற்கையாகக் கொண்ட தலைப்பிலான நூல்களில் மருத்துவமில்லை. மக்கள் இவ்வாறான நூல்களைப் படித்த பின் தமக்குத் தாம் மருத்துவம் செய்யக்கூடாது. எந்தப் பெரிய அறிஞராயினும் மருத்துவரை அணுகியே நோய்களைக் குணப்படுத்த முயலவேண்டும். இதனால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

முதன்மையாக ஆங்கில மருத்துவமும் அடுத்து சித்த ஆயுர்வேத மருத்துவமும் பேசப்படுகிறது. இன்று இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் சிறப்பாக இயற்கை மருத்துவமும் படிப்பிக்கிறார்கள். மற்றைய மருத்துவங்களைப் பற்றி நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.

அறிவியல்(விஞ்ஞான) மாற்றங்களுக்கு ஏற்ப ஆங்கில மருத்துவமும் மேம்பாடு அடையும். எந்தப் புதிய நோய்களுக்கும் உடனடித் தீர்வைத் தருவதும் ஆங்கில மருத்துவமே! ஆங்கில மருந்துகளால் பாதிப்புகள்(பக்க விளைவுகள்) வர வாய்ப்பும் உண்டு. அதனை முன்கூட்டியே மருத்துவர்கள் அறிந்து, உடலைப் பாதிக்காத அளவிலேயே ஆங்கில மருந்துகளை அருமையாகப் பாவிக்க வழிகாட்டுகின்றனர். மேலும், மாற்று வழிகளைக் கையாண்டு நோய்களைக் குணப்படுத்தவும் வழிகாட்டுகின்றனர்.

எனவே, ஆங்கில மருந்துகளால் பாதிப்புகள்(பக்க விளைவுகள்) வருமென அஞ்சி மாற்று மருத்துவம் என்று எதனையும் நாடத் தேவையில்லை. சிறந்த பட்டறிவுள்ள ஆங்கில மருத்துவரை நாடினால் போதுமென்று இருந்துவிடாமல், இளைய மருத்துவரையும் நாடலாம். உயிரின் பெறுமதியுணர்ந்த, மருத்துவர்களின் ஒழுங்கிற்கமைய இளையவர்களால் முடியாவிட்டால்; அவர்களே சிறந்த பட்டறிவுள்ளவரிடம் காட்டிக்கொள்ள உதவுவரே! பின்னர் ஏன் தான், மக்கள் ஆங்கில மருத்துவத்தை வெறுத்து சாவைத் தேடி அலைகிறார்களோ எனக்குப் புரியவில்லை.

யாழ்பாவாணன் : தங்கள் பதில்கள் எல்லாம் மக்கள் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமென நம்புகிறேன். மேலும், நம்பிக்கை என்ற முறையில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் போலி மருத்துவர்களை, போலி உளநல மதியுரைஞர்களை அடையாளப்படுத்தி உள்ளீர்கள். ஆங்கில மருத்துவத்தை வெறுத்தவர்களையே; ஆங்கில மருத்துவத்தை விரும்பும் வகையில் உண்மையைக் கொட்டியுள்ளீர்கள். தங்களுடைய எல்லாக் கருத்துமே, மக்களைச் சரியான வழியில் செல்ல வழிகாட்டுகிறதே!

மருத்துவர் : மக்களுக்கு மருந்து கொடுக்கும் முன், நோய் பற்றிய தெளிவையும் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையையும் விளக்குவது மருத்துவரின் கடமை தானே!

யாழ்பாவாணன் : கன்னி மருத்துவரின் கன்னிக் கலந்துரையாடலாக இச்சந்திப்பு அமைந்துவிட்டது. உங்களைப் போன்று ஆங்கில மருத்துவர் எல்லோரும் நல்வழிகாட்டலுடன் சிகிச்சை அளிப்பார்களாயின்; ஆயிரமென்ன கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற இயலுமே! இத்துடன் நிறைவு செய்யலாம் தான்… ஆனால், “ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!” என்பது நம்மூரார் பேச்சுங்க… “ஆயிரம் வேரை அறிந்தவர் அரை மருத்துவர்!” என்று தான் பழங்காலப் பேச்சிருக்கே!

மருத்துவர் : யாழ். பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவபிடத் தோழிகள் சொல்லி எனக்குத் தெரியும்.

யாழ்பாவாணன் : இத்தனை கேள்விகளைக் கேட்டும் இதனை நீங்கள் நினைவூட்ட வில்லையே!

மருத்துவர் : உங்கட கேள்விகள் எவ்வளவுக்கு நீளும் என்று தான் அமைதியாக இருந்துவிட்டேன்.

யாழ்பாவாணன் : நீங்களும் யாழ். பல்கலைக்கழகத்தில் MBBS படித்த மிடுக்கோடு உறைப்பாகப் பதிலளித்ததை நானும் கண்டுகொண்டேன்.

மருத்துவர் : நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி.

யாழ்பாவாணன் : மிக்க நன்றி.

முடிவுரை:- நாட்டார் இலக்கியங்களில் “ஆயிரம் வேரை அறிந்தவர் அரைப் பரிகாரி” என்றிருக்கப் பின்னாளில் “ஆயிரம் பேரைக் கொன்றவர் அரைப் பரிகாரி” எனத் திரிபடைந்ததாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் எழுதிய நூலொன்றில் படித்தேன். (தமிழில் பரிகாரி – மருத்துவர், பரியாரி – முடிவெட்டுபவர் என்று அழைக்கப்படுகிறது.) அதனை அடிப்படையாகக் கொண்டு மருத்துவர் ஒருவருடன் சந்தித்து உரையாடியதாக எழுதியதின் நோக்கம்; மக்கள் உளநலம், உடல் நலம், ஆங்கில மருத்துவம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கே! இன்றைய உலகில் அமெரிக்கா தொட்டு எல்லா நாடுகளிலும் உளச்சிகிச்சை, உளநல மதியுரை நிலையங்கள் பெருகி வருகின்றன. இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அதாவது மருத்துவச் சோதனை மேற்கொண்டு உடலில் நோய் இல்லையென்றும் உள்ளத்தில் தான் நோயென்றும் மருத்துவர் கூறினால் மட்டுமே இந்நிலையங்களை நாடலாம் என்பதை உறுதிப்படுத்தவே! மருத்துவரின் அறிவுரைப்படி உளநல வழிகாட்டலையும் மதியுரை(ஆலோசனை)யையும் நம்பிக்கையானவர்களிடம் பெறலாம் என முடிக்கிறேன்.

எனது இப்பதிவில் எந்த மருத்துவரும் பங்கெடுக்கவில்லை. எல்லாம் என் எண்ணங்கள்(யாவும் கற்பனை) என்று தான் சொல்ல வேண்டும். என் அறிவிற்கெட்டியவரை மருத்துவர், யாழ்பாவாணன் சந்தித்துக் கலந்துரையாடியதாக எழுதியிருக்கிறேன். மருத்துவர் பக்கத்திலிருந்து உளநல மதியுரைஞரை(Counsellor) ஐ நம்புவதைவிட மருத்துவரை நம்பலாம் என்றும் யாழ்பாவாணன் பக்கத்திலிருந்து ஆங்கில(MBBS) மருத்துவத்தில் மக்களுக்குள்ள ஐயங்களைத் துருவியும் உள்ளேன்.

இதிலிருந்து ஒரு நோயாளி மருத்துவரை(Doctor) முதன் நிலையிலும் உளநல மதியுரைஞரை(Counsellor) ஐ மருத்துவரை(Doctor)ச் சந்திக்க முன்னரான மதியுரை(ஆலோசனை) பெறவும் அல்லது மருத்துவரின்(Doctor) அறிவுறுத்தலின் படி மதியுரை(Counselling) மற்றும் உளச்சிகிச்சை(Psychotherapy) பெறவும் பாவிக்கலாம் என்பதைச் சுட்டியுள்ளேன்.

எப்படி இருப்பினும் “ஆயிரம் வேரை அறிந்தவர் அரைப் பரிகாரி” என்பதே சரி. அதாவது, நாட்டார் இலக்கியங்களில் கூறப்பட்டது. ஏன் அப்படிக் கூறியிருப்பார்கள் என்று உங்கள் மூளைக்கு வேலை கொடுத்தீர்களா? வேர்கள் பற்றிய அறிவு போதாதெனின் போலி மருத்துவர்கள் என்றும் கருதியிருக்கலாம். “ஆயிரம் வேரை அறிந்தவர் அரைப் பரிகாரி” எனின் அதற்கும் மேல் அறிந்தவர்கள் தான் முக்கால், முழுப் பரிகாரி என்றிருக்கலாம்.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் இலைகள், இலைச்சாறு, பூக்கள், கனிகள், விதைகள், விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய், மரப்பட்டை என்பன மட்டும் மருந்தாகப் பாவிக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். வேர்களை அவித்துக் குடிக்கவும் பாவிக்கிறார்கள். மருத்துவர்கள் வேர்களில் இருந்து பல மருந்துகளையும் தயாரிக்கக் கூடும். சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் வேர்களின் முக்கியத்துவம் அறிந்தே இவ்வாறு தெரிவித்திருக்கவேண்டும்.

(முற்றும்)

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

4 responses to “ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!

  1. ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை (க்கும் )வைத்தியன் என்பதுதானே ,சரி ?

  2. கோடிகளை கொட்டி மருத்துவம் படிப்பவர்களை பார்க்கும்போதே மக்களை கொல்லும் கேடிகளாய் தெறிகிறார்கள் சட்டபூர்வ ஆட்கடத்தல்காரர்களாக தெறிகிறார்கள். இறந்த நோயாளிக்கும் பணம் பெற்றுக்கொண்டுதான் நோயாளி இறந்த செய்தியை சொல்கிறார்கள் தனியார் மருத்துவர்கள்.