நோயற்ற வாழ்வே

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
(Health is Wealth)

Doctor and Patient

நோய்களுக்கு
தொற்றுக் கிருமிகள் தான்
காரணம் என்பீர்!
உள்ளமும் உடலும்
உண்ணும் உணவும்
சுற்றமுமே
நோய்களுக்குக் காரணம் என்பேன்!

குழந்தைகள், சிறுவர்கள் மகிழ்வாக வாழ; பெற்றவர்கள் தான் அவர்களின் விருப்பு, வெறுப்பு அறிந்து செயற்பட வேண்டும். இலகுவில் நோய்த்தொற்று இவர்களில் ஏற்பட வாய்ப்புள்ளதால் பெற்றோர் இவர்களது உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

பதின்ம அகவை இருபாலாரும், இக்கால கட்டத்தில் உள நோய் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது. அதாவது, பள்ளிக் காதல் படலை வரை; பருவக் கவர்ச்சி படுபாதாளம் வரை என்பதை உணர்ந்து இளமையைப் பலமாகப் பேணி, நலமாக வாழ்ந்தால் ஏமாற்றங்களும் வராது, உளநோய்களும் நெருங்காது. பொதுவாக இளமை ஊஞ்சலில் ஆடுவோர் சிற்றுண்டி, புகைத்தல், மது அருந்துதல், வேடிக்கை அல்லது களியாட்ட நிகழ்வுகள் எனப் பணம் செலவழித்து நோய்களை வேண்டிச் சேகரித்தல் தான் செய்கின்றனர்.

திருமணம் செய்ய முன் இளசுகளின் பாலின நாட்ட ஈடுபாடு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லையை மீறும் இணையர்களின் செயல் உயிர்கொல்லி (எயிட்ஸ்) நோய்க்கு இடமளிக்கும். மறுமணம், பல திருமணம் செய்தலும் நோய்த் தொற்றுக்கு உதவலாம். பிரிந்தவர்கள் இணைவதாலும் பிரிந்தவரை இணைத்து வைப்பதாலும் மகிழ்வு கிட்டாமல் உள நோய்கள் தோன்ற இடமுண்டு.

சாவு இழப்பு என்பது இயற்கை என்றும் ஏனைய இழப்புகளை உழைத்து மீட்கலாம் என்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால் உள நோய்கள் நெருங்காமல் தடுக்கலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வருவது இயல்பு. ஆயினும், அதிக மகிழ்ச்சியும் அதிக துன்பமும் பல நோய்களுக்குக் காரணமாகும். வாழ்க்கை என்பது வெற்றியல்ல, அது ஒரு போராட்டம். எனவே துன்பங்களைக் களைந்து, மகிழ்ச்சியோடு வாழ முயற்சி செய்ய வேண்டும்.

நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வதே உண்மையான மகிழ்வான வாழ்வாகும். துன்ப, துயரங்களைத் தூக்கி வீசி மகிழ்வான வாழ்வமைக்க வேண்டிய தீர்வுகளை எம்மால் வழங்க முடியும். பொதுத் தீர்வுகளாகச் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் காணும் சூழல், உங்கள் எண்ணத்தில் எட்டாத தீர்வுகள் சிலவற்றைப் படித்துப் பாருங்களேன்.

கல்வியின் தொடக்கம் புளிக்கும்; முழுமையான கல்வி இனிக்கும். இதனடிப்படையில் பட்டறிவு பெற்றவர் பலர் இருக்கலாம். புதியவர்கள் இது பற்றி ஆய்வு செய்தால் படிப்பதற்கான பின்னூட்டி எதுவென்று புரியும். படிக்கின்ற காலத்தில் படிப்பில பிடிப்பில்லாமல் போகவே மாணவர் கெட்ட வழிகளில் நடைபோட முயலுகின்றனர். பின்னைய நாள்களில் மாணவர் நெறி கெட்டுப் போக இதுவே வழியாகின்றது.

அரச, தனியார் நிறுவனப் பணி அல்லது சுயதொழில் முயற்சி ஏதாவது ஒன்றில் தன்னை ஈடுபடுத்தி, வருவாய் ஈட்டவும் தேட்டக் கணக்கில் வைப்பில் வைத்திருக்கவும் தவறுகின்றவர்களே வாழ்க்கையில் பல பின்னடைவுகளைச் சந்திக்கின்றனர். காதல் என்ற போர்வையில் இளையவர் வழி தடுமாறிச் செல்வதால் பின்னைய நாள்களில் பெரும் விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

மணவாழ்வைத் தெரிவு செய்தவர்களில் சிலர் சாவைக் கூட நாடுகின்றனர், இல்லையெனில் துன்ப, துயர வாழ்விலேயே காலம் கடத்துகின்றனர். இதற்கு அன்பில்லாமை, பாலியல் உறவில் நிறைவு அடையாமை, ஒருவரை ஒருவர் அடக்க முனைதல் எனப் பல சாட்டுதல்களைக் கூறலாம். இதன் விளைவாகக் குழந்தையின்மை, குறைந்த ஆயுள், பிள்ளைகள் சீர் கெட்டுப் போதல் எனப் பல ஏற்படலாம். குழந்தை வளர்ப்பில் அன்பு காட்டாமை, அதட்டி வளர்த்தல் போன்றன பின்னைய நாள்களில் பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலகுவதற்கு வழி விடுகின்றன.

நம்மாளுக்கு முதுமை நெருங்க அச்சம் (பயம்) தானாகவே வந்து சேரலாம். அவ்வச்சம் (அப்பயம்) காரணமாகப் பல நோய்கள் முதியோரை நாட, அவர்களது ஆயுள் குறைய வாய்ப்பு ஏற்படுகின்றது.

மனித வாழ்வில் பிறப்புத் தோடக்கம் இறப்பு வரை ஒவ்வொருவரும் விட்ட தவறுகள் ஏதோ ஒரு உளப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. இது பல நோய்களுக்கு அடிப்படை ஆகின்றது. பலரது நோய்களை மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமைக்கு இதுவே காரணமாக அமைகின்றது.

எனவே தான் உளநல வழிகாட்டலும் மதியுரையும் உளப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றது.

பொதுவாக நோயின்றி வாழப் பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும்.
1) சுத்தமான சுழல்
2) வழமையாக உண்ணும் உணவு
3) நலமாக உள்ள உடல் உறுப்புகள்
4) மகிழ்வான உள்ளம்

”வருமுன் காப்பது நலம்”, ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பன நோயின்றி வாழ மேற்கூறிய காரணிகளை இயல்பாகப் பேணுவதற்கு வழிகாட்டுகின்றன.

உளநல மதியரைஞர்கள் உள நோய்களைக் குணப்படுத்தப் பின்வரும் வழிகளைப் பாவிக்குமாறு கூறுகின்றனர்.
1) வழமையான நடை (நடத்தல்)
2) வேகநடை (நடத்தல்)
3) கைகளை வீசி நடத்தல்
4) மெதுவாக ஓடுதல்
5) துள்ளிக் குதித்தல் அல்லது கயிறடித்தல்
6) ஈருளிகளை மிதித்தல் (சைக்கிள் ஓடுதல்)
7) யோகாசனம் செய்தல்
8) தியானம் செய்தல்
9) மூச்சுப் பயிற்சி செய்தல்
10) சிந்திக்கத் தூண்டும் (மூளைக்கு வேலை தரும்) நகைச்சுவைகளைக் கூறிச் சிரித்தல்
11) உள மகிழ்வைத் தூண்டும் வகையிலான செயல்களைச் செய்தல் (நல்ல நண்பர்களுடன் கதைத்தல், இறைதொண்டு செய்தல், மக்கள் தொண்டு செய்தல் என்பவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்)

அமெரிக்காவில் இருந்து தான் உளநல வழிகாட்டலும் மதியுரையும் பிற நாடுகளுக்குப் பரவியுள்ளதாம். அங்கு தான் உளப் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாம். மதமாற்றமும் கூட அமெரிக்காவில் இருந்து பரவியிருக்கலாம். மதங்கள் உள்ளத்தை (மனத்தை) ஆற்றுப்படுத்தி உடல் நலம் பேண வழிகாட்டுகின்து. எனவே மதம் மாறினால் உள்ளமும் உடலும் நலமாகும் என்பவர்களை நம்ப வேண்டாம். ஏனெனில் எல்லா மதங்களும் ஒரே உண்மையை ஒட்டித் தான் அமைந்துள்ளது.

நம்மூர்ல நம்ம ஓரிரு பழங்கள் (கிழங்கள்) “மனம் ஒன்று சுத்தமானால் மந்திரம் ஓதத் தேவையில்லை” என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதாவது, உள்ளம் சுத்தமாக இருந்தால் இறைவனைப் பாடி வழிபடத் தேவையில்லை எனலாம். உண்மையில் சுத்தமான உள்ளத்தில் (இறைவன் ஒருவனையே நினைக்கின்ற உள்ளம் (மனம்) சுத்தமானது.) தான் இறைவனே குடியிருக்கிறான் என மெய்ஞானம் கூறுகிறது.

பொதுவாக கூறின் அடுத்தவர் பக்கம் தலையை ஓட்டாமல், தன் பக்கத்து நிலையை எண்ணுதல், கருத்திற் கொள்ளல் போன்றன சுத்தமான உள்ளத்தைப் பேண உதவும். மாற்றாருடன் ஒப்பிடுவதை விட சுய மதிபீட்டை மேற்கொள்வது சுத்தமான உள்ளத்திற்கு அழகு.

Picture of Psycho Analysis


உளவியல் நோக்கில் நேர் எண்ணம் (Positive Thoughts), நேர்மறை எண்ணம் (Positive Mental Attitude) கொண்ட உள்ளம் சுத்தமானது. தடைகளைக் கடந்து வெற்றி நடைபோட மறை எண்ணம் (Negative Thoughts) உதவலாம். அழுக்கான உள்ளத்திலே எதிர்மறை எண்ணம் (Negative Mental Attitude) தான் மலிந்து இருக்கும்.

சுத்தமான உள்ளம் பேண உளக்கூறுகளான உணர்வுகளைத் தூண்டும் காரணி இட்(Id), நான் என்ற முனைப்பு ஈகோ(Ego), உயர்நிலை உள்ளக் கூறு (Super Ego) ஆகியவற்றின் முகாமைத்துவம் தேவைப்படுகிறது. அதாவது ஈகோ(Ego), சுப்பர் ஈகோ(Super Ego) ஆகியவற்றின் செயற்பாடு சமனிலையில் பேணப்பட வேணும். பொதுவாகக் கூறின் மக்களாய (சமூக) விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப தம்மைத் தயார்படுத்துவதும் அதற்கேற்ப முடிவு எடுத்தலுமாகும்.

நமது உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழும் எண்ணங்களை உணர்வு உள்ளத்தால் (Conscious Mind / மேல் மனம்) வடிகட்டி நல்லெண்ணங்களை மட்டுமே பேணுவதால், அவை துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Mind ஆழ் மனம்) சேமிக்கப்பட்டு நன்நடத்தைகளாக வெளிப்படுகிறது. இவ்வொழுங்கு மீறப்பட மனித நடத்தையில் மாற்றம் ஏற்படும். அவ்வேளை உள்ளத்தில் அழுக்குத் தான் படியும்.

சுத்தமான உள்ளம் பேண மகிழ்ச்சி தானாகவே வரும். உடலுறுப்புகளுக்கு வேலை கொடுக்க (உடற்பயிற்சி செய்ய) அவை நலமாகச் செயற்படும். வழமைக்கு மாறான உணவுகளை உண்பதால் சமிபாட்டுச் சிக்கல் ஏற்பட, நோய்களை ஏற்படுத்தலாம். அதில் கவனம் வேண்டும். வாழும் சூழல் சுத்தமானதாக இருக்க வேண்டும். அமைதியான (அலறல், இரைச்சல் அற்ற இனிமையான இசையுள்ள), சுத்தமான (குப்பை, கூழங்கள், நீர் தேங்கும் இடங்களற்ற) சூழலில் தான் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்காது. இத்தனையும் ஒழுங்காக இருந்தால் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்லிக்கொண்டே வாழலாம்.

இவ்வண்ணம்
காசி.ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)
Counsellor (உளநல/ குடும்பநல மதியுரைஞர்)

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s