Daily Archives: செப்ரெம்பர் 1, 2013

குழந்தைகளின் நாடகம்

எனது இலக்கியப் பதிவுகளில் அதிகம் வழிகாட்டலையும் மதியுரையையும் சேர்த்துக் கொள்கிறேன். அந்த வகையில் இந்தப் பதிவு.

நல்ல நாடகம்

(ஞாயிறு விடுமுறை நாளாகையால் ஊர்க்கோழி உரிச்சுக் காய்ச்சித் தின்று முடிய தாய், தந்தை, பிள்ளைகள் வீட்டின் முன் பகுதியில் குளிர்களி வேண்டிக் குடித்த வண்ணம் இருந்தனர்.)
பிள்ளை-01 : அப்பா! ஓர் உதவி செய்வியளே!
தகப்பன் : இப்ப ஏலாது. கோழிக்கறியும் சோறும் செமிக்கப் படுத்து நித்திரை கொள்ளுங்கோ…
பிள்ளை-02 : அம்மா! ஓர் உதவி செய்வியளே!
தாய் : கொப்பர் படுக்கச் சொல்கிறார், பிறகு, எனக்கு ஏன் தொல்லை தாறியள்…
(இரண்டு பிள்ளைகளும் அறைக்குள் நுழைந்து சிறிது நேரத்தின் பின் வெளியே வந்து நின்று…)
இரண்டு பிள்ளைகளும் : அப்போய்! அம்மோய்! நாங்க படம் பார்க்கப் போறோம்…
தகப்பன் : என்ன படமடா?
இரண்டு பிள்ளைகளும் : உதில தான், “கல்லடியான்” படமாளிகையில தான்… “திண்டு வளர்ந்தான்” படந்தான்
தகப்பன் : படத்துக்குக் காசு எங்கால…
இரண்டு பிள்ளைகளும் : உங்கட கால்சட்டைக்குள்ளே கையைவிட்டு எடுத்தோம்…
தாய் : அப்பாடை காசைக் கொடுங்கோ! வாற கிழமை படம் பார்க்கலாம்…
தகப்பன் : சீ! சீ! இப்பவே போவோம்! காசைத் தாங்கோ…
இரண்டு பிள்ளைகளும் : இந்தாருங்கோ… வாங்கோ படத்துக்குப் போவோம்!
தாய் : பிள்ளைகளுக்கு இணங்கிப் போறது நல்லதுக்கில்லை…
தகப்பன் : எங்கட விருப்பத்தைத் திணித்தால், பிள்ளைகள் தங்கட கைவரிசையைக் காட்டத்தான் செய்வினம். பிள்ளைகளோட அணைஞ்சு போறது நல்லது தானே…
(பிள்ளைகள் விருப்பத்தை அறியணும் அவர்களுக்கு ஏற்றாற் போல இசையணும் என்றவாறு எல்லோரையும் படத்துக்குத் தந்தை கூட்டிச் செல்கிறார்.)

இந்தப் பதிவைப் படித்ததும் உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றுகிறது? உண்மையில் குழந்தைகளுக்கு வேண்டிய எல்லாம் செய்து கொடுக்கலாம். அதற்காகக் கேட்டதெல்லாம் செய்து கொடுக்க ஏலுமே! தவறான வழிகளை உள்ளத்தில் எண்ணிக்கொள்ள இடமளிக்காது மாற்று வழிகளை நினைவூட்டலாம். தவறான எண்ணங்களை குழந்தைகள் உள்ளத்தில் வேரூன்ற இடமளியாது பேண, இந்தப் பதிவில் தகப்பன் எடுத்த முடிவு சரிதானே! உங்கள் மாற்றுக் கருத்துகளை நீங்களும் முன்வைக்கலாம்.

சிரிப்பு நல்ல மருந்து

உடனடி முடிவு எடுப்பவருக்கு அறிவுக் குறைவாம் (அதாவது அவசரக் குடுக்கைக்கு புத்தி மத்திமம் என்பர்.) உண்மையா? ஆம், கோபப்படும் வேளை 13 நரம்புகள் தானாம் இயங்குகிறதாம். மூளைக்குச் செந்நீர்(குருதி) செல்வது குறைவு என்பதால் சிறந்த முடிவுகள் எடுக்க முடியாமையே இந்நிலைக்கு ஏதுவாம். அதே வேளை நகைச்சுவையுடன் சிரிக்கும் போது 65 நரம்புகள் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. சிரித்துச் சிரித்து முடிவெடுத்து வெற்றி பெறுவோர்களையும் பார்க்கிறோமே!

திரைப் படங்களில் செந்தில் கவுண்டரிடம் உதை வேண்டுவதையும் வடிவேலுவும் விவேக்கும் அகப்பட்டவரிடம் அடிவேண்டுவதையும் பார்த்துச் சிரித்து மகிழ்வது எல்லோருக்கும் தெரியும், வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமென்பர், அது போல சிரித்து மகிழ்வோருக்கு நோய் அணுகுவது குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். அப்படியாயின் சிரிப்பு நல்ல மருந்தா?

“நகைச்சுவை” சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் போது உடலில் உள்ள எல்லா நரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். மூளைக்குப் போதிய அளவு செந்நீர்(குருதி) செல்லும். இதனால், சோர்வுற்ற மூளை சுறுசுறுப்படைய உடலில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் ‘ஒழுங்காக இயங்கு’ என்று கட்டளை போடும். அதனால், உடலுறுப்புக்கள் சீராக இயங்க நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எனவே, அடிக்கடி நகைச்சுவை கேட்பதாலும் படிப்பதாலும் உள்ளத்தையும் உடலையும் நோய் அணுகாமல் பேணமுடியும்.