காதலிக்காமல் இருக்கலாமோ?

என் வாழ்வில் இயற்கையில் காதல் அமையவில்லை. என் நண்பர்கள் ஒவ்வொரு வடிவுக்கு அரசியையும் காட்டிக் காதலிக்கச் சொல்வாங்கள். திரைப்படக் கதை கூறிக் காதலிக்கப் படிப்பித்துப் பார்த்தும் சரிவரேல்லை. காதல் இயற்கையாக வரவேணும் என்று சொல்லிப்போட்டு நானும் பேச்சுத் திருமணம் தான் செய்தேன். நீங்களும் என்னைப் போல பேச்சுத் திருமணம் செய்ய இருந்தால் காதலிக்காமல் இருக்கலாம்.

நான் திருமணமாகிய பின், தோழி ஒருத்தி விபத்துக்குள்ளானாள். அவ்விடத்தில் அவளுக்கு உறவென்று சொல்ல எவருமில்லை. நானே அவளுக்குரிய எல்லாப் பணிகளையும் செய்தேன். மூன்றாம் நாள் சுகமாகியதும் மருத்துவ மனையால வெளியேற்றியதும் வீட்டிலும் சேர்ப்பித்தேன்.

பின், நடைபேசியில் இடை இடையே கதைத்து வந்தாள். ஒரு நாள் நேரிலே சந்தித்து “உங்களைப் போல நல்ல ஆளைத் தேடியும் பிடிக்கேலாது. நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருக்கலாமோ?” என்று கேட்டாள். திருமணம் செய்தவரைக் காதலிக்கக் கூடாதென ஆற்றுப்படுத்தினேன்.

இந்நிலையில் “நான், எப்படி ஆற்றுப்படுத்தி இருப்பேன்?” என்றும் “நான், ஏன் காதலிக்காமல் இருந்தேன்?” என்றும் நீங்கள் கேட்கலாம். “என்னையும் நம்பி, ஒருத்தி தலையை நீட்டினாள்; நானும் அவளுக்குத் தாலியைக் கட்டினேன். அவளையும் மீறி, உன்னைக் காதலித்தால்; அவளின் நிலை என்னாகும். அவளிற்கு நாற்பது காசு வருவாய்; எனக்கோ நாலு காசு வருவாய்; நான் உன்னைக் காதலித்தால் என் நிலைமை என்னாவாகும்.

நீ விரும்பினால், உனக்கோ எத்தனையோ ஆண்கள் வலிய வருவாங்கள்; விரும்பிய ஒருத்தரைக் கட்டலாமே! அதனால், அடுத்தவருக்குத் தீங்கில்லையே! எவரும் எதையும் செய்யலாம்; ஆனால், அவை அடுத்தவருக்குத் தீங்கு விளைவிக்காதிருக்க வேண்டும். அப்போது தான் உள்ளத்தில் உறுத்தல் ஏதுமிருக்காது; மகிழ்சியை மட்டும் அடையலாமே!” என்று கூறி அவளை ஆற்றுப்படுத்தியதோடு, நான் எவளையும் காதலிக்காமையையும் சொல்லி முடிக்கிறேன்.

ஆழமறியாமல் காலை விட்டது போல, அந்தப் பெண் “உங்களைப் போல நல்ல ஆளைத் தேடியும் பிடிக்கேலாது. நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருக்கலாமோ?” என்று கேட்டது சரியா?

அவள் இளகிய உள்ளம் கொண்டிருந்தால், நோயாளி என்று அன்பு காட்டும் எவரையும் தன்னை விரும்புவார் என நம்பியிருக்கலாம். நோயுற்ற வேளையாயினும் பிற செயலின் போதும் குறித்த ஒருவரின் உதவி முக்கிய பங்காற்றி இருப்பின் அந்தாளை விரும்பலாம். ஆனால், மணமுடித்த ஒருவர் மீது விருப்பங்கொள்வதை ஏற்க முடியாது. நாம் தமிழர். தமிழர் பண்பாட்டில் இதற்கு இடமில்லை.

நீண்ட நாள் பழகி இருந்தும் I Love You சொல்லாமல் இருந்தும் ஒருவர் உதவியில் இன்னொருவர் நன்மை அடைந்திருந்தால் அதனை அவர் அடிக்கடி நினைவூட்டுகையில் குறித்த ஆளின் மீது இருந்த விருப்புக் காதலாக மாறலாம். மறுமுனையில் உள்ளவருக்கு வெளிப்படுத்தினால்; அவரும் ஏற்றுக்கொண்டால் காதலிக்க முடியும். இல்லையேல், ஒரு தலைக் காதல் தான்.

ஆனால், திருமணம் செய்யாத நீங்கள் இப்படியான சூழலில் காதலிக்காமல் இருக்கலாமோ? இயற்கையாக அமையாத போது கண்டிப்பாகக் காதலிக்காமல் இருக்கலாம்! ஆனால், இயற்கையாக அமையின் காதலிக்காமல் இருக்கலாமோ?

ஊரே ஒன்றுகூடி ஏற்குமென்றால் காதலிக்கலாம் தான்! அதாவது மணமானால் குடும்பத்தைக் காக்கும் வருவாய்; ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம்; இருவரின் பெற்றோர்களது இணக்கம் இருந்தால் காதலிக்கலாம் தான்! அப்படியாயின் மகிழ்வான வாழ்வும் அமையுமே!

இவற்றையெல்லாம் கடந்தும் பாலுணர்வுத் தூண்டலால் ஈர்க்கப்பட்டுக் காதலித்தோர் பின் பிரிகின்றனர். பிரிந்த பின்னே தங்கள் தவறுகளை உணருகின்றனர். இவற்றையெல்லாம் கடந்தும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்தோர் இருவரின் பெற்றோர்களது உறவுகளைப் பிரிந்து; அவர்கள் காணாத தொலைவில் வாழ்கின்றனர். பெற்றோர்களது உறவுகளைப் பிரிந்து வாழ முனைந்தவர்களும் முழு மகிழ்வின்றி வாழ்வதைக் காணலாம்.

ஒருவர் நிலையை ஒருவர் அறிந்தும் ஒருவர் உள்ளத்தை ஒருவர் புரிந்தும் வாழ்வதற்கான வளங்களைப் பேணியும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தும் காதலித்தால் காதலும் வரும்; மகிழ்வான வாழ்வும் அமையும். எதற்கெடுத்தாலும் இருவரது உள்ளத்திலும் ஒற்றுமை இருப்பின் (அதாவது, இருவரது முடிவும் ஒன்றாயின்), உண்மைக் காதலை உடைக்க முடியாதே!

 

 

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.