பணம் பண்ணலாம் வாங்க!

பணம் பண்ணலாமோ?
எங்கையப்பா
அரசின்
பணம் அச்சடிக்கும் பொறியைக் களவெடுத்தனி?
பணம் பண்ணலாம் வாங்க என்றதும்
ஆளுக்காள்
இப்படிக் கேள்விக் கணைகளை
என் மீது ஏவிவிட்டனர்!
இத்தனைக்கும்
முகம் கொடுக்க முன்
பணம் பண்ணலாம் வாங்க என்றதும்
என்னைச் சூழ்ந்து கொண்ட
ஆட்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
பணம்
வாழ்க்கைக்குத் தேவை தான்
பணத்தைத் தேடும் வழி தான்
சரியானதாக இருக்க வேண்டுமே!
பணம் அச்சடிக்கும் பொறியை
அறிமுகம் செய்ய
நானொன்றும் பொறியியலாளரல்ல…
பணத்தைத் தேடும் வழியைச் சொல்லும்
மதியுரைஞர்(ஆலோசகர்) என்றதும்
கால் பங்கு கூடியோர்
ஓடி ஒளிந்தனர்!
பணத்தைத் தேடும் வழிகளில்
முதல் வழி கல்வி தான்…
விரும்பிய எல்லாவற்றையும்
கற்றுக்கொள் என்றதும்
கால் பங்கு கூடியோர்
ஓடி ஒளிந்தனர்!
பணத்தைத் தேடும் வழிகளில்
இரண்டாம் வழி சொத்துகள் தான்…
உழைத்த பணத்தை
நெற்காணி, வீட்டு நிலம் என்றும்
வீடுகள், கடைகள் என்றும்
வேண்டிக் கட்டி வைப்பதே என்றதும்
கால் பங்கு கூடியோர்
ஓடி ஒளிந்தனர்!
கல்வியும் தேடியாச்சு என்றாலும்
சொத்துகளும் தேடியாச்சு என்றாலும்
பணத்தைத் தேடும் வழிகளில்
மூன்றாம் வழி தான் முக்கியம்
அது தான்
முதலிரண்டையும்
முகாமைத்துவம் செய்யும் ஆளுமை என்றதும்
எஞ்சிய கூடி நின்றோரில்
அரைப் பங்கினர் ஓடி ஒளிந்தனர்!
பணம் பண்ணலாம் வாங்க என்று
வரச் சொல்லிப் போட்டு
“கல்வியா? செல்வமா? வீரமா?” என்று
திரைப்படமொன்றில சிவாஐி கேட்க
கல்வியும் செல்வமும் இருந்தால் போதாது
அதுகளைக் கையாளத் தெரிவது தான் வீரமென
திரைப்படமொன்றில எம்ஐிஆர் சொன்னதை
சொல்ல வந்திட்டியளே என்று
கூடி நின்ற எஞ்சியோரும்
ஓடி ஒளிய நாலு ஆள் நின்றனரே!
ஏனங்க
நீங்க நாலு ஆளும்
ஓடி ஒளியாமல் நிற்கிறியள் என்றதும்
நாமும் உங்களைப் போன்ற
மதியுரைஞர்(ஆலோசகர்) தானுங்க…
ஏதாவது உதவுங்க;
எல்லோரும்
உங்களைச் சுற்றிக் கூடி நிற்பாங்க…
கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவாங்க…
உங்கட நிழல் போல
ஒட்டிக் கொண்டும் வருவாங்க…
ஆனால்
இலவசமாகக் கிடைக்கும்
மதியுரையை(ஆலோசனையை) கேட்க
வரமாட்டாங்கள் என்று சொல்லவே
கால் கடுக்கக் காத்து நின்றோம் என்றனர்!
சொல் திறமை(புத்தி) கேட்காட்டிலும்
தன்(சுய) திறமை(புத்தி) இருந்தாலும் சரி
பட்டுத் தெளிந்தாலும் சரி
ஒவ்வொருவரும் வெல்லலாம் தானே…
மதியுரை(ஆலோசனை) என்பது
ஒவ்வொரு வெற்றியையும்
நம்பிக்கையுடன் விரைவில் பெற
உதவும் பொறி(கருவி) என்று கூறி
நானும் அந்நால்வரும் கலைந்தோம்!

குறிப்பு: உளநல மதியுரை(ஆலோசனை-Counselling) என்பது நோய் நெருங்காமல் முற்காப்பு எடுக்க மட்டுமல்ல, ஒவ்வொரு வெற்றியையும் நம்பிக்கையுடன் விரைவில் பெறவும் பாவிக்கலாம். பிறர் சொல்வதை இடது காதாலே வேண்டி வலது காதாலே வெளியில விடுங்கோ; அதற்குமுன் நன்மை தரும் நல்லெண்ணங்களை மூளையில்(உள்ளத்தில்) பதிவு செய்யுங்கள்.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.