உளநல மதியுரையின் வெற்றி

தொடக்க காலத்தில் எல்லோரும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியாதிருந்தது. அக்காலத்தில் மருத்துவர்கள் மட்டுமே உளநல மதியுரை (Counselling) வழங்கி வந்தனர். பின்னைய காலகட்டத்தில் உளவியல் (Psychology), உளச்சிகிச்சை முறைகள் (Psychotherapy), உளப்பகுப்பாய்வு (Psycho Analysis) போன்ற பாடப் பகுதிகளைப் படித்தவர்களும் உளநல மதியுரை (Counselling) வழங்கலாம் என்ற நிலை காணப்பட்டதாக நூலொன்றில் படித்தேன். மருத்துவர்களின் நேரமின்மை காரணமாக இவர்களின் பங்களிப்பும் உளநோயாளிகளுக்கு உதவக்கூடும்.

மேலேகூறியவாறு உளநல மதியுரை (Counselling) பற்றிப் படித்தவர்கள் எல்லோரும் பணியாற்றக் களமிறங்கினால்; உள நோயாளிகள் நிலை என்னவாகும். சிலர் பொத்தகக் கடைகளில் தொங்கும் பொத்தகங்களை வேண்டிப் படித்தபின்; தம்மாலும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியுமென்பர். வேறு சிலர் தமது பட்டறிவை (அனுபவத்தை) வைத்துத் தம்மாலும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியுமென்பர்.

“இவர்கள் எப்படியாவது அதை, இதை, உதைச் சொல்லி நோயாளிகளைத் தம் வழிக்கு வரவைக்க முயற்சிக்கலாம். ஆயினும், உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கருத்திற்கொள்ளாது உளநல மதியுரை (Counselling) வழங்கினால்; அவர்களது உளநோயைத் தணிப்பதற்குப் பதிலாக அதிகரிக்கச் செய்வதாகவே முடியும்.” என்றவாறு தமிழக முன்னணி உளநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் தனது நூலொன்றில் தெரிவித்திருந்தார். எனவே உளநல மதியுரை (Counselling) வழங்க முன்வருவோர் இதனைக் கருத்திற் கொள்ளவேண்டும்.

மேலும், உளநல மருத்துவர் ருத்ரன் அவர்களின் கருத்துப்படி உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கருத்திற்கொண்டு சாத்தியமான கருத்தேற்றங்களைச் (Suggestion) செய்வதன் ஊடாகவே அவர்களில் உளமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

உளநல மதியுரைஞர் (Counsellor) ஒரு நம்பிக்கைக்குரிய ஆளாகத் தோன்றவும் வேண்டும். அதேவேளை ஆற்றல் மிக்கவராகவும் இருக்க வேண்டும். இங்கு ஆற்றல் என்பது உளநல மதியுரைக்கு வேண்டிய அறிவாற்றலோ (Skill) கோட்பாடோ (Theory) அல்ல; உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கண்டுபிடிக்கும் ஆற்றலாகும்.

உளநோயாளி ஒருவர் உங்களை ஆற்றல் மிக்க ஒருவரென அறியமாட்டார். உளநோயாளி எப்போதும் நம்பிக்கை இழந்தவராகவே காணப்படுவர். எவர் எதைச் சொன்னாலும் எளிதில் நம்மமாட்டார். அதனால் தான், ஏதாவது ஓர் உளச்சிகிச்சை முறையைப் (Psychotherapy) பாவிக்கின்றோம். அதற்கு முன் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான எண்ணங்களைக் கருத்தேற்றம் (suggestion) செய்யலாம்.

அவ்வவ் மதத்தைச் சேர்ந்தவர்கள் (எடுத்துக்காட்டாக இந்து-பகவத்கீதை, கத்தோலிக்கம்-வேதாகமம்/பைபிள், இஸ்லாம்-அல்குர்ஆன், பௌத்தம்-புத்தரின் வழிகாட்டல்) ஏற்றுக்கொண்ட இறைமொழியில் எடுத்துக்காட்டுகளைப் பொறுக்கிக்காட்டி விளங்க வைக்கலாம்.

சூழலிலுள்ள பெரியவர் (எடுத்துக்காட்டாக: மக்களாயத் தலைவர்), துறைசார் அறிஞர், மதத் தலைவர், நம்பிக்கைக்கு உரியவர் என உளநோயாளி எளிதில் நம்பக்கூடிய ஒருவரின் கருத்தேற்றத்தைக் (suggestion) கூறிவைக்கலாம். எடுத்துக்காட்டாக மருத்துவர் கூறினால் நோய்க்குச் சரியான மருந்தென நம்பலாம்.

குடும்பம், சூழல் ஒன்றிணைந்து செயற்படும் செயல்களில் உளநோயாளியைப் பங்கெடுக்கச் செய்து சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம். இவ்வாறு உளநோயாளியின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கருத்தேற்றம் (suggestion) செய்வதனால் மட்டுமே உளமாற்றத்தை ஏற்படுத்த முடியும். எந்தவொரு உளநல மதியுரைஞரின் (Counsellor) ஆற்றலைவிட உளநோயாளியின் நம்பிக்கையை வலுப்படுத்தும் ஆற்றலே பெரிது எனலாம்.

உளநலம் பேண வேண்டுமெனின் உளநோயாளியின் சரியான, நேரான முடிவை நாமே ஊட்டிவிடுதல் அல்ல; சூழலை, தேவையை, பெறுதியை என எல்லாவற்றையும் சுட்டிக்காட்டிப் பொருத்தமான கருத்தேற்றங்களை (suggestion) வழங்க; உளநோயாளி தானாகவே முடிவெடுக்கும் நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். உளநோயாளி தானே முடிவெடுத்துத் தனது முயற்சிகளில் இறங்கி வெற்றிகாண வழிவிடும் போதுதான்; அவருக்குத் தன்னம்பிக்கை பிறக்கும். அத்தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதில் தான் உளநல மதியுரைஞருக்கு (Counsellor) வெற்றி கிட்டும்.

எனவே தான், உளநல மதியுரை (Counselling) என்பது திறமையைப் பாவித்துக் (Apply) காட்டுதலல்ல; நிறைவாகப் (Fluency) படித்து உளநலக் கோளாறால் வலுவிழந்தவரை நாட்டுக்குப் பயன்தரக்கூடிய வகையில் சுகப்படுத்தும் உயரிய பொறுப்பான பணியென உணர்ந்து செயற்படுவதாலே தான் வெற்றி காணமுடியும்.

உளநோயாளிக்கும் உளநல மதியுரைஞருக்கும் (Counsellor) இடையேயான நம்பிக்கையும் நல்லுறவுமே உளநல மதியுரைக்கு (Counselling) வெற்றியைத் தரும். அப்போது தான் உளநல மதியுரைஞரால் (Counsellor) உளநோயாளியைக் குணப்படுத்தலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.