குடும்ப நலம் பற்றிய விசாரிப்பு

குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களை நீங்கள் கண்டிருப்பியள். பெரும்பாலும் அவர்கள் காதல் தொடங்கிப் பிள்ளைகள் எண்ணிக்கை வரை விசாரிப்பர். காதல் முறிவு, கலியாண முறிவு, குடும்ப மோதல், குடும்ப இழிநிலை எனப் பலதும் பத்தும் அக்கறையாக விசாரிப்பர். அப்படி விசாரித்தால் தானே, அவர்களால் ஊருக்குள்ளே செய்தி பரப்ப வாய்ப்புண்டு.

இவ்வாறு செய்தி பரப்புவோரால், பாதிப்புற்றவர்கள் பலர் இருக்கலாம். குடும்பத்திலே, வீட்டிற்குள்ளே நடந்தது வேறு, ஊருக்குள்ளே உலாவுவது வேறாக இருக்கலாம். அதாவது, ஒன்றைப் பத்தாகப் பரப்புவதே குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களின் வேலையாக இருக்கும்.

இவ்வாறு குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களுக்கு வேலை வைக்காது குடும்பம் நடாத்துவது எப்படி? இதுவே எனது முதலாம் கேள்வியாக எழுகின்றது.

கணவன்-மனைவி ஒற்றுமை என்றால்
குடும்பத்துக்குள்ளே
என்னவோ எல்லாம் நடக்கலாம்
ஏதாச்சும் ஊருக்குள் ஊலாவ மறுப்பதேன்?
வாழ்க்கையில் ஆயிரமிருந்தாலும்
காட்டுத் தீபோல வீட்டுச் செய்தி
பரவுவதைத் தடுப்பது தான்
கணவன்-மனைவி ஒற்றுமையே!

மேலேயுள்ள எனது பா(கவிதை) வரிகளை படித்துப் பாருங்கள். கணவன்-மனைவி இருவருக்குமிடையே ஒற்றுமை இருந்தால் மட்டும் போதாது காதலர் இருவருக்குமிடையே ஒற்றுமை இருந்தாலும் கூட அவர்களது செய்தி எதுவும் அடுத்தவருக்குத் தெரிய வாய்ப்பில்லையே! அதாவது, நல்ல குடும்பத்திற்கு ஒற்றுமை தான் முதலாம் சொத்து.

கருத்தொற்றுமை, விருப்பொற்றுமை, இலக்கொற்றுமை (எதிர்பார்ப்பொற்றுமை), பண்பாட்டொற்றுமை என எல்லா ஒற்றுமை இருந்தால் அன்பும் (பாசமும்) பற்றும் தானாகவே வந்து சேரும். குடும்ப நலம், பாலியல் சுகம், வாழ்வின் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றிலும் ஒற்றுமை வேண்டும். அதற்குப் புரிந்துணர்வு வேண்டும்.

புரிந்துணர்வு என்றால் என்ன? ஒருவரை ஒருவர் புரிந்து உணர்ந்து நடத்தலே! அதெப்படிச் சரிப்பட்டு வரும்? ஒருவர் விருப்பை அடுத்தவர் ஏற்றல் அல்லது ஒருவர் விரும்பாததை அடுத்தவர் வெறுத்தல் அதாவது ஒருவர் விருப்புவெறுப்பை மதித்து விட்டுக்கொடுக்கும் எண்ணத்தைப் பேணினால் புரிந்துணர்வு தானாவே வந்துவிடும்.

புரிந்துணர்வு உண்டென்றால் எவரும் எவர் மீதும் எரிந்து விழ வாய்ப்பில்லை. ஒருவருக்கொருவரிடையே முரண்பாடுகள் முளைக்காவிட்டால் குடும்பப் பிரிவிற்கு இடமில்லை. அதேவேளை குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களுக்கு வேலையும் இல்லை. அதாவது குடும்ப நலம் பற்றி விசாரித்த பின்னர் ஊரெங்கும் பரப்புவோருக்கு உள்வீட்டுச் செய்தியுமில்லை.

அது மட்டுமா, குடும்ப நலம் விசாரித்துக் கணக்குப் பிணக்குகளை தீர்த்துவைத்து மகிழ்வான வாழ்வமைக்க மதியுரை (ஆலோசனை) கூறும் என் போன்ற உளநல / குடும்பநல மதியுரை (ஆலோசனை) வழங்குவோருக்கும் வேலை இல்லை. எனவே, மகிழ்வான வாழ்வுக்கு குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும்.

அன்பு இருந்தால் ஒற்றுமை வரும். ஒற்றுமை இருந்தால் அன்பு வரும். அன்பும் ஒற்றுமையும் இருந்துவிட்டால் வாழ்வில் உச்ச மகிழ்ச்சியை அடைந்துவிடலாம். என் குடும்ப நிலையை மட்டும் கருதாமல், பலரது குடும்ப நலம் பற்றி விசாரித்ததை வைத்து இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.