உளவியல் நோக்கில் முதல் உறவு

வாழ்வில் வகுப்பு மாணவராக, நண்பராக, நண்பியாக, காதலியாக, காதலனாக, கணவராக, மனைவியாக எனப் பல வழிகளில் உறவுகளைத் தொடருகிறோம். அவ்வுறவுகளின் முதல் நாள் பழக்கமே, வாழ் நாளில் நெருங்கிப் பழகவோ விலகிச் செல்லவோ இடமளிக்கிறது.

முதற் சந்திப்பிலேயே முதற் பேச்சிலேயே உண்மையைக் கூறி உறவாடியோரை மறக்க முடியவில்லை.

நல்லவராக நட்பாகிய பின் நாள்கள் ஓட ஓட கெட்ட முகத்தைக் காட்டியோரை மறக்க முடியவில்லை.

நட்பாகப் பழகிய பின் நாள்கள் ஓட ஓடக் காதலிக்கலாமே என்று கதை போட்டோரை மறக்க முடியவில்லை.

நட்பாகப் பழகிய பின் நாள்கள் ஓட ஓட நெருங்கிப் பழக ஒரே இலையில் உண்டு ஒரே பாயில் படுத்தெழும்பிய நிலையில் நண்பரெனச் சொல்லாமல் உடன் பிறவா உறவாகப் (ஒரு தாய் பிள்ளைகளாக) பழகியோரை மறக்க முடியவில்லை.

பிழைகளைக் கண்டு சுட்டிக்காட்டி, அதனைத் திருத்தி உதவி எம்மை முன்னேற்ற உதவியோரை மறக்க முடியவில்லை.

என் இழி நிலை கண்டும் என் வறுமை கண்டும் காதலிப்பதாகப் பழகியோரை மறக்க முடியவில்லை.

காதல் எண்ணத்தோடு பழகி, மணமானவரெனத் தெரிந்ததும் நண்பராக மாறித் தொடர்ந்து நட்பைப் பேணுவோரை மறக்க முடியவில்லை.

அளவுக்கு மீறிப் பழகியும் கற்புக்குக் கேடு வரமால் (பாலியல் நோக்கிலான தவறுகளைச் செய்யாமல்) பண்பாட்டைப் பேணியோரை மறக்க முடியவில்லை.

எனக்கும் தகுதி உண்டென, எனது கருத்துகளைப் பொருட்படுத்தி, என் மதியுரையைப் பெற நாடியோரை மறக்க முடியவில்லை.

துயருற்றாலும் முன்பின் தெரியாத முகங்களாக இருந்தும் முன்வந்து உதவியோரை மறக்க முடியவில்லை.

மணமாகிய பின்னும் என் நல்லது கெட்டதுகளைப் படித்தும் என்னை மணமுறிவு(Divorce) கேளாமல் வாழும் என் மனைவியை மறக்க முடியவில்லை.

தன் வாழ்வில் தான் காதலித்துக் கற்பிழந்த உண்மையைக் கூறியும் தன்னை மணமுடித்து வாழும் தன் கணவரை மறக்க முடியவில்லை எனத் தோழி ஒருத்தி சொன்னாள்.

இப்படி ஆளுக்காள் மறக்க முடியாத, உள்ளத்தை விட்டு அகலாத உண்மைகளாகப் பல நிகழ்வுகளும் ஆள்களும் இருக்கத் தான் செய்யும். இதற்கு முதல் நாள் பழக்கமே அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகிறது.

உளவியல் நோக்கில் முதல் உறவுவைச் சிந்தித்துப் பார்ப்போம். முதல் உறவுவிலேயே எமக்கு விருப்பம் ஏற்பட்டதும் அவ்வுறவைப் பேணவே விரும்புகிறோம். எடுத்துக்காட்டாக:

1. வகுப்பில் கணக்குத் தெரியாமல் ஆசிரியரிடம் அடி வாங்கியதைக் கண்டு உள்ளம் இளகிக் கணக்குச் சொல்லித் தந்த வகுப்பு மாணவரை முதல் நாளிலேயே பிடித்துப் போகிறது.

2. வழியிலே சந்தித்த ஒருவர் எதிர்பாராமல் பழகினாலும் தான் எவ்வகையில் கெட்டவர், தான் எவ்வகையில் நல்லவர் எனத் தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொன்னதும்; சிலருக்கு அவரை நண்பராகவோ நண்பியாகவோ ஏற்றுக்கொள்ள விருப்பம் வரலாம்.

3. நோயுற்ற வேளை அல்லது சிக்கலில் மாட்டிக்கொண்ட வேளை ஒருவருக்கு ஒருவர் உதவியிருக்கலாம். அவ்வுதவி உதவி பெற்றவருக்கு உதவியவரை அடிக்கடி நினைக்கத் தூண்டும்; அடிக்கடி பழகத் தூண்டும்; அதுவே காதல் மலர வைக்கும். ஆயினும், ஒழுக்கமாகப் பழகிய முதற் சந்திப்போ முதற் பேச்சோ அக்காதல் மலர உதவி இருக்கலாம். இதுவே சிலருக்கு ஒருவரை காதலியாகவோ காதலனாகவோ ஏற்றுக்கொள்ள விருப்பம் வரலாம்.

4. பெற்றோர் விருப்பப்படி கலியாணம் பேசிச் செய்தாலும், ஒருவரை ஒருவர் முன்கூட்டி அறிய வாய்ப்பிருக்காது. முதலிரவில் ஒருவருக்கு ஒருவர் தம்மைப் பற்றிக் கூறி முடிக்கவே பொழுது விடிந்துவிடும். ஆயினும், அவரவர் தம் உண்மைகளைப் பரிமாறியதும் விருப்பம் மேலிடலாம். இதுவே நெடுநாளைக்குக் கணவராக, மனைவியாக வாழவைக்க உதவுகிறது.

மேற்படி நான்கு நிலைகளில் உளவியல் நோக்கில் முதல் உறவுவைச் சிந்தித்துப் பார்த்தோம். ஒருவர் தமக்கெனச் சில வரையறைகளை, எதிர்பார்ப்புகளை உள்ளத்திலே வைத்துப் பேணியிருப்பர். இவ்வாறான முதல் உறவிலேயே (அதாவது முதற் சந்திப்பிலேயே முதற் பேச்சிலேயே) உள்ளத்திலே பேணிய ஒருவரது வரையறைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் வகையில் அடுத்தவர் செயற்பட்டால் அவ்வடுத்தவர் மீது அவருக்கு விருப்பம் ஏற்படுகிறது. முதல் உறவில் ஏற்பட்ட இவ்விருப்பமே தொடர்ந்தும் உறவைப் பேண உதவுகிறது.

ஆயினும், முதல் உறவில் ஏற்பட்ட இவ்விருப்பத்திற்கு எதிராக அடுத்தவர் செயற்பட்டால் குறித்த ஆளால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால், நிலையான பிரிவும் ஏற்படுகிறது. மறக்க முடியவில்லை, மறக்க முடியவில்லை என நான் குறிப்பிட்டது; இவ்வாறு இணைந்தவரையோ பிரிந்தவரையோ உள்ளத்தில் மீட்கக் கூடியதாக இருப்பதனாலேயே!

முடிவாகச் சொல்வதானால் முதல் உறவிலேயே உங்கள் நல்லது கெட்டதுகளை சுருக்கமாகத் தெளிவாகச் சொல்லிப் போடுங்கோ! உங்களைப் பிடித்திருந்த எவருக்கும் அவை நம்பிக்கையூட்டும். அதேவேளை அவற்றை அதாவது உங்களைப் பிடித்தவருக்கு
ஏற்படுத்திய விருப்பத்தைத் தொடர்ந்து பேணவேண்டும். அப்போது தான் முதல் உறவிலேயே உருவாகிய உறவுகளைப் பிரியாமல் பேணமுடியும்.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.