Daily Archives: செப்ரெம்பர் 26, 2013

வாழ்வு அமையாவிடில் சாவதா?

சாவைத் தழுவ முயற்சி செய்தோர்; சாவைத் தழுவ முயற்சி செய்கின்றோர்; சாவைத் தழுவ முயற்சி செய்யவுள்ளோர் ஆகியோருக்காக “வாழ்வு அமையாவிடில் சாவதா?” என்ற கேள்விக்கு எனது சுருக்கமான பதிலைத் தருகின்றேன்.

வாழ்வு அமைவதெல்லாம் இறைவன் கையிலில்லை. சிலருக்குப் பெற்றோர் கையிலும் சிலருக்கு அவரவர் செயலாலும் நல்வாழ்வு அமையாமல் போகலாம். அதற்குச் சாவு தான் மருந்தென்றால் முட்டாள் முடிவு என்று தான் சொல்ல வேண்டும்.

பெற்றவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள், அவர்கள் விருப்பப்படி மணமுடிக்கிறார்கள். எதிர்பாராமல் இணை(தம்பதி)யர்களிடையே முரண்பாடுகள் தோன்றினால்; மணவிலக்கு(Divorce)ப் பெற்றால் இன்னொருவரை மணமுடிக்கலாம் அல்லது தனித்து வாழலாம், ஆனால் சாவடைந்தால் எவருக்கு என்ன தேட்டம்(இலாபம்)?

காதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான். வாழ்வில் அதுவும் நன்றாக, நம்பிக்கையுடன் நீண்ட நாள் பழகிய இரு உள்ளங்களும் கருத்தொருமிக்கக் காதல் வரலாம் அல்லது துன்பப்படும் வேளை அக்கறையாக உதவினால் கூட காதல் வரலாம். இயற்கையாக இவ்வாறு காதல் அமைந்தால் குறிப்புப்(Horoscope) பொருத்தம் பார்க்கவே தேவையில்லை. இது சோதிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது கடவுள் அமைத்த காதல். உண்மையானதும் நம்பிக்கையானதும் நல்வாழ்வை அமைக்கக்கூடியதும் எனலாம்.

நம்ம திரைப்படப்(Cinema) பாணியில காதலித்தும் பதின்ம அகவையில்(Teen Age) காதலித்தும் அழகின் ஈர்ப்பால் அல்லது பணம், பொன், சொத்தென மயங்கிக் காதலித்தும் சிலர் தங்கள் வாழ்வைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள்.

இயற்கையில் காதல் தோன்றாமல் “நான் உன்னைக் காதலிக்கிறேன்(I Love You)” என்று பல முறை சொல்லித்தான், அதுவும் தொல்லை தாங்காமல் உடன்படுவதாலும் செயற்கையாகக் காதலித்து மணமுடிப்பதால் “விருப்பம்(ஆசை) அறுபது நாள் ஈர்ப்பு(மோகம்) முப்பது நாள்” என்றபடி வாழ்ந்து முடிய “வாழ்க்கை கசக்குதையா… வர வர வாழ்க்கை கசக்குதையா…” என்று சில நாள் பாடலாம். இதன் பின் பிரிந்து வாழ்ந்தால் பரவாயில்லை. வாழ்வே வேண்டாமெனச் சாவை ஆயுதமாகக் கையிலெடுத்தால் எப்படி நல்வாழ்வை அமைப்பது?

நீங்கள் எந்தவொரு வழியிலும் வாழ்க்கை கசந்து போனால் சாவை மருந்தாக்காமல்; வாழ வேறு வழியில் முயற்சிக்கலாம். வாழ்ந்து தான் ஆகவேண்டும்; ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காட்ட முன்வாருங்கள்.

ஒரு வழி மூடப்பட்டால்; ஏழு வழிகள் திறக்கப்படலாம்(இது பைபிளில் இருப்பதாகப் பத்திரிகையில் படித்தேன்). சாவிற்கு மாற்று வழி கிடையாதா? ஏழு வழிகளில் ஒரு வழியிலாவது பயணிக்க இறங்கியிருக்கலாமே!

வாழ்க்கை என்பது கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் வழுக்கி விழுத்தும் சேறும் வெள்ளமும் நிறைந்தே இருக்கும். வாழ்க்கை என்பது போர்க்களம் தான்; போராடித்தான் வெல்லவேண்டும். போராட இறங்காமல் மகிழ்வான வாழ்வை எப்படி அமைக்கலாம். போராட அஞ்சி சாவை நாடுவது பிழை தானே!

நூறு ஆண்டுகள் வாழ்ந்து சாவடைந்தவர் கூட நூற்றுக்குப் பத்து விளுக்காடு(வீதம்) தான் மகிழ்வான வாழ்வைச் சுவைத்தார்களாம். இதனையும் பத்திரிகையில் தான் படித்தேன். மிகுதியை வாழ்வை முயற்சி செய்யாமலே சுவைக்காமல் விட்டிருக்கலாம்.

எனவே தான் காதல் தோல்வி அல்லது மணமுறிவு என்றதும் சாவை நாடுவதை விட முழுமையான வாழ்வை மாற்று வழிகளில் வாழ முன் வாருங்கள். எந்தவொரு சிக்கலு(பிச்சனை)க்கும் சாவு தான் முடிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்று வழிகளைத் தேடுவோம்; மகிழ்வான வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.