உள நோய்கள் நெருங்காமல் இருக்க…

“உள்ளம் என்பது ஆமையடா – அதில்
உண்மை என்பது ஊமையடா” என்று
ஒரு திரை இசைப் பாடல் வரிகள் இருக்கிறது. முதலில், இதன் கோட்பாடு (தத்துவம்) என்னவென்று எனக்குத் தெரியாது. உள நலப் பேணுகைப் பணி செய்யலாமென உளவியல் (மனோதத்துவம்) படிக்கின்ற போதுதான் இவ்விரு வரிகளின் உண்மையை உறிஞ்சினேன்.

மண்டை ஓட்டின் உள்ளே மனித மூளை இருப்பதை ஆமையின்
உடலமைப்புக்குப் பாவலர் ஒப்பிட்டிருக்கிறார். மனித மூளையின்
செயலையே உள்ளம் (மனம்) என்று நாம் ஒப்பிட்டுப் படிக்கின்றோம்.
ஆமை தனது உறுப்புக்களை எவ்வளவு நேரமும் ஓட்டிற்கு உள்ளே
வைத்திருக்கும். அதேவேளை தேவைப்பட்ட நேரமெல்லாம்
அவ்வுறுப்புகளை (தலை, கைகள், கால்கள்) வெளியே நீட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. அதேபோல, மனித உள்ளமும்
தனக்குள்ளே பல உண்மைகளை உள்வாங்கி வைத்திருக்கும். சூழல்
வாய்த்த போதெல்லாம் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளும்.
பாவலரின் ஒப்பிட்டை உளவியல் (மனோதத்துவம்) நோக்கில்
இப்படி விரித்துக் கூறமுடியும். அதிலும், மனித உள்ளத்தில் உள்ள
உண்மை எல்லா வேளையிலும் வெளிவராமல் இருப்பதை பாவலர்
ஊமைக்கு ஒப்பிட்டிருக்கிறார்.
பாட்டு வரிகளுக்குப் பொருள் தரக்கூடிய பாவலன் நானல்லன்.
ஆயினும், உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகள்
இடையிடையே வெளியே தலையைக் காட்டுவதால் மனித
நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, எந்தச் சூழலிலும் ஏமாற்றிய ஒருவரைக் கண்டதும் குறித்த ஆளுக்குக் கோபம் பொங்கிவரும். இவ்வாறான நடத்தை மாற்றங்களால் ஒருவர் சூழலிலுள்ளவர்களைப் பொருட்படுத்தாமல் எதை எதையோ செய்யக்கூடும். இச்செயல்களை நேரில் கண்டவர்கள், ஆளுக்குப் பைத்தியம்(விசர்) பிடிச்சிட்டுது என்பர். மருத்துவ உலகில் இதனை பைத்தியம்(விசர்) என்று சொல்வதில்லை. இதனை உளப் பாதிப்பின் தொடக்கம் என்று தான் மருத்துவர்கள் கூறுவர்.

ஏமாற்றம் அடைந்தவரது உள்ளத்தில் “ஏமாற்றியவரைப் பழிக்குப்
பழி வேண்ட வேணும்” என்ற எண்ணம் அழுக்காகப் படிந்திருக்கும்
அல்லது உறங்கிக் கொண்டிருக்கும். உள்ளத்தில் அழுக்கு என்னும்
மேற்படி உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையை உள்ளத்திலிருந்து
அகற்றினால் உளப் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். உளப்
பாதிப்புகள் வராமல் தடுப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
உருவாக்கமுடியும். அதேவேளை உடற் பலத்தையும்
அதிகரிக்கலாம். நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ இச்செயற்பாடு
உதவும்.

எடுத்துக்காட்டாக, டேவிட்டின் சிக்கலை (பிரச்சனையை) எடுத்துக்
கொள்வோம். டேவிட்டும் காசிம்மும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் கருத்து முரண்பட்டு ஆளுக்காள் அடிபட்டனர்.
அன்றிலிருந்து டேவிட்டிற்குக் காசிம்மைக் கண்டால் கோபம்
ஊற்றெடுக்க ஆளே மாறிவிடுவான். இதைத் தான், உள்ளத்தில்
உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகள் வெளியே தலையைக்
காட்ட ஏற்படும் நடத்தை மாற்றம் என்கிறோம். நண்பர்கள்
இருவரையும் சந்திக்க வைத்துப் பழைய சிக்கலை விசாரித்த போது
டேவிட்டின் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த உண்மை
வெளிப்பட்டது.

அதாவது, கருத்து முரண்பட்டுக் கொண்ட நாளன்று காசிம்
டேவிட்டின் முகத்துக்கு நேரே கைநீட்டிக் கதைக்க
முற்பட்டிருக்கிறான். பதிலுக்கு டேவிட்டும் கையை நீட்ட,
சமகாலத்தில் காசிம்மின் கை டேவிட்டின் முகத்தில் மெல்லியதாக
பட்டிருக்கிறது. பின்னர் ஆளுக்காள் உறைப்பாக அடிபட, நல்ல நட்பு
என்றால் அடிபாடு வைத்திருக்கக் கூடாதென ஏனைய நண்பர்கள்
அவர்களைப் பிரித்துவைத்தனர். ஆயினும், நல்ல நண்பனாக இருந்து
கொண்டு “காசிம் முதலில் தனக்கு அடித்தது பிழை” என்று டேவிட்
கோபப்பட்டிருக்கிறான். காசிம்மோ தவறுதலாகத் தனது கை
டேவிட்டின் முகத்தில் பட்டதற்கு “டேவிட் தனக்கு இறுக்கி அடித்தது
பிழை” என்று காசிம் கோபப்பட்டிருக்கிறான். இதிலிருந்து டேவிட்
தான், “உண்மையில் காசிம் அடிச்சிட்டான்” என நம்பி உறைப்பாக
அடிக்க முயன்றதை ஏற்றுக்கொண்டதால் இருவரும் தங்கள்
தவறுகளை உணர்ந்தனர்.

இன்று இரு நண்பர்களும் தமது உள்ளங்களில் இருந்த தவறான
எண்ணங்களை (உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை)
தாமாகவே தங்கள் உள்ளங்களிலிருந்து அகற்றியதால் மீளவும்
நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். இனி, எந்தக் கடவுள் வந்தாலும்
இவர்களைப் பிரிக்கமுடியாது. நண்பர்களே, காதலர்களே, கணவன்
மனைவிமார்களே உங்கள் வாழ்விலும் தவறான எண்ணங்களை
(உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை) உங்கள்
உள்ளங்களிலிருந்து அகற்றினால் மகிழ்சியடையலாம்.

உறவுகளைப் பிரிப்பது இலகு. ஆனால், இணைத்து வைப்பதென்பது
முடியாத ஒன்றாகும். எனவே, உள்ளத்தில் உறங்கிக்
கொண்டிருக்கும் உண்மைகளை(தவறான எண்ணங்களை)
வெளிப்படுத்துங்கள். ஊமையான உண்மைகள் பேசத் தொடங்கினால் தான் உளத் தூய்மை கிட்டும். உளத் தூய்மை இருந்தால் தான் உள நலத்தையும் நல்லுறவையும் பேண முடியும்.

உள நோய்கள் மட்டுமல்ல உடல் நோய்களும் நெருங்காமல் இருக்க
உளத் தூய்மை, உடற் தூய்மை, சூழல் தூய்மை, உணவுக்
கட்டுப்பாடு, நிறைவான தூக்கம்(6-8 மணி), உடற்பயிற்சி அல்லது
கடின உழைப்பு என்பன தேவை. உங்கள் வாழ்வை இவ்வாறு
நகர்த்துவீர்கள் ஆயின் நீண்ட ஆயுளுடன் வாழவும் முடியும்.
மேலும், உங்கள் உள்ளத்தில் தோன்றும் ஐயங்களை உடனுக்குடன்
இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

இப்பதிவை http://tamilnanbargal.com/user/4852/posts/all என்ற தளத்தில் பதிவு செய்த போது நண்பர் வினோத் கன்னியாகுமரி கீழ்வரும் கருத்தை முன்வைத்தார்.

“உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை(தவறான எண்ணங்களை) வெளிப்படுத்துங்கள்”
சில பிரச்சனைகள் நாட்பட்டால் ஆறிப்போய்விடும். ஆனால் சில பிரச்சனைகளை பேச ஆரம்பித்தால் அது அதிகரிப்பதைவிட குறைவதில்லை. உண்மையாகச்சொல்வதென்றால் பிரச்சனையை விட்டு சமாதானமாக வேண்டும் என நாம் விரும்புவதில்லை.
இவைகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தான் தீர்வோ அல்லது பிரச்சனை அதிகரிப்பதோ இருக்கிறது என நினைக்கிறேன்.
மனவியல் சார்ந்த மேலும் கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

நண்பர் வினோத் கன்னியாகுமரி அவர்களின் கருத்திற்கு நான் வழங்கிய பதில் கீழே தரப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை உள(மன) நிறைவோடு ஏற்றுத் தொடர்ந்தும் இது போன்ற படைப்புகளைத் தருவேன்.
“உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை(தவறான எண்ணங்களை) வெளிப்படுத்துங்கள்” என்கிறீர்கள் : அது சரி செய்யப்பட்டதும் தீர்வு கிடைக்கின்றது. உளநலமும் பேணப்படுகிறது.
“சில பிரச்சனைகள் நாட்பட்டால் ஆறிப்போய்விடும்” என்கிறீர்கள் :
அப்படியல்ல, குறித்த சிக்கலால்(பிரச்சனையால்) ஏற்பட்ட பாதிப்பு உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். அதனை நினைவூட்டினால் மீளத் தலையை நீட்டும்.
“சில பிரச்சனைகளை பேச ஆரம்பித்தால் அது அதிகரிப்பதைவிட குறைவதில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் பிரச்சனையை விட்டு சமாதானமாக வேண்டும் என நாம் விரும்புவதில்லை” என்கிறீர்கள் : உண்மை தான். ஏற்றுக்கொள்ளும் உள(மன)பாங்குடன் விட்டுக்கொடுக்கும் உள(மன)பாங்குடன் தீர்வுகளை முன்வைக்காமல் பேசுவதில் பயனில்லை.
“எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தான் தீர்வோ அல்லது பிரச்சனை அதிகரிப்பதோ இருக்கிறது என நினைக்கிறேன்” என்கிறீர்கள் : உண்மை தான். ஒவ்வொரு சிக்கலையும்(பிரச்சனையையும்) கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. கையாளும் முறை தவறினால் இணைய வேண்டியவர்கள் கூடப் பிரிந்து போகலாம்.
முடிவாகப் பிறர் உள்ளம்(மனம்) புண்படா வகையில் அன்பாகப் பழகினால் எல்லோருடனும் நல்லுறவைப் பேணலாம்.

2 responses to “உள நோய்கள் நெருங்காமல் இருக்க…

  1. பதிவை வாசித்தேன்
    மிக நன்று
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.