வேணாம் வேணாம்

வேணாம் வேணாம்
(பிறரது மதியுரை (ஆலோசனை) எமக்கு வேண்டாம்)

எமது நோக்கு உளநலம் பேணுவதேயாகும். எவ்வாறு உளநலம் பேணுவதென்பதை விளக்குவதே எமது பதிவுகளாகும். வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) என்றால் எடுத்ததிற்கு எல்லாம் பிறரிடம் மதியுரை கேட்க வேண்டி வருமே என அஞ்சத் தேவையில்லை. நமது சிக்கல்களை (பிரச்சனைகளை) நாமாகவே எவ்வாறு தீர்த்துக்கொள்வதென்பதை நாம் அறிந்திருந்தால் எமக்குப் பிறரது வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) தேவைப்படாது.

அதற்கேற்ப நீங்கள் காணும் சிக்கல்களுக்குத் (பிரச்சனைகளுக்குத்) தூரநோக்கிலான பார்வையில் முடிவுகளையும் தீர்வுகளையும் பெறும் நுட்பங்களை இப்பக்கத்தில் விளக்குகிறோம். இதன் மூலம் “வாழ்; வாழ விடு (Live and Let Live)” என்னும் கோட்பாட்டுக்கு அமைய நீங்களும் வாழ்ந்து பிறரையும் வாழ வழிவிடும் நன்மைகளைச் செய்ய முடியுமென நம்புகின்றோம்.

எம்மவரிடையே அதாவது நம்மாளுகளுக்கிடையே தோன்றும் ஐயங்களே எல்லாச் சிக்கல்களுக்கும் ஆணி வேராகும். ஆணி வேருடன் வீழ்த்தப்படும் மரமே மீள முளைவிடாது. எந்தச் சிக்கல்களாலும் தோன்றும் ஐயங்களை அடையாளப்படுத்தி; எமது ஐயங்களை எமது உள்ளத்தில் இருந்து அகற்றிக்கொள்ள சிக்கல்களுக்கான மூல (ஆணி) வேரைக் கண்டுபிடிப்போம்.

எமது உள்ளத்தில் நாம் எப்படி எண்ணுகிறோமோ, அதே போன்று எதிரில் உள்ளவர்களும் எண்ணுவார்களென நாம் உணர வேண்டும். எனவே ‘ஊரோடு ஒத்துப் போ’ என்பதற்கிணங்க எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது முடிவு ஒன்றை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

‘விட்டுக் கொடுப்பு’ என்பது ஒன்றை ஏற்றுக்கொண்டு இன்னொன்றை விலக்கிக்கொள்ளல் எனக் கருத்திற் கொண்டு சிக்கல்களுடன் பங்கெடுத்தவர்களோடு இணங்கிச் சரியான முடிவையும் தீர்வையும் பெற்று அமைதி வழிக்கு வருவதிலேயே வெற்றி உறுதிப்படுத்தப்படுகிறது. இதற்குப் பங்கெடுத்தவர்களிடையே (சம்பந்தப்பட்டவர்களிடையே) உளத்தூய்மையுடனான பேச்சுக்கள் இடம்பெறவேண்டும்.

Learning is good but that applying is better.

அறிவு என்றால் என்ன?

நாம் ஒவ்வொருவரும் பட்டறிந்து, படித்தறிந்து கற்ற பாடங்களே எமது அறிவு என்று சொல்ல முடிகிறது. அவை அடிக்கடி எமது உள்ளத்தில் மீட்டுப் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

அறிவு எத்தனை வகைப்படும்?
கண் – பார்த்தல் (நல்லது, கெட்டது எனப் பல)
காது – கேட்டல் (இனிமையான, இரைச்சலான எனப் பல)
மூக்கு – மணத்தல் (பிடித்தது, பிடிக்காதது எனப் பல)
நாக்கு – சுவைத்தல் (உறைப்பு, இனிப்பு எனப் பல)
தோல் – உணர்தல் (குளிர், சூடு எனப் பல)
இவ்வாறு ஐம்புலன்களால் உள்வாங்கப்படும் ஐந்து வகை அறிவையே ஐந்தறிவு என்கிறோம். எடுத்துக்காட்டாகச் சில உயிரிகளுக்கு மூன்று புலனுறுப்பு இருப்பின், அவை மூன்றறிவுள்ள உயிரி எனப்படும். இவ்வாறே ஐந்தறிவுள்ள உயிரிகளையும் அடையாளப்படுத்துகிறோம்.

ஆறாம் அறிவு என்றால் என்ன?
சில உயிரிகளில் (எ. கா.: மனிதனில்) பிறருக்குப் புலப்படாத புலனுறுப்பு ஒன்று உள்ளது. அது தான் உள்ளம் (மனஸ், மனம் என்றும் கூறுவர்) என்கிறோம். அதாவது, மூளை செயற்படும் ஒழுங்கை உள்ளம் என ஒப்பிடப்படுகிறது. உள்ளம் எண்ணமிட (நினைத்துப் பார்க்க) இடமளிக்கிறது. உள்ளத்தால் நல்லதையும் கெட்டதையும் பகுத்தறிய முடியும். இப்பகுத்தறிவையே ஆறாம் அறிவு என்கிறோம்.

ஏழாம் அறிவு என்றால் என்ன?
உள்ளத்தால் எண்ணமிட (நினைத்துப் பார்க்க), பகுத்தறிய முடியும் என்றால்; எல்லாப் பக்கத்தாலும் (No Side Effects) எந்நேரத்திலும் (Any Time) நன்மை தரக்கூடிய முடிவுகளை (Decisions) எடுக்கும் ஆற்றலே ஏழாம் அறிவு எனலாம்.

எட்டாம் அறிவு என்றால் என்ன?
நன்மை தரக்கூடிய முடிவுகளை (Decisions) எடுக்கும் ஆற்றலைக் கொண்ட உள்ளத்தாலே; நன்மை தரும் முடிவுகளை (Good Decisions) நல்வழியில் கையாளத் தெரிதலை அல்லது நடைமுறைப்படுத்தலை; அதாவது அதற்கான தீர்வுகளை (Solutions) எடுக்கும் ஆற்றலே எட்டாம் அறிவு எனலாம்.

“உள்ளம் என்பது ஆமையடா – அதில்
உண்மை என்பது ஊமையடா!”
என்னும் பாடல் அடிகளை மீட்டுப் பார்த்தால்; நமது புலப்படாத புலனுறுப்பாகிய உள்ளத்தைப் பற்றி மேலுமறிய வேண்டியிருக்கிறது. ஒருவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதை அறிவது கடினம் என்பதையே இப்பாடல் அடிகள் சுட்டுகின்றன.

மூளை செயற்படும் ஒழுங்கை உள்ளம் என ஒப்பிடப்படுகிறது என்று மேலே கூறியிருந்தேன். அம்மூளை நரம்புக் கலங்களாலும் நரம்புகளாலும் நரம்பு முடிச்சுகளாலும் உருவான உடலின் மென்மையான பகுதியாகும். இது வன்மையான மண்டையோட்டினால் மூடப்பட்டிருக்கும். மேலும் அது பெருமூளை, நடுமூளை, சிறுமூளை எனப் பல பகுதிகளாகக் காணப்படுகிறது.

உடலில் எங்கெல்லாம் நரம்புகள் இருக்கின்றனவோ; அங்கிருந்து மூளை செய்திகளை உள்வாங்கும் அதேவேளை பதில் செய்திகளையும் அவற்றுக்கு வழங்கும். உள்ளத்தில் எழும் எண்ணங்களுக்கு ஏற்ப உடல் செயற்படுகிறது எனின்; அது மூளையின் செயற்படே! இதனடிப்படையில் ஆழமாக உள்ளத்தில் பதிந்திருப்பதை அறிய உடலின் செயல்களில் (அதாவது நடத்தைகளில்) அல்லது நம்பிக்கை தரும் முறையில் நான்றாகப் பழகிப்பேசி அறியலாம்.

தமிழில் பேசப்படும் உள்ளத்தை வடமொழியில் மனஸ் -> மனம் என்றும் ஆங்கிலத்தில் Mind என்றும் கூறுவர். அறிவியல் நோக்கில் மூளை செயற்படும் ஒழுங்கை (Levels) உள்ளம் என ஒப்பிடப்படுகிறது என்றால் அதனடிப்படையில் உள்ளத்தை நான்கு நிலைகளில் (Levels) ஆய்வு செய்யலாம்.

Id – Unconscious level, Superego – Sub Conscious level, Ego – Conscious Level

1) Unconscious Level (உணர்வற்ற உள்ளம்) – எல்லை மீறிய அதாவது நடைமுறைக்குச் சாத்தியப்படாத கற்பனைகள் தோன்றுமிடம். எடுத்துக்காட்டாக அமெரிக்க நாட்டுத் தலைவராக வர எண்ணுதல்; அழகுப் பெண்களை அள்ளி அணைக்க/ சுவைக்க (பாலியல் உறவு கொள்ள) எண்ணுதல். கெட்ட/ பாலியல் எண்ணங்கள் தோன்றும் வேளை பாட்டு அல்லது கதை அல்லது பிற கலைத்துறையில் முயற்சி எடுத்தால் பாவலராகவோ கதாசிரியராகவோ கலைஞராகவோ வர வாய்ப்புண்டு. இவ்வுணர்வற்ற உள்ளத்தை நனவிலி மனம், கற்பனை மனம், குரங்கு மனம் என்றும் அழைக்கப்படும்.
2) Conscious Level (உணர்வு உள்ளம்) – உடல் மாற்றத்திற்கு, சூழல் மாற்றத்திற்கு ஏற்ப எண்ணமிடல், முடிவெடுத்தல், செயற்பட இறங்குதல் என எல்லாமே இங்கு தான் இடம் பெறும். எல்லாம் சுயகட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருக்கும். எடுத்துக்காட்டாக சாப்பிட எண்ணுதல் (நினைத்தல்), குளிர்களி (Ice Cream) குடிக்கவா, விடவா என முடிவு செய்தல், கடலில் குளிக்க இறங்குதல் போன்றன. இவ்வுணர்வு உள்ளத்தை நனவு மனம், மேல் மனம், புற மனம் என்றும் அழைக்கப்படும்.

3) Super Conscious Level (உயர் உணர்வு உள்ளம்) – உணர்வு உள்ளம், உணர்வற்ற உள்ளம் இரண்டையும் ஒரு நிலைப்படுத்தல் அதாவது தேவையற்ற எண்ணங்கள் தோன்ற இடமளியாது; நாமாகத் திட்டமிட்டு உறுதியான முடிவை எடுக்கும் இடம். எடுத்துக்காட்டாக அமைதியாக, உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தி ஆண்டவரை எண்ணுதல் (நினைத்தல்). பிறிதொரு எடுத்துக்காட்டாக வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களுக்குத் (பிரச்சினைகளைத்) தீர்வுகாணல் அல்லது பின்னைய தேவைகளை மேலாண்மை செய்ய முன்கூட்டியே பணத்தை வைப்பிலிடல். இவ்வுயர் உணர்வு உள்ளத்தை உயர் நனவு மனம், ஒரு நிலைப்படுத்தப்பட்ட மனம் எனலாம்.

4) Sub Conscious Level (துணை உணர்வு உள்ளம்) – மேற்காணும் மூன்று நிலை உள்ளத்திலும் தோன்றிய எண்ணங்கள் யாவும் வைப்பில் (சேமிப்பில்) பேணுமிடம். இது உடலியக்கத்துடன் தொடர்பில் இருப்பதால் வைப்பில் (சேமிப்பில்) உள்ள எண்ணங்களைச் செயல்களாகவோ நடைத்தைகளாகவோ வெளிப்படுத்தும். எடுத்துக்காட்டாக அன்பானவர்களைக் கண்டால் புன்னகை செய்தல், பகையாளிகளைக் கண்டால் வெட்டென ஒதுங்குதல், வயிற்றோட்டம் விளைவித்த உணவைக் கண்டால் வெறுத்து ஒதுக்குதல் போன்றன. இத்துணை உணர்வு உள்ளத்தை துணை நனவு மனம், ஆழ் மனம், அக மனம் என்றும் அழைக்கப்படும்.

உளநோய்கள், தவறான செயல்கள், கெட்ட நடத்தைகள், நன்மதிப்பைப் பெற இயலாத நிலை எல்லாவற்றுக்கும் இவ்வுள்ளப் பாகுபாட்டு (Psycho Analysis) அடிப்படையில் நம்மை நாம் பேணுவோமாயின் வெற்றி பெறலாம். எடுத்துக்காட்டாக உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Level) அழகுப் பெண் ஒருவளைக் கண்டதும் பாலியல் உறவு கொள்ள எண்ணுதல் இடம் பெற்றால் அதனை உணர்வு உள்ளத்தால் (Conscious Level) கட்டுப்படுத்த முடியும்.

அதாவது, உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Level) தோன்றிய எப்படியாவது அவளை அடையவேணும் என எண்ணியதை உணர்வு உள்ளத்தால் (Conscious Level) கட்டுப்படுத்தா விட்டால்; அவ்வெண்ணம் துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Level) அப்படியே வைப்பில் (சேமிப்பில்) இடப்படும். சூழ்நிலை (சந்தர்ப்பம்) ஏற்படத் துணை உணர்வு உள்ளம் (Sub Conscious Level) அதனை நிறைவேற்றத் தூண்டிவிடும். இதனால் தன்நிலை மறந்து தானாகவே இவ்விழி செயலைச் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது.

மேற்காணும் கணப்பொழுதில் உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Level) தோன்றிய எண்ணத்தை உணர்வு உள்ளத்தால் (Conscious Level) நன்மதிப்பைப் பெற இயலாத செயலெனப் புறக்கணித்து விட்டால்; அவ்வெண்ணம் துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Level) அப்படியே வைப்பில் (சேமிப்பில்) இடப்படும். சூழ்நிலை (சந்தர்ப்பம்) ஏற்படத் துணை உணர்வு உள்ளம் (Sub Conscious Level) அதனை நிறைவேற்றத் தூண்டிவிடும். அதாவது தன்நிலை மறந்தும் தானாகவே நன்மதிப்பைப் பெறக்கூடிய வழியில் ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

உண்மையில்… உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Level) தோன்றிய எண்ணங்களை உணர்வு உள்ளத்தால் (Conscious Level) வடிகட்டினால் உளநலம் பேணலாம். அதாவது, நல்லெண்ணங்களைக் கருத்திற்கொண்டும் கெட்ட எண்ணங்களை புறக்கணித்தும் உணர்வு உள்ளத்தால் (Conscious Level) வடிகட்டினால்; அவை அப்படியே துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Level) வைப்பில் (சேமிப்பில்) இடப்படும். இதனால் தன்நிலை மறந்தும் தானாகவே நன்நடத்தைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது.

Verify the Problems and Find Out the Solutions

உள முகாமைத்துவம் தெரிந்தாலும், கீழ்வரும் கேள்வி-பதில்களில் தெளிவு பெறக்கூடிய தகவல் இருப்பதைக் காண்பீர்கள்.

1) சிக்கல் (பிரச்சனை) என்றால் என்ன?
எது அல்லது எதனால் எமக்குப் பாதிப்பு வருகிறதோ; அதுவே சிக்கல் (பிரச்சனை).

2) எமக்கு வரும் சிக்கல் (பிரச்சனை) அல்லது பிணக்கை எவ்வாறு உணர்கிறோம்?
சோர்வு ஏற்படுகையில், நடப்புச் செயல் குழம்புகையில், உள்ளத்தை ஒரு முகப்படுத்த முடியாத நிலையில் எம்மால் உணர முடிகிறது.

3) சிக்கல் (பிரச்சனை) அல்லது பிணக்குத் தோன்றக் காரணம் என்ன?
சிலர் சிக்கல்களை ஏற்படுத்த; மற்றவர்கள் சிக்கல்களுக்கு உள்ளாதல் அதாவது இணக்கப்பாடு ஏதுமின்றி முரண்படுதல் எனலாம்.

4) தோன்றிய சிக்கலைப் (பிரச்சனையைப்) அல்லது பிணக்கைப் பெரிதாக்காமல் முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?
சிக்கல்களைத் தவிர்க்க விட்டுக்கொடுத்து நழுவும் உளப்பாங்கைக் கடைப்பிடிக்கலாம்; சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியவற்றை அழித்தல்; சிக்கல்களைத் தருபவர்களிடமிருந்து விலகி ஒதுங்குதல் எனச் சிறப்பான முடிவுகளை எடுக்கலாமே!

5) முடிவு எடுத்தல் (Decision Making) என்றால் என்ன?
நாம் எண்ணமிட்டு “இப்படி இருந்தால் அப்படி இருக்கும்” என வரையறை செய்தலே முடிவு எடுத்தலாகும்.

6) முடிவு எடுப்பதற்கு எத்தனை பக்கங்களில் எண்ணமிடுவீர்?
எனது திறமை, எனது பலம், எனது நம்பிக்கை ஆகிய நேர்ப் (Positive) பக்கமாகவும் பின்னூட்டி, பின் புலம், இயற்கை மாற்றம் (எ.கா. மழை) ஆகிய மறைப் (Negative) பக்கமாகவும் எண்ணமிட வேண்டும்.

7) முடிவு எடுப்பதற்கு என்னென்ன சிறப்பான கருத்துகளைப் பொருட்படுத்துவீர்?
நேரடி விளைவு: கைக்குக் கைமாறும் உடனடி நன்மை.
பக்க விளைவு: நேரடி நன்மை, தீமையால் உருவாகும் பிற பக்கங்களால் கிடைக்கும் நன்மை, தீமைகள்.
பின் விளைவு: நேரடி நன்மை, தீமையால் உருவாகும் பிற்காலத்தில்/ எதிர்காலத்தில் கிடைக்கும் (நீண்ட கால நோக்கில்) நன்மை, தீமைகள்.
ஆகிய கருத்துகளைப் பொருட்படுத்தலாம்.

8) முடிவு எடுத்தல் (Decision Making) முடிந்தாலும் முடிவுகளை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளும் படிநிலைகள் அதாவது நல்ல தீர்வுகள் (Good Solutions) தேவை. தீர்வுகளை மேற்கொள்ளும் போது எத்தனை பக்கங்களில் எண்ணமிடுவீர்?
நேர்மறை எண்ணம் (Positive Mind Attitude – PMA): எதிரியாயினும் நண்பராயினும் எந்நிலையில் உள்ளவராயினும் நாம் அடையக்கூடிய நன்மைகளைப் பெற எல்லோரையும் அணைத்தல்.
எதிர்மறை எண்ணம் (Negative Mind Attitude – NMA): எதற்கெடுத்தாலும் எவரிடத்திலும் ஐயப்பட்டு ஒதுங்குவது அல்லது அவர்களைப் பயன்படுத்தாமலும் விடுவது.
PMA, NMA ஆகிய பக்கங்களைக் கருத்திற்கொண்டு எண்ணமிடலாம்.

9) தீர்வுகளை மேற்கொள்ளும் போது என்னென்ன சிறப்பான கருத்துகளைப் பொருட்படுத்துவீர்?
உடனடித் தீர்வுகள் (Instant View): சட்டுப்புட்டென்று முற்றுப்புள்ளி வைத்துவிடல், அதாவது சமகாலத்தில் தேவைப்படுவதைப் பெற்று அல்லது விட்டுக்கொடுத்து அமைதியை மேம்படுத்தல்.
குறுகிய நோக்கிலான தீர்வுகள் (Short Term View): உடனடி நன்மை கிட்டாவிட்டாலும் இரண்டு தொடக்கம் ஐந்து ஆண்டுகள் வரைக்குள் நன்மை கிட்டும் வகையில் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்தல்.
தூர நோக்கிலான தீர்வுகள் (Long Term View): உடனடி நன்மை கிட்டாவிட்டாலும் ஐந்து ஆண்டுகளின் பின் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் நன்மை கிட்டும் வகையில் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்தல்.

10) எந்தவொரு சிக்கலையோ (பிரச்சனையோ) பிணக்கையோ வெற்றிகரமாகத் தீர்த்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் என்ன தகுதி வேண்டும்?
முடிவுகளை எடுப்பதற்கும் அதனை நடைமுறைப்படுத்தத் தேவையான தீர்வுகளை ஆக்கவும் சிறப்பாகச் சிந்திக்கும் ஆற்றல் வேண்டும்.

11) சிறப்பாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி?
பிறரது வாழ்க்கைக் குறிப்பைப் படித்தல், பிறரது எடுத்துக்காட்டான வாழ்க்கையை ஆய்வு செய்தல், தன்(சுய) முன்னேற்றப் பொத்தகங்களைப் படித்தல், மற்றும் தீர்த்து வைக்கப்பட்ட சிக்கல் (பிரச்சனை) அல்லது பிணக்குப் பற்றிய பொத்தகங்களைப் படித்தல்.

Problem Solving VS Decision Making

 

மேற்காணும் கேள்வி-பதில்களில் சுட்டிக்காட்டப்பட்ட எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு; அதற்கு மேல் சுட்டிக்காட்டப்பட்ட உள முகாமைத்துவத்தையும் கருத்திற்கொண்டு; அதற்கும் அதற்கு மேல் சுட்டிக்காட்டப்பட்ட அறிவு பற்றிய தெளிவுபடுத்தலையும் கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களில் நீங்கள் சந்திக்கும் சிக்கல்களையோ (பிரச்சனைகளையோ) பிணக்குகளையோ தீர்த்துக் கொள்வதற்கான நுட்பங்களையும் (Tricks) உதவிக் குறிப்புகளையும் (Tips) அறிந்துகொண்டீர்களா? ஆம் எனில், எவரிலும் தங்கியிருக்காமல் உங்கள் ஒளிமயமான எதிர்காலத்தை நீங்களே கட்டியெழுப்ப முடியுமே! அப்படியாயின், பிறரது மதியுரை (ஆலோசனை) உமக்கு வேண்டாம்; வேணாம்.

இவ்வண்ணம்
காசி.ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)
Counsellor (உளநல/ குடும்பநல மதியுரைஞர்)

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s