Daily Archives: செப்ரெம்பர் 22, 2013

நம்பிக்கை

வாழ்க்கைக்குத் தேவை
நம்பிக்கை தான்…
அது
கடவுள் நம்பிக்கையாக இருக்கலாம்…
இல்லையேல்
தன்னம்பிக்கையாகக் கூட இருக்கலாம்…
உண்மையில்
எம்மால் முடியுமென்ற நம்பிக்கையே
எமக்கு
வெற்றியை ஈட்ட உதவுகிறதே!
உளவியலில்
நம்பிக்கையே முதல் மருந்து!

உளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதெப்படி?

உள்ளத்தில் துயர் உலாவத் தான் செய்யும், அதனை அடிக்கடி மீட்டுக்கொள்ள வேண்டாம். அது தானாகவே நினைவுக்கு வந்தால், பிடித்தமான பொழுதுபோக்கில் அல்லது செயலில் அல்லது படிப்பில் என இறங்கி உள்ளத்தை இழுத்துக்கொள்ளுங்கள். இதனால், துயரை விரட்டி மகிழ்வடையலாம்.

துயர் தந்த ஆள்களைத் தொடர வேண்டாம். துயர் தந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். துயர் விளைவித்த நிகழ்வுகளை மீட்டுப்பார்க்க வேண்டாம். இவற்றைப் பேண முடியாத போது மாற்று வழிகளைக் கையாள வேண்டும். இதனால், துயரை விரட்டி மகிழ்வடையலாம்.

துயர் தந்த ஆள்களைக் கண்டால் பொருட்படுத்தாதீர். துயர் தந்த இடங்களுக்குச் செல்ல வேண்டி வந்தால் பழைய நிகழ்வை மறந்து புதிய இடத்திற்குச் செல்வதாக எண்ணிக்கொள்ள வேண்டும். துயர் விளைவித்த நிகழ்வுகள் உள்ளத்தில் தோன்றினால், அதனை விரட்ட புதிய எண்ணங்களை உள்ளத்தில் விதைக்க வேண்டும். எடுத்துக்காட்டாகப் பழைய காதலி/ காதலன் நினைவு வந்தால், சாவுக்கடலில் விழுந்திடாமல் தப்பிப்பிழைத்தேனென எண்ணி அவளை/ அவனை மறக்க முனையலாம் அல்லது புதிய துணையிருக்கப் பழசெதற்கென மறக்கலாம்.

படித்த படிப்புக்கு ஏற்ற தொழில் கிட்டாத வேளை துயர் வரலாம். தொழில் என்பது உளநிறைவைத் தருவதோடு உயர் வருவாயையும் தரவேண்டும். முதலில் அதனை எட்டிப்பிடிக்கலாம். இரண்டாவதாக படிப்புக்கு ஏற்ற தொழிலை நாடலாம். படித்த படிப்புக்கு ஏற்ற தொழில் கிட்டும் வரை வருகின்ற/ வந்த தொழிலைக் கைவிட்டால் துயர் தான் மிஞ்சும். ஆகையால், வருகின்ற/ வந்த தொழிலைக் கைப்பற்றி உழைத்து நாலு பணத்தை மிச்சம் பிடித்தால் மகிழ்வடையலாம். இருக்கின்ற தொழிலில் இருந்துகொண்டு எதிர்பார்ப்புக்கேற்ற தொழிலை நாடலாம். அவ்வாறு அமையின் துயரின்றி மகிழ்ச்சியைப் பெருக்கலாம்.

மகிழ்ச்சியைப் பெருக்க நமக்குக் குறுக்கே நமது நாக்கு வந்து தடுக்கும். எடுத்த வீச்சுக்குச் சுடுசொல் பேசவைப்பதும் இந்த நாக்குத் தான். நரம்பில்லா நாக்கால கண்டபடி திட்டிக் கொட்டிப்போட்டு, உள்ள நல்லுறவுகளையும் முறித்துப்போட்டு ஈற்றில் துயருற்று என்ன பயன்?

நல்லுறவைப் பேண அமைதி (மௌனம்) பேணலாம். அதாவது வாய்க்குப் பூட்டுப் போடலாம். “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்னும் முதுமொழிக்கமைய அன்பாகப் பேசி எதிரியையும் எம்பக்கம் இழுக்கலாம் என்றால் அன்பு மொழி பேசி நல்லுறவைப் பேணலாமே! பேசுமுன் ஒன்றுக்குப் பலமுறை எண்ணி இன்சொல் பேசலாம்; பிறர் உள்ளம் நோகாது நல்லதைப் பேசலாம். எனவே, நாக்கை உள்ளத்தாலே கட்டுப்படுத்தலாம். வாய்ப் பூட்டு நல்ல இனிய உறவுகளைத் தரும். நாளெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தலாம்.

காதலிக்கையில் மகிழ்ச்சிக் கடலில் நீந்தியோர்; மணமுடித்த பின் துயரக் கடலில் நீந்துவதேன்? காதல் இளமை ஈர்ப்பால் வந்திருந்தால் இது தான் நிகழும். இளமைத் தூண்டலைப் பேணக் காதல் துணை நின்றமையால் மகிழ்ச்சிக் கடலில் நீந்த முடிந்திருக்கலாம். மணநிகழ்வு/ திருமணம் என்பது வாழ்க்கையைத் தொடர மக்களாய(சமூக)த்தால் தரப்படும் அனுமதியே! மணவாழ்வில் நுழைந்ததும் குடும்பம் வட்டத்திற்குள் திட்டமிடலுடன் வாழ்ந்தால் மகிழ்வை எட்டலாம்.

காதலிக்கையில் குடும்பம் ஆனால்; எப்படியிருக்கும் எம்நிலைமை என எண்ணியிருந்தால் சற்று அதிக மகிழ்வைப் பெறலாம். காதலித்தாச்சு, குடும்பம் ஆனாச்சு என்றால் குடும்பம் நாடாத்தப் புரிந்துணர்வை இருவரும் ஏற்படுத்தினால் மகிழ்வு கிட்டலாம். புரிந்துணர்வு என்பது ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்றுக் கொள்வதிலும் விட்டுக் கொடுப்பதிலும் தான் அமைந்திருக்கிறது. நல்ல புரிந்துணர்வு எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தவே வழிவிடும்.

மகிழ்வான குடும்பத்திற்கு பாலியல்(Sex) தேவை தான். பாலியலிலும்(Sex) உச்ச மகிழ்ச்சியைப் பெறப் புரிந்துணர்வு தேவைப்படுகிறது. மகிழ்வான குடும்பத்திற்குப் பணமும் தேவை தான். வந்த பணத்தைச் செலவு செய்தால் துயரம் தான் பரிசு. எனவே, பணத்தைச் சேமித்து வைத்தால் வருவாய் கிட்டாத போதும் மகிழ்வான குடும்பத்தை நடாத்தலாமே! மேலும், “குப்பைக்குள் போட்ட குண்டுமணியும் ஒரு நாள் தேவைப்படும்” என எண்ணி எல்லோரையும் பகைக்காமல் இருந்தால் கூட குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பெருக்கலாம்.

பிறப்பில் இருந்து இறப்பு வரைத் துயரை விரட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறர் உள்ளத்தை அன்பாலே வெல்ல வேண்டும். பலனை எதிர்பாராது பிறருக்கு உதவ முன்வர வேண்டும். உண்மையைக் கூறி உறவுகளை வலுப்படுத்த வேண்டும். வருவாய்க் கேற்றவாறு விருப்பங்களை (ஆசைகளை) மட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு மகிழ்ச்சியை அடைய உள்ளத்தில் நல்ல திட்டமிடல் வேண்டும். உளவியல் நோக்கில் மகிழ்ச்சி அடைவதென்பது இவ்வாறு தான்!