ஆறுதலுக்கான ஆற்றுப்படுத்தல்

வாழ்வில் தலைநிமிர்ந்தோருக்குத் தான்
பெற்றோரின் பெறுமதி தெரியும்
படித்துப் புகழீட்டியவருக்குத் தான்
படிப்பின் பெறுமதி தெரியும்
வெற்றி பெற்றோருக்குத் தான்
உறவுகளின் பெறுமதி தெரியும்
வைப்பில் வைத்திருந்தவருக்குத் தான்
உழைப்பின் பெறுமதி தெரியும்
கெட்டுப்பட்டு அறிந்தவருக்குத் தான்
பாதிப்பின் பெறுமதி தெரியும்
இழப்புகளை எதிர்கொண்டவருக்குத் தான்
இழப்பின் பெறுமதி தெரியும்
ஆறுதலுக்கான ஆற்றுப்படுத்தல் என்பது
பெறுமதி தெரியாத வரை
நிறைவேற்ற இயலாத ஒன்றே!
தாயை இழந்த பிள்ளைக்கும்
தந்தையை இழந்த பிள்ளைக்கும்
வெவ்வேறு துயர் தான்…
கணவனை இழந்த மனைவிக்கும்
மனைவியை இழந்த கணவனுக்கும்
வெவ்வேறு துயர் தான்…
காதலனை இழந்த காதலிக்கும்
காதலியை இழந்த காதலனுக்கும்
வெவ்வேறு துயர் தான்…
பிள்ளையை இழந்த பெற்றோருக்கும்
உறவுகளை இழந்த உறவினருக்கும்
வெவ்வேறு துயர் தான்…
ஆனால்
வாழ்க்கை என்னும் வட்டத்தில்
பிறப்பும் இறப்பும்
இணைந்திருக்கும் இரண்டே!
இயற்கையை
எதிர்க்க முனைவதை விட
இயற்கையுடன் இசைந்து போவதே
நன்றாயினும்
முயற்சி உள்ள வரை
முயன்று பார்க்கலாம் என்பது
எளிமையான ஆற்றுப்படுத்தலே!
உண்மையை
மூடிவைக்க இயலாதது போல
துயரின் பெறுமதி
பாதிப்புற்றவரின் நலத்தில் தெரியும்…
உள்ளத்தில் இருப்பதை
கொஞ்சம் இறக்கி வைத்தால்
பாதிப்பின் பெறுமதியை
கொஞ்சம் பகுத்தறிய இயலும்…
வாழ்க்கை என்பது
எமக்குத் தரப்பட்ட ஒன்று
அதனை
வேண்டாமென வீசிக்கொள்ள
எமக்கு உரிமை இல்லைப் பாரும்…
இயற்கையுடன் இசைந்து
எமக்குக் கிடைத்த வாழ்வை
அணைத்துக் கொண்டு வாழ்வதே
எமது பணியாக வேண்டும் என்பதே
ஆறுதலுக்கான ஆற்றுப்படுத்தல் என்பேன்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.