ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!

http://wp.me/p3oy0k-3K முதற் பகுதியைப் படித்த பின் வாசிக்கத் தொடரவும்

யாழ்பாவாணன் : உணவைத் தான் கால்வயிறு உண்டு, தண்ணீரைத் தான் கால்வயிறு குடித்து, அரை வயிற்றைச் சும்மா கிடக்க விட்டு வாழ்ந்தாலும் யோகாசனமும், உடற் பயிற்சியும் கடையில விற்கிற நூல்களைப் படித்துச் செய்யலாம் தானே? இதுகளால சரி, பாழாய்ப் போற மனிதன் சாகாமல் இருப்பானா?

மருத்துவர் : நீங்கள் சொல்கிற படி பார்த்தால், சாவு தான் பரிசாகக் கிட்டும். இந்து சமயப் பெரியார் ஒருவர் சொன்ன குறிப்புப்படி உணவு உண்ணலாம். ஆனால், அவை சமச்சீர் உணவாக இருக்க வேண்டுமே! யோகாசனமும், உடற் பயிற்சியும் கடையில விற்கிற நூல்களைப் படித்துச் செய்யக்கூடாதே!

யாழ்பாவாணன் : கட்டையில போகுமுன்னும் கைநாடி பிடித்துப் போட்டு “மூச்சுப் போச்சு” என்று சொல்லுகிற மருத்துவராலே சாவைத் தானே பரிசாகத் தரமுடியும். அதெல்லாம் ஆண்டவன் செயலென்று விடுவம். யோகாசனத்தையும், உடற் பயிற்சியையும் ஒழுங்கான ஆசிரியர் ஒருவரைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம். அதென்னப்பா சமச்சீர் உணவு?

மருத்துவர் : தனி உணவை வழக்கப்படுத்தாமல், எல்லா வகை (அரிசி, வரகு, சாமி, தினை, சோளம், குரக்கன், எள்ளு, பயறு, உழுந்து) தானியங்களையும் பனம் பண்டங்களையும் எல்லா வகைக் கறிகளையும்(இலைக் கறிகள் உட்பட, அவியல் கறிகளாக) சம அளவில் உணவில் சேர்த்து வருதல் வேண்டும். இதனால், உடலுக்கு வேண்டிய எல்லா வகை ஊட்டப் பொருளும் கிடைக்கிறது. சமச்சீர் உணவு என்றால் இதுதான். நாள் தோறும் சோறும் பருப்பும் பிட்டும் உண்டால் நோய்கள் தானே வரும்.

யாழ்பாவாணன் : என்ர தோட்டத்தில வரகு, சாமி, தினை விதைத்தாலும் வந்திடும். ஆனால், பனம் பண்டங்களை நிலாவிலிருந்து தான் இறக்க வேண்டி இருக்கே! அது சரி, தியானம் செய்ய நூல்கள் இல்லையா?

மருத்துவர் : தியானம் செய்யத் தானே இந்துக்களுக்குப் பன்னிரு திருமுறையும் பகவத்கீதையும், கிறிஸ்த்தவர்களுக்கு பரிசுத்த வேதாகமம்(பைபிள்), இஸ்லாமியருக்கு குர்ஆன், பௌத்தர்களுக்கு சித்தார்த்தனின்(புத்தரின்) போதனைகள் என ஒவ்வோர் மதத்திற்கும் உண்டே!

யாழ்பாவாணன் : உதுகளைப் படித்துக் கொண்டிருப்பது தானா தியானம்?

மருத்துவர் : இல்லை! ஆனால், உள்ளத்தை ஒருநிலைப்படுத்திப் பேணுதலே தியானம் என்போம். இவற்றைப் படிக்கும் போது இறைவனைத் தவிர பிற எண்ணங்கள் உங்கள் உள்ளத்தில் எழாவண்ணம் பேணுதலே தியானம் என்போம்.

யாழ்பாவாணன் : தியானத்துக்கும் கூட இப்ப கல்வி நிலையங்கள் திறந்தாச்சுங்க. அப்ப அதை விடுவோம். நோய்கள் நெருங்காமல் இருக்க உடற்பயிற்சி செய்யச் சொல்கிறாங்களே! உங்கட மருந்து வேலை செய்யாட்டி, உடற்பயிற்சி தான் நம்மாளுகளுக்கு உதவுகிறதோ?

மருத்துவர் : உடற்பயிற்சி செய்வதன் நோக்கம், உடலில் மேலதிகமாக இருக்கின்ற குளூக்கோஸை எரித்துக் குறைக்கத் தான். அப்படியாயின், நீரிழிவும் கட்டுப்படும்; நரம்புகளும் சுறுசுறுப்படையும்; குருதிச் சுற்றோட்டமும் இயல்பாக இடம்பெறும்; பாலியல் உறவைத் தூண்டவும் உதவும்; உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும் ஆகையால் நீண்ட ஆயுளுடன் வாழலாமே!

யாழ்பாவாணன் : நானும் தேடிப் பார்த்தேன்… சந்திக்குச் சந்தி உடற்பயிற்சி பழக்கிற கடைகள் இல்லை அம்மா. எப்படியான பயிற்சிகள் செய்யலாம் என்பதையும் நீங்கள் தான் சொல்லணும் அம்மா?

மருத்துவர் : இரண்டு வகை உடற்பயிற்சி இருக்குங்க… முதலாவது மூச்சை அடக்கி வைச்சிருந்து விடும் நேரோபி அல்லது அன்ஏரோபிப்(Anaerobic) பயிற்சிகள். எடுத்துக்காட்டாக நீச்சல், பாய்தல், ஓடுதல் போன்றன. இரண்டாவது மூச்சை அடக்கி வைச்சிருக்காது செய்யும் ஏரோபிப்(Aerobic) பயிற்சிகள். எடுத்துக்காட்டாக கைவீசி நடத்தல், மெல்லிய துள்ளல், சிறிய வேக நடை போன்றன. ஏரோபிப் பயிற்சிகளை எவரும் செய்யலாம் பாருங்கோ, ஆனால் நேரோபிப் பயிற்சிகளை மருத்துவரின் வழிகாட்டலின் படியே செய்யவேண்டும்.

யாழ்பாவாணன் : உடற்பயிற்சி செய்யவும் உங்களைத் தான் கெஞ்ச வேணும் போல…?

மருத்துவர் : ஆங்கில(MBBS) மருத்துவம்; மருந்தைக் கொடுத்து ஆட்களைக் கொல்லாது. அருமையாக மருந்தை எடுத்துக் கொண்டு, மாற்று வழிகளில் நோயைக் குணப்படுத்த அறிவுரை கூறுகிறதே! மருத்துவரல்லாத ஒருவரிடம் மாற்று வழிகளைத் தேடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறோம்.

யாழ்பாவாணன் : அட, சிக்கல் அப்படிப் போகுதோ… மூச்சுப்பயிற்சி சொல்லிக்கொடுக்கிறோம் என்று கடைகள் நடத்துகிறாங்களே! அந்தப் பக்கம் தலையைக் காட்டலாமா?

மருத்துவர் : சிறந்த பட்டறிவுள்ள ஒருவரிடம் பயின்றால் கண்ட கண்ட கடைகளுக்குப் போகத் தேவையில்லையே! யோகாவில் மூச்சுப்பயிற்சியும் அடங்கியிருக்கிறதே! யோகாவையும் சிறந்த பட்டறிவுள்ள ஒருவரிடமே பயில வேண்டும்.

யாழ்பாவாணன் : காந்த சிகிச்சை, ரெய்கிச் சிகிச்சை, சொதிட சிகிச்சை, சித்தர் சிகிச்சை, பூ(மலர்) சிகிச்சை, மூலிகைச் சிகிச்சை என ஆயிரம் மருத்துவங்கள் சொல்கிறங்களே… அந்தந்த மருத்துவர்களும் ஆயிரக் கணக்கில ஆட்களைக் கொல்லுவாங்களோ?

மருத்துவர் : நாளுக்கொரு மருத்துவமென அலையிறவங்களுக்கு; முதலில் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும். பின்னர் சரியான முடிவு, அதுவும் உயிரைக் காக்க வேண்டிய முடிவு எடுப்பது பற்றி விளக்கியாக வேண்டும். அதாவது, ஆங்கில(MBBS) மருத்துவரிடம் சென்றால் நோய் குணமாகும்; பிறகேன் ஆயிரத்தெட்டுச் சிகிச்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றவாறு.

யாழ்பாவாணன் : யாரம்மா இப்படி எல்லாம் நம்மாளுகளுக்கு முடிவு எடுக்கப் படிப்பிக்கிறது?

மருத்துவர் : இதற்கென உளவியல் படித்த வழிகாட்டிகள் இருக்கிறாங்கள் தானே!

யாழ்பாவாணன் : MBBS ஆங்கில மருத்துவத்திற்குள்ளே தான் உளமருத்துவமும் இருக்கு என்கிறீர்கள்… அந்த உளவியல் வழிகாட்டிகளும் சந்திக்குச் சந்தி கடைபோட்டு உளமருத்துவம், உளச்சிகிச்சைகள், வழிகாட்டலும் மதியுரையும் எனக் கனக்கச் செய்யிறம் என்கிறாங்க… கடைசியில நம்மாளுகள் அங்கே போயும் அவங்களால சாவாங்களோ…?

மருத்துவர் : ஆமாம்! சாவாங்கள் தான். ஒருவருக்குத் தோளில சிறிய கட்டி பந்து போல வீங்கி இருந்தது. நம்மாளு வழிகாட்டிப் பெட்டிக் கடைக்குப் போயிருந்தார். அவங்களும் உளச்சிகிச்சை(Psycho Therapy), மதியுரை(Counselling) என இரண்டாண்டுகள் கடத்திச்சினம். அந்தாளோ ஈற்றில் என்னிடம் வரவே, படம் எடுத்துப் பார்த்திட்டு அக்கட்டியை வெட்டி எடுத்துப்போட்டேன். சில காலம் பிந்திப் போயிருந்தால், அக்கட்டி புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

யாழ்பாவாணன் : அடக்கடவுளே! ஆயிரம் ஆட்களைக் கொன்றவர் ஆங்கில மருத்துவர் என்றால், ஆயிரம் சொற்களால் வழிகாட்டுவோர் எத்தனை ஆட்களைக் கொல்லுவாங்கள்?

மருத்துவர் : கடவுளில பழியைப் போட்டுப் பயனில்லைப் பாரும். வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிப்பவர் நம்மாளுகளே(MBBS மருத்துவர்களே)! ஒருவரது உடலில் நோயில்லை என்றும் உள்ளத்தில் தான் இருக்கிறது என்றும் மருத்துவர் உறுதிப்படுத்திய பின்னரே வழிகாட்டலும் மதியுரையும் வழங்க முடியும். எனவே, நம்மாளுகள் முதலில் மருத்துவரை நாடியிருந்தால் சாவில்லையே!

யாழ்பாவாணன் : அப்படியென்றால், உளவியல் வழிகாட்டிகள் நம்மாளுகளுக்குத் தேவையில்லையே!

மருத்துவர் : நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் நோய்களுக்குக் காரணமான உளப்புண்களை ஆற்றுப்படுத்துவதற்கும் எனப் பல தேவைகளுக்கு அவர்களது வழிகாட்டல்களைப் பயன்படுத்தலாமே!

யாழ்பாவாணன் : என்னங்க… அவங்களிடம் போனால் சாகலாம் என்கிறியள்… பிறகு, இப்படியும் அவங்களைப் பயன்படுத்தலாம் என்கிறியள்… இதுபற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துங்க…

மருத்துவர் : இன்றைய உலகில் மாற்று மருத்துவமென உளநல வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) கருதப்படுகிறது. அதாவது, பெரும்பாலான நோய்களுக்கு உள்ளம் தான் காரணமாம். உள்ளத்தைத் தூய்மைப்படுத்தினால், உளப்புண்களை ஆற்றுப்படுத்தினால், உள்ளத்திலுள்ள சில எண்ணப்பதிவுகளை மாற்றினால் தீராத நோய்கள் சிலவற்றைக் குறைக்கலாம் அல்லது முற்றாக உடலைவிட்டு விரட்டலாம். அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் இதனை முதன்மைப்படுத்துகிறார்கள்.

யாழ்பாவாணன் : கையைக் காலை உடைச்சுப் போட்டு; உள்ளத்திற்கு மருந்து உள்ளமென கண்ட நின்ற இடத்தில் கடை திறந்து வழிகாட்டி என்போரை மக்கள் எப்படி நம்பிறது?

மருத்துவர் : அரச அனுமதிச் சான்று(Counsellor License) பெற்றிருந்தும் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தி உடலில் நோயில்லை என்று மருத்துவர் உறுதிப்படுத்தும் சான்றை ஏற்று உளநல வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) வழங்குவோரை நம்பலாம்.

யாழ்பாவாணன் : இதற்கெல்லாம் மருத்துவரை நாடத் தேவையில்லை; தங்களை நம்பினால் போதும் என்போரை மக்கள் எப்படி நம்பிறது?

மருத்துவர் : அப்படியானவர்களை நம்பக்கூடாது. அவர்களால் உடல் நோய்களை அடையாளப்படுத்த முடியாதே!

யாழ்பாவாணன் : நோய்களை அடையாளப்படுத்த முடியாத அவர்களை மக்கள் நம்பிச் சாவதா?

மருத்துவர் : இல்லை! ஒருவருக்கு உடல் நோய்கள் ஏதுமில்லை என மருத்துவரால் மட்டுமே சான்றுப்படுத்த முடியும். இந்த இந்த நோய்களுக்கு மருந்தில்லை என்றும் இந்த இந்த உளச்சிகிச்சைகளை(Psycho Therapy) வழங்கி இவ்வாறு உளநல வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) வழங்கலாம் என்பதையும் மருத்துவரே உறுதிப்படுத்த வேண்டும். இதனை ஏற்று மதியுரை(Counselling) வழங்குவோரை நம்பலாம்.

யாழ்பாவாணன் : அப்படி என்ன தான் உளவியலில் இருக்கென்று; இப்படி உளவியல் வழிகாட்டிகள் தங்களை நாடினால் நலமடையலாம் என்று உளறுறாங்களே!

மருத்துவர் : நாற்பதிற்கும் மேற்பட்ட உளவியலும்(Psychology) ஐம்பதிற்கும் மேற்பட்ட உளச்சிகிச்சை(Psycho Therapy) முறைகளும் இருக்கு. இவற்றைப் படித்தவர்களே மதியுரை(Counselling) வழங்குகின்றனர்.

யாழ்பாவாணன் : மதியுரை(Counselling) தருவோர் நாற்பதிற்கும் மேற்பட்ட உளவியலையும்(Psychology) ஐம்பதிற்கும் மேற்பட்ட உளச்சிகிச்சைகளையும்(Psycho Therapy) படித்திருப்பாங்களா?

மருத்துவர் : எல்லாம் படித்திருக்க வேண்டியதில்லை. துறைசார் உளவியலையும் (http://www.all-about-psychology.com/types-of-psychology.html) உளச்சிகிச்சைகளையும் (http://www.goodtherapy.org/types-of-therapy.html) படித்திருந்தால் போதும். துறைசார் படித்தறிவும் பட்டறிவும் நிரம்ப உள்ளவராலே தான் அத்துறைசார் சிக்கலுக்கான மதியுரையை(Counselling) வழங்கமுடியும்.

யாழ்பாவாணன் : துறைசார் அறிவு என்கிறியள், அதெப்படி இருக்கும்?

மருத்துவர் : அடிப்படைச் சிக்கலுக்குப் பொது உளவியல், குழந்தைகள் சிக்கலுக்கு குழந்தை உளவியல், கல்விச் சிக்கலுக்கு கல்வி உளவியல், சமூகச் சிக்கலுக்கு சமூக உளவியல், மதியுரைச் செயலுக்கு மதியுரை உளவியல் எனத் தனித்தனியே படித்திருந்தாலும் அவ்வவ் துறையில் பணியாற்றியும் இருக்கவேண்டும்.

யாழ்பாவாணன் : மக்களாய(சமூக)ச் சிக்கலுக்கு மக்களாய(சமூக) உளவியல் என்கிறியள், உலகை ஆண்ட தமிழன் தான் வாழ நாடின்றி இருக்கக் காரணமென்ன?

மருத்துவர் : நீங்கள் தானே அடிக்கடி ஒற்றுமை இன்மையால் தமிழன் அழிகிறான் என்று எழுதுகீறீர்கள். பிறகேன் என்னிடமும் கேட்கிறியள்.

அடுத்த பகுதியைப் படிக்க
http://wp.me/p3oy0k-3P

(தொடரும்)

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.