என்னை நீ அறி

ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த பண்டிதர் இராமலிங்கம் செல்லமுத்து இணையர்களின் மூத்த மகன் காசிராசலிங்கம் அவர்களுக்கும் அதே இடத்தைச் சேர்ந்த உடையார் விநாயகமூர்த்தி வள்ளியம்மை இணையர்களின் மூத்த மகள் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.

ஆறு ஆசிரியர்களிடம் தொடக்கக் கல்வி (அரிவரி) யைத் தொடர்ந்தேன். பின் மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு முதலாம் தவணை வரை படித்தேன். பின் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் தவணை இலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் சித்தன்கேணி வட்டு. இந்துக் கல்லூரியில் பதினோராம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன்.

பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லை. ஆயினும், திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொடக்கநிலை வகுப்பில் ஓராண்டு படித்தேன். ஈழத்துப் போர்ச் சூழல் காரணமாக அதனைத் தொடர முடியவில்லை. பின் கணினித் தொழில்நுட்ப அறிவில் பல டிப்புளோமாக்கள் படித்தேன். கணினி விரிவுரை, மென்பொருளாக்கம், இணையத்தள வடிவமைப்பு போன்ற தொழில்களில் பணியாற்றுகிறேன். மேலும் இதழியல், உளவியல் டிப்புளோமாக்களும் படித்தேன்.

என்னைப் பற்றி மேலுமறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://kayjay.tk

1983 இன் பின் ஈழத்துப் போர்ச் சூழல் காரணமாக உறவுகள் இடப்பெயர்வு, பிரிவு, இழப்பு எனப் பல இடர்கள் வந்து போயின. எனது வாழ்விலும் பல மாற்றங்கள் வந்து போயின. கால ஓட்டம் என்னையும் உளவியல் படிக்க வைத்தது. பல மருத்துவர்களின் வழிகாட்டலையும் மதியுரையையும் பெற்றிருந்தேன். உளநலப் பணி வழங்கும் பணியாளர்களுடன் வழிகாட்டலையும் மதியுரையையும் பரிமாறிக்கொண்டேன். Dr.ராஜமோகன் அவர்களின் கெல்த் அன்ட் பியூட்டி சஞ்சிகைத் தொடரையும், Dr.ருத்ரன் அவர்களின் பல உள (மன) நல நூல்களையும் கற்றறிந்தேன்.

2001 இல் மணமுடித்து இன்று வரை இனிதே இல்லறம் நடத்துகிறேன். வாழ்வில் பல இடர்களையும் இழப்புகளையும் சந்தித்துப் பட்டறிந்தேன். மேலும் கோப்மேயர், பி.சி.கணேசன் போன்ற அறிஞர்களின் வாழ்வுக்கும் வெற்றிக்கும் வழிகாட்டும் நூல்களையும் கற்றறிந்தேன். பல உறவுகளின், தோழர்களின், தோழிகளின் குடும்ப வாழ்க்கையை நேரிலும் கேட்டும் புரிந்துணர்தேன். சிலரது சிக்கல்களைத் தீர்த்தும் வைத்துள்ளேன். பலருக்கு வழிகாட்டலும் மதியுரையும் வழங்கியுமுள்ளேன்.

2010 இல் தமிழ்நண்பர்கள் தளமூடாக இணையத் தள உலகில் தலையைக் காட்டினேன். சில உளநல வழிகாட்டல் பதிவுகளைப் பதிவு செய்திருந்தேன். சில நண்பர்கள் தனிப்பட்ட முறையில் உளநல வழிகாட்டலும் மதியுரையும் கேட்டிருந்தனர். இவ்வாறு நண்பர்களின் செயல் தொடர, உளநலப் பேணுகைப் பணித் தளத்தை நடாத்த எண்ணினேன். இதன் இறுதிக் கட்டமே இவ்விணையத் தளம்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்